வாடிக்கையாளர்கள் வளைத்த விண்டோஸ் 8.1


விண்டோஸ் 8 பதிப்பு வெளியானவுடன், அதன் முற்றிலும் புதிய தொடுதிரை இயக்கத்தினை அனைவரும் ஆச்சரியத்துடன் பாராட்டினாலும், ஸ்டார்ட் பட்டன் இயக்கம் இல்லாதது, பழைய டெஸ்க்டாப் முறை, தேவைப்படுவோருக்குத் தரப்படாதது எனப் பல குமுறல்களை வாடிக்கையாளர்கள், உலகெங்கும் வெளிப்படுத்தினர். 

விண்டோஸ் 8 சிஸ்டம் உரிம விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததற்கு இவையும் ஒரு காரணம் எனவும் பரவலாகப் பேச்சு எழுந்தது. பழைய, பழகிப்போன விஷயங்கள் கட்டாயம் வேண்டும் என எதிர்பார்ப்புகள் வெளிப்பட்டதால், முதலில் பிடிவாதமாக இருந்த மைக்ரோசாப்ட் பின்னர், அவற்றை மீண்டும் தரும் சிந்தனைப் போக்கினைக் கடைப்பிடித்தது. இறுதியில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு களுக்கேற்ப விண்டோஸ் 8 வளைக்கப்பட்டு, தற்போது விண்டோஸ் 8.1 பதிப்பு வெளியாகியுள்ளது. இதில் புதியதாக வந்துள்ள சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.

ஸ்டார்ட் பட்டன் மட்டுமின்றி, இன்னும் பல சிறப்பம்சங்களும், இந்த மேம்பாட்டுப் பதிப்பில் தரப்பட்டுள்ளன. ஸ்டார்ட் பட்டன் தான் திரும்ப கிடைத்துள்ளது. 

ஸ்டார்ட் மெனு அல்ல. பல அப்ளிகேஷன்கள், மேம்படுத்தப்பட்ட வசதிகள் தருவதற்காக, புதியதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 தரப்பட்டுள்ளது. திரையில் காட்டப்படும் கீ போர்டில், புதியதாகச் சில மாற்றங்கள் கிடைத்துள்ளன. பைல் எக்ஸ்புளோரர் இயக்கத்தில் ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றங்கள் உள்ளன.

தற்போது முழுத் திரையுடன் கூடிய ஒரு இமேஜாகக் கிடைக்கும் லாக் ஸ்கிரீன், இனி க்ளவ்ட் இணைந்த போட்டோ பிரேமாகத் தோற்றமளிக்கும். இப்போதைய ஸ்டார்ட் ஸ்கிரீனை நம் வசத்திற்கு மாற்றலாம். இதில் புதியதாக இரண்டு டைல்ஸ் (ஆக மொத்தம் நான்கு) கிடைக்கின்றன. இவற்றின் மூலம் All Apps திரையினைப் பயன்படுத்தலாம். 

மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட விண்டோஸ் 8 சாதனங்களை, ஸ்டார்ட் லே அவுட் மற்றும் பதியப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம்களுடன் வலம் வரலாம்.

இதில் Metrostyle PC Settings மிக அழகாகவும் நேர்த்தியாகவும் விரிவாக்கம் பெற்றுள்ளது. முன்பு டெஸ்க்டாப் கண்ட்ரோல் பேனலில் கிடைத்த அனைத்து வசதிகளும், விண்டோஸ் அமைப்பு முறைகளும், வழிகளும் கிடைக்கின்றன. 
விண்டோஸ் ஸ்டோர் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

முன்பு Search charm கிளிக் செய்தவுடன், எவ்வாறெல்லாம் தேடலாம் என்ற விருப்பமுறைகள் பட்டியலிடப்படும். ஒரு நேரத்தில், ஒரே ஒரு விருப்பமுறையினை இயக்கிப் பார்க்கலாம். இப்போது, இதற்குப் பதிலாக, ஒரே ஒரு சர்ச் பாக்ஸ் தரப்பட்டுள்ளது. தரப்படும் தேடல் முடிவுகள் பட்டியலில், அப்ளிகேஷன்கள், பைல்கள், செட்டிங்ஸ் அமைப்புகள், இணையத்திலிருந்து தகவல், விக்கிபீடியா போன்ற தளத்தகவல்கள் என அனைத்தும் கிடைக்கின்றன.

திரையில் காட்டப்படும் தொடுதிரை கீ போர்டில் கிடைக்கும் autosuggest வசதி சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய அசைவுகளை ஏற்றுக் கொள்ளும் திறன் சேர்க்கப்பட்டுள்ளது. கீ போர்ட் லே அவுட் மாற்றாமலேயே, எண்களையும், அடையாளக் குறியீடுகளையும் (symbols) இடுகை செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது.

விண்டோஸ் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து, பதிந்த புரோகிராம்கள், தாமாக அப்டேட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. வழக்கமாக விண்டோஸ் சிஸ்டத்தின், பின்புலச் செயல்பாடாக சிஸ்டம் பைல்களுக்கு இந்த வசதி இருந்து வந்தது. தற்போது, விண்டோஸ் ஸ்டோர் புரோகிராம்களுக்கும் இது தரப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்பாடாகும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், நாமாக இதனை மேற்கொள்ள வேண்டியதிருந்தது.

உங்கள் திரையின் ரெசல்யூசனுக்கேற்றபடி, திரையில் நான்கு விண்டோஸ் அப்ளிகேஷன்களைக் கட்டம் கட்டி இயக்கலாம். அதே போல, தொடர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர் இயக்கமும் நீடிக்கிறது. திறக்கப்பட்ட ஒவ்வொரு அப்ளிகேஷன் காட்டப்படும் இடத்தினைச் சுருக்கி வைக்கலாம். ஒரே அப்ளி கேஷனை, இரண்டு நிலைகளில், இரண்டு விண்டோக்களில் இயக்கலாம்.

இதுவரை விண்டோஸ் 8 இயக்கத்தில், பயனாளர்கள், தங்களை அறியாமலேயே, டைல்ஸ்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். இது சற்று எரிச்சலைக் கொடுத்தது. இனி, விண்டோஸ் 8.1 பதிப்பில், டைல்ஸ் மீது விரல் அல்லது மவுஸ் கர்சர் அழுத்தி, இழுக்க வேண்டும். அல்லது, டெஸ்க்டாப் வழக்கப்படி, ஐகான் அல்லது டைல் மீது ரைட் கிளிக் செய்து, விருப்பப்படும் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், ஸ்கை ட்ரைவினை இணைத்துச் செயல்படுத்தி மேம்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. இதனை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு கூறாகவே தந்துள்ளனர். ஸ்டார்ட் ஸ்கிரீன் செல்லாமல், நேரடியாகவே டெஸ்க்டாப்பில் இயக்கத்தினைத் தொடங்கும் வழி தரப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தினால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும் வகையில், இயற்கையான ஒரு மாற்றமாக இது தரப்படுகிறது. 

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்த பட்டனை அப்படியே தராமல், இப்போது அதே லைவ் டைல்ஸ் இடைமுகத்தில் சிஸ்டம் தொடங்குகிறது. ஆனால், பயனாளர்கள், “All Apps” வியூ கிடைக்கும் வகையில், ஒரு பட்டனை செட் செய்திடலாம். இங்கும் அப்ளிகேஷன் புரோகிராம் ஐகான்களை, அகரவரிசைப்படியோ, பதிவு செய்யப்பட்ட நாட்களின் வரிசைப்படியோ, அடிக்கடி பயன்படுத்தப்படும் புரோகிராம்களின் அடிப்படையிலோ, புரோகிராம் வகைகளின் படியோ அமைத்துக் கொள்ளலாம். 

டெஸ்க்டாப் அல்லது ஆல் அப்ளிகேஷன்ஸ் என்ற இரு வகைகளில் எது வேண்டும் என பயனாளர்களே தீர்மானித்து இயக்கத்தைத் தொடங்கலாம். டெஸ்க்டாப்பின் முக்கிய அம்சமான, பைல் எக்ஸ்புளோரர் இயக்கத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் பல மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. 

இந்த மேம்படுத்தல்களுடன் கூடிய பதிப்பு 8.1 மக்களுக்கு ஜூன் மாத இறுதியில் வழங்கப்பட உள்ளது. இதனால், விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், பழைய பயன்பாட்டின் அடிப்படையில் இணைக்கப்பட்ட புதிய மற்றங்களினால் கவரப்பட்டு, விண்டோஸ் 8க்கு மாறுவார்களா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


1 comments :

Thozhirkalam Channel at June 16, 2013 at 1:30 PM said...

பன்பாட்டிற்கு தேவையான பகிர்வு,, மேலதிக தகவல்கள்...

நன்றி!!

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes