பூமியின் மூலை முடுக்கெல்லாம் இன்டர்நெட்


இன்டர்நெட் இணைப்பினை பூமியின் மூலை முடுக்கெல்லாம் தர வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்ற சூன் 15 அன்று, ஜெல்லி மீன் வடிவில் அமைக்கப்பட்ட, ஒவ்வொன்றும் 20 பவுண்ட் எடையுள்ள, 30 இணைய பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம். 

இந்த இணைய பலூன்களில், சோலார் தகடுகளுடன், ஆண்டென்னாக்கள், கம்ப்யூட்டர்கள், மின்னணு சாதனங்கள், ஜி.பி.எஸ். சாதனங்கள், பேட்டரிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டெகாபோ ஏரியின் அருகே இருந்து இந்த பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதன் மூலம், இணைய தொடர்பு கிடைக்க இயலாத, பூமியின் பல இடங்களில் வாழும் 480 கோடி மக்களுக்கு, இணைய இணைப்பு கிடைக்க இருக்கிறது. 

லூன் திட்டம் (Loon Project) என அழைக்கப்படும் இந்த திட்டம், தொலைவான இடங்களில் வாழும் அனைவருக்கும், எப்படியேனும், இணைய இணைப்பினைத் தரும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த இணைய பலூன்களில், ஹீலியம் வாயு நிரப்பப்பட்டு, இணைய இணைப்பு தருவதற்கான ட்ரான்ஸ்மீட்டர் சாதனங்கள் இணைக்கப்பட்டிருக்கும். மொத்தம் 30 பலூன்கள், பூமிக்கு மேலே 12 மைல் தூரத்தில், ஸ்ட்ராட்டோ ஸ்பியர் என அழைக்கப்படும் பகுதியில் பறக்கவிடப்படும். 

இவற்றின் விட்டம் 49 அடி. 780 ச.மைல் அல்லது 1,250ச. கிலோ மீட்டர், பரப்பில் வாழும் மக்களுக்கு, ஒவ்வொரு பலூனும் இணைய இணைப்பினை வழங்க முடியும். இந்த பலூன்கள், கூகுள் எக்ஸ் சோதனைச் சாலையில், கூகுள் கிளாஸ் மற்றும் கூகுள் ட்ரைவர் இல்லாமல் இயங்கும் கார் ஆய்வுத் திட்ட விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. 

வளர்ந்து வரும் நாடுகள், இணைய இணைப்பிற்கென, பைபர் கேபிள்களை அமைப்பதற்கான செலவினை மேற்கொள்வது கடினம் என்பதால், இந்த ஏற்பாட்டினை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த இணைய பலூன்கள், மிக மெல்லிய பாலிதைலீன் பிலிம் கொண்டு உருவாக்கப்பட்டவை. 

நியூசிலாந்தின் தெற்கு ஏரி அருகே இருந்து அனுப்பப்பட்ட இவை, வெகு எளிதாக, ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சென்றதாக, இதனை அனுப்பிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இவை நம் கண்களுக்குப் புலப்படாத தூரத்தில் பறந்து இணைய இணைப்பினை வழங்கி வருகின்றன. 

இதில் இணைக்கப்பட்டுள்ள, சிறிய டேபிள் அளவில் உள்ள சோலார் பேனல்கள், இவை செயல்படுவதற்குத் தேவையான மின் சக்தியை நான்கு மணி நேரத்தில் பெற்று தருகின்றன. தரையில் அமைக்கப்பட்டுள்ள இணையக் கட்டமைப்பில் செயல்படும் மையங்களிலிருந்து, இந்த இணைய பலூனில் உள்ள ரிசீவர்களுக்குத் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. 

ஒவ்வொரு பலூனும், 780 சதுர மைல் அளவில், இணையத் தகவல்களை வழங்குகின்றன. அது மட்டுமின்றி, ஒரு பலூனிலிருந்து, அதிக பட்சம் ஐந்து பலூன்களுக்குத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. ஸ்ட்ராட்டோஸ்பியர் என அழைக்கப்படும், குறிப்பிட்ட விண் எல்லையில், இந்த பலூன்கள் சென்று செயல்படத் தொடங்குகையில், மனிதனின் கண்களுக்கு இவை புலப்படாது. இவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வதால், விண் வெளியில், ஓர் இணைய இணைப்புக் கட்டமைப்பு ஏற்படுகிறது. 

