வேர்ட் 2013 சோதனை அனுபவங்கள்

எம்.எஸ். ஆபீஸ் 2013 சோதனைத் தொகுப்பினை தரவிறக்கம் செய்து பார்த்ததில், அதன் அனைத்து கூட்டு தொகுப்புகளும் பல்வேறு புதிய வசதிகளையும், தொழில் நுட்பத்தினையும் கொண்டுள்ளது தெரிய வருகிறது.

தற்போது இந்த சோதனைத் தொகுப்பைப் பயன்படுத்திப் பார்ப்போர் தரும் அனுபவங்கள், குறிப்புகளைக் கொண்டு, மைக்ரோசாப்ட் இறுதி வடிவத்தினை ஆபீஸ் 2013க்குக் கொடுத்து, அநேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதனை வர்த்தக ரீதியாக வழங்கலாம்.

இங்கு வேர்ட் 2013 தொகுப்பில் நாம் சந்திக்கும் புதிய வசதிகளையும், தோற்றத்தையும் இங்கு பார்க்கலாம்.

மைக்ரோசாப்ட் வேர்ட் 2013 தொகுப்பில், ஆபீஸ் 2007/2010ல் உள்ள ரிப்பன் ஸ்டைல் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இதில் சில எதிர்பாராத முன்னேற்றமும் காணப்படுகிறது. டாகுமெண்ட்களை சேவ் செய்திடும்போதும், பகிர்ந்து கொள்ளும் போதும் இதனை நாம் அறியலாம்.

ஆபீஸ் 2013 தொகுப்பினை செட் அப் செய்கையில், நம்மை மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் ஒன்றில் நம்மை அறிமுகப்படுத்தச் சொல்கிறது. இந்த அக்கவுண்ட் மைக்ரோசாப்ட் தரும் Windows Live, Hotmail, MSN என எதாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

நீங்கள் உங்கள் அக்கவுண்ட் பதிவை இயக்கியவுடன், மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் உங்களுக்கென தயாராய் கிடைக்கிறது. இதில் உங்கள் டாகுமெண்ட்களை, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் சேவ் செய்து பதிந்து கொள்ளலாம். இவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த சேவையினை மைக்ரோசாப்ட் இலவசமாகவே தருகிறது.

உங்கள் கம்ப்யூட்டரில் தயாரிக்கப்படும் பைல்கள், அவை எடிட் செய்யப்படுகையில், ஸ்கை ட்ரைவில் உள்ள பைலும் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த வகையில் மற்றவர்களுடனும் டாகுமெண்ட்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

நீங்கள் வேர்ட் 2013 ஐத் திறந்தவுடன், புதிய டாகுமெண்ட்டுக்கான டெம்ப்ளேட் திரையை நீங்கள் பார்க்கலாம். இதில் உங்களுடைய அண்மைக் கால பைல்களையும், புதிய டாகுமெண்ட் உருவாக்கத் தயாராய் உள்ள டெம்ப்ளேட்டுகளையும் காணலாம்.

இந்த டெம்ப்ளேட்டுகள், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரிலும், மைக்ரோசாப்ட் ஆன்லைன் டெம்ப்ளேட் டேட்டாவிலும் ஸ்டோர் செய்யப்படுகின்றன. ஆன்லைனில் உள்ள டெம்ப்ளேட் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்தால், தானாகவே அது உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட்
செய்யப்பட்டு திறக்கப்படுகிறது.

வேர்ட் 2013 தொகுப்பின் மிகப் பெரிய மாற்றம் அதன் சேவ் மெனுவில் உள்ளது. இப்போது மாறா நிலையில், மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவில் சேவ் செய்யப்படுகிறது. இருப்பினும், உங்கள் பைல், உங்கள் கம்ப்யூட்டரிலும் சேவ் செய்யப்பட வேண்டுமா, அல்லது கம்ப்யூட்டரில் மட்டும் சேவ் செய்யப்பட வேண்டுமா, அல்லது நெட்வொர்க்கில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் சேவ் செய்யப்பட வேண்டுமா என்ற ஆப்ஷன் உங்களுக்குத் தரப்பட்டு, நீங்கள் மேற்கொள்ளப்படும் ஆப்ஷன் அடிப்படையில் மட்டுமே பைல் சேவ் செய்யப்படும்.

டாகுமெண்ட் தயாரிக்கப்படுகையில், இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் போனால், அது குறித்த செய்தி சிகப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. அதாவது, ஆன்லைனில் ஸ்கை ட்ரைவில் பைல் சேவ் செய்யப்படுவது தடைபட்டுவிட்டது என்ற செய்தி உங்களுக்குக் கிடைக்கும்.

இத்தொகுப்பின் பைல் மெனுவில், புதியதாக ஒரு பங்சன் தரப்பட்டுள்ளது. இதனை Share பங்சன் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆபீஸ் 2013 தொகுப்பை அப்போது பயன்படுத்துபவர் யார் எனக் காட்டப்படுகிறது. யார் எந்த டாகுமெண்ட்டை எடிட் செய்து கொண்டிருக்கிறார்கள் எனக் காணலாம்.

நீங்கள் உங்கள் டாகுமெண்ட்டை அவர்கள் ""பார்க்க மட்டும்'', அல்லது ""பார்க்கவும் திருத்தவும்'' என இரு நிலைகளில் அனுமதியினை வழங்கலாம். அவர்களை, அவர்களின் இமெயில் முகவரி மூலம் அழைக்கலாம். வேர்ட் தொகுப்பில் இருந்தவாறே அழைக்கலாம்.

டாகுமெண்ட் ஒன்றுக்கு லிங்க் ஒன்று உங்களுக்குத் தரப்படும். எந்த பிரவுசரிலும் இந்த லிங்க்கினைப் பயன்படுத்தி, உங்கள் டாகுமெண்ட்டைப் படிக்கலாம், திருத்தலாம். இதன் மூலம் மற்றவர்கள், அந்த டாகுமெண்ட் சார்ந்து தெரிவிக்க விரும்புவதனை அதில் பதியலாம். அதனை நீங்கள் காணலாம்.

டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கப்பட்ட நிலையிலேயே, சமூக வலை தளங்களுக்கு அனுப்புதல், மின்னஞ்சலில் அனுப்புதல் போன்ற வசதிகளுடன், இப்போது அதனை வலைமனைகளிலும் ஏற்றம் செய்திடலாம். வேர்ட் ப்ரெஸ், டைப் பேட் மற்றும் மைக்ரோசாப்ட் வழங்கும் ஷேர் பாய்ன்ட் ஆகியவற்றில் பதித்திடலாம்.

வேர்ட் தொகுப்பிலேயே அடோப் நிறுவனத்தின் பி.டி.எப். பார்மட்டுக்கான சப்போர்ட் தரப்பட்டுள்ளது. பி.டி.எப். பைல் ஒன்றை, வேர்டிலேயே திறந்து காணலாம். வேர்ட் பைலை அப்படியே பி.டி.எப். பைலாகவும் மாற்றி சேவ் செய்திடலாம். இந்த வசதி இருப்பதனால், படிவங்களில் டேட்டா நிரப்புவது எளிதாகிறது. மற்றும் மற்றவர்கள் நிரப்பிட, படிவம் தயாரிப்பதும் எளிதாகிறது.

அடுத்த குறிப்பிடத்தக்க வசதி, இதில் தரப்பட்டுள்ள ரீடிங் வியூவாகும். டாகுமெண்ட்களை எளிதாகப் பார்த்துப் படிக்க இந்த வியூ தரப்பட்டுள்ளது. குறிப்பாக டச் ஸ்கிரீன் இயங்கும் பெர்சனல கம்ப்யூட்டர்களில் இது மிகவும் உதவியாக இருக்கும். இந்த வியூவில், குறிப்பிட்ட இடத்தை மட்டும் விரல்களால் தேய்த்து ஸூம் செய்திடலாம்;

வலது இடதாக பக்கங்களுக்கிடையே செல்லலாம். ஒரு அச்சடித்த புத்தகத்தை எப்படிக் கையாள்கிறோமோ அதே போல, இந்த வியூவில் டாகுமெண்ட்டினைக் கையாளலாம். இந்த வசதி, வேர்ட் பயன்படுத்தி டாகுமெண்ட்களை உருவாக்குவதைக் காட்டிலும் படிப்பவர்களுக்கு கூடுதல் வசதியினைத் தரும்.

இதுவரை சோதனைப் பதிப்பில் காணப்படும் புதிய கூடுதல் வசதிகள் அனைத்துமே, மிக எளிமையானவையாகவும், புதுமையாகவும், வசதிகள் தருவதாகவுமே உள்ளன. பி.டி.எப். பார்மட்டில் டாகுமெண்ட்களைப் படிக்கையில் ஓர ஒழுங்குமுறை சரியாக அமையாமல் உள்ளது, இது இறுதிப் பதிப்பில் சரி செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கலாம்.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at August 28, 2012 at 8:11 AM said...

விளக்கம் அருமை... மிக்க நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes