ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள்

அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் வாங்குவதற்கு அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்ற நிலையில், இலவசமாக அனைத்தும் தரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டவை ஓப்பன் சோர்ஸ் இயக்கம்.

இந்த வகையில் உருவாக்கப்படும் புரோகிராம்கள் பெரும்பாலும் இலவசமாகவே நமக்குக் கிடைக்கின்றன என்பதனை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். எடுத்துக்காட்டாக ஓப்பன் ஆபீஸ் தொகுப்பு.

ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்களின் சிறப்பு அவை இலவசம் என்பது மட்டுமல்ல. எந்தவிதக் கட்டுப்பாடும் அற்றவைகளாக இந்த புரோகிராம்கள் மக்களை அடைய வேண்டும் என்ற நோக்கத்தினையே ஓப்பன் சோர்ஸ் கொண்டுள்ளது.

விண்டோஸ் உருவாக்கப்படும் முன்னரே, ஓப்பன் சோர்ஸ் இயக்கம் அமைக்கப்பட்டது. இதற்கு அடி கோலியவர் ரிச்சார்ட் ஸ்டால்மேன் (Richard Stallman) ஜி. என்.யு. (GNU) என இதனை அழைத்தார். (காண்க: www.gnu.org). சாப்ட்வேர் ஒன்றைப் பயன்படுத்து பவருக்கு அடிப்படையில் நான்கு வழிகளில் சுதந்திரம் இருக்க வேண்டும் என எண்ணினார்.

எந்த காரியத்திற்கும் அந்த புரோகிராமினை பயன்படுத்த, எப்படி அது செயல்படுகிறது என்பதனை அறிய, யாருடனும் அதனைப் பகிர்ந்து கொள்ள மற்றும் அதில் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள்ள என நான்கு வகையான அடிப்படை சுதந்திரம் இருக்க வேண்டும் என இலக்கு வைத்தார்.

இந்த ஓப்பன் சோர்ஸ் இயக்கத்தின் ஒரு சிறப்பான திருப்பம் லினக்ஸ் என்னும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவானதாகும். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த லினஸ் டோர்வால்ட்ஸ், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பினைத் தானே உருவாக்கினார்.

இது விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான அடிப்படையைத் தந்தது. ஜி.என்.யு. திட்டத்தில் ஏற்கனவே உருவான சாப்ட்வேர் தொகுப்புடன், டோர்வால்ட்ஸ் உருவாக்கிய கெர்னல் அமைப்பினை இணைத்து உருவாக்கப்பட்டதுதான் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்.

பயன்படுத்துபவர்கள் தங்களின் தேவைகளுக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வகையில் இது உருவாக்கப் பட்டதனால், கம்ப்யூட்டர் உலகில் அனைவரின் கவனத்தையும் இது கவர்ந்தது. அதனாலேயே இன்று லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல நிறுவனங்களால், அவர்களின் நோக்கங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இவற்றை தனிப் பதிப்புகள் என்று அழைக்காமல் டிஸ்ட்ரிபியூஷன்ஸ் (Distributions) என அழைக்கின்றனர்.

ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்றவற்றை நாம் ஏன் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்? என்ற வினாவிற்கு, நமக்குக் கிடைக்கும் முதல் பதில், அவை முற்றிலும் இலவசம் என்பதுவே. மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற தொகுப்பிற்கு முற்றிலும் இணையாக ஓப்பன் ஆபீஸ் தொகுப்பு இலவசமாகக் கிடைக்கிறது. இதனால் பணம் மிச்சமாகிறது.

அடுத்ததாக, இந்த புரோகிராம்களைப் பயன்படுத்திப் பார்ப்பதனால், நம்முடைய புரோகிராம் அறிவு வளர்கிறது. ஒரு சாப்ட்வேர் எப்படி செயல்படுகிறது என்று அறிய, எந்த ஒரு ஓப்பன் சோர்ஸ் புரோகிராமினையும் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

புரோகிராம் எழுதப்பட்ட குறியீடு வரிகளைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். வர்த்தக நோக்கில் அமைக்கப்படும், எம்.எஸ். ஆபீஸ், விண்டோஸ், அடோப் பேஜ் மேக்கர் போன்ற புரோகிராம்களுக்கு இந்த குறியீடு வரிகள், நாம் பணம் செலுத்தி வாங்கினாலும் கிடைக்காது.

சில வேளைகளில், வர்த்தக ரீதியாகக் கிடைக்கும் புரோகிராம்களைக் காட்டிலும் ஓப்பன் சோர்ஸ் முறையில் கிடைக்கும் புரோகிராம்கள் சிறப்பானவை என்று கருதப்படுகின்றன. எடுத்துக் காட்டாக மொஸில்லாவின் (www.mozilla.org) பயர்பாக்ஸ் பிரவுசர், இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் மற்றும் தி குரூப் இமேஜ் எடிட்டர் (www.gimp.com) போன்றவற்றைக் கூறலாம்.

லினக்ஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் நமக்கு பல கூடுதல் பயன்கள் உண்டு. விண்டோஸ் போல இதனை ஹார்ட் டிஸ்க்கில் பதியவைத்துத்தான் இயக்க வேண்டும் என்பதில்லை. லினக்ஸ் சிஸ்டம் பதியப்பட்டு கிடைக்கும் சிடி ஒன்றை வாங்கி, சிடி ட்ரைவில் இருந்தவாறே இயக்கி, லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்தலாம்.

ஹார்ட் டிஸ்க்கில் பதிவதாக இருந்தாலும், விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா உள்ள ஹார்ட் டிஸ்க்கில், லினக்ஸை தனி டைரக்டரி யில் பதிந்து இயக்கலாம்.

ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் முழுமையாக இலவசம் என்றும் கூற முடியாது. சில வகை சிஸ்டங்களுக்கு நாம் கட்டணம் செலுத்தியாக வேண்டும். சிலவகை உதவிகள் உடனடியாகத் தேவைப்பட்டாலும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் அப்படி ஒரு கட்டாய நிலைக்கு, யாரும் தள்ளப்பட்டதில்லை.

ஏனென்றால் இந்த புரோகிராம்களைப் பயன்படுத்துவோருக்கென தனி அமைப்புகள் இணையத்தில் உள்ளன. இவற்றில் நம் சந்தேகங்களைக் கேட்டால் பதிலளிக்கப் பலர் உள்ளனர். மேலும் நமக்கு ஏற்பட்டது போன்ற பிரச்னைகள் ஏற்கனவே ஒருவருக்கு ஏற்பட்டு இந்த அமைப்புகளில் பதியப்பட்டிருந்தால், அவற்றைப் படித்து அறிந்து கொள்ள வாய்ப்புகள் தரப்பட்டிருக்கும். இது போன்ற கற்றுக் கொள்ளும் வசதிகள், ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்களில் ஏராளமாகக் கிடைக்கின்றன.

வர்த்தக ரீதியான புரோகிராம்களுக்கு இணையாக ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் செயல்பட்டாலும், அவற்றிற்கு மாற்றாக அனைத்து புரோகிராம்களும் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை. இருப்பினும் ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்களும், பயர்பாக்ஸ், தண்டர்பேர்ட், லினக்ஸ் சிஸ்டம் போன்றவைகளும், இன்றைய தகவல் தொழில் நுட்பத்தில் தங்களுக்கென இடம் பிடித்துள்ளதை மறுக்க முடியாது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes