எரிக்சன் இந்தியா நிறுவனத்தின் கணிப்புப்படி, இந்தியாவில், 2020 ஆம் ஆண்டில், மொபைல் பிராட்பேண்ட் பயனாளர் களின் எண்ணிக்கை 114.5 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2013ல் இந்த எண்ணிக்கை 79 கோடியே 50 லட்சமாக இருந்தது. இதே போல, ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையும், 2013ல் 9 கோடியிலிருந்து, 2020ல் 45 சதவீதம் உயர்ந்து, 52 கோடியாக உயரும்.
அதிக எண்ணிக்கையில் பயனாளர்களும், அதிவேக பிராட்பேண்ட் இணைப்பும், மக்கள் வாழ்க்கையின் அமைப்பையே மாற்றிவிடும். அவர்கள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்ளும் வழிகளும், வர்த்தகம் மேற்கொள்ளும் நிலைகளும் முற்றிலும் மாறுதலை மேற்கொள்ளும்.
மக்கள் 24 மணி நேரமும், வாரத்தின் அனைத்து நாட்களிலும், இணைய இணைப்பு வேண்டும் என எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.
சமூக தளங்களின் தாக்கத்தினால், மொபைல் வழி பிராட்பேண்ட் இணைப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வீடியோ பைல்களின் பரிமாற்றமும் உயர்கிறது. இவை அதிகரிக்கும் போது, இணைய வேகமும் கூடுதலாக தேவைப்படும்.
ஆனால், இப்போது மொபைல் வழி பிராட்பேண்ட் இணைப்பு மிக மந்தமாகவே இருக்கிறது. முயற்சி செய்திடும் மூவரில் ஒருவருக்கே இணைப்பு கிடைக்கிறது. பயனாளர்கள், இப்போது மிகச் சிறப்பாகச் செயல்படும் இணைய இணைப்பினைத் தாங்கள் எங்கு சென்றாலும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
பயனாளர்கள் பயன்படுத்தும் பலவகையான அப்ளிகேஷன்கள், பைல்கள் இன்னும் அதிக திறன் மற்றும் வேகம் கொண்ட இணைய இணைப்பினை தேவையாகக் கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக, சமூக தளங்களில் இப்போது செய்திகளும், படங்களும் மட்டுமே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இனி வருங்காலத்தில், எச்.டி. வீடியோ பைல்கள் பரிமாறிக் கொள்ளப்படும் நிலை வரலாம்.
உயர் ரக நவீன மொபைல் சாதனங்கள், நெட்வொர்க் செயல்பாடுகள், அப்ளிகேஷன் செயலாக்கங்கள் அனைத்தும் புதிய இணைய தகவல் பரிமாற்றத்தை எதிர்பார்க்கின்றன. இது ஓர் அத்தியாவசியத் தேவையாய் உருவெடுத்து வருவதால், நிச்சயமாய் அதற்கேற்ற கண்டுபிடிப்புகளும், வடிவமைப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
0 comments :
Post a Comment