விண்டோஸ் 8 புதிய சகாப்தம் தொடங்குகிறது


உலகின் 90 சதவிகித பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய திருப்புமுனை இயக்கமாக, விண்டோஸ் 8, வரும் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26ல், வெளிவர இருக்கிறது. 

தற்போதைய விண்டோஸ் இயக்கத்தின் செயல்பாட்டினை முற்றிலுமாகப் புரட்டிப் போட இருக்கின்ற இந்த சிஸ்டத்தினைப் பயன்படுத்த, பல லட்சக்கணக்கில் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

விண்டோஸ் 95 முதல் விண்டோஸ் 7 சிஸ்டம் வரை நமக்குக் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் நாம் மறந்து போகும் வகையில், இந்த இயக்கத்தில் மாறுதலான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. "விண்டோஸ் 8 சகாப்தம்' என புதிய ஒன்று தொடங்க இருக்கிறது.

இதுவரை வெளியான விண்டோஸ் போல் இல்லாமல், பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்கள் அனைத்திலும் இயங்கும் ஒருங்கிணைந்த ஓர் இயக்கமாக விண்டோஸ் 8 வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் போட்டியாளரான ஆப்பிள் நிறுவனம் கூட எண்ணிப்பார்க்காத புதிய முயற்சியாகும். 

ஆப்பிள் இன்னும் தன் மேக் இன்டோஷ் கம்ப்யூட்டருக்கென ஒன்றும் (OS X Mountain Lion) மற்றும் ஐபோன், ஐபேட், ஐபாட் டச் ஆகியவற்றிற்கென (iOS 6)ஒன்றுமாக, இரு வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைத் தந்து கொண்டிருக்கிறது. 

இவற்றின் சில கூறுகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், இயக்க முறைமை வேறுதான். எனவே, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எப்படி ""ஆப்பிள் வரும் முன், ஆப்பிள் வந்த பின்'' என்று இருவேறு நிலைகளைச் சரித்திர நிகழ்வுகளாக டிஜிட்டல் உலகம் கருதுகிறதோ, அதே போல, ""விண்டோஸ் 8க்கு முன், விண்டோஸ் 8க்குப் பின்'' என இனி இரு பிரிவுகள் காட்டப்படும் வகையில் விண்டோஸ் 8 பயனாளர்களைத் தன் சிறப்பம்சங்களால் மாற்ற இருக்கிறது.

விண்டோஸ் 8, இதற்கு முந்தைய சிஸ்டங்களின் அடியைப் பின்பற்றி, புதிய வசதிகளுடன் அமைக்கப்பட்ட சிஸ்டம் அல்ல. முற்றிலும் புதுமையாக, அனைத்தையும் மாறுதலுக்கு உள்ளாக்கி, எதிர்பாராத வடிவமைப்பையும் கொண்டதாக இது விளங்குகிறது.

குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் சிஸ்டங்களில் மக்கள் ரசித்துப் பயன்படுத்தும் விஷயங்களை, காட்சித் தோற்றங்களைக் கொண்டு வந்து, அந்நிறுவனத்திற்குப் போட்டியாக இதனை மைக்@ராŒõப்ட் தந்துள்ளது. 

இதில் இணைக்கப்பட்டு தரப்பட்டிருக்கும் மெட்ரோ அப்ளிகேஷன் மற்றும் தொடுதிரை பயன்பாடு, தன் நிறுவனத்திற்கு ஒரு புதிய திருப்பத்தினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இவற்றின் மிகச் சிறப்பான சில அம்சங்களை மட்டும் இங்கு பார்க்கலாம். 

விண்டோஸ் 8 திறந்தவுடன் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் முதல் விஷயம் இன்டர்பேஸ் எனப்படும் இடைமுகம் தான். உயிர்த் துடிப்புள்ள செவ்வகக் கட்டங்கள் நம்மை வரவேற்கின்றன. உயிர்த்துடிப்பு என்று சொல்வதற்குக் காரணம் அவை அப்போதைய நிகழ்வைக் காட்டிக் கொண்டிருப்பதுதான். 

உங்களூர் சீதோஷ்ண நிலையாகட்டும், பங்குச் சந்தை நிகழ்வாகட்டும், பயன்படுத்துகிற புரோகிராம்களாகட்டும், அனைத்தும் அப்போதைக்குப் பாயத் தயாராக இருக்கும் குதிரைகளாக உங்கள் தொடுதலுக்குக் காத்திருக்கின்றன. இசைக்கப்படும் பாடல், அந்நேர உடனடிச் செய்தி, போட்டோ, காத்துக் கொண்டிருக்கும் மின்னஞ்சல் விபரம், வீடியோ, மேற்கொள்ள வேண்டிய வேலைக்கான காலம் காட்டும் காலண்டர் என நீங்கள் உடன் ரசிக்க, கேட்க, செயல்படுத்த விரும்பும் அனைத்தும் தயாராக உள்ளன.

மூன்று வகையான தொடு உணர்வினை சிஸ்டம் ஏற்றுச் செயல்படுத்துகிறது. மல்ட்டி டச் ஏற்கும் டச் பேடாக திரை உள்ளது. இரு விரல்களைக் குவித்து திரையின் குறிப்பிட்ட பகுதியைப் பெரிதாக்குவது, இரு விரல்களை எக்ஸ் மற்றும் ஒய் அச்சுக்கள் திசையில் இழுத்து காண்பது மற்றும் முனையில் விரல் வைத்து இழுத்து இயக்குவது. 

இதில் மூன்றாவதாகத் தரப்பட்டுள்ளது, வழக்கமான திரையில் இயங்கக் கூடியதாக இருக்கும். மவுஸ் மூலம் அதனை இயக்கும் வகையில் சிறப்பு கவனம் மற்றும் வடிவமைப்புடன் மவுஸ் சாதனங்களைத் தயாரிக்கும்படி ஹார்ட்வேர் தயாரிப்பாளர்களை மைக்ரோசாப்ட் கேட்டுள்ளது. 

ஸ்டார்ட் ஸ்கிரீன் அமைப்பில் கூடுதலாக தனி நபர் அமைப்பினை மேற்கொள்ள வசதிகள் தரப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர் இணைப்புகளுக்கான மேம்பாட்டு வசதி, குழந்தைகள் பயன்பாட்டில் பெற்றோர் கட்டுப்பாடு கொள்ள கூடுதல் வசதி, குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியே பயன்படுத்த அமைக்கும் வசதி, ஆகியவை கூடுதல் சிறப்பாகும். 

விண் 8 சிஸ்டத்தைப் பயன்படுத்துவோர் அனைவரும் தொடர்ந்து உணர்ந்து ரசிக்கும் விஷயங்களாக, மவுஸ் மற்றும் கீ போர்ட் செயல்பாட்டின் மேம்பாடு இருக்கப் போகிறது. கர்சரை இடது அல்லது வலது மூலைக்குச் சென்று இழுப்பதில், அப்ளிகேஷன் புரோகிராம்களின் இயக்கங்கள் செயல்படுவதாய் உள்ளன. 

விண் 8 சிஸ்டத்தின் ஸ்டார்ட் ஸ்கிரீன், ஹோம் பேஜ் போல் செயல்படுகிறது. இதில் கட்டங்களைத் தொட்டால், ஒரு சில கிளிக் செய்தால், நம் புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. 

பிங் தேடல் கருவிக்கான அப்ளிகேஷன்கள் செம்மைப் படுத்தப்பட்டுள்ளன. பயணங்கள், விளையாட்டு மற்றும் செய்தி என வகைப்படுத்தப்பட்டு கிடைக்கின்றன. Mail, Photos, and People அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டார்ட் ஸ்கிரீனில் கூடுதலாக தனிநபர் செட்டிங்ஸ் அமைக்க வழி தரப்பட்டுள்ளது. 

கூடுதல் மானிட்டர் சப்போர்ட் மேம்படுத்தப் பட்டுள்ளது. விண்டோஸ் ஸ்டோர் தேடிக் காண்பது செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர் இயக்கத்திற்கான வழிகள், பெற்றோர் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைமைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான டெஸ்க்டாப் வேண்டுவோருக்கு, அதுவும் வழங்கப்படுகிறது. 

ஆனால், ஸ்டார்ட் பட்டன் இல்லாமல் கிடைக்கிறது. டாஸ்க் பார் மற்றும் சிஸ்டம் ட்ரே தரப்படுகின்றன. விண்டோஸ் கீ அழுத்தினால், கட்டங்களுடன் உள்ள விண் 8 திரைக்கு மாறிக் கொள்ளலாம். ஒரு மானிட்டரில் டெஸ்க்டாப் திரையுடனும், இன்னொன்றில் விண் 8 திரையுடனும் இயங்கலாம். “Refresh your PC” என்ற பட்டனை அழுத்தி சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திடலாம். 

“Restore Points” போல “Refresh Points” ஏற்படுத்தி, விரும்பும் நாளில் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் சிஸ்டத்தைப் பெறலாம். Task Manager மற்றும் Windows Explorer புதுப்பிக்கப்பட்டு புதிய செயல்பாட்டைக் கொண்டுள்ளன. விண்டோஸ் இயக்க செயல்பாடு ஒவ்வொன்றிலும் புதிய வழிமுறைகள், செயல்முறைகள் தரப்பட்டு பயனாளர்களை ஆச்சரியப்பட வைக்கின்றன.

விண்டோஸ் 8 சிஸ்டத்தைத் தனியாகவும், ஏற்கனவே இருக்கின்ற சிஸ்டத்தின் மேம்பாடாகவும் பெற்றுக் கொள்ளலாம். 

விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்படியே விண்8க்கு மாற்றிக் கொள்ளலாம். புரோகிராம்கள், விண்டோஸ் செட்டிங்ஸ், யூசர் அக்கவுண்ட்ஸ் மற்றும் பைல்கள் அனைத்தும் தானாக மாற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தக் கிடைக்கும். விண் 8 சிஸ்டம் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், மீண்டும் விண்டோஸ் 7 அல்லது விஸ்டாவிற்கு மாற வேண்டும் எனில் மாறிக் கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது. ஆனால், எக்ஸ்பிக்குச் செல்ல முடியாது. 

முற்றிலும் புதிய வகையில் செயல்பட இருக்கும் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மக்கள் மாறுவார்களா? நிச்சயம் மாறுவார்கள், மாற்றிக் கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். டாஸ் இயக்கத்தினை அடுத்து மவுஸ் இணைந்த விண்டோஸ் இயக்கம் வந்த போது, பலர் தயங்கினர்; 

ஆனால் பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்கும் வசதி போன்ற பல வசதிகள், அப்படியே விண்டோஸ் இயக்கத்திற்கு மக்களை மாற வைத்தது. ஆனால், இப்போது மக்கள் தங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில் தொடுதிரை பயன் பாட்டினை நன்கு அறிந்து வைத்துள்ளனர். எனவே நிச்சயம் பெர்சனல் கம்ப்யூட்டரில் தொடு திரை இணைந்த வசதிகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்.


2 comments :

திண்டுக்கல் தனபாலன் at October 23, 2012 at 12:11 PM said...

நன்றாக பயன்படுத்தி இது போல் இன்னும் விளக்கமாக சொல்லுங்கள்...

நன்றி...

Thozhirkalam Channel at October 23, 2012 at 7:20 PM said...

பயனுள்ள தெளிவான பதிவு,,,

வாழ்த்துகள் சகோ,,

தொடருங்கள்,,,

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes