ஆப்பிள் கம்ப்யூட்டர்களில் ட்ரோஜன் வைரஸ்

ரஷ்யா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் மேக் ஓ.எஸ். இயங்கும் ஆறு லட்சம் கம்ப்யூட்டர்கள் பிளாஷ் பேக் ட்ரோஜன் என்னும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் மிக மோசமான பாட்நெட் வைரஸின் மேக் அவதாரமாக உள்ளது.

ஏப்ரல் முதல் வாரத்தில் இதற்கான பேட்ச் பைலை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. ஆனால் இந்த வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து பெருகி வந்தது. Flashback Trojan என்று அழைக்கப்படுகிற இந்த வைரஸ் புரோகிராம், தான் நுழைந்த கம்ப்யூட்டரிலிருந்து, பிரபலமான இணைய தளங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடுகிறது.

பாதித்த கம்ப்யூட்டரின் அனைத்து நெட்வொர்க் பணிகளையும் கண்காணித்து இந்த திருட்டு வேலையை மேற்கொள்கிறது. ரஷ்யாவில் இயங்கும் டாக்டர் வெப் என்னும் ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் முதலில் இதனைக் கண்டறிந்த போது, பாதித்த கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தினைத் தாண்டி இருந்தது.

அந்நிறுவனம் இதனை Mac botnet என அழைத்தது. இந்த அழைப்பு வந்த பின்னரே தங்களின் நாடுகளில் இயங்கும் மேக் கம்ப்யூட்டர்களிலும் இவை காணப்படுவதாக மேலே குறிப்பிட்ட நாடுகளில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் அறிவித்தன.

பிளாஷ்பேக் (Flashback) என்னும் இந்த வைரஸ், 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரவத் தொடங்கியது. முதலில் அடோப் பிளாஷ் பிளேயரின் அப்டேட் பைல் போல வேடமிட்டு இணைய தளங்களை இது அணுகும். பின்னர் அவ்வப்போது புதிதாகக் காணப்படும் வைரஸ்களுக்கு ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் அப்டேட் செய்யப்படும் புரோகிராம்களை செயலிழக்கச் செய்திடும்.

இதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதற்கு எளிதாக வழி கிடைக்கும். இந்த வைரஸ் பாதித்த இணைய தளம் ஒன்றினை அணுகியவுடன், கம்ப்யூட்டரில் உள்ள ஜாவா இயக்கத்தில் உள்ள பிழையைப் பயன்படுத்தி மிக எளிதாக தளத்தை அணுகும் கம்ப்யூட்டரில் சென்று அமர்கிறது.

இதே வைரஸ் புரோகிராமின் இன்னொரு பதிப்பு, சென்றடைந்த கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டர் சலுகைகளைக் கேட்டு வாங்கும். இது பரவுவதற்கு அவை தேவை இல்லை என்றாலும், அவற்றைக் கேட்டுப் பெறும். அவற்றைக் கொடுத்தவுடன், கம்ப்யூட்டரில் உள்ள அப்ளிகேஷன் போல்டரைச் சென்றடைந்து பயர்பாக்ஸ் மற்றும் சபாரி பிரவுசர்களில் அமர்ந்து கொள்ளும்.

இவற்றில் எதனைப் பயன்படுத்த தொடங்கினாலும் உடனே நெட்வொர்க்கில் உள்ள மற்ற தளங்களுக்கும் பரவும். அட்மினிஸ்ட் ரேட்டர் குறித்த தகவல்களையும் அனுமதியையும் தரவில்லை என்றால், யூசர் அக்கவுண்ட்ஸ் போல்டரில் சென்று அமர்ந்து கொள்ளும். அதன் பின் எந்த அப்ளிகேஷனை இயக்கினாலும், அதன் இயக்கத்திலும் சென்று அமர்ந்து கொண்டு தனக்கு வேண்டிய தகவல்களைத் திருடி அனுப்பும்.

இந்தியாவில் இது பரவவில்லை என்றாலும், கண்டறியப்படாத நிலையில் இருக்க வாய்ப்புண்டு. மேக் சிஸ்டம் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும்.

ஆப்பிள் நிறுவனம் இதற்கென Java for Mac OS X 10.6 Update 7 என்ற பேட்ச் பைலை வெளியிட்டுள்ளது. இது பாதுகாப்பினைப் பலவீனப்படுத்திய குறியீடுகளைச் சரி செய்து அமைக்கப்பட்ட ஜாவா பதிப்பாகும்.

இதனைhttp://support.apple.com/kb/DL1516 என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். Java for OS X Lion 2012001 என்ற பேட்ச் பைலும் இதனுடன் இணைந்து தரப்படுகிறது. இதனை http://support.apple.com/ kb/DL1515 என்ற முகவரியில் பெறலாம்.

விண்டோஸ் இயக்கங்களில் மட்டுமே பரவும்படி வைரஸ் புரோகிராம்கள் எழுதப்படுகின்றன என்ற கூற்றினைப் பெரிய அளவில் இந்த பிளாஷ் பேக் பாட்நெட் வைரஸ்கள் உடைத்துள்ளன. மேக் கம்ப்யூட்டர் இயக்குபவர்களும் கவனத் துடன் இருந்து, வைரஸ் எதிர்ப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes