நம் வாழ்வில் ஓர் அங்கமாக பெர்சனல் கம்ப்யூட்டர் கலந்துவிட்டது. அதன் அசாத்திய செயல் திறன், நம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளக் கிடைக்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் என அடித்தட்டு மக்களுக்கும், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் உற்ற தோழனாய் உள்ளது.
இருந்தாலும், இது ஓர் அச்சுறுத்தும் நண்பனாகத்தான் நம் கண் முன்னே இயங்குகிறது. இதனை இயக்குவது மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி நமக்கு நிரந்தரமானதாக இல்லை. எப்போதும் ஒருவித பயத்துடன் தான், நாம் இதனை இயக்குகிறோம். இந்த அச்ச உணர்வினைத் தூண்டும் சிக்கல்களை நாம் பொறுத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை.
இதனை ஒரு பயனாளராக நான் மட்டும் சொல்லவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனமே இதனை ஒத்துக் கொண்டுள்ளது. விண்டோஸ் சிஸ்டங்களில் இயங்கும் பல சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், எந்த நேரத்தில் என்ன விளைவினைத் தருமோ என்ற தயக்கத்துடன் தான் நாம் அவற்றை இயக்குகிறோம்.
இதனால் தான், தன் விண்டோஸ் ஆர்.டி. டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்களின் இயக்க முறைமையில், மைக்ரோசாப்ட் வேறு எந்த பிற நிறுவனங்களின் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க அனுமதிக்கவில்லை.
இதனைப் பயன்படுத்துவோர் எந்த மால்வேர் கலந்த புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் பதிக்க முடியாது. டெக்ஸ்க்டாப்பில், குப்பைகளாக, பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களின் ஐகான்களை அடுக்க முடியாது.
அதனாலேயே, விண்டோஸ் ஆர்.டி. இயக்கம், வேகமாகவும், பாதுகாப்பாகவும் இயங்குவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஏன் இந்த நிலை என்று சற்று விரிவாகப் பார்க்கலாம்.
1. மால்வேர் வருகை குறையவே இல்லை:
மால்வேர் புரோகிராம்கள், கம்ப்யூட்டர் பயனாளர்களில் கை தேர்ந்தவர்களை அணுக முடியாது. அதற்கான பாதுகாப்பு அரணை அவர்கள் தங்கள் விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அமைத்துவிடுகின்றனர்.
ஆனால், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் சாதாரண மக்கள் இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க இயலுவதில்லை. இன்றைய நிலையில், ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட துணைப்பெயர்களுடனான பைல்கள் அபாய விளைவினை ஏற்படுத்தும் குறியீடுகளைக் கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
மேக் கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்கள் மற்றும் பிறவற்றிலும், மால்வேர் புரோகிராம்கள் நுழையக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன என்று நாம் எழுதலாம், பேசலாம்.
ஆனால், இன்றைய நிலையில், இந்த சாதனங்களில், மால்வேர் புரோகிராம்கள் நுழைந்து பாதக விளைவினை ஏற்படுத்துகின்றன என்பது, எங்கோ ஒன்றிரண்டு நிகழ்வுகளாகத்தான் தென்படுகின்றன.
தன் மாறா நிலையில், மேக் கம்ப்யூட்டர்கள், தான் அறிந்து ஏற்றுக் கொண்ட நிறுவனங்களின் பைல்களை இயக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதேபோல, ஆண்ட்ராய்ட் பதியப்பட்டு இயங்கும் சாதனங்களிலும், அதன் பாதுகாப்பு வளையத்தை உடைக்கும் பயனாளர்கள் கொண்டுள்ள சாதனங்களிலேயே, மால்வேர் புரோகிராம்கள் இயங்குகின்றன.
கூகுள், இதற்கென, ஆண்ட்ராய்ட் இயங்கும் சாதனங்களுக்கென, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கியுள்ளது. இவை பழைய ஆண்ட்ராய்ட் 2.3 பதிப்பு முதல் கிடைக்கின்றன. எனவே, விண்டோஸ் சிஸ்டங்களிலேயே, மால்வேர் புரோகிராம்கள் எளிதாக இயங்குகின்றன என்பதே உண்மை.
2. தயாரிப்பாளரின் புரோகிராம்கள்:
விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், சிறப்பான தெனத் தாங்கள் நினைக்கும் புரோகிராம்களை, கம்ப்யூட்டரில் பதிந்தே விற்பனை செய்கின்றன. இவற்றை Bloatware என அழைக்கின்றனர்.
ஒரு மேக் கம்ப்யூட்டர், குரோம் புக், ஐ பேட், ஆண்ட்ராய்ட் டேப்ளட் பி.சி., லினக்ஸ் லேப்டாப், ஏன் விண்டோஸ் ஆர்.டி. இயங்கும் சர்பேஸ் டேப்ளட் பிசியைக் கூட இயக்கத் தொடங்குங்கள். நீங்கள் பெறும் அனுபவம், புதிய ஒன்றாக இருக்கும்.
நீங்கள் விரும்பிய புரோகிராம்களே அங்கு அமையும். ஆனால், விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் எனில், தொடக்கமே ஒரு குழப்பமாய் அமைந்திருக்கும். கம்ப்யூட்டர் தயாரித்து வழங்கிய நிறுவனம் பதித்த பல தேவையற்ற புரோகிராம்களை நீக்க வேண்டியதிருக்கும். உங்களுக்குப் பிடித்த புரோகிராம்களைத் தேடிப்பிடித்து பதிய வேண்டியதிருக்கும்.
3. எது பாதுகாப்பானது?
விண்டோஸ் இயக்கத்தில் செயல்படும் புரோகிராம்களில், உங்கள் தேவைக்கான புரோகிராம்களை, பிரவுசரின் தேடல் டூல் மூலம் தேடிப் பெறலாம். உங்கள் தேவைக்கான புரோகிராம்கள், குறைந்தது பத்துக்கும் மேலாக இருக்கும்.
ஆனால், எது பாதுகாப்பானது என்று நீங்கள் சரியாக உணர முடியாது. பாதுகாப்பான புரோகிராம் என உறுதியாக முடிவு செய்து, அதனை டவுண்லோட் செய்திடச் சென்றாலும், அருகே காணப்படும் விளம்பரங்களில் காட்டப்படும் புரோகிராம்களை ஏன் பயன்படுத்தக் கூடாது என நம் மனம் எண்ணும்.
பல வேளைகளில் இந்தத் தூண்டுதலுக்கு அடிமையாகி, நாம் வம்பை விலைக்கு வாங்குகிறோம். ஆனால், மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில், அந்த சிஸ்டம் ஏற்கனவே சோதனை செய்து, பாதுகாப்பானது எனச் சான்றளித்த புரோகிராம்களை மட்டுமே பதிந்து இயக்க முடியும்.
4. உடன் வரும் தொல்லைகள்: சரியான, பாதுகாப்பான, சான்றளிக்கப்பட்ட புரோகிராம் என ஒன்றைத் தேர்ந்தெடுத்து, விண்டோஸ் கம்ப்யூட்டரில் பதிந்தாலும், அதனைப் பதிகையில், பல தொல்லை தரும் அப்ளிகேஷன்களும், நாம் அறியாமலேயே பதியப்படும்.
விளம்பரங்கள் (adware), பிரவுசருக்கான தேடல் டூல் பார்கள், நாம் ஏற்கனவே பயன்படுத்தும் சர்ச் இஞ்சினை மாற்றும் டூல்கள், பிரவுசரின் தலைப்புப் பக்கத்தை மாற்றும் டூல்கள் என இவை பலவகைப்படும். கம்ப்யூட்டரைத் தொடர்ந்து நாம் பயன்படுத்துகையில், இவை நம் கவனத்திற்கு வந்து, நமக்குத் தீராத தொல்லையையும், கவலையையும் கொடுக்கும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சில புரோகிராம்களை நிறுவுகையில் கூட இது போல நடக்கிறது. எடுத்துக் காட்டாக, விண்டோஸ் டெஸ்க் டாப்பிற்கான ஸ்கைப் புரோகிராமினை நிறுவுகையில், அது நம் பிரவுசர் செட்டிங்ஸ் அமைப்பை மாற்றும். பிங் தேடுதளத்தைப் பயன்படுத்தும் வகையில் அமைத்திடும். ஹோம் பேஜினை மாற்றி அமைக்கும்.
மைக்ரோசாப்ட் நிறுவனமே, இந்த சில்மிஷ வேலைகளில் ஈடுபடுகையில், மற்ற புரோகிராம்களைத் தரும் பிற நிறுவனங்கள், இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்துவதில் வியப்பே இல்லை.
0 comments :
Post a Comment