கம்ப்யூட்டர் மெமரி - ஸ்டோரேஜ் (Memory - Storage)

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் (memory and storage) ஆகும்.

இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும். பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.


ராம் (RAMRandom Access Memory):

இதனை ஒத்த தொழில் நுட்ப சொற்கள் மெமரி, ரேண்டம் அக்சஸ் மெமரி, ஷார்ட் டெர்ம் மெமரி, டி.டி.ஆர். மெமரி, டி.டி.ஆர்.2 மெமரி, டி.டி.ஆர் 3 மெமரி மற்றும் மேலும் சில.

பயன்பாடு:

தற்காலிகமாக, புரோகிராம்கள் கையாளும் டேட்டாவினைத் தேக்கி வைக்கவும் மாற்றவும் இந்த மெமரி பயன்படுத்தப்படுகிறது. இதில் பதியப்படும் டேட்டா, புரோகிராம்கள் உருவாக்கும் டேட்டா, ஏற்கனவே நிலைத்த மெமரி சாதனங்களில் பதியப்பட்டு, இதற்கு மாற்றப்படும் டேட்டா எனப் பலவகைப்படும்.

இந்த டேட்டா இதற்கு மேலும் தேவைப்படாது என்ற நிலை வரை, இந்த ராம் மெமரியில் பதியப்பட்டு வைக்கப்படும். ராம் மெமரி சரியாக இயங்க, தொடர்ந்து மின் சக்தி இருக்க வேண்டும். மின்சக்தி இல்லாமல் போனால், அனைத்து டேட்டாவும் அழிந்து போகும். வழக்கமான ஸ்டோரேஜ் சாதனங்களின் செயல் வேகத்தைக் காட்டிலும், ராம் மெமரியின் செயல் வேகம் பல மடங்கு அதிகமானது.

எனவே ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்கும்போது, அதனால் உருவாக்கும் டேட்டா தங்கிச் செல்ல இந்த வகை மெமரியே முதல் நிலையில் உகந்த மெமரியாகும். DDR, DDR2, DDR3, GDDR3, GDDR5, LPDDR, LPDDR2, LPDDR3, ECC போன்ற சுருக்குச் சொற்கள் எல்லாம் ராம் மெமரியைக் குறிப்பனவே.


ஹார்ட் ட்ரைவ் (hard drive):

ஒத்த மறு பெயர்கள் ஸ்டோரேஜ் ட்ரைவ், டிஸ்க் ட்ரைவ், எச்.டி.டி., பெர்மணன்ட் ஸ்டோரேஜ், எஸ்.எஸ்.டி. போன்றவை.

பயன்பாடு:

நீண்ட நாட்கள் டேட்டாவினைப் பதிந்து பாதுகாக்க ஹார்ட் ட்ரைவ் ஸ்டோரேஜ் பயன்படுகிறது. இதற்குச் செல்லும் மின்சக்தியை நிறுத்தினாலும், இதில் பதியப்பட்ட டேட்டா உயிருடன் இருக்கும். ராம் மெமரியைக் காட்டிலும், ஸ்டோரேஜ் ஹார்ட் ட்ரைவகளின் கொள்ளளவும் மிக அதிகம்.

இதன் விலை ராம் மெமரி சிப்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. ராம் மெமரியில் பதிவதைக் காட்டிலும் இதில் சற்று வேகம் குறைவாகத்தான் பதிய முடியும். இவை இயந்திர ரீதியாக இயங்கக் கூடியவை. காந்தத் தளத்தில் பதிந்து கொள்வதன் மூலம், இவை டேட்டாவைப் பதிந்து கொள்கின்றன.

தற்போது வரும் சில ஹார்ட் ட்ரைவ்கள், ப்ளாஷ் மெமரியினைப் பயன்படுத்துகின்றன. இத்தகைய ட்ரைவ்களை சாலிட் ஸ்டேட் டிஸ்க் (SSD Solid State Disk) என அழைக்கின்றனர். நிலையான நிலையில் இருந்து செயல்படும் டிஸ்க் என்பது இந்த பெயரின் பொருள். இதில் நகரும் பொருட்கள் இருக்காது.

ஹார்ட் ட்ரைவ் குறித்துப் பேசுகையில் HDD, 7200 RPM, 5400 RPM, SSD, Raid, Disk configuration, SATA, IDE, SAS போன்ற சொற்களை நாம் அடிக்கடி சந்திக்கலாம்.

சரி, புதியதாக வாங்கும் கம்ப்யூட்டரில் மேலே சொல்லப்பட்ட இரண்டும் எந்த அளவில் இருக்க வேண்டும்? இப்போது வரும் தொடக்க நிலைக் கம்ப்யூட்டரில் 2 ஜிபி ராம் நினைவகம் தரப்படுகிறது. ஆனால், பலரும் இதனை 4 ஜிபியாக உயர்த்துகின்றனர்.

அல்லது 4 ஜிபி இருக்கும் கம்ப்யூட்டரையே வாங்க ஆர்டர் செய்கின்றனர். சற்று கூடுதலான பணிகள், கிராபிக்ஸ், அனிமேஷன் நிறைந்த விளையாட்டுக்கள், வேலைகளை மேற்கொள்பவர்களுக்கு, ராம் மெமரி 8 ஜிபி இருப்பது நல்லது. உங்கள் ராம் மெமரி நன்றாகச் செயல்பட வேண்டும் எனில், அது DDR31600 அல்லது அதனைக் காட்டிலும் உயர்வானதாக இருக்கட்டும்.

ஹார்ட் ட்ரைவ் இப்போது குறைந்தது 500 ஜிபியாக தொடக்க நிலையில் உள்ளது. ஒரு டெரா பைட் ஹார்ட் டிஸ்க் பெரும்பாலானவர்கள் விரும்பும், எதிர்பார்க்கும் அளவாக மாறி வருகிறது. சாலிட் ஸ்டேட் டிஸ்க் புழக்கத்தில் வரத் தொடங்கி விட்டாலும், விலை மற்றும் கிடைக்கும் வசதி இன்னும் எளிதாக அமையாததால், ஹார்ட் ட்ரைவ்தான் பலரும் வாங்குகின்றனர். இதன் இயக்க வேகம் குறைந்தது 7200 RPM என்ற அளவில் இருக்க வேண்டும். அல்லது உயர்வாக இருக்கலாம்.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at August 31, 2012 at 9:01 AM said...

நல்ல விளக்கங்கள்... அருமை... ரொம்ப நன்றிங்க...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes