பைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்

ஹார்ட் டிஸ்க் இடம் கருதியும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் பைல்களைச் சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம். இந்த வகையில் பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம்.

ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

பைல்களைச் சுருக்கி அமைப்பதில் Zip துணைப் பெயர் கொண்டு அமைக்கப்படும் பைல்களே அதிகம். இது 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

காலப்போக்கில், விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங் களில், பைல்களைச் சுருக்கி அமைப்பதற்கும், ஏற்கனவே சுருக்கி வைக்கப்பட்ட பைல்களில், புதிய பைல்களை இணைக்கவும் வசதிகளைத் தரும் புரோகிராம்கள், சிஸ்டத்துடன் இணைத்தே தரப்பட்டன. சிஸ்டங்களுடன் தரப்படும் இந்த வசதியில் சில கட்டுப்பாடுகள் இருந்ததனாலேயே விண்ஸிப் போன்ற புரோகிராம்கள், விருப்பப் புரோகிராம்களாக அமைந்தன.

நவீன வசதிகளுடன் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு இந்த புரோகிராம்கள் தரப்பட்டாலும், இவை பலர் அறியாமலேயே இருக்கின்றன. கீழே தரப்பட்டுள்ள இந்த புரோகிராம்களையும் நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம். உங்கள் தேவைக்குச் சரியாக அமைந்தால், தொடர்ந்து பயன்படுத்தலாம்.


1. ஜே ஸிப் (jZip):

இந்த வகையில் நமக்குத் தென்படும் முதல் புரோகிராம் ஜே ஸிப். பைல்களைச் சுருக்கி ஆர்க்கிவ் அமைக்க, 7 ஸிப் பயன்படுத்தும் அதே தொழில் நுட்பத்தினை ஜே ஸிப் பயன்படுத்துகிறது. ஸிப் துணைப் பெயர் கொண்ட பைல் மட்டுமின்றி, TAR, GZip, 7-Zip, RAR மற்றும் ISO ஆகிய துணைப் பெயர் கொண்ட பைல்களையும் இந்த புரோகிராம் கையாள்கிறது.

பைல்களை மிக மிகக் குறைந்த அளவில் சுருக்கித் தருவது இதன் சிறப்பு. பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படும் வகையில் இந்த புரோகிராம் கிடைக்கிறது. நிறுவனங்களுக்கென தனியான புரோகிராமும் கிடைக்கிறது. இந்த புரோகிராம் தரப்படும் இணைய தள முகவரி :http://www.jzip.com/


2. பி-ஸிப் (PeaZip):

Zip துணைப் பெயர் மட்டுமின்றி, மற்ற துணைப் பெயர்களுடனும் சுருக்கப்பட்ட பைல்களைத் தரும் புரோகிராம்கள் உள்ளன. பி-ஸிப் புரோகிராம் இவற்றை எளிதாகக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 7z, Arc, Bz2, Gz, Paq, Pea, Quad/Balz, Tar மற்றும் Upx ஆகிய பார்மட்களில் சுருக்கிய பைல்களைத் தருகிறது.

இவை மட்டுமின்றி, Ace, Arj, Cab, Dmg, Iso, Lha, Rar மற்றும் Udf ஆகிய துணைப் பெயருடன் சுருக்கப்பட்ட பைல்களையும் விரித்து பைல்களாகத் தருகிறது. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் பயன்படுத்தப்படும் வகையில் இந்த புரோகிராம் கிடைக்கிறது. புரோகிராமினை இலவசமாகப் பெறhttp://www.peazip.org/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.


3. குயிக் ஸிப் (Quick Zip):

சுருக்கப்பட்ட பைல்களிலிருந்து பைல்களைப் பெற்றுப் பயன்படுத்துவதில், குயிக் ஸிப் புரோகிராம் எளிதாகச் செயல்படுகிறது. இதற்கெனத் தரப்படும் இன்டர்பேஸ் மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், போல்டர்கள், விண்டோக்கள் மற்றும் சுருக்கி வைக்கப்பட்ட பைல்களிடையே செல்வது மிக எளிதாகிறது.

Zip மற்றும் 7z உள்ளிட்ட பல வகை பார்மட்களை இது கையாள்கிறது. சுருக்கிய பைல்களில், புதிய பைல்களைச் சுருக்கி அமைத்து இணைக்க, அவற்றை இழுத்துச் சென்று விடும் வசதியை அளிக்கிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.quickzip.org/


4. ஸிப் ஜீனியஸ் (ZipGenius):

புதிய வகை பார்மட்களில் சுருக்கித் தருவதும், அதிகமான எண்ணிக்கையில் மற்ற பார்மட்களைக் கையாளும் திறன் பெற்றிருப்பதும் இந்த புரோகிராமின் சிறப்பாகும். இதன் இன்டர்பேஸ் விண்டோஸ் எக்ஸ்புளோர ருடன் இணைந்து செயல்படும் கட்டமைப்பி னையும் கொண்டுள்ளது. இதனால், இந்த புரோகிராமின் செயல்பாட்டினை எந்த ஒரு எக்ஸ்புளோரரின் விண்டோவிலும் பெற முடியும்.

இருபதுக்கும் மேற்பட்ட பைல் சுருக்கும் பார்மட்டினை சப்போர்ட் செய்வதுடன், இந்த புரோகிராம், நான்கு வகையான தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. இதனால் நாம் ஒருவருக்கொருவர் பைல் களைப் பரிமாறிக் கொள்வதில் அதிக பாதுகாப்பு வசதிகள் கிடைக்கின்றன. ஸிப் ஜீனியஸ் புரோகிராம் பெற http://www.zipgenius.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


5. 7--ஸிப் (7-Zip):

இது ஓப்பன் சோர்ஸ் திட்டத்தில் உருவான புரோகிராம். இதனுடைய 7z பார்மட்டில், மிக வலுவான பைல் சுருக்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பைல்களைச் சுருக்கும் போதே, மற்றவர் கள் அதனை அணுகித் திறக்க முடியாத வகையில், பாதுகாப்பு கிடைக்கும் வகையில் சுருக்க வழி தரப்படுகிறது. எளிதாகப் புரிந்து கொண்டு செயல்படும் வகையில், இதன் இன்டர்பேஸ் விண்டோ அமைக்கப்பட்டுள்ளது.

இதன் பார்மட் தவிர 7z, Xz, BZip2, GZip, Tar மற்றும் Zip ஆகிய பார்மட்களையும் கையாளும் திறனை இந்த புரோகிராம் தருகிறது. 32 பிட் மற்றும் 64 பிட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயக்கும் வகையில் இந்த புரோகிராம் www.7-zip.org/என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் கிடைக்கிறது.


6. இஸ் ஆர்க் (IZArc):

மேலே தரப்பட்ட பல்வேறு புரோகிராம்களின் செயல்பாடு போலவே, இந்த புரோகிராமும் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. 7--Zip, Ace, Arc மற்றும் பல பார்மட்களைக் கையாள்கிறது. இதன் இன்டர்பேஸ் வழியாக, இந்த பைல் பார்மட்களை வெகு எளிதாகக் கையாளலாம். விண்டோஸ் எக்ஸ்புளோர ரில் இருந்து, இந்த புரோகிராமின் விண்டோவிற்கு பைல்களை இழுத்து வந்து சுருக்கும் வசதி உள்ளது.

சிடிக்களில் பைல்கள் இருப்பின், Iso, Bin, Cdi மற்றும் Nrg ஆகிய இமேஜ் பார்மட் பைல்களை அணுகிச் சுருக்கும் வசதியும் உள்ளது. இந்த அனைத்து வசதிகளுக்கும் மேலாக, இதில் பயன்படுத்தப்படும் 256-bit AES என்ற தொழில் நுட்பம், அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, சுருக்கப்பட்ட பைல்களை அணுகி தகவல்களைப் பெற முடியும் என்ற கூடுதல் பாதுகாப்பினை வழங்குகிறது. புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://www.izarc.org/


7. ஹேம்ஸ்டர் (Hamster):

பைல் சுருக்கும் புரோகிராம்கள் அனைத்தும் விண்டோஸ் எக்ஸ்புளோரரு டன் இணைந்து பணியாற்றும் வசதியைத் தருகின்றன. ஹேம்ஸ்டர் புரோகிராம் தனக்கென தனியான ஒரு விண்டோ வினை அமைத்துக் கொண்டு செயல் படுகிறது. நம் விருப்பப்படியும் விண்டோவினை பல வண்ணங்களில் அமைக்கலாம்.

எந்த புதிய பார்மட்டிலும் நம் விருப்பப்படி பைல்களைச் சுருக்கி அமைக்கலாம். தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் ப்ராசசர்களின் செயல் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஹேம்ஸ்டர் செயல்படுவது, இரு மடங்கு வேகத்தில் விரைவாக வேலையை முடிக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. மகிழ்ச்சி தரும் இந்த புரோகிராம் தேவைப்படுவோர் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://www.hamstersoft.com/

இதுவரை விண்ஸிப், விண்டோஸ் ஸிப் புரோகிராம் வசதிகளை மட்டுமே நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வந்திருப்போம். இப்போது மேலே பல இலவச புரோகிராம்கள் பட்டியலிடப்பட்டு விளக்கப் பட்டுள்ளன.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes