காந்தி கொலை வழக்கு 1

இருபதாம் நூற்றாண்டில் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்த நிகழ்ச்சி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதாகும். இந்தியாவின் சுதந்திரத்துக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாகப்பாடுபட்ட மகாத்மா, சுதந்திரம் பெற்ற 5 மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, சதித்திட்டம் தீட்டிய ஆப்தே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். சதித்திட்டம் பற்றியும் வழக்கு விசாரணை பற்றியும் படிப்பதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றி அறிந்து கொள்வது விசாரணையைப் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

கோட்சே: வயது 37. முழுப்பெயர் நாதுராம் விநாயக் கோட்சே. இவனுடைய தந்தை, தபால் துறையில் மாதம் 15 ரூபாய் சம்பளம் பெற்று வந்தவர். கடவுளுக்கு பயந்தவர். இந்து மத கோட்பாடுகளை, சம்பிரதாயங்களை அணுவளவும் பிசகாமல் கடைப்பிடித்தவர். கோட்சேயின் தாயார், உத்தமி என்றும், சாந்த சொரூபி என்றும் பெயரெடுத்தவர்.

கோட்சேக்கு மூன்று சகோதரர்கள்; இரண்டு சகோதரிகள். தென் மராட்டியத்தில் உள்ள சாங்லி என்ற இடத்தில் கோட்சே பிறந்தான். சிறு வயதிலேயே கட்டுப்பாடுகளுடன் வளர்ந்தான். ரிக் வேதம், பகவத் கீதை முதலிய நூல்களும், சமஸ்கிருதமும் கற்பிக்கப்பட்டன. சிறு வயதிலேயே இந்து மதத்தின் மீதும், இந்து மதக்கடவுள்கள் மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்தான். புனாவில் படித்த கோட்சே, பத்தாம் வகுப்பைக்கூட பூர்த்தி செய்யவில்லை. படிப்பில் நாட்டம் இல்லாமல் துறைமுகத்தில் வேலை பார்த்தான். பின்னர் பழ வியாபாரம், கார் டயர்களை பழுதுபார்த்தல்... இப்படி பல வேலைகளைப் பார்த்துவிட்டு, கடைசியில் தையல் வேலை கற்றுக்கொண்டு தையல் கடை வைத்தான்.

படிப்பு அதிகம் இல்லையென்றாலும், ஆங்கிலத்தில் நன்றாக எழுதவும், பேசவும் தெரியும். கார் ஓட்டுவதிலும் சூரன். "அரசியலில் தீவிரமாக ஈடுபடவேண்டும். இந்துக்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடவேண்டும். எனவே திருமணம் செய்து கொள்ளக்கூடாது. பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்" என்று தீர்மானித்த கோட்சே, அந்த முடிவை உறுதியாகக் கடைப்பிடித்தான். தாயைத்தவிர வேறு பெண்களை தலை நிமிர்ந்தும் பார்க்க மாட்டான். கோட்சே திருமணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டதால், அவன் பெற்றோர், இளையவன் கோபால் கோட்சேக்குத் திருமணம் செய்து வைத்தனர். தம்பி மனைவியைப் பார்ப்பதையும், அவளுடன் பேசுவதையும் தவிர்க்க விரும்பிய கோட்சே, தையல் கடையின் முன்புறத்தில் ஒரு அறையில் தங்கி வந்தான்.

ஆரம்ப காலத்தில் கோட்சே, மகாத்மா காந்தி மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான் என்பது வியப்பளிக்கும். வெள்ளையருடன் ஒத்துழைக்கக் கூடாது என்று மகாத்மா காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவன், கோட்சே.

1937_ம் ஆண்டில் முதன் முதலாக வீரசவர்க்காரை சந்தித்தான். சுதந்திரப் போராட்டத்தின் போது, வீர தீரச்செயல்கள் புரிந்தவர் வீர சவர்க்கார். அவர் மீது கோட்சேக்கு மிகுந்த பற்று ஏற்பட்டது. சவர்க்கார் தொடங்கிய இந்து மகா சபையில் சேர்ந்தான். சிறு வயதில், ரத்தத்தை கண்டாலே கோட்சேக்கு "அலர்ஜி" என்றால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் அது உண்மை. 1947 ஜுலை முதல், "தி ஹிந்து ராஷ்டிரா" என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து வந்தான்.

ஆப்தே: வயது 34. ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஆப்தே, "பி.எஸ்.சி" பட்டதாரி. பிறகு 1941, 42_ல் ஆசிரியர் வேலைக்கு ("பி.டி") படித்துத்தேறினான்.

