பதினைந்து ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 27ல், மக்கள் தங்கள் இணைய உலாவில், கூகுள் தேடுதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இல்லை;
குரோம்புக் பயன்படுத்தி யாரும் வீடியோ பார்க்கவில்லை; கூகுள் கிளாஸ் அணிந்து பாட்டு கேட்கவில்லை; அல்லது ஹாட் பலூன் தரும் இணைய இணைப்பில் தேடலை மேற்கொள்ளவில்லை.
சாதாரண தேடு தளம் தரும் நிறுவனமாக, 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப் பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகில் மிகச் சிறந்த சக்தியும் தொழில் நுட்பமும் கொண்ட நிறுவனமாக, ஆக்டோபஸ் போல பல திசைகளில் தன் செயல்பாட்டினைக் கொண்டுள்ளது.
உலகின் பல கோடி மக்கள் குறித்த தகவல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரே நிறுவனம் இதுவாகத்தான் இருக்கும். இந்த உலகம் மட்டுமின்றி, பிரபஞ்சம் குறித்த தகவல்களைத் தன்னிடத்தே வைத்திருப்பதிலும், விளம்பரம் வழியே வருமானம் பெறுவதிலும், கூகுள் நிறுவனத்தை மிஞ்ச இன்று எந்த நிறுவனமும் இல்லை.
பலூன் வழியே இன்டர்நெட், ட்ரைவர் இல்லாத கார், கண்களின் அணியும் கம்ப்யூட்டர் என கூகுள் செல்வதைப் பார்த்தால், ""என்னிடம் வா, உன் வாழ் நாளை 10 ஆண்டுகள் நீட்டித்துத் தருகிறேன்'' என்று கூகுள் சொன்னாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
இணையம் என்பது புரியாத புதிராகவும், குழப்பமான குவியலாக இருந்ததை, இதில் நீங்கள் மதித்துப் போற்ற வேண்டிய விஷயங்கள் உள்ளன என்று மக்களை ஏற்றுக் கொள்ள வைத்தது கூகுள்.
இணையத்தில் நம் அன்றாட பிரச்னைகளுக்கான தீர்வுக்காக அணுகியபோது, நம் சமூகத் தொடர்புகளை, நண்பர்களுடான உறவு கொண்டாடும் அஞ்சல்களை, அழகாக அடுக்கி வைத்து நாம் பயன்படத் தந்தது.
நம் பேச்சுக்களை டெக்ஸ்ட்டாக மாற்றித் தந்தது. உலகில் நாம் எங்கு இருக்கிறோம்; எங்கெல்லாம் போக ஆசைப்படுவோம் என்று எடுத்துக் காட்டியது. நாம் பயணிக்கும்போது, நாம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டி, எடுத்துச் சொல்லி, வழிகாட்டியது. எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மைப் பற்றிய தகவல்களை ஆய்வு செய்து, நம் எதிர்காலத் தேவைகளும், விருப்பங்களும் என்னவாக இருக்கும் என்று எடுத்துக் காட்டுகிறது.
உலகக் குடிமக்கள் அனைவரையும் வளைத்துப் போட்டு, அனைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நிறுவனமாக கூகுள் எப்படி வளர்ந்தது? அமெரிக்காவின் மென்லோ பார்க் என்ற இடத்தில், லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் ஆகிய இருவரால், சூசன் ஓஜ்சிக்கி என்பவரது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில், 1998ல் தொடங்கப்பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகளாவிய நிறுவனமாகத் தன் 15 ஆவது ஆண்டின் நிறைவு விழாவினைக் கொண்டாடியது.
தேடுதல் வர்த்தகத்தில், கூகுளை நெருங்க, மைக்ரோசாப்ட் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. பல கோடி டாலர்கள் செலவில் தன் பிங் (Bing) தேடல் தளத்தினைத் தொடர்ந்து மாற்றி அமைத்து வருகிறது.
ஆனாலும், அமெரிக்காவில் தேடல் வர்த்தகத்தில் 18 சதவீதப் பங்கினையே பெற முடிந்தது. கூகுள் அமெரிக்கா வில் 70 சதவீதப் பங்கினையும், உலக அளவில் 90 சதவீதத்தையும் கொண்டு வேகமாக முன்னேறியும் வருகிறது.
பதினைந்து வயது நிரம்பிய கூகுள், தொடர்ந்து முன்னேறுகையில், பல ஆண்டுகள் டிஜிட்டல் உலகில் கொடி நாட்டிய மைக்ரோசாப்ட், மொபைல் சாதனங்களில் ஏற்பட்ட மாற்றத்தை கோட்டைவிட்டதால், இன்னும் எழுந்து வர இயலாமல் தவிக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இயங்கு தளம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். தளத்துடன் இணைந்து, மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் மொபைல் போன் திட்டங்களைத் தகர்த்தது.
மைக்ரோசாப்ட் பெற்ற வெற்றிமுனைகளையும், மேற்கொண்ட தவறுகளையும், கூகுள் பாடமாக எடுத்துக் கொண்டு தன் திட்டங்களை வகுத்தால், தோல்வியின்றி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
0 comments :
Post a Comment