மொபைல் போன்கள், கேமராக்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் நாம் அனைவரும் பயன்படுத்துவது எஸ்.டி. (SDSecure Digital) கார்ட்களே.
மிகச் சிறிய இந்த கார்ட்களில் நாம் பல ஜிபி டேட்டாக்களைப் பதிந்து எடுத்துச் செல்லலாம். மேலே கூறப்பட்ட சாதனங்களில் வைத்து, தகவல்களை எளிதாகப் பதியலாம். தொல்லை அற்ற இந்த கார்டுகள், சில வேளைகளில் நாம் எதிர்பார்த்த செயல்பாட்டினை மேற்கொள்ளாது.
அந்த வேளைகளில் நாம் சற்றுப் பொறுமையினை இழந்து, கார்டினைக் குறை கூறத் தொடங்குவோம். இந்த கார்ட் பயன்படுத்துவதில் நாம் சந்திக்கும் பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் இங்கு காணலாம்.
பலரின் மனதில் தோன்றும் ஒரு கேள்வியை முதலில் காணலாம். இந்த கார்டுகளில் உள்ள டேட்டாவினைக் காந்தக் கதிர்கள் அழிக்குமா? அல்லது சிதைக்குமா? என்பதுதான். காந்தக் கதிர்கள் எளிதில் அழிக்கும் அளவிற்கு ப்ளாஷ் மெமரி கார்டுகள் செயல்படுவதில்லை.
காந்தக் கதிர்கள் டேட்டாவினை அழிக்கும். ஆனால், அதனைச் சாதாரணமாக நாம் வீடுகளில், அலுவலகங்களில் பயன்படுத்தும் காந்தங்கள் அழிப்பதில்லை. மிக மிக சக்தி வாய்ந்த காந்தத் தகடுகளால் மட்டுமே, இந்தக் கார்டுகளில் உள்ள டேட்டாவினைச் சிதைக்க முடியும். எனவே, காந்தம் அருகே கொண்டுபோனதால், நம் எஸ்.டி. கார்ட் கெட்டுப் போய்விட்டது என்ற மாயையிலிருந்து விடுபடுவோம்.
இருப்பினும், பல்வேறு காரணங்களினால், நம்மால் சில வேளைகளில் எஸ்.டி. கார்டினைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும். கீழே இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துவோர் சந்திக்கும் ஆறு வகையான சூழ்நிலை குறித்து விளக்கப்படுகிறது.
1. தவறான பார்மெட்:
உங்களிடம் எந்த டேட்டாவும் இல்லாத எஸ்.டி. கார்ட் ஒன்று உள்ளது. அதனைப் பயன்படுத்த நீங்கள் தயாராகிறீர்கள். ஆனால், என்ன காரணத்தினாலோ, அது செயல்பட மறுக்கிறது. கார்டைச் சபிக்காமல், ஏற்கனவே அதனை எந்த சாதனங்களில் பயன்படுத்தினீர்கள் என எண்ணிப் பார்க்கவும். பலவகை மொபைல் போன்கள், கேமராக்கள் ஆகியவற்றில் பயன்படுத்தினீர்களா? பிரச்னை அங்குதான் உள்ளது.
உங்களிடம் உள்ள எஸ்.டி. கார்ட் வேறு ஒரு வகை சாதனத்திற்காக பார்மட் செய்யப்பட்டதாயிருக்கும். எப்படி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பார்மட் செய்யப் பட்ட ஹார்ட் டிஸ்க், வேறு ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படாதோ, அதே போலத்தான் இதுவும்.
இந்த மாதிரி பிரச்னை ஏற்பட்டால், முக்கிய பைல் ஏதேனும் கார்டில் பதியப்பட்டிருந்தால், அதனை இயக்கும் சாதனத்தைப் பயன்படுத்தி, பைலைப் பாதுகாப்பாக மாற்றிவிட்டு, தற்போதைய சாதனத்திற்காக பார்மட் செய்திடவும்.
2. பாதுகாப்பில்லாத வழியில் எடுத்தல்:
நம்முடைய எஸ்.டி. கார்ட்களைப் பயன்படுத்திய பின்னர், அதன் சாதனத்தில் இருந்து பாதுகாப்பான முறையில் (safely remove), இணைப்பை நீக்க வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் நீக்கினால், விபரீத விளைவு ஏற்படும். அந்த எஸ்.டி. கார்ட் மீண்டும் பயன்படுத்த முடியாமல் போகலாம்.
வேகமாக பல சக்கரங்களுடன் இயங்கும் ஓர் இஞ்சினில், ஒரு பெரிய குறட்டினைத் தூக்கி எறிந்தால் என்னவாகும்? அந்த விளைவுதான், ஓர் எஸ்.டி. கார்ட் செயல் பட்டுக் கொண்டிருக்கையில், சாதனத்திலிருந்து நீக்கப்பட்டால் ஏற்படும். இந்த விளைவு உடனே ஏற்படாது.
பைல்கள் கெட்டுப் போகாமல் காட்டப்படும். நாமும் கார்டைத் தொடர்ந்து பயன்படுத்து வோம். திடீரென அதன் இயக்கம் முடங்கிப் போகும். இந்தச் சூழ்நிலையைச் சந்திக்காமல் இருக்க, பிளாஷ் ட்ரைவ் கார்டினைப்பாதுகாப்பான முறையில்தான் நீக்க வேண்டும்.
3. கவசம் சேதம் அடைந்திருத்தல்:
எஸ்.டி. கார்ட்களைக் கொண்டிருக்கும் கவசம் சேதம் அடைந்திருந்தால், நம்மால் அந்தக் கார்ட்களைப் பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நாம் பேக் அப் செய்து வைத்த பைல்களை மீண்டும் பெற இயலாமல் போய்விடும். இந்த பைல்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தரும் சேவையினைச் சில பொறியாளர் கள் செய்து தருகின்றனர். ஆனால், அதற்கென நாம் செலுத்த வேண்டிய கட்டணம் மிக அதிகமாக இருக்கும்.
4. பூட்டப்பட்ட கார்ட்:
எஸ்.டி. கார்ட்களைப் பூட்டி வைக்கலாம். இந்த வசதி கார்ட்களில் உள்ளதனைப் பலரும் அறியாமல் இருக்கிறோம். இதன் மூலம் அதில் பதியப்பட்ட பைல்கள் அழிக்கப்படாமலும், திருத்தப்படாமலும் பாதுகாக்கலாம். கார்டின் ஒரு புறத்தில் பார்த்தால், இந்த பூட்டு இருப்பது தெரிய வரும். பொதுவான கார்டின் வண்ணத்திலிருந்து இது வேறான வண்ணத்தில் இருக்கும். இதனை எளிதாக இழுத்தால், கார்ட் பூட்டிக் கொள்ளும். மீண்டும் இதனைத் திறந்தாலே பயன்படுத்த முடியும்.
5. மெதுவாக இயங்கும் கார்ட் ரீடர்:
எஸ்.டி.கார்ட்களை அதற்கான ரீடர் சாதனத்தில் வைத்துப் பயன்படுத்துகையில், அந்த ரீடரின் செயல் வேகம் மிகவும் மெதுவாக இருந்தால், கார்டைப் பயன்படுத்துவது வீண் போலத் தெரியும். மிகப் பழைய கார்ட் ரீடரை வைத்திருப்பவர்கள் இந்த சூழலைச் சந்தித்திருக்கலாம். இந்த பிரச்னையைச் சந்திப்பவர்கள், வேகமாக இயங்கும் எஸ்.டி.கார்டினையும், அதற்கான ரீடரையும் புதியதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
6. கார்டின் செயல் வேகம் குறைவு:
மிகப் பழைய எஸ்.டி. கார்ட்கள் எனில், அவற்றில் டேட்டா எழுதப்படும் வேகமும் மிகவும் குறைவாக இருக்கும். எனவே, நம் பணி விரைவில் முடிக்கப்படாமல் இருக்கும். இதற்கு ஒரே தீர்வு, வேகமான டேட்டா பரிமாற்ற வேகம் கொண்டுள்ள புதிய கார்ட் ஒன்றுக்கு மாற்றிக் கொள்வதுதான்.
0 comments :
Post a Comment