1943_ல், இந்திய விமானப்படையில் 4 மாதம் பணியாற்றினான். தம்பி இறந்து போனதால், குடும்பத்தை கவனிப்பதற்காக வேலையை விட்டு விலகி, சொந்த ஊர் திரும்பினான். அகமது நகர் பள்ளியில் ஆசிரியராகவும், பிறகு அமெரிக்கன் மிஷன் உயர் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகவும் பணிபுரிந்தான். 1934_ல் கோட்சேயுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்து மதத்தின் மீதுள்ள பற்றினால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

புனாவில், துப்பாக்கி பயிற்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, இந்து இளைஞர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வந்தான், ஆப்தே. பின்னர் கோட்சேயுடன் சேர்ந்து, 1944_ல் "தி அக்ரானி" என்ற பத்திரிகையைத் தொடங்கினான். அந்தப் பத்திரிகையை வெள்ளையர் அரசாங்கம் தடை செய்தது. பின்னர் 13.7.1947_ல், இருவரும் சேர்ந்து "தி ஹிந்து ராஷ்டிரா" என்ற பத்திரிகையைத் தொடங்கினர். இதன் ஆசிரியர் கோட்சே; நிர்வாகி ஆப்தே. இதில், மகாத்மா காந்தியை கடுமையாகத் தாக்கியும், பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் காரசாரமாகக் கட்டுரைகள் எழுதி வந்தனர்.

ஆப்தே, எல்லோருடனும் கலகலப்பாக பழகும் சுபாவம் உடையவன். ஆங்கிலம் பிரமாதமாகப் பேசுவான். பெண் சினேகிதிகள் ஏராளம். இவனுடைய முதல் குழந்தை ஊனமாகப் பிறந்தது. அதனால் மனைவி மீது ஆசை போய்விட்டது. பிற பெண்களின் மீது மோகம் அதிகரித்தது. ஓட்டல்களில் பணிபுரியும் பெண்கள், விமானப் பணிப்பெண்கள், காபரே நடனம் ஆடும் பெண்கள் இப்படி பலரகப்பட்ட பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தான். இந்தப் பெண் ஆசையால்தான், காந்தி கொலையில் இவன் போலீசாரிடம் சிக்க நேர்ந்தது. (இதுபற்றிய விவரங்கள் பின்னர் விரிவாக வெளிவரும்) கைரேகை, ஜோசியம் என்றால் ஆப்தேக்கு ஒரே பைத்தியம். அவனுக்கும் ஜோதிடம் பார்க்கத் தெரியும். விலை உயர்ந்த மேல் நாட்டு மது, மராட்டியரின் இனிப்பு வகைகள், நல்ல உடல் கட்டு உடைய பெண்கள் என்றால் ஆப்தேக்கு ரொம்பவும் பிடிக்கும்.

வீரசவர்க்கார் 1883 மே 28_ந்தேதி பிறந்தவர். லண்டனில் சட்டம் (பார்_அட்_லா) படிக்கச் சென்றவர். சுதந்திரப் போராட்ட தீவிரவாதி. லண்டனில் ஒரு வெள்ளைக்கார அதிகாரியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இந்தியாவுக்குக் கப்பலில் அனுப்பப்பட்டார். அப்போது கப்பலில் இருந்து தப்பி, கடலில் குதித்து நீந்தி, பிரான்சுக்குப்போனார். பிறகு போலீசாரிடம் பிடிபட்டார். அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டார். 10 ஆண்டு காலம் சிறையில் கழித்தார். விடுதலை அடைந்த பிறகு, "இந்து மகா சபை"யைத் தொடங்கினார். இந்து _ முஸ்லிம் ஒற்றுமை எக்காலத்திலும் ஏற்படாது என்று கருதினார். காந்தியின் அகிம்சை கொள்கையை எதிர்த்தார். கோட்சேயும், ஆப்தேயும் இவருடைய சீடர்கள். லண்டனில் இருந்தபோது, காந்தியை சவர்க்கார் சந்தித்துப் பேசி இருக்கிறார்.பின்னர் சவர்க்காரின் சொந்த ஊருக்கு காந்தி சென்றிருந்தபோதும், இருவரும் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள்.

நாதுராம் விநாயக் கோட்சேயின் தம்பி. வயது 29. மெட்ரிகுலேஷன் தேறியவன். புனாவில் உள்ள ராணுவ தளவாடக் கிடங்கின் ஸ்டோர் கீப்பராகப் பணியாற்றி வந்தான். வீரசவர்க்காரின் பேச்சுக்கள் அவனைக் கவர்ந்தன. இந்து மகா சபையின் துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட விரும்பினான். அப்போதெல்லாம், நாதுராம் கோட்சே தன் தம்பிக்கு புத்திமதிகள் கூறுவான்: "நீ திருமணம் ஆனவன். குடும்பப் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவது உன் கடமை. நான் பிரம்மச்சாரி.நான் போகும் பாதை ஆபத்து நிறைந்தது. என்னைப் பின்பற்றாதே. யோசித்து நல்ல முடிவுக்கு வா" என்று கோபால் கோட்சேயை பல முறை எச்சரித்திருக்கிறான். ஆனால், தன் அண்ணன் பாதையில் இருந்து கோபால் கோட்சே விலகவில்லை.


விஷ்ணு கார்கரே: வயது 34. இளமையிலேயே வறுமையை அனுபவித்தவன். அனாதை விடுதியில் வளர்ந்து ஓட்டலிலும், நாடகக் கொட்டகையிலும் வேலை பார்த்தவன். சில சமயம் பழ வியாபாரம் செய்திருக்கிறான். பிறகு சிறிய ஓட்டல் ஆரம்பித்தான். ஆப்தேயின் நட்பு கிடைத்தது. அவன் உதவியுடன் தன் உணவு விடுதியை விரிவுபடுத்தி, "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" என்ற பெயரில் ஓட்டல் நடத்த ஆரம்பித்தான்.இந்து மகாசபையின் ஒரு பிரிவான "ஆர்.எஸ்.எஸ்" அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. "இந்து மகாசபை"யின் கிளை செயலாளராக நியமிக்கப்பட்டான்.

1946_ம் ஆண்டில் நவகாளியில் கலவரம் நடந்தது. இந்துக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, கார்கரே, நவகாளிக்குச் சென்றான். அப்போது காந்தியும் நவகாளிக்குச் சென்றிருந்தார். அவரை கார்கரே சந்தித்து, இந்துக்கள் பாதிக்கப்பட்டது பற்றிக் கூறினான். அது போன்ற சம்பவம் எதையும், தான் இதுவரை பார்க்கவில்லை என்றும், முஸ்லிம்கள் ஒருபோதும் அதுபோல் நடந்திருக்கமாட்டார்கள் என்றும், காந்தி பதில் அளித்தார். இது, கார்கரேக்கு மிகுந்த ஆத்திரம் அளித்தது. மதன்லால் பாவா (வயது 20). காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மிகவும் இளையவன். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவன். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு ஓடிவந்தான்.இந்தியாவிற்குள் நுழையும்போது, எல்லை ஓரத்தில் இருந்த பாகிஸ்தான் படைகளிடம் தன் சொத்துக்களை பறிகொடுத்தான். மேலும், இவன் தந்தையை பாகிஸ்தானியர் தாக்கியதால், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதனால் முஸ்லிம்களை மதன்லால் வெறுத்தான். இவனுக்கும், "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" விடுதியை நடத்தி வந்த விஷ்ணு கார்கரேக்கும் அறிமுகம் ஏற்பட்டது. முஸ்லிம்கள் மீதான பகை இருவரையும் நண்பர்களாக்கியது.


திகம்பர ராமச்சந்திர பாட்ஜே: வயது 37. மராட்டியத்தில் சாலீங்கான் நகரத்தைச் சேர்ந்தவன். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, புனா நகரசபையில் சின்ன வேலையில் சேர்ந்தான். வருமானம் போதவில்லை என்று சொந்தத் தொழில் செய்ய விரும்பினான். இவனது தந்தை, "பாதுகாப்பு கவசம்" செய்வதில் நிபுணர். தந்தையிடம் அந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டு, பிறகு கத்தி, நாட்டு வெடிகுண்டு, கையெறி குண்டு முதலியவற்றைத் தயாரிக்கலானான். இதன் மூலம், முஸ்லிம்களுக்கு எதிராகப்போராடும் இந்து தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. பல பயங்கர ஆயுதங்கள் தயாரித்து இந்து தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்தான். சற்று குள்ளமான பாட்ஜே, எப்போதும் காவி உடை அணிந்து, நீண்ட தலை முடியுடன் சாமியார் போல காட்சி அளிப்பான். ஆயுதம் தயாரிப்பதுடன், ஆயுதங்களை கடத்தி விற்பதும் இவனது முக்கியத்தொழில். சங்கர் கிஸ்தியா. பாட்ஜேயின் வேலைக்காரன். ஒரு சாதாரண தச்சுத்தொழிலாளியின் மகன். முரட்டு ஆசாமி. பாட்ஜேயின் உத்தரவுப்படி, ஆயுதங்களை ரக சியமாகக் கடத்திச்சென்று, தீவிரவாதிகளிடம் கொடுப்பது, இவனுடைய முக்கிய வேலை. பாட்ஜேயின் ஆயுதப்பட்டறையில் கத்திக்கு சாணை பிடிப்பது, துப்பாக்கிகளுக்கு தேவையான குண்டுகளைத் தயாரிப்பது போன்ற வேலைகளிலும் வல்லவன்.


சதாசிவபார்ச்சூர்: வயது 47. குவாலியர் நகரில் டாக்டராக பணி புரிந்தவர். கோட்சேக்கு துப்பாக்கி கொடுத்து உதவினார் என்பது, இவர் மீதான குற்றச்சாட்டு.


2 comments :

giri at November 8, 2011 at 1:57 AM said...

நன்றி

NewsAndVoice at January 15, 2013 at 2:14 PM said...

Thanks a lot.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes