சென்ற வாரம், பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் அப் செயலியை வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பயனுள்ள வகையில் இயங்கும் பிற நிறுவனங்களை வாங்கி தங்களுடையதாக்கிக் கொள்வது ஒரு நடைமுறையாகவே இருந்து வருகிறது.
அதிக பட்ச விலை கொடுத்து வாங்கிய வரிசையில், மைக்ரோசாப்ட் ஸ்கைப் நிறுவனத்தை 850 கோடி டாலர் கொடுத்து வாங்கியது. கூகுள் மோட்டாரோலா நிறுவனத்திற்கு 1,250 கோடி கொடுத்தது. ஆப்பிள் நூறு கோடி டாலருக்கு மேல் எந்த நிறுவனத்தையும் வாங்கியதில்லை.
ஆனால், முதல் முறையாக மிக அதிக விலையில் வர்த்தக நிறுவனங்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்களில், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அமைந்துள்ளது.
ரொக்கம் மற்றும் பங்குகள் மாற்றம் என்ற வகையில்,1,900 கோடி டாலர் மதிப்பில், வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, பேஸ்புக் வாங்கியுள்ளது. இந்த வர்த்தகம் குறித்து பிரபல கார்ட்னர் நிறுவனம் கூறுகையில், வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் எப்படியும் வாங்கிவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், கொடுக்கப்படும் விலை அதிர்ச்சியைத் தந்துள்ளது என்று கூறியுள்ளது.
பேஸ்புக் தளத்தில், அனைத்து வயதினரும் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதைப் பார்க்கலாம். எனவே தான், இளைஞர்கள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வாட்ஸ் அப் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகின்றனர்.
இதனை தொடர்ந்து கண்காணித்து வந்த பேஸ்புக், அந்த வயதினரையும் தன் குடைக்குள் கொண்டு வர இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால், வாட்ஸ் அப் வழக்கம் போல தனியாகவே இயங்கும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், பேஸ்புக் இன்ஸ்டாகிராம் செயலியை வாங்கி, தொடர்ந்து தனியாகவே இயக்குவது போல, வாட்ஸ் அப் பிரிவும் இயங்கும். இதில் பணியாற்றும் 55 பேர், பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து கொள்வார்கள்.
சென்ற ஆண்டின் இறுதியில் வாட்ஸ் அப் செயலியைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45 கோடியாக இருந்தது. ட்விட்டர் தளத்தில், 24.1 கோடிப் பேர் இந்த வகையில் இருந்தனர்.
வாட்ஸ் அப் தன் நூறு கோடி வாடிக்கையாளர் என்ற இலக்கினை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என பேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு அதன் சேவைகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஸ்மார்ட்போன்களில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் மிகச் சிறந்த, எளிமையான அப்ளிகேஷனாக வாட்ஸ் அப் இயங்கி வருகிறது. ஒருவருக்கொருவர் அல்லது ஒரு குழுவினராக, செய்திகள், போட்டோக்கள், வீடியோக்கள், குரல் பதிவுகள் என அனைத்தையும், இணையத் தொடர்பில் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இந்த தளத்தில் விளம்பரங்கள் எதுவும் இருக்காது என்பது இதன் சிறப்பு.
பல நூறு கோடிக் கணக்கான மக்கள் தங்களுக்குள் உறவு கொண்டு, தகவல்களையும், தங்களுக்குள் படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டு நல்லுறவை வளர்த்துக் கொள்ளுவதற்கு உதவுதல் என்பதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ள ஸக்கர்பெர்க் அவர்களுக்கு, வாட்ஸ் அப் நிச்சயம் ஒரு கவர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். அதுவே இப்போது அதனை வாங்கிக் கொள்ள வைத்துள்ளது.
இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனர்களில் ஒருவரான, ஜேன் கௌம் கூறுகையில், ஐந்தாண்டுகளுக்கு முன்பு, உலகெங்கும் உள்ள அனைவரும், தங்களுக்குள் தகவல் பகிர்ந்து கொள்ள ஒரு செயலியைத் தரவேண்டும் என்ற ஒரே நோக்குடன் தான் வாட்ஸ் அப் தொடங்கினோம். இன்று, அது இன்னும் வேகமாக வளரும் வகையில், பேஸ்புக்குடன் இணைந்துள்ளது என்று தன் வலைமனைப் பக்கத்தில் எழுதி உள்ளார்.
""இவ்வளவு பணம் கொடுத்து இதனை வாங்க என்ன நோக்கம்?'' என்று கேட்டதற்கு, ""நம்முடைய நோக்கம் எல்லாம், இந்த உலகம் எப்போதும் ஒரு திறந்த வெளியாகவும், அதில் வாழும் மக்கள், தாங்கள் விரும்பியவர்களுடன் எந்த நிலையிலும் தொடர்பு கொள்ள இயலும் நிலையிலும் இருக்க வேண்டும் என்பதே.
அந்த வகையில், மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, தொடர்ந்து வளர்ந்து வரும், வாட்ஸ் அப் இன்று பேஸ்புக்கில் இணைந்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment