காந்தி கொலை வழக்கு 3

சாமியார் வேடத்தில் ஆயுத வியாபாரம் செய்து வந்த திகம்பர் பாட்ஜேயை 1948 ஜனவரி 10ந்தேதி ஆப்தேயும், கோட்சேயும் சந்தித்தனர். "ஒரு முக்கியமான காரியத்துக்காக துப்பாக்கியும், வெடிகுண்டுகளும், கையெறி குண்டுகளும் தேவைப்படுகின்றன. அதற்குரிய தொகையை உடனடியாக ரொக்கமாகக் கொடுக்கத் தயார்" என்று பாட்ஜேயிடம் ஆப்தே கூறினான். ஆப்தேயும், கோட்சேயும் இந்து தீவிரவாதிகள் என்பது சாமியார் பாட்ஜேக்குத் தெரியும்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதற்காக இந்த ஆயுதங்களைக் கேட்கிறார்கள் என்று நினைத்தானே தவிர காந்தியைக் கொல்வதற்காக என்பதை அறியவில்லை. பாட்ஜேயிடம் அப்போது துப்பாக்கி இல்லை. என்றாலும் பணம் வரக்கூடிய ஒரு நல்ல வியாபாரத்தை இழந்துவிட அவன் விரும்பவில்லை. "ஜனவரி 14ந்தேதி பம்பாயில் என்னை சந்தியுங்கள். நீங்கள் கேட்கும் எல்லா ஆயுதங்களையும் தருகிறேன்" என்றான். "அப்படியானால் பம்பாயில் இந்து மகாசபை அலுவலகத்தில் சந்திப்போம்" என்று பதிலளித்தான், ஆப்தே. காந்தியை கொலை செய்யும் திட்டத்தில் தானும் உயிர் இழக்கப்போவது உறுதி என்பதை கோட்சே உணர்ந்திருந்தான். அவன் ஏற்கனவே ரூ.3 ஆயிரத்துக்கும், ரூ.2 ஆயிரத்துக்கும் இரண்டு இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுத்திருந்தான்.

ரூ.3 ஆயிரத்துக்கான பாலிசியை தம்பியின் மனைவி பெயருக்கும், இன்னொரு பாலிசியை நண்பன் ஆப்தேயின் மனைவி பெயருக்கும் மாற்றி எழுதிக்கொடுத்தான். ஜனவரி 13ந்தேதி மாலை கோட்சேயும் ஆப்தேயும் புனாவில் இருந்து பம்பாய்க்கு புறப்பட்டார்கள். மறுநாள் மாலை பம்பாய் போய்ச் சேர்ந்தார்கள். அன்றிரவு 7.30 மணிக்கு அவர்கள் இந்து மகாசபைத் தலைவர் வீரசவர்க்காரை சந்தித்தார்கள். பிறகு இந்து மகாசபை அலுவலகத்திற்குச் சென்றார்கள். அங்கு இவர்களை சாமியார் பாட்ஜே சந்தித்தான். துப்பாக்கியைத் தவிர மற்ற எல்லா ஆயுதங்களையும் கொடுத்தான். "எப்படியும் ஒரு நாட்டுத்துப்பாக்கியையாவது வாங்கித் தருகிறேன்" என்று உறுதியளித்தான். "நீ கொடுத்துள்ள ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று எனக்கோ, கோட்சேக்கோ தெரியாது. எனவே பயிற்சியளிக்க எங்களுடன் நீயும் டெல்லிக்கு வா. கூடுதலாகப் பணம் தருகிறேன்" என்று பாட்ஜேயிடம் ஆப்தே கூறினான்.

