சிறுவர்களின் உலகம்


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் உள்ள விராச்சிலை என் ஊர். திருமயம் -பொன்னமராவதி சாலையில் அமைந்திருக்கும் அந்த கிராமத்தின் நினைவுகள்தான் நான் இயங்குவதற்கு காரணம். எனக்கும் இந்த உலகத்திற்கும் இன்னும் தொடர்பு இருக்கிறது என்பதை அந்த கிராமம் நித்தம் நித்தம் மெய்ப்பித்து கொண்டிருக்கிறது.

  புதுக்கோட்டை மாவட்டத்தையே கந்தக பூமி என்பார்கள். மழை பெய்தால்தான் அந்த பூமிக்கு மார்க்கமுண்டு. ஆண்டு தோறும் மழை அந்த கிராமத்து மனிதர்களை ஏமாற்றிக் கொண்டிருந்தாலும் அதை எதிர்பார்க்கும் மனிதர்கள் அங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

  மனிதனுக்கும் மழைக்குமான உறவுகள் காலப் போக்கில் குறைந்து விட்டாலும், மழையை எதிர்பார்க்கும் மனிதர்கள் அங்கு இல்லாமல் இல்லை. விதையை விதைத்து விட்டு எந்த நம்பிக்கையில் அவர்கள் மழையை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்பது புரியாதபுதிர்.

  வார்த்தைக்கு வாக்கப்பட்ட கூட்டங்கள் அங்கு அதிகம். கிராமத்து மனிதர்களின் ஒரே நம்பிக்கை வார்த்தைதான். வயலை அடமானம் வைப்பது, மாடு விற்பது வாங்குவது என எல்லா வரவு செலவுகளும் அங்கு வார்த்தை வழிதான். இதை எல்லாம் மீறி வாழ்பவர்கள் அங்கு இருக்க மாட்டர்கள்.
விவசாயம்தான் எங்களூரின் முக்கியத் தொழில் என்றாலும் விவசாயத்தை நம்பி இப்போது அங்கு யாரும் இல்லை. என்னை போன்ற இளைஞர்கள் யாரையும் அங்கே பார்க்க முடிவதில்லை. எல்லோரும் எங்கோ சம்பாதிக்க கிளம்பி விட்டார்கள். நான் சினிமாவுக்கு வந்ததற்கும் அதுதான் காரணம். விவசாயத்தின் மீது மட்டும் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் பழைய மனிதர்களின் காலடித் தடங்கள்தான் அங்கே நாள்தோறும் பதிந்து கொண்டிருக்கின்றன.

  புதிய தலைமுறையின் காலடித் தடங்கள் ஊரின் நடு பகுதியில் உள்ள "ஸ்ரீ மது அடைக்கலம் காத்த அம்மாள் கோயிலி'ன் திருவிழா வரும் வைகாசி மாதத்தின் பத்து நாள்களில் மட்டுமே பதிந்து போகும்.

  அந்த திருவிழாதான் காலச் சூழலில் நகர மனிதர்களாக மாறி போன கிராம மனிதர்களை மீண்டும் கிராமத்து மனிதர்களோடு இன்றும் உலவ விடுகிறது. தீபாவளிக்கும் பொங்கல் போன்ற விழாக்களுக்கும் வராதவர்கள் எல்லாம் அந்த கோயில் திருவிழாவிற்கு வந்து விடுவார்கள்.

  என் சமூகத்தில் இருக்கும் 11 வகையாறாக்களுக்கும் ஒரு தெரு என 11 தெருக்கள் பின்னிப் பிணைந்து கிடக்கும் அந்த ஊரின் திருவிழாவில் ஒவ்வொரு வகையாறாவும் ஒரு நாள் திருவிழா செய்யும். ஒவ்வொரு பொழுதுகளிலும் அவர்கள்தான் திருவிழாவை ஆரம்பித்து முடிக்க வேண்டும்.
ஊரில் உள்ள வயதுக்கு வராத பெண்களையெல்லாம் கோயிலில் இருக்கும் செவ்வாய் வீட்டில் விரதம் இருக்க சொல்லுவார்கள். திருவிழா நடக்கும் 10 நாள்களிலும் அந்த பெண்கள் வீட்டிற்கு வர மாட்டார்கள். அங்கேயே குளித்து சாமி பூஜைகளை எல்லாம் முடித்து திருவிழா முடிந்தே வீட்டிற்கு வருவார்கள். இன்று வரைக்கும் இந்த முறை அங்கு இருக்கிறது. திருவிழாக்கள்தான் ஒரு மண்ணின் பெருமையை மற்ற ஊர்களுக்கு பறைசாற்றுகிறது. "விராச்சிலைகாரர்கள் எப்படி திருவிழா நடத்துகிறார்கள்? என மற்ற ஊர்காரர்கள் மெச்சும் அளவிற்கு அந்த திருவிழா நடத்தப்படும். அந்த பத்து நாள்கள் மட்டும் எங்கள் ஊரின் மக்கள் தொகை இரண்டு மடங்கு அதிகமாகி விடும். அத்தனை உறவுக் காரர்களும் அங்கு கூடி விடுவார்கள். கோடை கால விடுமுறையில் திருவிழா வருவதால் அத்தை பெண், மாமன் பெண் என உறவுகள் கூடி எங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

  நான் சிறுவனாக இருந்த பொழுதுகளில் பத்து நாள்களும் வீட்டில் கண்டு  கொள்ளவே மாட்டார்கள். மருத மலை மாமணியே... விநாயகனே விணை தீர்ப்பவனே... கற்பக வடிவே போற்றி... போற்றி... என பாடும் "முருகன் சவுண்ட் சர்வீஸின்' சாமி பாடல்களின் பின்னணியில் கபடி, திருடன் போலீஸ், கிட்டி புல் என ஆண் பெண் பேதமற்ற விளையாட்டுகள் ஒவ்வொரு நாளும் எங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும். சிறுவர்கள் உலகம் இருக்கிறதே அதுதான் இந்த உலகத்தில் இதுவரை விளங்காத ஒன்று. நான் அதன் கரைகளில் கூழாங்கற்கள் பொறுக்கியிருக்கிறேன். அதன் சுழிகளில் மூச்சு திணறியிருக்கிறேன். அதன் அலைகளை எதிர்த்து நீச்சல் பழகியிருக்கிறேன்

  ஆகாயமும், சூரியனும், நிலவும், நட்சத்திரங்களும் அந்த நதியில் அசைந்து சென்றிருக்கின்றன. ஒரு மனிதனின் முழு வாழ்க்கைக்குமான பக்குவத்தை கொடுப்பது அந்த சிறுவர்களின் உலகம் என்றுதான் நினைக்கிறேன்.

  மூன்று வயது முதல் பதினைந்து வயது வரை உள்ள அனுபவங்களும், அலைகழிப்புகளும் தான் நம் ஆளுமைகளை உருவாக்குகின்றன. இன்றைக்கும் உலக இலக்கியங்கள் சிறுவர்களின் உலகத்தில் இருந்துதான் தன் மூலப் பொருளை எடுத்துக் கொள்கின்றன.

  பனங்காயில் வண்டி செய்து தெருக்களை சுற்றி வந்ததில் ஆரம்பிக்கிறது முதல் பால்யம். முதல் எதிர்பார்ப்புடனும், முதல் ஏமாற்றத்துடனும், முதல் சமரசத்துடனும் அந்த வண்டி, வயதின் பாதைகளில் இன்னும் உருண்டு கொண்டு இருக்கிறது.

  கொட்டங்குச்சிச் சிறையில் பொன்வண்டுகள் அடைபடுகின்றன. முதல் சிறை அங்கு உருவாகிறது.

  தண்ணீர் பாம்புகளும், தவளைகளும் அதிர்ச்சியில் பொந்துகளில் பதுங்கும் வகையில் குதித்து கிணற்றின் அடி மணலை அள்ளுகையில் தொடங்குகிறது முதல் சவால்.

  மிரட்டும் ராத்திரிகளில் அப்பாவின் சட்டை பையில் பொரி உருண்டை வாங்க காசு திருடுகையில் தொடங்குகிறது முதல் ஏமாற்றம்.

  மாலை பொழுதுகளில் ஜனகணமன பாடலை முடித்து விட்டு புத்தக மூட்டையுடன் வீட்டிற்கு திரும்புகையில் தொடங்குகிறது சில கடமைகள்.
  கண்ணாமூச்சு ரே ரேவில் முதல் தொலைதல். கபடி கபடியில் முதல் வியூகம். ஆற்றில் மீன் பிடிக்கையில் முதல் தந்திரம். பட்டங்கள் விடுகையில் உயரங்களின் வியப்பு. பளிங்கு அடிக்கையில் முதல் சூது. ஒவ்வொன்றிலும் சிறுவர்கள் உலகம் ஒரு விஷயத்தை கற்றுக் கொடுத்து கொண்டிருக்கிறது.

  மாநகரத்தில் காற்றாடிகள் பறக்கின்றன. மாஞ்சா ஏற்றப்பட்ட கயிறுகளில் பறக்கும் காற்றாடிகள் தாழப் பறக்கும் விமானங்களுக்கு சவால் விடுகின்றன.

  நூல் அறுந்த காற்றாடிகள் பறந்து பறந்து மின்சார கம்பிகளில் இளைப்பாறுகின்றன. டூ வீலர்களில் போகும் பயணிகளின் கழுத்தை மாஞ்சா கயிறுகள் பதம் பார்த்து விடுகின்றன. காலங்காலமாய் காற்றுக்கும் காற்றாடிக்குமான யுத்தம் தொடர்கிறது. சிறுவர்கள் தங்கள் கனவுகளை பறக்கவிட்டபடி, மொட்டை மாடிகளில் நிற்கிறார்கள்.1 comments :

பருத்திவீரன்® at August 21, 2010 at 5:42 PM said...

இயக்குனர் பாண்டிய ராஜன் பொன்னமராவதி, திருமயம், சுற்றியுள்ள பகுதிகளை பற்றி படம் எடுத்து. நாம் கவலைகள் இன்றி வாழ்ந்த பள்ளி பருவத்தையையும், நம்ம ஊர்களையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். உங்கள் கட்டுரையையும் என்னை அப்படியே விராச்சிலைக் கூட்டி செல்லுகியது.

என்னச்ஜ, என்னச்ஜ,..............

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes