பெர்சனல் கம்ப்யூட்டர் திறன் சோதனை


நாம் பயன்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடு சரியாக உள்ளதா? அதன் திறன் எந்த அளவில் உயர்ந்து உள்ளது என்று எப்படி அறிந்து கொள்வது? 

ஒரு சாதனத்தின் இயக்கம் அல்லது செயல்பாடு இந்த அளவிற்காவது இருக்க வேண்டும் என்று அறுதியிட்டு சொல்வதையே ஆங்கிலத்தில் Benchmark என்று சொல்கிறோம். 

ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் திறன் எப்படி உள்ளது என்று அறிந்து, அதனை மற்ற பெர்சனல் கம்ப்யூட்டர்களின் திறனோடு ஒப்பிட்டுப் பார்த்து அறிந்துகொள்ள நமக்கு உதவும் பெஞ்சமார்க் பயன்பாடு (benchmarking utilities) புரோகிராம்கள் பல நமக்குக் கிடைக் கின்றன. அவற்றில் ஐந்து புரோகிராம்கள் குறித்து இங்கு காணலாம். 


1. எவரெஸ்ட் அல்ட்டிமேட் எடிஷன் (Everest Ultimate Edition): 

இந்த புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்றின் பெஞ்ச்மார்க் திறன் சோதனை நடத்துவது மட்டுமின்றி, கம்ப்யூட்டர் குறித்த வேறு பல பொதுவான தகவல்களையும் தருகிறது. 

கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம், மதர்போர்ட், ஸ்டோரேஜ் வசதி போன்றவை குறித்தும் நமக்குத் தகவல்களைத் தருகிறது. மெமரி மற்றும் சி.பி.யு.வின் திறன்களையும் தனியே சோதனையிட்டுச் சொல்கிறது. இது தரும் சோதனை அறிக்கையும் பல வடிவில் கிடைக்கிறது. 

இதனால், நாம் விரும்பும் வகையில், கோணத்தில் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடு மற்றும் திறன் குறித்து அறிந்து கொள்ள முடியும். இதன் விலை 39.95 டாலர் என்றாலும், இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து இலவசமாகச் சில நாட்களுக்குப் பயன்படுத்த முடியும்.


2.சி சாப்ட்வேர் சாண்ட்ரா (SiSoftware Sandra): 

சி சாண்ட்ரா எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த புரோகிராம், பரவலாக அனைவராலும் விரும்பப்படும் ஒரு பெஞ்ச்மார்க் புரோகிராம். இதனை நெட்வொர்க்குகளில் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கும், தனியே இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கும் பயன்படுத்தலாம். ஹார்ட்வேர், சாப்ட்வேர், செயல்திறன் சோதனை எனப் பலவகையான சோதனைத்தொகுதிகள் கொண்டதாக இந்த புரோகிராம் உள்ளது. 

மேலும் சில ஆய்வுத் தொகுதிகளை இணைக்கவும் இதில் வசதி உள்ளது. இதன் விலை 50 டாலர் என்றாலும், இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தனி நபர் பயன்பாட்டிற்கும், கல்வி நிலையங்கள் பயன்படுத்தவும் இது இலவசமாகவே கிடைக்கிறது. 


3. பெர்பார்மன்ஸ் டெஸ்ட் (Performance Test): 

கம்ப்யூட்டர் சிஸ்டம் குறித்த தகவல்களைப் பெறவும், செயல் திறன் சோதனைக்கும் இதனைப் பயனபடுத்தலாம். சில செயல்பாடுகள் இந்த அளவிலாவது இருக்க வேண்டும் என சில தர வரையறைகளைக் காட்டி, கம்ப்யூட்டர் செயல்பாட்டினை ஒப்பிட்டுப் பார்க்கும் வசதியினை இது தருகிறது. 

சோதனை முடிவுகள் பச்சை வண்ணத்தில் ஒருபுறமும், தர வரையறைகள் இன்னொரு புறமும் அருகருகே காட்டப்படுவது இதன் சிறப்பம்சமாகும். இதன் விலை 26 டாலர். இலவச சோதனையைச் சில காலம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கிறது.


4. ப்ராப்ஸ் (Fraps): 

மற்ற பெஞ்ச்மார்க் பயன்பாட்டு புரோகிராம்களிலிருந்து இது வேறுபட்டதாகும். டைரக்ட் எக்ஸ் அப்ளிகேஷன்களின் பிரேம் ரேட் குறித்த தகவல்களை மதிப்பீடு செய்து இது காட்டுகிறது. 

எடுத்துக்காட்டாக, கேம்ஸ் புரோகிராம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கையில், அப்போதைய பிரேம் ரேட் என்ன என்று, திரையின் இடது மேல் புறத்தில், மஞ்சள் நிறத்தில் காட்டப்படும். 

கேம்ஸ் பிரேம் இயக்குவதனை மாற்றுகையில், இந்த எண்ணும் மாறும். மேலும் டைரக்ட் எக்ஸ் அப்ளிகேஷன்களின் வீடியோ மற்றும் ஸ்கிரீன் கேப்சர் வேகத்தையும் இது துல்லியமாகக் காட்டும். இதன் விலை 37 டாலர் என்றாலும், இலவசமாக சோதனை செய்திட ஒரு பதிப்பு இணையத்தில் கிடைக்கிறது.


5. ப்ரெஷ் டயக்னோஸ் (Fresh Diagnose): 

மற்ற பெஞ்ச்மார்க் புரோகிராம்கள் போலவே, இதுவும் செயல்திறன் மற்றும் கம்ப்யூட்டரில் இயங்கும் சிஸ்டம் குறித்த தகவல்களைக் காட்டுகிறது. இதன் முக்கிய சிறப்பம்சம், இது மொத்தமாக, இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. 

அடுத்ததாக, மற்ற புரோகிராம்கள் தராத, நுண்ணிய செயல்பாடுகளின் திறன் நிலையையும் இது காட்டுகிறது. எடுத்துக் காட்டாக, இது உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள எழுத்து வகைகளின் செயல்திறனைக் கூட தரம் பிரித்துச் சொல்கிறது. இதன் தளத்திற்குச் சென்று, அங்கு நம்மைப் பதிவு செய்த பின்னரே, இதனைப் பயன்படுத்த முடியும்.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at February 5, 2014 at 6:51 AM said...

மிக்க நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes