ஐந்தாம்படை - சினிமா விமர்சனம்

நாசருக்கு நான்கு தம்பிகள். ஒரு தம்பி சுந்தர்.சி. தியேட்டர் நடத்துகிறார். நாசர் சகோதரர்களுக்கும் எதிர்தரப்பில் உள்ள சம்பத், ராஜ்கபூர் கோஷ்டிக்கும் தீராத பகை. அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். எதிர் கோஷ்டியின் உறவு பெண் சிம்ரனுக்கும் சுந்தர்.சிக்கும் தகராறு முற்றுகிறது. ஒரு கட்டத்தில் சுந்தர்.சியை ஒருதலையாய் காதலிக்கிறார் சிம்ரன். ஆனால் சிம்ரனை சுந்தர்.சியின் அண்ணன் முகேஷ்சுக்கு நிச்சயம் செய்து திருமணத்தை முடித்து விடுகிறார்கள்.

காதல் தோல்வியால் சுந்தர்.சி மேல் வெறுப்பாகிறார் சிம்ரன். எதிராளிகளுடன் சேர்ந்து சுந்தர்.சியை வீட்டை விட்டு துரத்தி நாசர் குடும்பத்தை பிரிக்க சதி செய்கிறார். அண்ணியின் சதி திட்டங்களை முறியடித்து குடும்பத்தை சுந்தர்.சி எப்படி ஒன்று சேர்க்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

பாசக்கார தம்பி வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் சுந்தர்.சி. கடைசி தம்பியை கடத்தியவர்களை துவம்சம் செய்யும் போதும் அண்ணனை அடித்தவன் வீட்டில் புகுந்து ரவுடிகளை நொறுக்கும் போதும் ஆவேசம் காட்டுகிறார்.

சிம்ரன் நாட்டிய பள்ளியை சிதைத்து நாசர் கண்டிப்புக்கு கட்டுப்பட்டு மீண்டும் அதை சீரமைத்து கொடுப்பது.... தன்னால் நடனம் ஆடுவதை விட்ட சிம்ரனை அவர் குருவை வரவழைத்து மீண்டும் ஆட வைப்பது கலகலப்பானவை. காதலியை எதிரிக்கு மனைவியாக்க சிம்ரன் போடும் திட்டத்தை மந்திரியை கைப்பாவையாக வைத்து மணமேடையில் தடுத்து நிறுத்தும் சீன்கள் தமாஷானவை.

சிம்ரனுக்கு அழுத்தமான வேடம். சரியாக செய்து இருக்கிறார். மணமேடையில் மாப்பிள்ளை மாறியதை பார்த்து திருமணத்தை நிறுத்த தவிப்பது.... சுந்தர்.சி கிடைக்காத ஆத்திரத்தில் எதிராளிகளுடன் சேர்ந்து வில்லத்தனம் செய்வது என விறுவிறுப்பு ஏற்றுகிறார். நாயகி அதிதி காதலும் கண்ணீரமாய் வந்து போகிறார்.

நெல்லை தமிழ் பேசி விவேக் காமெடி தர்பார் நடத்துகிறார்.

பங்காளி சண்டையை மையப்படுத்தி காதல், மோதல், காமெடி, சென்டிமென்ட் அம்சங்களுடன் கலகலப்பும் விறுவிறுப்பாய் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் பத்ரி. மனநிலை பாதித்த தேவயானியின் பிளாஷ்பேக் கதையில் ஜீவன் இல்லை. இமான் இசையில் பாடல்கள் ரசனை.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes