கூகுள் நிறுவனம், பலூன் திட்டம் என்ற பெயரில், இணைய இணைப்பு தர ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களைப் பறக்கவிட்டு, அவற்றின் மூலம், கேபிள்கள் இணைக்க முடியாமல், இன்டர்நெட் வசதி கிடைக்காமல் இருக்கும், உலகின் அனைத்து பகுதிகளிலும் இணைய இணைப்பு தரும் சாத்தியக் கூறுகளை சோதனை செய்வது குறித்து சில வாரங்களுக்கு முன் எழுதி இருந்தோம்.
இணைய இணைப்புக் கிடைக்காமல் இருக்கும் இந்தியக் கிராமங்களிலும் இந்த வசதியைத் தருவது குறித்து, கூகுள் நிறுவனம் சிந்தித்து வருவதாக, கூகுள் விற்பனைப் பிரிவு நிர்வாக இயக்குநர் டாட் ரோ தெரிவித்துள்ளார்.
இன்டர்நெட் பலூன்கள் குறித்து, இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்து தகவல்கள் கேட்டு கடிதங்கள் வந்துள்ளதாகவும், இவை இந்தத் திட்டத்திற்குக் கூடுதல் உற்சாகம் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கூகுளின் வர்த்தக நடவடிக்கைகள், இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே, எந்த அளவிற்கு இணைய வசதியை மக்களுக்குக் கொண்டு செல்கிறதோ, அந்த அளவிற்கு அந்நிறுவனம் லாபம் பெறும்.
எனவே, விண்ணில் பறந்தவாறே செயல்படக் கூடிய பலூன்களில், இன்டர்நெட் இணைப்பு தரும் சோதனையை கூகுள் மேற்கொண்டுள்ளது. இந்த பலூன்கள் தற்போதைய 3ஜி டேட்டா பரிமாற்ற வேகத்தில் இணைய இணைப்பினைத் தரும்.
இந்த இணைய பலூன்கள், பூமிக்கு மேலே 20 கிலோ மீட்டர் தூரத்தில் பறந்து கொண்டு செயல்படும். அல்லது வர்த்தக ரீதியாகப் பறக்கும் விமானங்கள் செல்லும் உயரத்தைக் காட்டிலும் இரு மடங்கு உயரத்தில் பறக்கவிடப்படும்.
இங்கு வீடுகளின் வெளியே கூரைகளில் ரிசீவர்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலமாக இணைய இணைப்பு கிடைக்கும்.
இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகி வருவதால், நிச்சயம் கூகுள் இந்த புதிய முயற்சியை, இந்தியாவிலும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
0 comments :
Post a Comment