சாமியார் பாட்ஜேக்கு பணத்தின் மீது ஆசை அதிகம். எனவே டெல்லிக்கு வர சம்மதம் தெரிவித்தான். ஆப்தேயும், கோட்சையும் காந்தியைக் கொலை செய்யும் திட்டத்துடன் டெல்லி போகிறார்கள் என்பது அவனுக்குத் தெரியாது. இதன்பின் பம்பாயில் புகழ் பெற்ற "சீ கிரீன் ஓட்டல்" என்ற ஓட்டலில் கோட்சேயும், ஆப்தேயும் தங்கினார்கள். பாட்ஜே, கார்கரே, மதன்லால் ஆகியோரை இந்துமகாசபை அலுவலகத்தில் தங்க வைத்தார்கள். கோட்சே அசதியில் தூங்கிவிட்டான். ஆப்தே தன் பெண் சிநேகிதிக்கு போன் செய்தான். அவள் டாக்டர் ஒருவரின் மகள். "நாளை நான் டெல்லிக்கு போகிறேன். இன்று உன்னை சந்திக்க விரும்புகிறேன்" என்று டெலிபோனில் கூற அவள் சம்மதம் தெரிவித்தாள். கோட்சே தூங்கிவிட்டதால் அவனுக்குத் தெரியாமல் ஆப்தே அங்கிருந்து வெளியேறி தன் காதலியைச் சந்தித்தான். அவளுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஓட்டலுக்குத் திரும்பினான். பொழுது விடிந்தது.

கோட்சேயும், ஆப்தேயும் இந்துமகாசபை அலுவலகத்துக்குச் சென்று தங்களுடைய நண்பர்களைச் சந்தித்தனர். கோட்சேயும், ஆப்தேயும் டெல்லிக்கு விமானத்தில் செல்வது என்றும் மற்றவர்கள் வெவ்வேறு ரெயில்களில் டெல்லிக்கு செல்வது என்றும் டெல்லியில் இந்து மகாசபை அலுவலகத்தில் ("சவர்க்கார் சதன்") அனைவரும் சந்தித்துப் பேசுவது என்றும் முடிவாயிற்று.

இதற்கிடையே பாட்ஜே ஏற்கனவே உறுதியளித்தவாறு நாட்டுத்துப்பாக்கி ஒன்றை கொண்டுவந்து கொடுத்தான். எனினும் அது கோட்சேக்கு திருப்தி இல்லை. தம்பி கோபால் கோட்சேயிடம் ரூ.200 கொடுத்து நல்ல துப்பாக்கி ஒன்றை வாங்கி வருமாறு கூறினான். பிறகு கோட்சேயும், ஆப்தேயும் பம்பாய் "ஏர் இந்தியா" விமானப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று, டி.என்.கார்மார்க்கர், எஸ்.மராத்தே என்ற போலிப் பெயர்களில் இரண்டு டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்தனர்.

பின்னர் ஒரு ஜவுளி மில்லுக்குச் சென்று நன்கொடையாக ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டார்கள். திட்டமிட்டபடி 17ந்தேதி பம்பாயில் இருந்து டெல்லிக்குப் பயணம் ஆனார்கள். அன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லிக்குப் போய்ச்சேர்ந்த கோட்சேயும், ஆப்தேயும், கனாட் சர்க்கஸ் என்ற பரபரப்பான பகுதியில் இருந்த "மரினா" என்ற ஓட்டலில் தங்கினார்கள்.

உண்மைப் பெயர்களை கூறாமல், எஸ்.தேஷ்பாண்டே, எம்.தேஷ்பாண்டே என்ற பெயர்களில் அறை எடுத்தார்கள். மதன்லால், கார்கரே ஆகியோர் முன்பு பேசியபடி ரெயில் மூலம் டெல்லிக்குச் சென்றனர். "இந்து மகாசபை" அலுவலகத்தில் இடம் கிடைக்காததால், சாந்தினிசவுக் என்ற இடத்தில் உள்ள ஷெரீப் ஓட்டலில் அறை எடுத்தனர்.

