148 ஆண்டு நோக்கியாவை தனதாக்கிய மைக்ரோசாப்ட்


மொபைல் போன் தயாரிப்பவராக, ஒரு காலத்தில், உலகில் முதல் இடத்தில் இயங்கி வந்த, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த, நோக்கியா நிறுவனத்தின், மொபைல் போன் மற்றும் பிற சாதனங்கள் தயாரிப்பு பிரிவினை, மைக்ரோசாப்ட் சென்ற வாரம் வாங்கி யுள்ளது. 

தயாரிப்பு பிரிவுகள் மற்றும் காப்புரிமைகளுக்கும் சேர்த்து, மைக்ரோசாப்ட் இதற்கென 717 கோடி டாலர் வழங்குகிறது.

மொபைல் போன் தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வந்த நோக்கியா, தன் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக, ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களிடம் இழந்த போது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் போன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஒதுக்கித் தள்ளி, விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனை செய்தது.

சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமாக, உலகில் முதல் இடத்தில் இயங்கும், மைக்ரோசாப்ட், இனி சாப்ட்வேர் மட்டுமே தனக்கு புகழும் பணமும் தராது என்று திட்டமிட்டு, தற்போது பெருகி வரும் ஸ்மார்ட் போன்களை இலக்கு வைத்து, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அடுத்து, விண்டோஸ் 8 போன் சிஸ்டத்தினையும் வழங்கியது. 

பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன்களின் இயக்கத்தினை, ஓர் இயற்கையான ஒருங்கிணைந்த இயக்கத்தில் கொண்டு வரத் திட்டமிட்டது. மொபைல் போன் விற்பனைச் சந்தையில் தன் தடத்தினை ஆழப் பதிக்க தீவிரமாக எண்ணியது. நிதிச் சுமையில் தள்ளாடிய நோக்கியா, சரியான சந்தர்ப்பத்தினைத் தர, தற்போது அதனைத் தனதாக்கியுள்ளது.

கம்ப்யூட்டிங் வேலையைச் செய்திட வசதியான ஒரு மேடையாக மொபைல் ஸ்மார்ட் போன் தற்போது உருவாகி, பயனாளர் எண்ணிக்கையிலும் பெருகி வருவதால், சாப்ட்வேர் துறையில், உலகை வழி நடத்தும் மைக்ரோசாப்ட், அந்த மேடையைக் கைப்பற்ற நினைத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அதன் இலக்குக்கு ஏற்ப, நோக்கியாவின் நிலை இருந்ததால், இந்த நிறுவன மாறுதல், தகவல் தொழில் நுட்ப உலகில், இயற்கையான ஒன்றாகக் கருதப்படுகிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில், நோக்கியா முழுமையாக, மைக்ரோசாப்ட் வசம் செல்கையில், உலகெங்கும் இயங்கும் நோக்கியா தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களாக மாறுவார்கள். இவ்வகையில் 32 ஆயிரம் பேர் உள்ளனர். நோக்கியாவின் தலைமையிடமான பின்லாந்தில் மட்டும் 4,700 பேர் பணியாற்றுகின்றனர். 

பத்து ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாத இடத்தை, மொபைல் போன் சந்தையில் கொண்டிருந்தது நோக்கியா. முதலில் ஆப்பிள், அதன் பின்னர் சாம்சங் அதன் கோட்டையைத் தகர்த்தன. கொஞ்சம் கொஞ்சமாக தன் இடத்தை இழந்த நோக்கியா, தன் ஸ்மார்ட் போன்களில், தன்னுடைய சிஸ்டத்தை நவீனப்படுத்த முயற்சி எடுக்கவில்லை. 

மற்ற மொபைல் போன் நிறுவனங்கள் தத்தெடுத்த ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒதுக்கித் தள்ளியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சிஸ்டத்தைக் கொண்டு வந்து, இழந்த இடத்தைப் பிடிக்கத் திட்டமிட்டது. ஆனால் அதன் நிதி வசதியும் தொழில் நுட்ப வல்லமை இல்லாத நிலையும் இடம் கொடுக்காததால், இறுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆசைக்கு இணங்கிவிட்டது.

சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடன், மொபைல் போன் சந்தையில் போட்டியிடும் அளவிற்கு நிதிச்சுமையில், நோக்கியா தத்தளித்ததை, மைக்ரோசாப்ட் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்குமே,இந்த உடன்பாடு, அவற்றின் பிரச்னைகளைத் தீர்க்க உதவியுள்ளது. ஆனால், மொபைல் போன் வரலாற்றில், நோக்கியாவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. 

முதலில் பேப்பர் தொழிற்சாலையைத் தொடங்கி, பின்னர் எலக்ட்ரிக் சாதனங்கள், ரப்பர் பூட்கள் என விற்பனை செய்து, உலகில் அதிக ஏற்றுமதி செய்திடும் நிறுவனமாக வலம் வந்து, பின்னர் மொபைல் போனில் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது நோக்கியா. 

ஒரு கால கட்டத்தில், இந்த உலகம் அடுத்து எந்த மொபைல் போனை வாங்க வேண்டும் என்பதனை நோக்கியாவே தீர்மானித்தது. அத்தகைய நோக்கியாவின் 148 ஆண்டு கால சரித்திரம், தற்போது ஒரு முடிவிற்கு வந்துவிட்டது.

நோக்கியா தன் நிறுவனத்தை விற்பனை செய்தது சரியா? தவறா? என்ற கேள்விக்கு, நிறுவனத்தை விற்பனை செய்திட நோக்கியாவிற்குக் கிடைத்த கடைசி சந்தர்ப்பம் இதுதான் என்றும், இல்லையேல், நோக்கியா தரை மட்டத்திற்குத் தானாகவே சென்றிருக்கும் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசாப்ட் ஏன் நோக்கியாவை வாங்கியது? தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த நோக்கியாவிற்கு மைக்ரோசாப்ட் அனுமதி அளித்தது. நோக்கியா மட்டுமே, விண்டோஸ் சிஸ்டம் போன்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனமாக எழுத் தொடங்கியது. 

அத்துடன் பயனாளர் தேவைகளுக்கேற்ப, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாறுதல்களைச் செய்திட, நோக்கியா அனுமதி பெற்றது. இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது தன் கட்டுப்பாட்டினை இழக்கும் நிலை வந்தது. இது, மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் சரித்திரத்தில், இதுவரை சந்தித்திராத நிலையைக் காட்டியது. விழித்துக் கொண்ட மைக்ரோசாப்ட், இப்போது அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

மைக்ரோசாப்ட், நோக்கியா நிறுவனத்தை வாங்கியே ஆக வேண்டும் என்ற முடிவிற்கு வரக் காரணம், விண்டோஸ் இயக்கம் கொண்ட, நோக்கியாவின் ஆஷா வரிசை போன்களே. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்ற இந்த வரிசை போன்களைக் கொண்டே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மேடையை பரவலாக விரிக்க இருக்கிறது.

பூஜ்யமாக இருந்த விண்டோஸ் சிஸ்டம் ஸ்மார்ட்போன் விற்பனையை, நோக்கியா 74 லட்சம் என்று உயர்த்தி, தற்போது மைக்ரோசாப்ட் கைகளில் தந்துள்ளது. இதனை மைக்ரோசாப்ட் சாதுர்யமாகக் கையாண்டு, வெற்றி ஈட்ட வேண்டும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes