ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், பிரவுசர் உலகில் நுழைந்தது குரோம் பிரவுசர். அப்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம். ஆறே மாதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு போட்டியாளாராய் கூகுள் நின்றது.
தொடர்ந்து குரோம் பிரவுசரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. அண்மையில், இணைய செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் ஸ்டேட் கவுண்ட்டர் (StatCounter) குரோம் பிரவுசர் தற்போது முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதுவும் மிக அதிகமான எண்ணிக்கை வித்தியாசத்தில் இந்த முதல் இடத்தைக் கைப்பற்றியுள்ளது. ஜூன் மாதம் இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி, குரோம் உலகாளவிய அளவில், 43 சதவீத இணையப் பயனாளர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.
ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 25 சதவீத வாடிக்கையாளர்களையே, தன்னிடத்தில் வைத்துள்ளது. பயர்பாக்ஸ், ஏறத்தாழ 20 சதவீதம் பேருக்கே சேவை செய்து வருகிறது. அடுத்த நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில், சபாரி மற்றும் ஆப்பரா உள்ளன.
குரோம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஸ்டேட் கவுண்ட்டர் கண்டறிந்ததைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கலாம். ஏனென்றால், மைக்ரோசாப்ட் தரும் பிரவுசரை அதிகம் பயன்படுத்துவோர் வர்த்தக நிறுவனங்களே.
வார இறுதி நாட்களில் இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நிச்சயம் குறைவாகவே தான் இருக்கும். இவர்களும், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் எனச் சென்றால், மைக்ரோசாப்ட் பிரவுசரின் பயனுறைநாள் எண்ணப்படும் காலம் விரைவில் வரும்.
குரோம் பிரவுசர் இந்த அளவிற்கு வேகமாக வளர்ந்தது எவ்வாறு என அறிய சிலருக்கு ஆவலாக இருக்கலாம். மைக்ரோசாப்ட் இந்த பிரிவில், யாரும் போட்டிக்கு வர முடியாத நிலையில் இருந்து வந்தது.
சற்று வேகமும், நான் எண்ணுகிறபடி வளைக்கக் கூடிய யூசர் இண்டர்பேஸ் அமைந்த பிரவுசரை மக்கள் தேடிய போது, பயர்பாக்ஸ் கிடைத்தது. ஆனால், குரோம் வந்த பின்னர், அதுவும் மாறியது.
மொபைல் சாதனங்களில், ஆண்ட்ராய்ட் இயக்கத் தொகுப்புடன் கிடைக்கப்பெற்ற குரோம் பிரவுசரை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கியதால், குரோம் பிரவுசரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை உயர்ந்தது.
இதனுடன் வேகம், வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பிற்கேற்ப தரப்படும் வசதிகள், குரோம் பிரவுசருக்கு இந்த இடத்தைக் கொடுத்துள்ளன.
1 comments :
உண்மை, மற்ற பிரவுசர்களை விட இதன் வேகம் அதிகமாக தான் உள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என் கணிணியில் எங்கு இருக்கிறது என எனக்கு தெரியாது. அதை நான் பயன்படுத்துவதும் இல்லை.
நான் பயன்படுத்துவது குரோமும் பயர்பாக்ஸ்சும் தான்.
Post a Comment