கார்கரே தன் பெயரை "பி.எக்ஸ்.பியாஸ்" என்று குறிப்பிட்டான். ஆனால் மதன்லால், தன் உண்மைப் பெயரையே கூறினான். (உண்மைப்பெயரில் அறை எடுத்ததால், காந்தி கொலை வழக்கில் இவன் சுலபமாக சிக்க நேரிட்டது). அண்ணன் கொடுத்த ரூ.200 ஐக்கொண்டு ஒரு கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு கோபால் கோட்சே 19_ந்தேதி டெல்லி போய்ச்சேர்ந்தான். போலி சாமியார் பாட்ஜேயும், தன் வேலையாள் சங்கர் கிஸ்தயாவுடன் வேறு ரெயிலில் 19_ந்தேதி டெல்லியை அடைந்தான். மறுநாள் ஆப்தேயை கார்கரே சந்தித்தான்.

இந்து மகாசபாவில் தனக்கு அறை கிடைக்கவில்லை என்றும் வேறு இடத்தில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தான். ஆப்தே ஒரு துண்டுச் சீட்டில் ஏதோ எழுதி "இதை இந்து மகாசபை செயலாளரிடம் கொண்டு போய் கொடு. ரூம் கிடைக்கும்" என்றான். அதன்படியே அங்கு சென்று துண்டுச்சீட்டைக் காட்டியதும் அறை கிடைத்தது. கோபால் கோட்சே 19_ந்தேதி டெல்லி வந்து சேர்ந்து தன் அண்ணனை சந்தித்தான். அன்று மாலை பிர்லா மாளிக்கைக்கு சென்ற கோபால் கோட்சே, பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியை முதன் முதலாகப் பார்த்தான்.

நிறைய போலீசார் சாதாரண உடை அணிந்து ("மப்டி"யில்) கூட்டத்தோடு கலந்திருப்பதையும் கவனித்தான். காந்தியை சுட்டுவிட்டு, போலீசாரிடமிருந்து தப்பிச் செல்வது கடினம் என்று அவனுக்குத் தோன்றியது. பின்னர் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே ஆகியோர் மரினா ஓட்டலில் சந்தித்துப் பேசினார்கள். கொலைத்திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று முடிவு செய்யும் முழு அதிகாரமும் ஆப்தேக்கு வழங்கப்பட்டது.

நீண்ட ஆலோசனைக்குப்பின் "1948 ஜனவரி 20_ந்தேதி மாலை 5 மணிக்கு பிர்லா மாளிகையில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தியை சுட்டுக் கொல்லவேண்டும்" என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது சாமியார் பாட்ஜே அந்த அறையில் இல்லை. வேறொரு அறையில் இருந்தான். அவனை ஆப்தே அழைத்து, "வெடிகுண்டை எப்படி வெடிக்கச்செய்வது?" என்பதை விளக்கிக் காட்டும்படி கேட்டுக்கொண்டான்.

ஏதோ வன்முறை ஆர்ப்பாட்டத்துக்குத்தான் ஏற்பாடு செய்கிறார்கள் என்று ஊகித்த பாட்ஜே, வெடிகுண்டை இயக்குவது பற்றி விளக்கினான். மறுநாள் காலை பாட்ஜே, சங்கர் கிஸ்தயா ஆகியோருடன் ஆப்தே பிர்லா மாளிகைக்கு சென்றான். எந்த இடத்தில் இருந்து காந்தியை நோக்கி குண்டு வீசலாம், எங்கிருந்து துப்பாக்கியால் சுடலாம் என்று ஆராய்ந்தான். "பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வருகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடலில் சோதனையிடக்கூடாது" என்று காந்தி கண்டிப்பாக கூறியிருந்தார்.

இதன் காரணமாக கூட்டத்துக்கு வருகிறவர்களை சாதாரண உடையில் போலீசார் கண்காணிக்க வேண்டுமே தவிர, யாரையும் சோதனைபோடவேண்டாம் என்று உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் உத்தரவிட்டிருந்தார். இதை அறிந்த ஆப்தே மகிழ்ச்சி அடைந்தான். பின்னர் இவர்களுடன் கோட்சே, கோபால் கோட்சே, கார்கரே, மதன்லால் ஆகியோரும் வந்து சேர்ந்து கொண்டனர். இந்து மகாசபையின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றனர்.

பாட்ஜேயின் நாட்டுத்துப்பாக்கியும், கோபால் கோட்சேயின் கைத்துப்பாக்கியும் சரியாக இயங்குகின்றனவா என்று பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. துப்பாக்கிகள் இலக்கை சரியாகப் போய்த் தாக்கக்கூடிய வேகத்துடன் இல்லை என்று கோட்சே கருதினான். "என் துப்பாக்கி நீண்ட காலம் பயன்படுத்தப்படாததால் துரு பிடித்திருக்கிறது. கொஞ்சம் எண்ணையும், ஒரு சிறு கம்பியும் இருந்தால் சரி செய்துவிடலாம்" என்றான் கோபால் கோட்சே. மதன்லால் போய் அந்த இரண்டு பொருள்களையும் வாங்கி வந்தான். அதைக்கொண்டு துப்பாக்கியை சரி செய்தான் கோபால் கோட்சே. இவர்கள் அந்த இடத்திலிருந்து திரும்பிச் செல்லும்போது, மெகர்சிங் என்ற காட்டிலாகா அதிகாரி அங்கு வந்து அவர்களைத் தடுத்து நிறுத்தினார். "ஆட்கள் நடமாட்டம் இல்லாத இந்தக் காட்டில் உங்களுக்கு என்ன வேலை?" என்று கேட்டார் அந்த அதிகாரி. "நாங்கள் டெல்லியைச் சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலா பயணிகள்" என்றான், ஆப்தே. மதன்லால் பஞ்சாபி மொழியில் பேசி, மெகர்சிங்கை நம்பும்படி செய்தான். (இந்த மெகர்சிங் பிறகு காந்தி கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக வந்து கொலையாளிகளை அடையாளம் காட்டினார்.)

மரினா ஓட்டலுக்குத் திரும்பிய இவர்கள் அன்று மாலை காந்தியை கொலை செய்யும் திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தனர். அந்தத் திட்டம் வருமாறு:

ஒரே சமயத்தில் காந்தி மீது பலமுனைத் தாக்குதல் நடத்தவேண்டும். சாதகமான நேரம் வந்ததும், கோட்சே தன் கன்னத்தைச் சொறிவது போல, ஆப்தேக்கு "சிக்னல்" கொடுக்கவேண்டும். உடனே ஆப்தே தன் கைகளை உயர்த்தி, மாளிகையின் பின்புறம் சுவர் அருகே வெடிகுண்டுகளுடன் காத்திருக்கும் மதன்லாலுக்கு சைகை காட்ட வேண்டும். உடனே மதன்லால் வெடிகுண்டை வெடிக்கச்செய்ய வேண்டும்.

வெடிச்சத்தத்தைக் கேட்டதும் கூட்டத்தில் குழப்பம் ஏற்படும். உடனே கார்க்கரே காந்தி மீது கையெறி குண்டை வீசவேண்டும். அதே சமயம் பிரார்த்தனை மண்டபத்தின் பின் சுவரில் உள்ள சிறு ஜன்னல் வழியாக காந்தியின் தலையை நோக்கியோ, முதுகை நோக்கியோ கையெறிகுண்டை கோபால் கோட்சே வீச வேண்டும். கோபால் அருகிலிருந்து காந்தியை நோக்கி சாமியார் பாட்ஜே துப்பாக்கியால் சுடவேண்டும். சங்கர் கிஸ்தியா கூட்டத்தில் இருந்துகொண்டு காந்தி மீது எறிகுண்டை வீசுவதுடன் துப்பாக்கியாலும் சுடவேண்டும்." மேற்கண்டவாறு முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஏதாவது தவறு ஏற்பட்டு யாராவது போலீசில் பிடிபட்டால் எப்படிப்பட்ட சித்ரவதை செய்தாலும் மற்றவர்களைக் காட்டிக்கொடுக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் விசுவாசமாக நடந்து கொள்ளவேண்டும் என்று இந்து மதத்தின் பெயரால் அனைவரும் சத்தியம் செய்து கொண்டார்கள். பின்னர் பிர்லா மாளிகைக்குப் புறப்படத் தயாரானார்கள்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes