சென்ற வாரம் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த பன்னாட்டளவிலான ஆப்பிள் நிறுவனக் கருத்தரங்கில், அந்நிறுவனம் வெளியிட இருக்கும், மொபைல் சாதனங்களுக்கான, ஐ.ஓ.எஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல் வெளியிடப்பட்டது.
ஆண்டு தோறும் ஒருமுறை தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென புரோகிராம்களை உருவாக்குபவர்களுக்கான கருத்தரங்கினை நடத்துவது ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கம்.
சென்ற வாரம் நடைபெற்ற இந்த கருத்தரங்கு இவ்வகையில் 25 ஆவது கருத்தரங்காகும். நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் இதனைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் 6,000க்கும் மேற்பட்ட புரோகிராம் வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய கருத்தரங்குகளில், ஐபோன் போன்ற சாதனங்கள் அறிமுகத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக, இந்த சாதனங்களுக்கான சாப்ட்வேர் தயாரிப்பு குறித்து அதிகத் தகவல்கள் தரப்பட்டன.
கருத்தரங்கு நடக்கும் போதே, அதில் புரோகிராம்களை வடிவமைப்பவர்களுக்கு, புதிய ஓ.எஸ். சோதனை முறையில் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கும் சோதனை முறையில் பயன்படுத்த வரும் மாதங்களில் வழங்கப்படும்.
இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழக்கம் போல் காட்சித் தோற்றங்களில் புதிய மாற்றங்களின் மேல் தன் கவனத்தைக் கொள்ளாமல், அதன் செயல்பாடுகளில் அதிக கவனம் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் சிஸ்டங்களைப் பயன்படுத்தும் பயனாளர்கள் இதுவரை எதிர்பார்த்து கேட்டிருந்த பல செயல்பாடுகள், இந்த புதிய சிஸ்டத்தில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
ஐ.ஓ.எஸ். சிஸ்டத் தின் அறிவிப்பு முறை, ஆப்பிள் டெஸ்க்டாப் சிஸ்டத்துடனான ஒருங்கிணைப்பு, ஐ க்ளவ்ட் நிர்வாகம், எஸ்.எம்.எஸ். க்ளையண்ட் மெசேஜ் நிர்வாகம், உடல்நலம் குறித்துத் தெரிந்துகொள்ள பல அப்ளிகேஷன்கள் என அனைத்தும் மக்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற வகையில் அமைக்கப்படும் எனத்தெரிகிறது.
இதன் சில சிறப்பு அம்சங்கள் என இக்கருத்தரங்கில் காட்டப்பட்டவை குறித்து இங்கு காணலாம். நோட்டிபிகேஷன்களைப் பொறுத்த வரை, அவை கிடைக்கும்போது, அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கத்தினை நிறுத்தாமல், அதனைக் கவனித்து அதற்கான நடவடிக்கையினை எடுக்க முடியும்.
ஐ க்ளவ்ட் இயக்க முறை, கூகுள் ட்ரைவ் மற்றும் ட்ராப் பாக்ஸ் போல மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் சேவ் செய்யப்படும் பைல்களைத் தேடிப் பெறும் டூல்கள் தரப்பட இருக்கின்றன. நாம் பயன்படுத்தப்படும் ஆப்பிள் சாதனங்களின் அனைத்து படங்களும், வீடியோ பைல்களும், ஐ க்ளவ்ட் உடன் ஒருங்கிணைக்கப்படும்.
இனி அப்ளிகேஷன் மூலம் மேக் மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்கள் இடையே ஒருங்கிணைந்த இணைப்பு நடைபெறும். இதுவரை மேக் - மேக் மற்றும் ஐ.ஓ.எஸ். - ஐ.ஓ.எஸ். சாதனங்கள் இணைப்பு மட்டுமே நடைபெற்று வந்தன.
தன் புரோகிராம்களையும், மிகவும் நம்பிக்கை கொண்ட சிலரின் புரோகிராம்களை மட்டுமே அனுமதித்து வந்த ஆப்பிள், இனி தர்ட் பார்ட்டி என்று அழைக்கப்படும் பிற வல்லுநர்கள், ஆப்பிள் சாதனங்களுக்காக எழுதப்படும் புரோகிராம்களையும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து அனுமதிக்க இருக்கிறது.
தனி நபர்கள், இந்த சிஸ்டத்தில் இயங்குவதற்கெனத் தயாரிக்கப்படும் புரோகிராம்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஸ்டோரில் இவை கிடைக்கும்.
0 comments :
Post a Comment