வேர்டின் வெள்ளி விழா.....

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எம்.எஸ்.ஆபீஸ் உலகளாவிய அளவில் அதிகம் பயன்படுத்தும் கூட்டுத் தொகுப்பாக இருந்தால் அதில் உள்ள வேர்ட் தொகுப்பு பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.அத்தகைய வேர்ட் தொகுப்பு தன் வெள்ளி விழாவினைக் கொண்டாடுகிறது.இந்த அளவிற்கு நேயர்களைக் கொண்டிருக்கும் வேர்ட் ஆரம்ப காலத்தில் மிகவும் அடக்கமான ஒரு தொகுப்பாகத்தான் இருந்து வந்தது.அதன் வளர்ச்சி தடங்களை இங்கு காணலாம்.

1983:  முதல் முதலில் பிப்ரவரி 1,1983ல் தான் முதல் வேர்ட் பிராசசரில் மைக்ரோசாப்ட் வேலையைத் தொடங்கியது.அதன் பெயர் Multitool Word ஆகும்.பின்னர் அதன் பெயர் Microsoft Word என மாற்றி அமைக்கப்பட்டது.இந்த தொகுப்பு 1983ஆம் ஆண்டு அக்டோபர் 25ல் வெளியானது.ஐ.பி.எம்.பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கென இது வடிவமைக்கப்பட்டிருந்தது. அப்போது வந்த எம்.எஸ்.டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்பட்டது. இது எம்.எஸ்.டாஸ் கேரக்டர் சிஸ்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தது.இதில் ஸ்பெல் செக்கர் இல்லை;அதற்குப் பதிலாக மைக்ரோசாப்ட் வழங்கிய தனி தொகுப்பான ஸ்பெல் அப்ளிகேசன் என ஒன்றைப் பயன்படுத்த வேண்டி இருந்தது.முதன் முதலில் பிசி வேர்ல்ட் என்னும் பத்திரிக்கையுடன் இந்த தொகுப்பின் டெமோ பதிப்பு பதிந்து தரப்பட்டது.நவம்பர் 1983ன் இதழுடன் தரப்பட்ட இதுதான் பத்திரிக்கை ஒன்றுடன் இணைத்துத் தரப்பட்ட முதல் சிடியாகும்.

1985-1987:  வேர்ட் மேக் இன்டோஷ் தொகுப்பிற்காக 1985ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.மேக் கம்ப்யூட்டர் தந்த ஸ்க்ரீன் ரெசல்யூசன் நன்றாக இருந்ததனால் இந்த வேர்ட் தொகுப்பு பிரபலமானது.எனவே 1987ல் மேக் கம்ப்யூட்டருக்கான வேர்ட் 3.0 வெளியானது.(வேர்ட் 2 என எதுவும் வெளியாகவில்லை).இந்த தொகுப்புடன் தான் எந்த இயக்கத் தொகுப்புடனும் பயன்படுத்தக் கூடிய Rich Text Format என்னும் பார்மட் வெளிவந்தது.வேர்ட் 3.0 தொகுப்பில் நிறைய குறைகள் இருந்ததனால் மைக்ரோசாப்ட் வேர்ட் 3.01 பதிப்பினை வெளியிட்டு வேர்ட் 3.0 பயன்படுத்துவதாக பதிந்தவர்களுக்கெல்லாம் இலவசமாக தபால் மூலம் அனுப்பியது.

1989: கிராபிக்கல் யூசர் இன்டர்பேஸ் என்னும் தொழில் நுட்பம் வந்து பிரபலமானதால் மைக்ரோசாப்ட் அதன் அடிப்படையில் வேர்ட் பார் விண்டோஸ் 1.0 என்னும் தொகுப்பை 1989ல் வெளியிட்டது.

1992  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்பு வெளியானது.இது மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பு 3.0. இதில் வேர்ட் 2 ஒரு பகுதியாக வெளியானது.


1994:  மைக்ரோசாப்ட் ஆபீஸ் 40 பதிப்பு 1994ல் வெளியானது.அத்துடன் வேர்ட் பதிப்பு 6 வெளியானது.வரிசையாக வெளியான வகையில் இது வேர்ட் 3 என்றே இருந்திருக்க வேண்டும்.ஆனால் மேக் கம்ப்யூட்டருக்கான வேர்ட் 3 ஏற்கனவே வெளியாகிப் பிரபலமடைந்திருந்ததால் இதனை வேர்ட் 6  எனப் பெயரிட்டனர்.

1995:  இதனை அடுத்து வேர்ட் தொகுப்பு எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பின் ஒரு பகுதியாக வெளியானது.எம்.எஸ்.ஆபீஸ் 95 தொகுப்புடன் வேர்ட் 95  சேர்த்து வெளியானது.இதில் வேர்ட் பிராசசிங் அப்ளிகேசன் மட்டுமின்றி டிராயிங்,பல மொழி பயன்பாடு ,ரியல் டைம் ஸ்பெல் செக் போன்ற வசதிகள் தரப்பட்டன.

1996:ஆபீஸ் 95 வெளியாகி ஓராண்டிலேயே ஆபீஸ் 97 வெளியிடப்பட்டது.இதனுடன் வேர்ட்97  இணைந்து வெளியானது.இதில் முதல் முதலாக ஆபீஸ் அசிஸ்டன்ட்(Office Assistant) என்னும் உதவி தரப்பட்டது.இது பல உதவிகளைத் தரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும் உடனே கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களால் விரும்பப்படவில்லை.ஒரு குருக்கீடாகவே எண்ணப்பட்டது.இன்றும் அதே நிலை உள்ளது.

1999:  அடுத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே வேர்ட் 2000  வெளியானது.இந்த தொகுப்பு ஆபீஸ் 2000 உடன் இணைந்து வெளியானது.இதில் Office Genuine Advantage என்ற வசதி முதல் முதலாகத் தரப்பட்டது.முறையாகக் கட்டணம் செலுத்திப் பெற்ற தொகுப்புகளுக்கு மட்டும் இன்டர்நெட் இணைப்பு மூலம் அப்டேட் தொகுப்புகளை வழங்கும் வசதியே இது.அத்துடன் கிளிப் போர்டில் ஒரு புதிய வசதி தரப்பட்டது.ஒன்றுக்கு மேற்பட்ட டெக்ஸ்ட் அல்லது ஆப்ஜெக்ட் காப்பி செய்து வைத்துப் பயன்படுத்தும் வசதி வேர்ட் 2000ல் தரப்பட்டது.

2001:  அப்போது வெளியான விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்துடன் இணைந்து ஆபீஸ் எக்ஸ்பி வெளியானது.இதில் வேர்ட் 2002  தரப்பட்டது.இதில் ஆபீஸ் அசிஸ்டன்ட் வசதி இருந்தாலும் நாமாக இயக்கினால் தான் இயங்கும் வகையில் அமைத்துத் தரப்பட்டது.

2003:   இந்த ஆண்டில் ஆபீஸ் 2003 வெளியானது.இதனுடன் தரப்பட்ட வேர்ட் தொகுப்பு வேர்ட் 2003என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்ட் என அழைக்கப்பட்டது.ஏறத்தாழ இதற்கு முன் வந்த வேர்ட் தொகுப்பின் வசதிகள் மட்டுமே இதில் இருந்தாலும் இதன் தோற்றத்தில் பல புதிய மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.விண்டோஸ் எக்ஸ்பியின் தோற்றத்திற்கு இணையாக இருந்தது.

2007:  வேர்ட் 2007 தொகுப்பு ஆபீஸ் 2007ல் இணைந்து கிடைத்தது.இதற்கு முன் வந்த அனைத்து வேர்ட் தொகுப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தையும் செயல்பாட்டினையும் கொண்டிருந்தது.அப்போது வெளியான விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இணையான தோற்றப் பாங்கினைக் கொண்டிருந்தது.அதைப் போலவே இதிலும் ரிப்பன் இன்டர்பேஸ் தரப்பட்டது.இதனைப் பயன்படுத்தியவர்கள் தொடக்கத்தில் சற்று தடுமாறினார்கள்.விஸ்டாவிற்கு மாறத் தயங்கியவர்கள் ஆபீஸ் 2007க்கும் மாறத் தயங்கினார்கள்.இந்த வேர்ட் தொகுப்பில் முதல் முறையாக எக்ஸ்.எம்.எல்.அடிப்படையிலான DOCX என்னும் பார்மட் வழங்கப்பட்டது.இந்த பார்மட் இதற்கு முன் வந்த பார்மட்டுகளுடன் இணைந்ததாக இல்லை.ஆபீஸ் 2007சோதனைத் தொகுப்பாக டவுண்லோட் செய்ய மைக்ரோசாப்ட் அனுமதி கொடுத்தபோது வேர்ட் 2007 தொகுப்பும் இணைந்தே வழங்கப்பட்டது.அடுத்ததாக வர இருக்கும் வேர்ட் தொகுப்பு ஆபீஸ் 14 தொகுப்போடு வெளி வரும்.ஏன் வேர்ட் 13 தொகுப்பு என்னவாயிற்று? என்றெல்லாம் கேட்காதீர்கள்.உலகளாவிய 13 எண் மீதான வெறுப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருக்கக் கூடாதா? 


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes