விண்டோஸ் 8 சிஸ்டம் வெளி வந்து ஏறத்தாழ ஒராண்டாகியும், அதனைக் குறை கூறி வரும் தகவல்கள் இன்னும் நிற்கவில்லை. டச் ஸ்கிரீன் பயன்படுத்தாதவர்கள் சொல்லும் குறைகள் ஏராளம்.
ஆனால், இதில் டாஸ்க் மானேஜர் பயன்பாட்டைக் கண்டவர்கள், நிச்சயம் அதில் ஏற்பட்டுள்ள பல பயனுள்ள மாற்றங்களைப் புகழ்வார்கள். மிகப் பெரிய அளவில் டாஸ்க் மானேஜர் அப்கிரேட் செய்யப்பட்டு,புதிய வசதிகள் பல தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் டாஸ்க் மானேஜர் புரோகிராமினைத் திறக்க, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Task Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Ctrl + Shift + Esc கீகளை அழுத்தவும். உடன், கிடைக்கும் விண்டோவில், மாறா நிலையில், புதிய Process tab அழுத்தப்பட்டு கிடைக்கும்.
இந்த டேப்பில் புரோகிராமின் பெயர், அது சி.பி.யுவில் பயன்படுத்தும் திறன், பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளும் மெமரி பயன்பாடு, டிஸ்க்கில் பயன்பாட்டிற்கான இடம் மற்றும் நெட்வொர்க் பயன்பாடு ஆகிய தகவல்கள் காட்டப்படுகின்றன.
இங்கு காட்டப்படும் அப்ளிகேஷன்கள் அல்லது பேக் கிரவுண்ட் செயல்பாடு என, எதன் மீது வேண்டுமானாலும், ரைட் கிளிக் செய்து, பின்னர், details மீது கிளிக் செய்து, விபரங்களைக் காணலாம். இதன் மூலம், விண்டோஸ் 7 சிஸ்டம் காட்டும் வழக்கமான தகவல்கள் இங்கு கிடைக்கும்.
இந்த புதிய காட்சியில், நமக்கு புரோகிராம்கள் குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கின்றன. அது மட்டுமின்றி, சிஸ்டம் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கும் அல்லது முடக்கும் விஷயங்கள் என்ன என்பதனையும் காணலாம்.
நம் கம்ப்யூட்டரின் செயல் திறனைக் கண்காணிக்க, performance டேப் மிக அழகான ஒரு இடைமுகத்தினைக் கொண்டுள்ளது. சி.பி.யு. பயன்பாடு, கம்ப்யூட்டர் ப்ராசசரின் எந்த வகைத் திறனை எல்லாம் பயன்படுத்திக் கொண்டுள்ளது என வரை படம் மூலமாகவே காட்டுகிறது.
திரையின் இடது பக்கத்தில், மெமரி பயன்பாடு, டிஸ்க் அணுக்கம், நெட்வொர்க் அணுக்கம் மற்றும் வை-பி செயல்பாடு ஆகியவை குறித்த தகவல்கள் காட்டப்படுகின்றன. ப்ராசசரின் அப்போதைய செயல்பாடு வேகம் குறித்தும், விரிவான தகவல்கள் கிடைக்கின்றன.
டாஸ்க் மானேஜரின் app history டேப், விண்டோஸ் 8 ஸ்டோரின் அப்ளிகேஷன்களை மட்டும் காட்டுகிறது. ப்ராசசர் நேரம், நெட்வொர்க் பயன்பாடு, டைல் அப்டேட் பயன்பாடு ஆகியவையும் இதில் காட்டப்படுகின்றன.
நெட்வொர்க் பயன்பாட்டில், 2ஜி, 3ஜி அல்லது 4ஜி பயன்பாடு இருப்பின், அதன் மீட்டரையும் இது காட்டுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பிசி வைத்திருப்பவர்களுக்கு இது மிகவும் உதவியானதாகும்.
இதன் மூலம், எவை எல்லாம், எதிர்மறையாக செயல்பாட்டினைத் தடுக்கின்றன என்று அறியலாம். மிக அதிகமாக அப்டேட் கொண்டவற்றை இதில் அறிந்து, தேவை இல்லை எனில், புரோகிராமினயே, அன் இன்ஸ்டால் செய்திடும் முடிவை எடுக்கலாம்.
இறுதியாக, டாஸ்க் மானேஜர் தரும் மிகச் சிறப்பான ஒரு வசதியைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். டாஸ்க் மானேஜரில், மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றம் இது எனக் கூறலாம். அது புதியதாகத் தரப்பட்டிருக்கும் ஸ்டார்ட் அப் (Startup) டேப். இந்த டேப் நம் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் போது, தொடங்கப்படும் அனைத்து அப்ளிகேஷன்களையும் பைல்களையும் இது காட்டுகிறது.
பொதுவாக ஸ்டார்ட் அப் புரோகிராம்களாக, ஹெல்ப்பர் டூல் பார்கள், புரோகிராம் அப்டேட்டர்கள், ட்ரே அப்ளிகேஷன்கள் மற்றும் ஆப்பரேட்டிங் சாதனங்களுக்கான பயனுள்ள சில அம்சங்கள் ஆகியவை வழக்கமாகக் காட்டப்படும்.
இந்த டேப்பில், அப்ளிகேஷன் பெயர், அதனைப் பதிப்பித்தவர் பெயர், அது இயக்கப்பட்டுள்ளதா, இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதா, கம்ப்யூட்டர் தொடக்க வேகத்தில், இதன் பங்கு என்ன என்பது போன்ற தகவல்கள் கிடைக்கின்றன. இந்த அப்ளிகேஷன்களில் எதில் வேண்டுமானாலும், ரைட் கிளிக் செய்து, புரோகிராமினை இயக்கலாம், அல்லது முடக்கி வைக்கலாம்.
பைல் ஒன்றைத் திறந்து அதன் அம்சங்களைக் காணலாம். அல்லது அது குறித்து இணையம் தரும் தகவல்களைத் தேடிப் பெறலாம். இதன் மூலம் அந்த பைல் அல்லது அப்ளிகேஷன் எதற்காக என்பதனையும் அறியலாம்.
இந்த ஒரு பயன்பாட்டு வசதியைப் பயன்படுத்துவதன் மூலம், ட்ரேயில் உள்ள பயனற்ற அப்ளிகேஷன்களை நீக்கலாம். இதன் மூலம் எந்த அப்ளிகேஷன், விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தைக் குறைக்கிறது, அல்லது தொடங்குவதனைத் தாமதப்படுத்துகிறது என அறியலாம்.
முன்பு தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் மூலமே, இத்தகைய தகவல்களை, ரெஜிஸ்ட்ரி வரை சென்று அறிய முடிந்தது. தற்போது எந்த சிரமமுமின்றி, விண்டோஸ் 8 டாஸ்க் மானேஜர் தருகிறது.
விண்டோஸ் 8 சிஸ்டத்தின் மற்ற பயன்பாடுகள் எப்படியோ, அதன் டாஸ்க் மானேஜர் மிகச் சிறப்பான முறையில், கூடுதல் வசதிகள் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.
0 comments :
Post a Comment