இதன் மூலம் உலகின் அனைத்து மூலைகளுக்கும் இணைய தொடர்பினை வழங்க முடியும். எடுத்துக்காட்டாக, ஆப்கானிஸ்தானின், மிக ஆழமான, வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதைகளையும், அங்கு வசிக்கும் மக்களையும், இந்த பலூன் வெளிப்படுத்தும் சிக்னல்கள் எளிதாக அடைய முடிந்தன. 

நூற்றுக்கு நான்கு பேர் மட்டுமே இணைய இணைப்பு தற்போது பெற்று வரும், கேமரூன் நாடு முழுவதும், இந்த பலூன்கள் இணைய இணைப்பினைத் தந்தன. பைபர் கேபிள்களை அமைத்து இணைய இணைப்பினை வழங்குவதைக் காட்டிலும், பரந்து விரிந்த ஆகாயத்தைப் பயன்படுத்தி, குறைந்த செலவில், உலகம் முழுமைக்கும் இணைய இணைப்பினை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற இலக்குடன் இந்த பலூன் இணைய இணைப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

பல நூறு இணைய பலூன்களை, விண்வெளியில், வளையங்களாக நிற்க வைத்து, இணைப்பு கொடுத்து, உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் இணைய இணைப்பு வழங்குவதே, இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என இத்திட்டத் தலைவர் மைக் கேசிடி குறிப்பிட்டுள்ளார். 

இந்த திட்டத்தின் செயல்பாட்டினை சோதனை செய்திட, உலகின் பல இடங்களில் இருந்து, தன்னார்வ இணையப் பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் வீடுகளில், பாஸ்கட் பால் அளவிலான, சிகப்பு ரிசீவர்கள் பொருத்தப்பட்டன. பயனாளர்களுக்குத் திட்டத்தின் முழு விபரமும் வழங்கப்படவில்லை. இணைய இணைப்பு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களே திரட்டப்பட்டன.

இந்த இணைய பலூன்கள், 3ஜி தகவல் வேகத்தைக் கொண்டுள்ளன. உலகில், மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத இடங்களில் ஏற்படும் பேரிடர் காலங்களில், இந்த இணைய இணைப்பு பலூன்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வது எளிதாகும். இதனால் உயிர் இழப்பு தடுக்கப்படும்.

இவ்வகை இணைப்பின் மூலம், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால், கூகுள் போன்ற இணைய விளம்பர நிறுவனங்களின் வருமானம் பெருகும். இந்த திட்டத்தில், எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என கூகுள் அறிவிக்கவில்லை. 

பதினெட்டு மாத கடும் உழைப்பு மற்றும் ஆராய்ச்சிக்குப் பின்னர் இந்த இணைய பலூன்களின் செயல்பாடு சாத்தியமாகியுள்ளது. 

கிறைஸ்ட் சர்ச் என்ற இடத்திலிருந்து இந்த பலூன்கள் ஏவப்பட்டன. இந்த இடம் இந்த திட்டத்திற்கேற்ற இடமாக, கூகுள் தேர்ந்தெடுத்தது. 2011 ஆம் ஆண்டு, ஏற்பட்ட நில அதிர்வில், இந்த இடத்தில் வாழ்ந்த மக்கள், உலகின் மற்ற இடங்களுடன் தொடர்பற்ற நிலையில், பல வாரங்கள் வாழ்ந்தனர். 

நில அதிர்வில், 185 பேர் பலியாயினர். இது போன்ற பேரிடர் நிகழ்வுகளில், இணைய பலூன் இணைப்பு செயல்பட்டு, மக்கள் இறப்பதைத் தடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய தகவல்களையும், உதவியையும் வழங்க இயலும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes