குறைக்கப்பட்ட விலையில் ஆப்பிள் ஐபோன் 5சி 16 ஜிபி




சில வாரங்களுக்கு முன்னர், ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 4 மொபைல் போனின் 8ஜி மாடலை விலை குறைத்து வழங்குவதாக செய்தி வந்தது. 

ரூ.25,000க்குக் குறைவான விலையில் கூடுதலாக வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களை வாங்க விரும்புவோருக்கு இது மகிழ்ச்சியை அளித்தது. 

அத்துடன், ஆப்பிள் நிறுவனம், இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேஷியா நாட்டு மக்களுக்காக, இதனை மீண்டும் தயாரிக்க இருப்பதாகவும் செய்தி வந்தது.

தற்போது ஐபோன் 5சி மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, இணைய தளங்கள் தெரிவித்துள்ளன. இந்த போனின் அறிவிக்கப்பட்ட முதல் விலை ரூ. 41,900. 

தற்போது இது ரூ.36,899க்குக் கிடைக்கிறது. இது ஏறத்தாழ ரூ.5,000 விலை குறைப்பாகும். அமேஸான் இந்தியா வர்த்தக இணைய தளத்தில், ஒவ்வொரு வண்ண போனுக்கும் ஒரு விலை அறிவிக்கப் பட்டுள்ளது. 

மேலே சொல்லப்பட்ட விலை நீல வண்ணப் போனுக்கானது. மஞ்சள் நிற போன் ரூ.37,149க்குக் கிடைக்கிறது. வெள்ளை வண்ணத்திலானது ரூ.39,250. ப்ளிப் கார்ட் இணைய தளத்தில், குறைந்த விலை ஐபோன் ரூ.38,100. ஸ்நாப் டீல் தளத்தில் ரூ.37,622.


ஆப்பிள் ஐபோன் 5சி சிறப்பம்சங்கள்

4 அங்குல ரெடினா டிஸ்பிளே 1136 x 640 பிக்ஸெல் திறன் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டம் 8 எம்.பி. ஐசைட்கேமரா 1.2 எம்.பி.வெப் கேமரா ஏ6 சிப் இயக்கம், 16 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி 10 மணி நேரம் தொடர் பயன்பாடு பரிமாணம் - 59.2 x 124.4 x 8.97 எடை 132 கிராம்.


வாட்ஸ் அப் செயலியை பேஸ்புக் வசப்படுத்தியது


சென்ற வாரம், பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் அப் செயலியை வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பயனுள்ள வகையில் இயங்கும் பிற நிறுவனங்களை வாங்கி தங்களுடையதாக்கிக் கொள்வது ஒரு நடைமுறையாகவே இருந்து வருகிறது. 

அதிக பட்ச விலை கொடுத்து வாங்கிய வரிசையில், மைக்ரோசாப்ட் ஸ்கைப் நிறுவனத்தை 850 கோடி டாலர் கொடுத்து வாங்கியது. கூகுள் மோட்டாரோலா நிறுவனத்திற்கு 1,250 கோடி கொடுத்தது. ஆப்பிள் நூறு கோடி டாலருக்கு மேல் எந்த நிறுவனத்தையும் வாங்கியதில்லை. 

ஆனால், முதல் முறையாக மிக அதிக விலையில் வர்த்தக நிறுவனங்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்களில், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அமைந்துள்ளது. 

ரொக்கம் மற்றும் பங்குகள் மாற்றம் என்ற வகையில்,1,900 கோடி டாலர் மதிப்பில், வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, பேஸ்புக் வாங்கியுள்ளது. இந்த வர்த்தகம் குறித்து பிரபல கார்ட்னர் நிறுவனம் கூறுகையில், வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் எப்படியும் வாங்கிவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், கொடுக்கப்படும் விலை அதிர்ச்சியைத் தந்துள்ளது என்று கூறியுள்ளது.

பேஸ்புக் தளத்தில், அனைத்து வயதினரும் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதைப் பார்க்கலாம். எனவே தான், இளைஞர்கள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வாட்ஸ் அப் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகின்றனர். 

இதனை தொடர்ந்து கண்காணித்து வந்த பேஸ்புக், அந்த வயதினரையும் தன் குடைக்குள் கொண்டு வர இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால், வாட்ஸ் அப் வழக்கம் போல தனியாகவே இயங்கும். 

மூன்று ஆண்டுகளுக்கு முன், பேஸ்புக் இன்ஸ்டாகிராம் செயலியை வாங்கி, தொடர்ந்து தனியாகவே இயக்குவது போல, வாட்ஸ் அப் பிரிவும் இயங்கும். இதில் பணியாற்றும் 55 பேர், பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து கொள்வார்கள்.

சென்ற ஆண்டின் இறுதியில் வாட்ஸ் அப் செயலியைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45 கோடியாக இருந்தது. ட்விட்டர் தளத்தில், 24.1 கோடிப் பேர் இந்த வகையில் இருந்தனர். 

வாட்ஸ் அப் தன் நூறு கோடி வாடிக்கையாளர் என்ற இலக்கினை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என பேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு அதன் சேவைகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஸ்மார்ட்போன்களில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் மிகச் சிறந்த, எளிமையான அப்ளிகேஷனாக வாட்ஸ் அப் இயங்கி வருகிறது. ஒருவருக்கொருவர் அல்லது ஒரு குழுவினராக, செய்திகள், போட்டோக்கள், வீடியோக்கள், குரல் பதிவுகள் என அனைத்தையும், இணையத் தொடர்பில் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இந்த தளத்தில் விளம்பரங்கள் எதுவும் இருக்காது என்பது இதன் சிறப்பு.

பல நூறு கோடிக் கணக்கான மக்கள் தங்களுக்குள் உறவு கொண்டு, தகவல்களையும், தங்களுக்குள் படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டு நல்லுறவை வளர்த்துக் கொள்ளுவதற்கு உதவுதல் என்பதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ள ஸக்கர்பெர்க் அவர்களுக்கு, வாட்ஸ் அப் நிச்சயம் ஒரு கவர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். அதுவே இப்போது அதனை வாங்கிக் கொள்ள வைத்துள்ளது. 

இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனர்களில் ஒருவரான, ஜேன் கௌம் கூறுகையில், ஐந்தாண்டுகளுக்கு முன்பு, உலகெங்கும் உள்ள அனைவரும், தங்களுக்குள் தகவல் பகிர்ந்து கொள்ள ஒரு செயலியைத் தரவேண்டும் என்ற ஒரே நோக்குடன் தான் வாட்ஸ் அப் தொடங்கினோம். இன்று, அது இன்னும் வேகமாக வளரும் வகையில், பேஸ்புக்குடன் இணைந்துள்ளது என்று தன் வலைமனைப் பக்கத்தில் எழுதி உள்ளார். 

""இவ்வளவு பணம் கொடுத்து இதனை வாங்க என்ன நோக்கம்?'' என்று கேட்டதற்கு, ""நம்முடைய நோக்கம் எல்லாம், இந்த உலகம் எப்போதும் ஒரு திறந்த வெளியாகவும், அதில் வாழும் மக்கள், தாங்கள் விரும்பியவர்களுடன் எந்த நிலையிலும் தொடர்பு கொள்ள இயலும் நிலையிலும் இருக்க வேண்டும் என்பதே. 

அந்த வகையில், மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, தொடர்ந்து வளர்ந்து வரும், வாட்ஸ் அப் இன்று பேஸ்புக்கில் இணைந்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.


விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்




நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்துகிறீர்களா? முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தினை இதிலிருந்து பெற்று வருகிறீர்கள் என்பது உறுதி. 

முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களுக்கும், இதற்குமான ஓர் அடிப்படை வேறுபாடு, இதன் டச் ஸ்கிரீன் இண்டர்பேஸ் தான். இதனை திரை தொடுதல் இன்றி, மவுஸ் மூலமாகவும் இயக்கலாம். 

இருப்பினும், இதுவரை முந்தைய விண்டோஸ் இயக்கங்களில் இயங்கிய செயல்பாடுகள் பல இதில் வேறாக இருக்கின்றன. இந்த சிஸ்டத்தில் பல ஷார்ட்கட் கீகள், இதன் செயல்பாட்டிற்கெனத் தரப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கிய ஷார்ட் கட் கீகள் இங்கு காட்டப்படுகின்றன. 

விண்டோஸ் கீயுடனான சில ஷார்ட் கட்கீ செயல்பாட்டினை பார்க்கலாம்.

விண்டோஸ் கீயுடன்

+ D: நீங்கள் எந்த விண்டோவில் இருந்தாலும், இது டெஸ்க்டாப்பிற்கு உங்களை அழைத்துச் செல்லும். விண்டோஸ் கீயினை மாற்றி மாற்றி அழுத்துகையில், அது விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் டெஸ்க் டாப்பிற்கு மாறி மாறி கொண்டு செல்லும்.

+ I: செட்டிங்ஸ் பேனல் (Settings Panel) திறக்கப்படும். இந்த ஷார்ட் கட் கீ , Control Panel, Personalization menu, Power menu (sleep, shut down, or restart) எனப் பல வசதிகளை உங்களுக்கு அளிக்கும். 

+ X: அட்வான்ஸ்டு விண்டோஸ் செட்டிங்ஸ் (Advanced Windows Settings) மெனு திறக்கப்படும். System, Device Manager, Command Prompt, மற்றும் பல வசதிகளை இதன் மூலம் பெறலாம். 

+ F: பைல்களைத் தேடும் வசதி கிடைக்கும். இந்த வசதி, குறிப்பாக பைல்களைத் தேடிப் பெறத் தரப்படுகிறது. 

+ Period (“.”): அப்ளிகேஷன்களை ஒதுக்குகிறது. திரையின் வலது பக்கத்திற்கு அப்ளிகேஷன் ஒதுக்கப்படும். இதனால், மீதம் உள்ள விண்டோவின் இடத்தில், பல பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம். Windows Key + Shift + Period அழுத்தினால், அப்ளிகேஷன் இடது புறம் ஒதுக்கப்படும். 

+ E: கம்ப்யூட்டர் திறக்கப்படும். உங்கள் பைல்களையும், அடிக்கடி நீங்கள் திறந்து பயன்படுத்தும் போல்டர்களையும் இதன் மூலம் எளிதாகப் பெற முடியும். 

+ L: ஸ்கிரீன் லாக் செய்யப்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பணியிலிருந்து நீங்கள் உடனே விலகிச் செல்ல எண்ணினால், இந்த ஷார்ட் கட் கீ, ஸ்கிரீனில் உங்கள் செயல்பாடு லாக் செய்யப்படும். இதே கீயினை, பயனாளர் மாற்றிச் (switch users) செயல்படவும் பயன்படுத்தலாம்.

+ left arrow (and right arrow): அப்போதைய விண்டோவினை மூடும் அல்லது மாற்றும். இடது அம்புக் குறியுடன் செயல் படுத்தினால், அப்போதைய விண்டோ, திரையின் இடது புறமாக பெரிதாக்கப்படும். வலது அம்புக் குறி, வலது புறமாக இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளும். 

+ 0 - 9: டாஸ்க் பாரில் உள்ள அப்ளிகேஷன் களையும் புரோகிராமினையும் இயக்கத் திற்குக் கொண்டு வரும். டாஸ்க் பாரில் ஏற்கனவே பின் அப் செய்யப்பட்ட புரோ கிராம்களை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.இந்த எண், அவற்றின் வரிசை எண்ணைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 3 என்ற கீயுடன் செயல்படுத்தினால், மூன்றாவதாக உள்ள அப்ளிகேஷன் புரோகிராம் இயக்கத்திற்கு வரும். 

+ PrintScreen: ஸ்கிரீன் ஷாட் எடுக்க இதனைப் பயன்படுத்தலாம். இவ்வாறு எடுக்கப்படும் ஸ்கிரீன் ஷாட் படத்தினை, நீங்கள் தனியே பெயிண்ட் போன்ற ஒரு இமேஜ் புரோகிராமில் ஒட்டிப் பயன்படுத்த வேண்டியதில்லை. தானாகவே, அது Pictures என்னும் போல்டரில் சேவ் செய்யப்படும்.


பேஸ்புக் தந்த பிறந்த நாள் பரிசு




தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனம், தன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பரிசினைத் தந்து அவர்களை மகிழ்ச்சியில் நனைத்தது. 

ஒவ்வொருவரும் தங்கள் பேஸ்புக் பக்கங்களில் பதிந்து வைத்த போட்டோக்களுடன், அவர்களின் பிரபலமான பதிவுகளையும் இணைத்து ஒரு சிறிய வீடியோ படமாக அமைத்து வழங்கியது. 

இந்த பரிசினை பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்கள் பக்கங் களில் பதிவு செய்து மகிழ்ந்தனர். இது என் படம். உங்களுடையது இங்கு உள்ளது என அதற்கான லிங்க் தரப்பட்டது. 

ஒவ்வொருவரும் பேஸ்புக்கில் லாக் இன் செய்த பின்னர் https://www.facebook.com/ lookback/ என்ற முகவரியில் உள்ள பக்கத்திற்குச் சென்றால், அவர்களுக்கான வீடியோ கிளிப் கிடைக்கும். பிப்ரவரி 4, பேஸ்புக் பிறந்த நாள் அன்று இவை வெளியிடப்பட்டன. 

இவை ஒரு மாதத்திற்கு இந்த தளத்தில் கிடைக்கும். இதனை எடுத்து, ஒவ்வொருவரும் தங்கள் டைம் லைன் பக்கத்தில் பதிந்து வைத்தால், தொடர்ந்து எப்போதும் இடம் பெறும்.

நூறு கோடி மக்களுக்கும் மேலானவர்கள் இந்த படத்தைப் பெற்றனர் என்பது டிஜிட்டல் வரலாற்றில் ஒரு புதிய தகவலாகும். 

பேஸ்புக் கூட சரியாக எத்தனை வீடியோக்கள் இதுபோல உருவாக்கப்பட்டன என்று கணக்கு சொல்ல இயலவில்லை. ஆனால், பல கோடிப் பேர் பெற்றனர் என்று உறுதியாகத் தெரியவந்துள்ளது. 

இவற்றைப் பெறுவதில் மக்கள் காட்டிய ஆர்வத்தைப் பார்த்த பேஸ்புக், தொடர்ந்து இவற்றை எடிட் செய்வதற்கான டூலையும் வெளியிட்டது. தாங்கள் விரும்பும் படத்தினை இணைக்கவும், விரும்பாதவற்றை நீக்கவும் வசதி செய்யப்பட்டது. அல்லது, தாங்களே தயாரித்த படத்தினை பதிந்து கொள்ளவும் அனுமதி தரப்பட்டது.

தங்களுடைய வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறிவிட்ட பேஸ்புக் தளத்தில் சேர்ந்தது முதல் நாம் என்ன செய்தோம் என்பதனை அறிந்து கொள்வது நம்மை நாமே ரெப்ரெஷ் செய்து கொள்வது போல் இருந்தது எனப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


சில தகவல் துளிகள்


தன் 23 ஆவது வயதில் கோடீஸ் வரராக உயர்ந்த இளைஞர் என ஸக்கர்பெர்க்கினை அமெரிக்கா முதல் இடம் கொடுத்து பாராட்டியது. 

வரும் மே மாதம் தன் 30 ஆவது பிறந்த நாளை இவர் கொண்டாட இருக்கிறார். ஸக்கர்பெர்க் வளர்க்கும் பீஸ்ட் (Beast) என்னும் நாய்க்கு பேஸ்புக்கில் ஒரு தளம் உள்ளது. இதனை17 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.

ஸக்கர்பெர்க், பேஸ்புக்கின் போட்டி தளமான ட்விட்டர் தளத்தில் தனக்கென ஒரு பக்கக் கணக்கு வைத்துள்ளார். இதற்கு 3 லட்சம் விசிறிகள் உள்ளனர். ஆனால், 2012 ஜனவரிக்குப் பிறகு, இதில் புதியதாக எதுவும் எழுதப்படவில்லை.

6,900 கோடி டாலர் சந்தை மதிப்புள்ள நிறுவனமாக உயர்வதற்கு, டாட்டா கன்சல்டன்ஸி (டி.சி.எஸ்) நிறுவனத் திற்கு 46 ஆண்டுகள் ஆனது. ரிலை யன்ஸ் 4,300 கோடி டாலர் மதிப்பினைப் பெற 43 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஆனால், பேஸ்புக், பத்தே ஆண்டுகளில் 16,100 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்துள்ளது.

தன் பயனாளர்களில், 60 லட்சம் பேர்களின் தனிப்பட்ட தகவல்கள், தவறுதலாக ஒரு நிறுவனத்திற்குச் சென்றது என பேஸ்புக் அறிவித்தது. 

இது தன் சாப்ட்வேர் அப்ளிகேஷனில் இருந்த தவறினால் ஏற்பட்டது என ஒப்புக் கொண்ட பேஸ்புக், அவர்கள் அனைவருக்கும் மின் அஞ்சல் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்ட தாகவும், இவர்களின் நிதி நிலை குறித்த தகவல்கள் எதுவும் திருடு போகவில்லை எனவும் தெரிவித்தது. 

எவ்வளவு திறமையான சாப்ட்வேர் வல்லுநர் களைக் கொண்ட நிறுவனமாக இருந்தாலும், 100 சதவிதம் பிழை இல்லாத அப்ளிக்கேஷன் களை அமைக்க இயலாது என்றும் பேஸ்புக் அறிவித்துள்ளது.


மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் எலன்ஸா ஏ93


அண்மையில் தன் கான்வாஸ் மொபைல் போன் வரிசையில், கான்வாஸ் டர்போ மினி ஏ 200 மாடலை அறிமுகப்படுத்திய மைக்ரோ மேக்ஸ் நிறுவனம், இப்போது கான்வாஸ் எலன்ஸா ஏ 93 என்ற மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஸ்நாப்டீல் வர்த்தக இணைய தளத்தில் இது கிடைக்கிறது.இதில் 5 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை, 960 து 540 பிக்ஸெல் திறனுடன் தரப்பட்டுள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்

ட் 4.2 ஜெல்லி பீன் சிஸ்டம், இரண்டு ஜி.எஸ்.எம். சிம்கள் இயக்கம், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி.கேமரா, 0.3 எம்பி திறனுடன் முன்புறக் கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 1 ஜிபி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, மெமரியை 32 ஜிபி வரை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் ஆகியன தரப்பட்டுள்ளன. 

நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்ப இயக்கம், 1950 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி ஆகியவை உள்ளன. 

இந்த மாடல் போன் நீலம், கருப்பு மற்றும் தங்க வண்ணத்தில் கிடைக்கிறது. அதிக பட்ச விலை ரூ. 9,400.


பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ்


ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒரு சிறப்பான சாதனம் ஆகும். 

மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஆய்வாளர்கள் அடிக்கடி கருத்தரங்களில், கூட்டங்களில் இதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்த புரோகிராம் மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை கூறுகளைப் பார்க்கலாம்.

1. எப்போதும் ஒரே பேக் கிரவுண்டினை ஸ்லைட்களுக்குப் பயன்படுத்தவும். பிரசன் டேஷன் புரோகிராமுடன் ரெடியாகப் பல டிசைன் டெம்ப்ளேட்கள் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பிரசன் டேஷன் முழுவதும் அதனையே பயன் படுத்தவும்.

2. கலர்களைப் பயன்படுத்துகையில் ஒன்றுக்கொன்று எடுத்துக் காட்டும் வகையில் உள்ளதாக இருக்க வேண்டும். லைட் கலரில் எழுத்துகள் இருந்தால் பின்னணி சற்று டார்க்காக இருக்க வேண்டும். இதனை எப்படி அமைக்க முடியும் என்ற திண்டாட்டத்தில் இருந்தால், டிசைன் டெம்ப்ளேட்டுகளைப் பார்த்துப் புரிந்து கொண்டு செயல்படவும். 

3. பவர்பாய்ண்ட் என்பது காட்சியை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைத் தரும் ஒரு மீடியமாகும். எனவே படங்களை இணைத்து ஸ்லைடுகளை அமைப்பது பிரசன்டேஷனை நன்றாக எடுத்துக் காட்டும். ஒரு ஸ்லைடில் ஒரு நல்ல படம் அல்லது கிராபிக் பயன்படுத் தவும். 

ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் நாம் சொல்ல வந்ததைத் திசை திருப்பும். மேலும் பயன்படுத்தப்படும் படங்கள், எடுத்துச் சொல்லப்படும் கருத்துகள் சார்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் படங்கள் இதனைப் பார்ப்பவர்கள் நன்றாகப் பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையில் போதுமான அளவில் இருக்கவேண்டும். மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கக் கூடாது.

4. நாம் நம் கருத்துகளைக் கூற ஸ்லைட் ஷோ தயாரித்து வழங்குகிறோம். இது பார்ப்பவர்களுக்கான கண் பார்வை சோதனையாக இருக்கக் கூடாது. ஸ்லைடில் பயன்படுத்தப்படும் எழுத்துக்களின் அளவு குறைந்தது 36 பாய்ண்ட் என்ற அளவில் இருக்க வேண்டும். பின் ஸ்லைட் அளவைப் பொறுத்து இதனை அதிகரிக்கலாம்.

5. ஸ்லைட் ஒன்றில் டெக்ஸ்ட் ஐந்து வரிகளே அதிகம் இருக்க வேண்டும். சிறிய சொல் தொடர்களையும், புல்லட் லிஸ்ட்களயும் பயன்படுத்தவும். 

6. ஸ்லைடுகளில் உள்ள சொற்களை, வாக்கியங்களை மற்றவர்களுக்குப் படித்துக் காட்ட வேண்டாம். ஸ்லைடுகளில் உள்ளதைக் காட்டிலும் அதிக விபரங்களை நீங்கள் தருவீர்கள் என்று, காட்சியைக் காண்பவர்கள் எதிர்பார்க்க வேண்டும். 

7. டெக்ஸ்ட் வரிகளில் எந்த தவறும் இருக்கக் கூடாது. ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணப் பிழைகளை முன்கூட்டியே பார்த்து நீக்கிவிட வும். இதில் பிழைகள் இருந்தால் பார்ப்பவர் களின் கவனம், சொல்லவந்ததிலிருந்து சிதறும்.

8. உங்கள் பேச்சைக் கேட்பவர்களுடன் நேரடியாகப் பார்த்துப் பேசவும். ஸ்லைடு களைப் பார்த்து திரும்பி நின்று பேசவே கூடாது. உங்கள் குரல் உரக்க இருக்க வேண்டும். 

குரல் ஒலி குறைவாக இருந்தால், கேட்பவர்களின் கவனம் சிதற வாய்ப்பு உண்டு. ஸ்லைடுகளை முதலில் தனியாக ஒரு முறை போட்டு பார்த்துக் கொள்ளவும். என்ன பேச வேண்டும் என்பதனையும் முதலில் ஒத்திகை பார்த்துக் கொள்ளவும்.


நோக்கியா வெளியிடும் குறைந்து விலை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்


பட்ஜெட் விலையில் போன்களை வாங்கும் தன்மை இந்திய வாடிக்கையாளர்களிடம் இருப்பதனை, மொபைல் போன் நிறுவனங்கள் நன்கு அறிந்துள்ளன. 

நோக்கியா, கூகுள் நிறுவனத்தின் போட்டி யாளரான மைக்ரோசாப்ட் நிறுவனத் துடன் நெருங்கி இருந்தாலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும், ஸ்மார்ட் போன்களை குறைவான விலையில் விற்பனை செய்திடும் வகையில் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது.

இதில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் சில நவீன வசதிகள் கிடைக்காது. 

மைக்ரோசாப்ட் மற்றும் அதன் கூட்டாளியான நோக்கியா ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் முன்னேற இயலாத நிலையில் உள்ளன.இந்த வகையில் முதல் இடங்களில் இருப்பன சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களே. 

இந்த விலை குறைந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்கு வதன் மூலம், இந்தப் பிரிவில் தன் பங்கினைச் சிறப்பான முறையில் பெற நோக்கியா முயற்சிக்கிறது. 

சென்ற ஆண்டு விற்பனையான ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 79 சதவீதப் போன்களிலும், ஐபோன்களில் ஐ.ஓ.எஸ். சிஸ்டம் 15% போன்களிலும் இடம் பெற்றிருந்தன. விண்டோஸ் போன் 4% மட்டுமே கொண்டிருந்தது.


புதிய இணைய தள இணைப்புப் பெயர்கள்


இணைய தள முகவரிகளில், துணைப் பெயரினை நம் விருப்பப்படி அமைக்க முடியாது. ஏனென்றால், அவை இணையதளப் பெயர்களின் வகைகளைக் குறிக்கும். 

தொழில் நுட்ப ரீதியாக, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டால் தான், அவற்றை அமைப்பதும், அனைவரும் பயன்படுத்துவதும் இயலும். com, net, biz, edu போன்றவற்றை வரைமுறைப்படுத்தும் அமைப்பாக "ஐகான்” (ICANN(Internet Corporation for Assigned Names and Numbers)), செயல்பட்டு வருகிறது. அண்மையில் இந்த அமைப்பு பல புதிய வகைப் பெயர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

முதலில் இணையதளப் பெயர்களின் துணைப் பெயராக .com என்பதுதான் பலரும் பயன்படுத்தும் பெயராக இருந்து வந்தது. 1990 ஆம் ஆண்டு வாக்கில், உருவாக்கப்பட்ட இணைய தளங்களின் எண்ணிக்கை திடீரென பன்னாட்டளவில் அதிகமானதால், புதிய வகைப் பெயர்களை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 

இதனை "dot com” boom என அனைவரும் அழைத்தனர். பின்னர், படிப்படியாக புதிய வகைப் பெயர்கள் தரப்பட்டன. அவற்றை இணைய நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கின.

அண்மையில், ஐகான் அமைப்பு ஏழு புதிய வகைப் பெயர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவை .bike, .singles, .clothing, .guru, .holdings, .plumbing, மற்றும் .ventures. இந்த பெயர்களைக் கொண்டிருப்பது, அந்த இணையதளத்தினை உருவாக்கி வைத்து இயக்கும் நிறுவனத்தின் தன்மையைக் காட்டும். 

எடுத்துக் காட்டாக ".bike” என்ற வகைப் பெயர், அத்தளம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் இணைய தளமாக இருக்கும் என்பதனை நாம் அறியலாம். இந்த ஏழு பெயர்களுடன் நின்றுவிடாமல், மேலும் பல புதிய வகைப் பெயர்கள், ஐகான் அமைப் பின் பரிசீலனையில் உள்ளன. 

இவற்றிற்கு அனுமதி வழங்குவதில், பாதுகாப்பு நடவடிக்கை முதல் பல அம்சங்களைக் கவனிக்க வேண்டி யுள்ளதாக, ஐகான் அறிவித்துள்ளது. 

தங்களுக்கென மட்டும் சில வகைப் பெயர்களை வைத்துக் கொள்ள விரும்பும் நிறுவனங்கள், அவற்றிற்கான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று ஐகான் தெரிவித்துள்ளது. இதற்கான கட்டணம் ஒரு லட்சத்து 85 ஆயிரம் டாலர் ஆகும். இவ்வளவு கட்டணமா? என்று வியக்க வேண்டாம். 

இந்த அறிவிப்பு வந்தவுடன் ஆப்பிள், மைக் ரோசாப்ட், வால்மார்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் 100க்கும் மேற்பட்ட தங்களின் பிரியமான வகைப் பெயர்களுக்கு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்துள்ளன. இவற்றில் .lol and .androidஆகியவையும் அடங்கும்.

ஐகான் அமைப்பு தற்போது, பொதுமக்க ளுக்கு வழங்க பரிசீலனையில் வைத்திருக்கும் பெயர்களில் .camera, .equipment., .graphics மற்றும் .photography ஆகியவை உள்ளன.


பேஸ்புக் சந்தித்த பத்து திருப்புமுனைகள்




அண்மையில், பிப்ரவரி 4ல், சமூக இணைய தளமான பேஸ்புக் தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியது. 

ஹார்வேர்ட் பல்கலையில், சிறிய அளவில் தொடங்கி, இன்று நூறு கோடிக்கும் மேலாக வாடிக்கை யாளர்களைக் கொண்ட அசுர சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக் சரித்திரம், நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. 

பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை இங்கு சுருக்கமாகக் காண்போம்.


1. ஓர் எளிய தொடக்கம்: 

2004 ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, 19 வயது ஹார்வேர்ட் மாணவரால், பேஸ்புக் தளத்திற்கான விதை ஊன்றப்பட்டது. 

பின்னா ளில், உலகின் அனைத்து மூலைகளிலும், ஆலவிருட்சமாக வளர்ந்து, டிஜிட்டல் உலகில் முதல் இடத்தில் இயங்கும் இந்த நிறுவனம், அப்போது ஒரு சிறிய விடுதியின் ஒதுக்குப் புறமான அறையில் தொடங்கப்பட்டது. 

பத்தாண்டுகளுக்கு முன்பு அதனை "Thefacebook” என இதனைத் தொடங்கிய மார்க் ஸக்கர் பெர்க் பெயரிட்டார். 2003 ஆம் ஆண்டு அக்டோபரில், ஸக்கர்பெர்க் மற்றும் அவரது வகுப்புத் தோழர்களான ஆண்ட்ரூ மெக்கலம், கிறிஸ் ஹ்யூஸ் மற்றும் டஸ்டின் மொஸ்கோ விட்ஸ் ஆகியோர் Facemash.com என்னும் இணைய தளம் ஒன்றை உருவாக்கி, அதனை யாவரும் அணுகி, இரண்டு மாணவர்களின் படத்தில் எது சிறந்தது என்று ஒப்பிடும் வசதியைத் தந்தனர். 

இதனை விளம்பரப்படுத்தி பிரபலமாக்குவதற்காக, அப்போது ஹார்வேர்ட் பல்கலைக் கழகம் மாணவர்களுக்கென நடத்தி வந்த இணைய தளங்களை ஸக்கர் பெர்க் முடக்கினார் என்று ஒரு செய்தி அப்போது வெளியானது. 

தொடக்கத்தில் Facemash என அழைக்கப்பட்ட பேஸ்புக் தளத்தினை, ஹார்வேர்ட் பல்கலை நிர்வாகம் மூடியது. காப்புரிமை, பாதுகாப்பு, தனி நபர் சுதந்திரம் ஆகியவற்றில் அந்த தளம் தலையிடுவதாக, பல்கலைக் கழக அதிகாரிகள் ஸக்கர்பெர்க் மீது நடவடிக்கை எடுத்தனர். இதன் பின்னரே, ஸக்கர்பெர்க் "thefacebook.” என்னும் புதிய தளத்தினை அமைத்தார். 


2. பிறந்தது பேஸ்புக்: 

2004 பிப்ரவரி 4 ஆம் நாள், ஸக்கர்பெர்க் thefacebook.com என்னும் தன் தளத்தினை இயக்கத் தொடங்கினார். தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில், 1,500 பயனாளர்கள் இதில் இணைந்தனர். 

ஹார்வேர்ட் பல்கலையில் பட்ட வகுப்பு மாணவர்களில் பாதிப்பேர் இதில் இணைந்தனர். பின்னர், இந்த தளத் தினை மற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப் பட்டனர்.


3. படங்களின் பதிவுகள் தொடங்கின: 

தொடக்கத்தில் பேஸ்புக் இணைய தளத்தில் போட்டோக்கள் அனுமதிக்கப்படவில்லை. அக்டோபர் 2005ல், ஒவ்வொரு பயனாளரும் எவ்வளவு போட்டோக்கள் மற்றும் படங்களை அப்லோட் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்று அனுமதி தரப்பட்டது. 

இன்று பேஸ்புக் இணைய தளத்தில் போட்டோக்களே முக்கிய அம்சங்களாக உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2013 செப்டம்பரில், இத்தளத்தில் பதியப்பட்ட படங்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் கோடியைத் தாண்டி யதாக அறிவிக்கப்பட்டது. நாள் தோறும் 35 கோடி படங்கள் அப்லோட் செய்யப்படுகின்றன.


4. அனைவருக்கும் அனுமதி: 

கல்லூரிகள், பள்ளிகள் என்ற எல்லை வரையறையைத் தாண்டி, பேஸ்புக் இணைய தளத்தில் பல பிரிவினரும் இணைய, இந்த தளம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. 2006, செப்டம்பர் 26ல், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இணைந்து பதிந்து கொள்ளலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டது. 

இதனால், 2006 ஆண்டு இறுதியில், பயனாளர் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது. அதற்கு முந்தைய ஆண்டில், இது 55 லட்சமாக மட்டுமே இருந்தது.


5. என் குறிக்கோள் பணம் அல்ல: 

2006 செப்டம்பரில், யாஹூ நிறுவனம் நூறு கோடி டாலர் கொடுத்து, பேஸ்புக் இணைய தளத்தினை வாங்க முன்வந்தது. பேஸ்புக் இணைய தள நிறுவனத்தில் முதன் முதலில் முதலீடு செய்த பீட்டர் என்பவர், இதனை ஏற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினார். 

ஆனால், இதற்கென கூட்டப்பட்ட கூட்டத்தில், 22 வயது இளைஞரான ஸக்கர்பெர்க், "இந்த கூட்டம் 10 நிமிடத்தில் முடியப்போகிறது. நாங்கள் எங்கள் இணையதளத்தை விற்கப் போவதில்லை” என அறிவித்தார். 

ஏனென் றால், பணம் சம்பாதிப்பதை தன் இலக்காக என்றைக்குமே ஸக்கர்பெர்க் கொண்டதில்லை. "இந்தப் பணத்தை வைத்து நான் என்ன செய்திட முடியும்? வேண்டுமானால், இன்னொரு சமூக தளத்தைத் தொடங்கலாம். அதற்கு இதனையே வளப்படுத்துவேன்” என்றார்.


6. செய்தித் தொகுப்பு: 

பேஸ்புக் இணையதளத்தின் முதல் 30 மாதங்கள், பயனாளர்களின் தகவல் பக்கங்களைப் பதிந்து இயக்குவதிலேயே இருந்தன. செப்டம்பர் 2006ல், முதல் முதலாக, பேஸ்புக் தளத்தில் செய்திகள் தரப்பட்டன. 

உங்கள் சமூக வளைவில் என்ன நடக்கின்றன என்று தகவல்களைத் தருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதனால், தொடர்ந்து ஒரு நிகழ்வு சார்ந்து கிடைக்கும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதனுடன் பேஸ்புக் MiniFeed என்ற வசதியையும் கொடுத்தது. இதில் பயனாளர் ஒருவரின் சமூக செயல்பாடுகள் தொகுக்கப்பட்டன.


7.புரோகிராமர்களுக்கு அனுமதி: 

2007 ஆம் ஆண்டு மே 24 அன்று, பேஸ்புக் தன்னுடைய Facebook Platform என்னும் மேடையை மக்களுக்கு வழங்கியது. இது, பேஸ்புக் தளத்தில் இயங்கக் கூடிய புரோகிராம் களை மற்றவர்கள் தயாரித்து வழங்குவதற்கான மேடையாக அமைந்தது. 

தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களுக்கு உதவி புரிய Facebook Markup Language என்னும் வசதியையும் இதனோடு அளித்தது. பல முக்கிய அப்ளி கேஷன்கள் பேஸ்புக் தள செயல்பாட்டில் இணைந்தன.


8. லாபம் ஈட்டியது: 

நிறுவனம் தொடங்கி ஐந்தாண்டுகள் கழித்து, பேஸ்புக் நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்குவதாக அறிவிக்கப்பட்டது. 2009ல், இந்நிறுவனம் பெற்ற வருமானம் 77.7 கோடி டாலர். 

இது 2008ல் பெற்றதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. (சென்ற வாரம், பேஸ்புக் தன் நான்காவது காலாண்டில் மட்டும் 206 கோடி டாலர் விற்பனை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 63% கூடுதலாகும்.)


9. பங்கு வெளியீடு: 

2012 ஆம் ஆண்டு மே மாதம், தன் பொதுப் பங்கு வெளியீட்டினை பேஸ்புக் மேற்கொண்டது. இதன் மூலம் 1,600 கோடி டாலர் திரட்டியது. அமெரிக்க சரித்திரத்தில், இது மூன்றாவது பெரிய பங்கு வெளியீடாக அமைந்தது.


10. நூறு கோடி பேர்: 

சென்ற 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் 4ல், பேஸ்புக் இணையதளத்தில் ஒரு மாதத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, நூறு கோடி யைத் தாண்டியதாக, ஸக்கர்பெர்க் அறிவித்தார். 

ஏறத்தாழ, இந்தப் புவியில் வாழும் ஏழு பேரில் ஒருவர், பேஸ்புக் பயனாளராக உள்ளனர். நூறு கோடிப் பேரை, ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வைத்து, நட்பு ரீதியாக இணைப்பது என்பது மிகப் பெரிய பணி என அடக்கத்துடன் ஸக்கர்பெர்க் கூறினார். 

என் வாழ்வில் இதுதான் நான் அதிகம் பெருமைப்படும் விஷயம் என்றும் அறிவித்தார்.


சாம்சங் காலக்ஸி கியர் விலை குறைப்பு


சென்ற செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான சாம்சங் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. 

நம் நாட்டில், அது பரவலாகப் பரவ வேண்டும், அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அதன் விலை குறைப்பை சாம்சங் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 

முதலில் இதன் அதிக பட்ச விலை ரூ.22,990 ஆக இருந்தது. தற்போது ரூ.3,900 குறைக்கப்பட்டு, அதன் அதிக பட்ச விலை ரூ.19,075 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விலை குறைப்பு சாம்சங் ஸ்டோர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவற்றை விற்பனை செய்திடும் இணைய தளங்களை (Flipkart, Infibeam and Saholic) அணுகிப் பார்த்ததில், விலை குறைப்பு எதுவும் அறிவிக்காமல், ரூ.21,500 முதல் ரூ.22,900 வரை விலையிட்டுள்ளன. 

1.63 அங்குல டச் ஸ்கிரீன் திரை, 1.9 எம்.பி. கேமரா, 315 திறன் பேட்டரி, 4 ஜிபி ஸ்டோரேஜ், 512 எம்பி ராம் மெமரி, 800 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட ப்ராசசர் ஆகியவை இந்த ஸ்மார்ட் வாட்சின் சிறப்பு அம்சங்களாகும்.


விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் புதிய கம்ப்யூட்டர்கள்


விண்டோஸ் 8 சிஸ்டம் அறிமுகப்படுத்தியவுடன், மைக்ரோசாப்ட் பழைய சிஸ்டங்களுடன் கம்ப்யூட்டர் வடிவமைப்பவர் களுக்கு, இறுதி நாளினை நிர்ணயம் செய்தது. 

அதற்குப் பின்னர், அந்நிறுவனங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் தான், கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திட வேண்டும் என்பது ஒப்பந்தம். 

ஆனால், விண்டோஸ் 8 மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. விண்டோஸ் 7 தொடர்ந்து கம்ப்யூட்டர்களில் மட்டுமின்றி மக்கள் மனதிலும் இடம் பெற்றது. 

ஆனால், தன் விண்டோஸ் 8.1 மூலம் சிக்கல்களை ஓரளவுக்குத் தீர்த்து வைத்த மைக்ரோசாப்ட், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான இறுதி நாளை அறிவித்தது. பின்னர், அதனை வாபஸ் பெற்றது. 

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ஒப்பந்தம் மேற்கொண்டு, பெர்சனல் கம்ப்யூட்டர்களையும், லேப்டாப் கம்ப்யூட்டர்களையும் வடிவமைத்து விற்பனை செய்து வரும் ஹ்யூலட் பேக்கார்ட் (எச்.பி.) நிறுவனம், மக்கள் தொடர்ந்து விண்டோஸ் 7 சிஸ்டத்தினையே விரும்புவதால், மீண்டும் விண்டோஸ் 7 சிஸ்டம் பதிக்கப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து வழங்க முன் வந்து வழங்கியும் வருகிறது. 

""விரும்பும் மக்களுக்கு விண்டோஸ் 7 சிஸ்டம் வழங்குகிறோம். விண்டோஸ் 8 சிஸ்டத்தினை கைவிட்டு விடவில்லை. அதனைக் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு, விண் 8 பதிந்து தருகிறோம்'' என அறிவித்துள்ளது. 

பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையில் விற்பனை சரிந்து வருவதால், மைக்ரோசாப்ட் நிறுவனமும், இதனை மிகக் கண்டிப்புடன் கண்டு கொள்ளவில்லை. 

ஆனால், மீண்டும், விண்டோஸ் 7 சிஸ்டம் வழங்குவதை நிறுத்தச் சொல்லி, மைக்ரோசாப்ட் அறிவுறுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.


தேவையற்ற புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்க


நம் கம்ப்யூட்டரை வாங்கும் போதே, கம்ப்யூட்டரை வடிவமைத்துத் தரும் நிறுவனம், தான் விரும்பும் சில புரோகிராம்களைப் பதிந்து தருகிறது. காலப் போக்கில், நாமும் சில புரோகிராம்களைப் பதிகிறோம். 

அவை காலஞ் சென்ற பின்னரும், நாம் பயன்படுத்தாத போதும், அவற்றை நீக்காமல் வைத்திருக்கிறோம். சில புரோகிராம்கள், அப்போதைய சிஸ்டம் வடிவமைப்புடன் ஒத்துப் போகாதவையாக இருக்கலாம். இருப்பினும் அவற்றையும் தொடர்ந்து ஹார்ட் டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்து வைத்து இயக்காமல் வைத்திருக்கிறோம். 

இவற்றுடன் பல அட்வேர் எனப்படும் விளம்பர புரோகிராம்களும் இணைந்து விடுகின்றன. அதே போல நமக்குத் தேவையான ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், தேவையில்லாத டூல்பார்களும், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களும் சேர்ந்தே பதியப்படுகின்றன. இவற்றை நாம் அவ்வப்போது நீக்க வேண்டும்.

சரி, இவற்றைச் சுத்தம் செய்திடலாம் என்றால், எவற்றை நீக்குவது, எவற்றை வைத்துக் கொள்வது என்ற குழப்பத்தில் அந்த வேலையைத் தொடங்காமலே வைத்திருக்கிறோம். 

இந்த குழப்பத்தில் இருந்து மீள, தீர்வுகளைத் தரும் புரோகிராம் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அதன் பெயர் "Should I Remove It?”. இது, நம் கம்ப்யூட்டரில் எவற்றை எல்லாம் அன் இன்ஸ்டால் செய்து நீக்கிவிடலாம் என்று தெரிவிக்கிறது. இந்த புரோகிராமின் தன்மைக்கும் பயன்பாட்டிற்கும் பல விருதுகளை இது பெற்றுள்ளது என்பதே இதன் திறனுக்கு ஒரு சான்றாகும். 

இதனை இயக்கினால், உங்கள் கம்ப்யூட்டரில் என்ன புரோகிராம்கள் எல்லாம் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன என்று காட்டுகிறது. அத்துடன் அவற்றை நீக்குவதில், எவை எல்லாம் அவசியம் நீக்கப்பட வேண்டும் என்ற வகையில் வரிசைப்படுத்துகிறது. இதன் மூலம், நாம் எந்த பயமும் இன்றி நீக்கப்படக் கூடிய புரோகிராம்களை நாம் அடையாளம் கண்டு கொள்ளலாம். 

இதனைத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தவுடன், நம் கம்ப்யூட்டர் எப்படி சுத்தமாக உள்ளது(?) என்று காட்டப்படுகிறது. கட்டாயமாக நீக்கப்பட வேண்டிய புரோகிராம்களை சிகப்பு வண்ணத்தில், நீக்குவதற்கான அளவுகோலில் அதிக மதிப்பெண்களுடன் காட்டுகிறது. 

இந்த புரோகிராம் லைப்ரேரியில், இணையத்தில், சாப்ட்வேர் சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான புரோகிராம்கள் இருக்கின்றன. மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் புரோகிராம்களுடன், பாபிலோன் டூல்பார், ஆஸ்க் டூல் பார் போன்றவைகளும் உள்ளன. ஒவ்வொன்றும் நீக்கப்பட வேண்டிய தன்மை மதிப்பெண்களுடன் காட்டப்படுகின்றன. 

இதில் காட்டப்படும் பார் சார்ட் வழியாக எத்தனை தேவையற்ற புரோகிராம்கள் நாம் அறியாமலேயே கம்ப்யூட்டரில் புகுந்துள்ளன என்று காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரைத் தயாரித்து வழங்கியவர் பதித்த வர்த்தக ரீதியான சோதனை புரோகிராம்களின் பட்டியல் நம்மை நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கும். 

இவற்றை எல்லாம் நாம் சோதனை முறையில் பயன்படுத்திப் பார்த்து, பின்னர் இவற்றை கட்டணம் செலுத்தி வாங்கிவிடுவோம் என்ற நப்பாசையில், சில வர்த்தக நிறுவனங்கள், கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களிடம் பணம் செலுத்தி, நாம் வாங்கும் கம்ப்யூட்டர்களில் பதிய வைக்கின்றன.

"Should I Remove It?” புரோகிராமின் கணிப்புப்படி, தோஷிபா நிறுவனம் வழங்கும் கம்ப்யூட்டர்களில் தான், அதிக எண்ணிக்கையில் தேவையற்ற புரோகிராம்கள் பதிந்து வழங்கப்படுகின்றன. அடுத்தபடியாக, சோனி மற்றும் டெல் நிறுவனக் கம்ப்யூட்டர்களில், இத்தகைய புரோகிராம்கள் அதிகம் காணப்படுகின்றன. 

"Should I Remove It?” புரோகிராம் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. இதனுடன் கூடுதலாக, தேவையற்ற எந்த புரோகிராமும் தரப்படுவதில்லை. அனைத்து விண்டோஸ் சிஸ்டங்க ளிலும் எளிதாக இயங்குகிறது. இதனுடைய யூசர் இண்டர்பேஸ் மிகவும் பயனுள்ளதாக, அனைவரையும் வழி நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

தேவையற்ற புரோகிராம்களை நீக்க வழி காட்டும் இந்த புரோகிராம், நம் கம்ப்யூட்டரில் தேவையான ஒன்றாகும். இதனைத் தரவிறக்கம் செய்திட, http://www. shouldiremoveit.com/download.aspx என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.


கூகுள் தேடலில் அடிப்படைகள்


இன்றைய தேடல் உலகில் அதி நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கி, வேறு யாரும் தொட முடியாத உயரத்தில் இருப்பது கூகுள் தேடல் சாதனங்கள். 

இணையம் சார்ந்து இயங்கும் எந்த நிறுவனமும், தனி நபர்களும், கூகுள் வழி மேற்கொள்ளப்படும் தேடல் முடிவுகளையே தங்கள் கணிப்பின் அடிப்படையாக ஏற்றுக் கொள்கின்றனர். இது எப்படி நிகழ்கிறது? என்ற கேள்வியும் அனைவரின் மனதிலும் ஏற்படுகிறது. இதற்கான விடையை இங்கு காண்போம்.

முதலில் கூகுள் தோன்றிய நிலையைக் காணலாம். விக்கிப்பீடியா தளம் தரும் தகவல்களின் படி, கூகுள் சர்ச் என்னும் பிரிவு, 1997ல் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கியவர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin). 

இன்றைய நிலையில், நாளொன்றுக்கு இந்த தேடல் தளம் வழியாக 300 கோடிக்கும் மேற்பட்ட தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த தேடலுக்கான முடிவுகள், 60 ட்ரியல்லனுக்கு (10 லட்சத்து 10 லட்சம் - 1,000,000,000,000) மேலான இணையப் பக்கங்களைத் தேடித் தரப்படுகிறது. 

இவற்றைத் தேட ஒரு அட்டவணைக் குறிப்பு (index) பயன்படுத்தப்படுகிறது. இதன் அளவு 95 பீட்டா பைட்ஸ். (ஒரு பீட்டா பைட் என்பது 1000000000000000 பைட்ஸ். கிகா பைட், டெரா பைட் அடுத்து பீட்டா பைட்)அதாவது ஏறத்தாழ 10 கோடி கிகா பைட்ஸ்.


1. இணைய தளங்களை எப்படி தேடி அறிவது? 

தேடல் பணியினை மேற்கொள்ள தான் "Google bot” என்னும் நவீன சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை இயக்குவதாக கூகுள் கூறுகிறது. இந்த புரோகிராம் பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களில் இயக்கப்பட்டு, பல இணைய தளங்களைத் தேடிச் செல்கிறது. 

தான் இறுதியாகத் தேடிப் பார்த்த தளத்திலிருந்து, அடுத்த புதிய இணைய தளங்களுக்கு இந்த புரோகிராமின் தேடல்கள் செல்கின்றன. தான் எந்த இணைய தள உரிமையாளர்களிடமும், அவர்கள் தளங்களை அடிக்கடிப் பார்ப்பதற்கென பணம் வாங்கவில்லை என்று கூகுள் அறிவித்துள்ளது. ஆனால், இணைய தள உரிமையாளர்கள் நினைத்தால், தங்கள் தளங்களை கூகுள் தேடல் தீண்டாமல் இருக்கும்படி வைத்துக் கொள்ளலாம்.


2. டேட்டாவினை வகைப்படுத்தல்: 

மேலே சொன்னபடி, அனைத்து தளங்களையும் பார்த்த பின்னர், அதில் கிடைத்த தகவல்கள் வகைப்படுத்தப்பட வேண்டும். இந்த தகவல்களே, 95 பீட்டா பைட்ஸ் அளவிலான வரிசைக் குறிப்பாக (index) அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில இணைய தளங்களை கூகுள் பாட் தேடல் புரோகிராமினால் பார்க்கப்பட முடியாமலும் போகலாம்.


3. தகவல் அறிவித்தல்: 

ஒரு கூகுள் தேடலானது, இந்த வரிசைக் குறிப்பினை மட்டும் பார்த்து தன் தேவைக்கேற்ப தகவல்களை எடுப்பதில்லை. அதற்கு அதிகமான நேரம் ஆகும். அது மட்டுமின்றி, தேவையற்ற குப்பைகளும் சில சமயம் தேடல் முடிவுகளாகக் கிடைக்கும். எனவே, தேடலுக்கு அதிகத் தொடர்புள்ளவற்றை மட்டும் கண்டறிய சில சிறப்பு தேடல் வழிகள் பயன்படுத்தப்படுகின்றன. 

இந்த வழிகள் மற்றவர்கள் அறியாத வகையில் இரகசியமாக உள்ளன. மேலும், தேடலில் கிடைக்கும் தகவல்கள் பலவும் இரகசியமாக வைக்கப்படுகின்றன. ஏனென்றால், இதன் வழியாக கூகுள் தேடல் சாதனமே கைப்பற்றப்படலாம்.


4. தெரிந்த தேடல் வழிகள்: 

இருப்பினும் சில தேடல் வழிகளை நாம் அறிய முடிகிறது. இணைய தள டேட்டாவின் வகை (தேடல் சொற்களுக்கு எந்த அளவில் தொடர்புடையது என்ற அடிப்படையில்) அடுத்து டேட்டாவின் தன்மை. இதற்கு சொல் எழுத்து சோதனை (spell check) மேற்கொள்ளப்படுகிறது. 

இதன் மூலம் உண்மையிலேயே நல்ல தகவல்களைக் கொண்டுள்ள இணையப் பக்கங்களிலிருந்து, அர்த்தமற்ற தளங்கள் இனம் காணப்பட்டு பிரிக்கப் படுகின்றன. இணையத் தளங்கள் தரும் டேட்டாவின் அண்மைத் தன்மை. 1996ல் பதியப்பட்ட ஒரு தளத்தின் தகவல், 2013ல் பதியப் பட்ட தளங்களின் முன்னே காட்டப்படுவதில்லை. 

அடுத்ததாக, இணைய தளத்தின் நம்பகத் தன்மை. உண்மையிலேயே தளம் சொல் லும் தகவல் சார்ந்ததா? இல்லை, போலியான மால்வேர் கொண்டுள்ள தளமா எனக் கண்டறிதல். அடுத்ததாக, இணைய தளத்தின் பெயர் மற்றும் முகவரி சரி பார்த்து அறிதல். 

இதனைத் தொடர்ந்து சொற்கள், அவற்றின் இணைச் சொற்களைப் பிரித்து அறிதல் மேற்கொள்ளப்படு. இதன் பின்னர், குறிப்பிட்ட இணைய தளத்தை எத்தனை லிங்க்குகள் சுட்டிக் காட்டுகின்றன மற்றும் அவற்றின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

இறுதியாகச் சொல்லப்பட்ட நம்பகத் தன்மை "PageRank.” என்று சொல்லப்படும் தன்மையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. ஓர் இணையப் பக்கத்தின் தர வரிசை அதற்கான லிங்க் எப்படிப்பட்ட மூலத்திலிருந்து வருகிறது என்பதை அறிவதில் உள்ளது. 

இதன் அடிப்படையில், ஒரு தளம் தேடல் பட்டியல் முடிவுகள் அறிவிக்கும் பட்டியலில் முதலில் இடம் பிடிக்கும். இதிலும் அதன் தன்மை கண்டறியப்படுகிறது. ஒரு தளத்திற்கு அதிகமான எண்ணிக்கையில், ஆனால், தரம் குறைந்த தொடர்புகளின் அடிப்படையில் தொடர்பு இருக்கலாம். 

இன்னொரு தளத்திற்கு நல்ல தரமான தொடர்புகள் சுட்டிக் காட்டும் தன்மை இருக்கலாம். அப்போது இரண்டாவதாகச் சொல்லப்பட்டதே, "PageRank” மதிப்பெண் அதிகம் பெற்று, தேடல் முடிவுகளில் முதல் பக்கத்தில் இடம் பெறும்.

இதனால் தான், இணைய தளங்களை உருவாக்கிப் பதிப்பவர்கள், தங்கள் மதிப்பெண்ணை "PageRank” ஐ எப்படி உயர்த்துவது என எப்போதும் சிந்திக்கின்றனர். அதற்கான அடிப்படைக் காரணிகளை அறிந்து அவற்றை உயர்த்துகின்றனர்.


இணையத்தில் கொலை கொலையா முந்திரிக்கா


நீங்கள் இணையத்தில் இணைந்து, தேவையான தளங்களைச் சுற்றி வந்தாலே போதும், உங்களைப் பற்றிய அனைத்து பெர்சனல் தகவல்களும் யாருக்காவது சென்று விடும் வகையில் சேர்க்கப்படுகின்றன. 

எப்படி, எந்த வழிகளில் இவை தேடி எடுக்கப்படுகின்றன என்பது நாம் அறியாமல் இருக்கலாம். ஆனால், இணையம் இயங்கும் வழிகளை ஆய்வு செய்தவர்கள், இந்த வழிகளைக் கண்டறிந்துள்ளனர். 

கொலை கொலையா முந்திரிக்கா என்று கிராமங்களில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டில் எப்படி நாம் அறியாமல் நம் பின்னால், துணியைப் போட்டு, பின் நம்மைத் துரத்தி விளையாடுகிறார்களோ, அதே போல, நாம் அறியாமல் நமக்குத் தூண்டில் போட்டு, நம்மைப் பற்றிய தகவல்களைப் பெறும் இந்த இணைய விளையாட்டினைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

சில வகை தகவல் சேகரிப்பு வெளிப்படையாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, இணைய தளங்களில் நீங்கள் லாக் இன் செய்திடுகையில், நீங்கள் யார் என்பதனை அது அறிந்திருக்கும். ஆனால், உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து, முழுமையான உங்கள் பெர்சனாலிட்டியை அறிந்து கொள்கின்றனர் என்பதுதான் நாம் எண்ணிப் பார்த்து, உஷாராக வேண்டிய ஒன்று.

பொதுவாக விளம்பரங்களுக்கான வலைப்பின்னல்களில், விளம்பரங்களைக் குறிவைத்து, உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவார்கள். ஏதேனும் ஒரு வர்த்தக இணைய தளத்தில் நுழைந்து, வர்த்தகம் குறித்த விளம்பரங்களை, தொடர்பு தரும் இணைய தளங்களில் பார்த்தாலும், நம்மைப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்படும். 


ஐ.பி. முகவரிகள்

உங்களை விரைவில் எளிதாக அடையாளம் காட்டுவது உங்கள் ஐ.பி. முகவரி தான்.இணையத்தில், உங்கள் ஐ.பி. முகவரி, உங்களை அடையாளம் காட்டுகிறது. இதிலிருந்து, மிகச் சரியான உங்கள் முகவரியை அறிய முடியாது என்றாலும், உத்தேசமாக, பூகோள ரீதியான இடத்தை அறியலாம். உங்களின் தெரு தெரியாவிட்டாலும், நகரம் அல்லது நகரத்தில் ஏரியா தெரிய வரும். 

இருப்பினும், ஒரே ஐ.பி. முகவரியை உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் பயன்படுத்த முடியும் என்பதால், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தை மட்டும் பிரித்தறிவது எளிதானதல்ல. இருந்தாலும், ஐ.பி. முகவரியை மற்ற தொழில் நுட்பத்துடன் இணைத்து, நம் இடத்தை உறுதிப் படுத்தலாம்.


எச்.டி.டி.பி. ரெபரர் (HTTP Referrer): 

நீங்கள் இணையத்தில், லிங்க் ஒன்றைக் கிளிக் செய்தால், உங்கள் பிரவுசர், நீங்கள் கிளிக் செய்த லிங்க் சார்ந்த இணைய தளத்தினைக் கொண்டுவருகிறது. இணையதள சர்வரில், நீங்கள் எங்கிருந்து தொடர்பினை ஏற்படுத்துகிறீர்கள் என்று சொல்கிறது. இந்த தகவல் HTTP referrer headerல் கிடைக்கும். 

இணையப் பக்கத்தில், அதன் தகவல்களைக் கொண்டு வருகையில், HTTP referrerம் அனுப்பப்படுகிறது. எடுத்துக் காட்டாக, இணைய தளம் ஒன்று விளம்பரத்தைக் கொண்டிருந்தால், ட்ரேக் செய்திடும் ஸ்கிரிப்ட் ஒன்றை வைத்திருந்தால், உங்கள் பிரவுசர், அந்த விளம்பரதாரரிடம் அல்லது பின் தொடரும் நெட்வொர்க்கி டம், நீங்கள் எந்த பக்கங்களைப் பார்க்கிறீர்கள் என்பதனைச் சொல்கிறது.

"Web bugs” என்று அழைக்கப்படும் மிகச் சிறிய (1x1 பிக்ஸெல்) கண்ணால் பார்க்க இயலாத இமேஜ்கள் இந்த எச்.டி.டி.பி. ரெபரரைத் தனக்கு உதவியாக எடுத்துக் கொண்டு, இணைய தளத்தில் தன்னைக் காட்டாமலேயே, உங்களைப் பின் தொடரும். இதனையே பயன்படுத்தி, நீங்கள் திறந்து பார்க்கும் மின் அஞ்சல்களையும் இவை தொடர்கின்றன. 


சாம்சங் காலக்ஸி ட்ரெண்ட் எஸ் 7392


வாரந்தோறும் பல புதுமையான மொபைல் போன்களை அனைவரும் விரும்பும் வண்ணம் அறிமுகப்படுத்தி, விற்பனையில் முதல் இடத்தைத் தொடர்ந்து பன்னாட்டளவில் தக்க வைத்து வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் காலக்ஸி ட்ரெண்ட் எஸ் 7392 என்ற பெயரில், மொபைல் போன் ஒன்றைச் சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது.

ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் சிப், 3ஜி தொடர்பு, இரண்டு சிம் இயக்கம் ஆகியவை இதன் தனிச் சிறப்புகள் எனலாம். இதன் பரிமாணம் 121.5 x 63.1 x 10.85 மிமீ ஆகும். எடை 128.5 கிராம்.

நான்கு அங்குல அளவிலான, டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை இதில் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதியும் உண்டு. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வை-பி, வை-பி ஹாட்ஸ்பாட் தொழில் நுட்பம் மற்றும் யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை கிடைக்கின்றன.

இதில் 3 எம்.பி.கேமரா மட்டும் தரப்பட்டுள்ளது. இதில் எப்.எம். ரேடியோ இல்லை. அக்ஸிலரோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் இயங்குகின்றன.

எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ்மெயில் மற்றும் ஆர்.எஸ்.எஸ். வசதிகள் உள்ளன. எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் இயங்குகின்றன. டாகுமெண்ட்வியூவர் தரப்பட்டிருப்பதால், டாகுமெண்ட்களைப் பார்த்து திருத்தவும் முடியும். 

இத்துடன் ஆர்கனைசர், இமேஜ் மற்றும் வீடியோ எடிட்டர், வாய்ஸ் மெமோ டயல், பிரிடெக்டிவ் டெக்ஸ்ட் அமைப்பு, கூகுள் சர்ச், மேப்ஸ், டாக்ஸ், யுட்யூப், காலண்டர், கூகுள் டாக் மற்றும் பிகாஸோ பயன்படுத்த நேரடி இணைப்புகள் கிடைக்கின்றன.

இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது. இதன் கதிர்வீச்சு இயக்கம் 0.51 W/kg என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.8.099.


GIMP போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர்


ஜிம்ப் (GIMP (GNU Image Manipulation Program)) என்ற பெயரில் நமக்குக் கிடைக்கும் புரோகிராம், போட்டோ எடிட்டிங், இமேஜ் உருவாக்கம், இமேஜ் எடிட்டிங் போன்ற பணிகளுக்காக நமக்குக் கிடைக்கும் இலவச புரோகிராம் ஆகும். 

இலவசமாகக் கிடைக்கும் மற்ற புரோகிராம்களில், இது தரும் அளவிற்கு சிறப்பான பயனுள்ள வசதிகள் கிடைப்பதில்லை. 

பல பணி நிலைகளில் பயன்படுத்தப்படும் அடோப் நிறுவனத்தின் போட்டோ ஷாப் புரோகிராமிற்கு இணையாகவும், சில வேளைகளில், அதனைக் காட்டிலும் அதிக வசதிகள் கொண்டதாகவும் இது இயங்குகிறது. 

இதனை விண்டோஸ் தரும் பெயிண்ட் புரோகிராம் போலப் பயன்படுத்தலாம். அல்லது போட்டோ எடிட்டிங் பிரிவில் இயங்கும் வல்லுநர்களால், போட்டோ எடிட் செய்திடப் பயன்படுத்தலாம். 

இமேஜ்களின் பார்மட்டை மாற்றி அமைத்திடப் பயன்படுத்தலாம். சாதாரண இமேஜ் மற்றும் போட்டோ காட்டும் பணிகளிலிருந்து, படங்களைப் பல வழிகளில் மாற்றுவதற்கான வழிகளைத் தரும் நிலை வரை பல டூல்களை இந்த புரோகிராம் கொண்டுள்ளது. அதிகப் பணம் செலவு செய்து நாம் வாங்கும் இமேஜ் புரோகிராம்கள் கூட இந்த அளவிற்கு வசதிகளைத் தருவதில்லை. 

இந்த GIMP புரோகிராமினை ஓர் திட்டமாக, திறவூற்று மென்பொருள் என அழைக்கப்படும் ஓப்பன் சோர்ஸ் திட்டமாக சில மென் பொருள் தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்து, அவ்வப்போது அப்டேட் செய்து வருகின்றனர். 

இவர்களுடன் இணைந்து செயலாற்ற விரும்புவோரும் இணைந்து செயலாற்றலாம். 1990 ஆம் ஆண்டில், தொடக்க நிலையில் இது ஒரு சாதாரண இமேஜ் எடிட்டிங் புரோகிராமாக வெளியானது. 

இப்போது, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் இயங்கும் வகையிலும், வேறு எந்த இமேஜ் எடிட்டிங் புரோகிராமில் கிடைக்காத வசதிகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. தற்போது GIMP 2.8 பதிப்பு கிடைக்கிறது. இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 

ஒரு விண்டோ மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோவில் இயங்கு வகையில் (single and multiple window mode) உள்ளது. மாறா நிலையில் பல விண்டோக்களில் இயங்குவதாக உள்ளது. 

நாம் விருப்பப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம். இதில் Help; Context Help; User Manual என ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் உதவிக் குறிப்புகள் வழங்கப்படுகின்றன.


மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் Turbo மினி


சில மாதங்களாக எதிர்பார்த்து வந்த, மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் டர்போ மினி மொபைல் போன், விற்பனைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.14,490. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2.2. இதன் மூலம், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் அனைத்து ஸ்மார்ட் போன்களுடனும் இது விற்பனையில் போட்டியிட முடியும். 

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தேவையான புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்திட முடியும். MediaTek MT6582 குவார் கோர் ப்ராசசர், போனின் இயக்கத்தை 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் கொண்டு செல்கிறது. 

1 ஜிபி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, அதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, 1,800 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால், தொடர்ந்து 6.5 மணி நேரம் பேசிட முடியும்.

 8 எம்.பி. திறனுடன் கேமரா, 5 எம்.பி. திறனுடன் வெப் கேமரா கிடைக்கின்றான. 

வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் அழகான தோற்றத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தற்போதைக்கு மொபைல் போன் விற்பனை செய்திடும் இணைய தளங்களில் இது விற்பனைக்கு உள்ளது. 

விரைவில் விற்பனை மையங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பெர்சனல் கம்ப்யூட்டர் திறன் சோதனை


நாம் பயன்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடு சரியாக உள்ளதா? அதன் திறன் எந்த அளவில் உயர்ந்து உள்ளது என்று எப்படி அறிந்து கொள்வது? 

ஒரு சாதனத்தின் இயக்கம் அல்லது செயல்பாடு இந்த அளவிற்காவது இருக்க வேண்டும் என்று அறுதியிட்டு சொல்வதையே ஆங்கிலத்தில் Benchmark என்று சொல்கிறோம். 

ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் திறன் எப்படி உள்ளது என்று அறிந்து, அதனை மற்ற பெர்சனல் கம்ப்யூட்டர்களின் திறனோடு ஒப்பிட்டுப் பார்த்து அறிந்துகொள்ள நமக்கு உதவும் பெஞ்சமார்க் பயன்பாடு (benchmarking utilities) புரோகிராம்கள் பல நமக்குக் கிடைக் கின்றன. அவற்றில் ஐந்து புரோகிராம்கள் குறித்து இங்கு காணலாம். 


1. எவரெஸ்ட் அல்ட்டிமேட் எடிஷன் (Everest Ultimate Edition): 

இந்த புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்றின் பெஞ்ச்மார்க் திறன் சோதனை நடத்துவது மட்டுமின்றி, கம்ப்யூட்டர் குறித்த வேறு பல பொதுவான தகவல்களையும் தருகிறது. 

கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம், மதர்போர்ட், ஸ்டோரேஜ் வசதி போன்றவை குறித்தும் நமக்குத் தகவல்களைத் தருகிறது. மெமரி மற்றும் சி.பி.யு.வின் திறன்களையும் தனியே சோதனையிட்டுச் சொல்கிறது. இது தரும் சோதனை அறிக்கையும் பல வடிவில் கிடைக்கிறது. 

இதனால், நாம் விரும்பும் வகையில், கோணத்தில் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடு மற்றும் திறன் குறித்து அறிந்து கொள்ள முடியும். இதன் விலை 39.95 டாலர் என்றாலும், இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து இலவசமாகச் சில நாட்களுக்குப் பயன்படுத்த முடியும்.


2.சி சாப்ட்வேர் சாண்ட்ரா (SiSoftware Sandra): 

சி சாண்ட்ரா எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த புரோகிராம், பரவலாக அனைவராலும் விரும்பப்படும் ஒரு பெஞ்ச்மார்க் புரோகிராம். இதனை நெட்வொர்க்குகளில் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கும், தனியே இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கும் பயன்படுத்தலாம். ஹார்ட்வேர், சாப்ட்வேர், செயல்திறன் சோதனை எனப் பலவகையான சோதனைத்தொகுதிகள் கொண்டதாக இந்த புரோகிராம் உள்ளது. 

மேலும் சில ஆய்வுத் தொகுதிகளை இணைக்கவும் இதில் வசதி உள்ளது. இதன் விலை 50 டாலர் என்றாலும், இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தனி நபர் பயன்பாட்டிற்கும், கல்வி நிலையங்கள் பயன்படுத்தவும் இது இலவசமாகவே கிடைக்கிறது. 


3. பெர்பார்மன்ஸ் டெஸ்ட் (Performance Test): 

கம்ப்யூட்டர் சிஸ்டம் குறித்த தகவல்களைப் பெறவும், செயல் திறன் சோதனைக்கும் இதனைப் பயனபடுத்தலாம். சில செயல்பாடுகள் இந்த அளவிலாவது இருக்க வேண்டும் என சில தர வரையறைகளைக் காட்டி, கம்ப்யூட்டர் செயல்பாட்டினை ஒப்பிட்டுப் பார்க்கும் வசதியினை இது தருகிறது. 

சோதனை முடிவுகள் பச்சை வண்ணத்தில் ஒருபுறமும், தர வரையறைகள் இன்னொரு புறமும் அருகருகே காட்டப்படுவது இதன் சிறப்பம்சமாகும். இதன் விலை 26 டாலர். இலவச சோதனையைச் சில காலம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கிறது.


4. ப்ராப்ஸ் (Fraps): 

மற்ற பெஞ்ச்மார்க் பயன்பாட்டு புரோகிராம்களிலிருந்து இது வேறுபட்டதாகும். டைரக்ட் எக்ஸ் அப்ளிகேஷன்களின் பிரேம் ரேட் குறித்த தகவல்களை மதிப்பீடு செய்து இது காட்டுகிறது. 

எடுத்துக்காட்டாக, கேம்ஸ் புரோகிராம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கையில், அப்போதைய பிரேம் ரேட் என்ன என்று, திரையின் இடது மேல் புறத்தில், மஞ்சள் நிறத்தில் காட்டப்படும். 

கேம்ஸ் பிரேம் இயக்குவதனை மாற்றுகையில், இந்த எண்ணும் மாறும். மேலும் டைரக்ட் எக்ஸ் அப்ளிகேஷன்களின் வீடியோ மற்றும் ஸ்கிரீன் கேப்சர் வேகத்தையும் இது துல்லியமாகக் காட்டும். இதன் விலை 37 டாலர் என்றாலும், இலவசமாக சோதனை செய்திட ஒரு பதிப்பு இணையத்தில் கிடைக்கிறது.


5. ப்ரெஷ் டயக்னோஸ் (Fresh Diagnose): 

மற்ற பெஞ்ச்மார்க் புரோகிராம்கள் போலவே, இதுவும் செயல்திறன் மற்றும் கம்ப்யூட்டரில் இயங்கும் சிஸ்டம் குறித்த தகவல்களைக் காட்டுகிறது. இதன் முக்கிய சிறப்பம்சம், இது மொத்தமாக, இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. 

அடுத்ததாக, மற்ற புரோகிராம்கள் தராத, நுண்ணிய செயல்பாடுகளின் திறன் நிலையையும் இது காட்டுகிறது. எடுத்துக் காட்டாக, இது உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள எழுத்து வகைகளின் செயல்திறனைக் கூட தரம் பிரித்துச் சொல்கிறது. இதன் தளத்திற்குச் சென்று, அங்கு நம்மைப் பதிவு செய்த பின்னரே, இதனைப் பயன்படுத்த முடியும்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes