இணையதளத்தின் எதிர்கால இதயம் சீனா : கூகுள்

இணையதளத்தின் எதிர்கால இதயம் சீனா. தேடுதல் தவிர வரைபடம் மற்றும் விளம்பரம் போன்ற பிற பகுதிகளும் சீனாவில் 'கூகுள்' வளர்ச்சி பெறுவதற்கான இடங்களாக திகழ்கின்றன' என, 'கூகுள்' நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2006ல் 'கூகுள்' நிறுவனம் தனது 'தேடுபொறி'யை சீனாவில் நிறுவியது. மிகக்குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்தது. இந்நிலையில், 'தியான்மென்' சதுக்கப் படுகொலை போன்ற, கடந்த சீன அரசின் அட்டூழியங்களை குறிக்கும் தகவல்களை தணிக்கை செய்ய வேண்டும் என, சீன அரசு உத்தரவிட்டது.

அதையேற்ற 'கூகுள்' சில விஷயங்களை தணிக்கை செய்தது. ஆனால் சீனா தொடர்ந்து 'கூகுளுக்கு' நெருக்கடி கொடுத்து வந்தது. இதற்கிடையில் அந்நிறுவனத்தில் இ-மெயில்கள் சில இணையதள திருடர்களால் திருடப்பட்டன.

சீனா இதுகுறித்து விசாரிப்பதாக கூறிவந்ததே ஒழிய, நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இப்பிரச்னை ஒரு நிலையில் முற்றி, கடந்த மார்ச் முதல் சீனாவில் தனது 'தேடுபொறி'யை நிறுத்தி விட்டது கூகுள்.

அதையடுத்து கூகுளின் தேடுபொறி, ஹாங்காங்கில் இருந்தபடி செயல்படத் துவங்கியது. இதனால் அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் பெரும்பகுதியை சீன தேடுபொறி நிறுவனமான 'பெய்டு'விடம் இழந்தது.

அதன்பின் கடந்த ஜூலையில், ஹாங்காங்கிற்கு சேவையை திருப்பி விடுவதை 'கூகுள்' நிறுத்தியது. அதன்பின் சீன அரசு, அந்நிறுவனத்துக்கான உரிமத்தை புதுப்பித்தது.

இந்நிலையில் நேற்று சீன தலைநகர் பீஜிங்கில் பேசிய அந்நிறுவனத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி துறையின் துணைத் தலைவர் ஆலன் எஸ்டேஸ் கூறியதாவது: இணையதளத்தின் எதிர்கால இதயமாக சீனா திகழ்கிறது. தேடுதல் என்பது தவிர, வரைபடம் மற்றும் விளம்பரங்களை வெளியிடுவது போன்ற எண்ணற்ற துறைகள் இணையதள உலகில் உள்ளன.

அவற்றை நம்மால் கண்டுபிடிக்க முடியும். சீனாவை பொறுத்தவரை 'கூகுள்' ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. ஒரு மகத்தான புரட்சிக்கு அது வழிகாட்டும் என நம்புகிறேன். 'கூகுள்' மீது சீன அரசு தாக்குதல் தொடுத்தது என்ற 'விக்கி லீக்ஸ்' ரகசிய ஆவண வெளியீடு பற்றி எங்களிடம் ஆதாரம் எதுவும் இல்லை. இவ்வாறு ஆலன் தெரிவித்தார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes