விண்டோஸ் 7 தரும் ட்ரைவ் மிர்ரர்

மிகச் சிறந்த பேக் அப் தீர்வின்படி, வழிகளை மேற்கொண்டு பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வந்தாலும், ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆனால், சில மணி நேர வேலையாவது வீணாகிப் போய்விடும். இதனையும் சரி செய்திட விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு வழி காட்டுகிறது. அதன் பெயர் "ட்ரைவ் மிர்ரரிங்'.

இந்த வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் புரபஷனல், என்டர்பிரைஸ் மற்றும் அல்டிமேட் பதிப்புகளில் கிடைக்கிறது. இது கீஅஐஈ 1 தொழில் நுட்பத்தின் செயல் பாடாகும். இதன்படி, இரண்டு அல்லது அதற்கும் மேலான டிஸ்க்குகள் ஒரே டேட்டாவினைக் கொண்டிருக்கும். பைல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப் பட்டு இவ்வகையில் பதிவாகும். இதனால், ஒரு டிஸ்க் கிராஷ் ஆனாலும், நாம் நம் டேட்டாவினைச் சிறிது கூட இழக்க மாட்டோம்.

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். மிர்ரரிங் என்பது தொழில் நுட்ப ரீதியாகப் பார்த்தால், பேக் அப் தீர்வாகாது. எடுத்துக் காட்டாக, நீங்கள் உங்களை அறியாம லேயே ஒரு பைலை அழித்தால், ஹார்ட் டிஸ்க்கின் இரண்டு ட்ரைவ்களிலும் அது அழிக்கப்படும்.

( அந்த பைலை வேறு தர்ட் பார்ட்டி புரோகிராம் மூலம் திரும்பப் பெறலாம் என்றாலும், இந்த மிர்ரர் ட்ரைவ் செயல்பாட்டினால் திரும்பப் பெற முடியாது). மேலும் இது போல மிர்ரர் டிஸ்க்கில் பதிந்து வைத்தவற்றை, அண்மைக் காலத்தில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயக்கத்தின் வழி மட்டுமே மீட்டுப் பெற முடியும்.

டிஸ்க் மிர்ரரிங் மேற்கொள்ள நமக்குக் குறைந்தது ஒரு காலியான டிஸ்க் இருக்க வேண்டும். எப்படி மிர்ரர் ட்ரைவில் உள்ள டேட்டாவினை இழக்காமல், இருக்கும் டிஸ்க்கினை மிர்ரர் டிஸ்க்காக அமைப்பது குறித்து இங்கு காணலாம்.

இருக்கின்ற ட்ரைவினை மிர்ரரிங் செய்வது: ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் partitions என டைப் செய்திடவும். உடன் கிடைப்பதில் Create and format hard disk partitions என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் சர்ச் பாக்ஸினை செயல்படாமல் வைத்திருந்தால், Win+R அழுத்தி ரன் விண்டோ பெற்று அதில் diskmgmt.msc என டைப் செய்திடவும்.

இப்போது Disk Management விண்டோ காட்டப்படும். நம்மிடம் OldData என்ற பெயருடன் ஒரு சிறிய டிஸ்க் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதே அளவிலான இன்னொரு டிஸ்க்கினை இதன் மிர்ரராக வைத்துக் கொள்ள விரும்புகிறோம்.

இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் டிஸ்க்கின் மிர்ரர் ஆக அமைக்க இருக்கும் டிஸ்க், பங்கிட்டு ஒதுக்கப்படாததாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Delete Volume என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம் அது பங்கிட்டு ஒதுக்கப்படாததாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் அந்த ட்ரைவில் ஏதேனும் டேட்டா இருந்தால் அது அழிக்கப்படும்.

அடுத்து எந்த டிஸ்க்கிற்கு மிர்ரர் ஏற்படுத்த விரும்புகிறீர்களோ, அதில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் மெனுவில் Add Mirror என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது ஓர் எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.

இந்த செயல்பாடு, இப்போது உள்ள டிஸ்க்கினை basic நிலையிலிருந்து dynamic நிலைக்கு மாற்றி விடும் என அந்த செய்தி கூறும். இந்த செயல்பாடு, அந்த டிஸ்க்கில் உள்ள டேட்டாவினை அழிக்காது என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த புதிய டிஸ்க் mirror என குறிக்கப்படும். இது ஏற்கனவே உள்ள ட்ரைவிலிருந்து டேட்டாவினை காப்பி செய்து வைக்கத் தொடங்கிவிடும். இந்த ட்ரைவ்கள் ஒருங்கிணைக்கப்படும். இதற்கு சிறிது நேரம் ஆகலாம். இதன் பின்னர் E: ட்ரைவில் சேர்க்கப்படும் எந்த டேட்டாவும், இரண்டு ஹார்ட் ட்ரைவ்களிலும் இருக்கும்.

இது போல ட்ரைவ் மிர்ரரிங் செய்து வைத்துக் கொள்வது நமக்கு ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகும்போது மிகவும் உதவியாக இருக்கும். ஆனால், இந்த அமைப்பை ஏற்படுத்திய பின்னரும், வழக்கம் போல பேக் அப் எடுத்து வைப்பது நல்லது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes