மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் வந்த பின்னர், மற்ற பிரவுசர் களைத் தயாரித்து வழங்கிய நிறுவனங்களும், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை உருவாக்கித் தந்தன.
மற்றவர்களையும் உருவாக்க தூண்டின. இவற்றைத் தங்கள் இணைய தளத்தில் பதிந்து வைத்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அறிவித்து வருகின்றன.
இருப்பினும் இவையும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களாக, அல்லது அவற்றைத் தாங்கி வரும் புரோகிராம்களாக மாறி வருகின்றன. இவற்றை அறிந்து பாதுகாப்பாக இயங்குவது எப்படி என இங்கு பார்க்கலாம்.
பிரவுசர் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் என்பது நம் இணைய பிரவுசரின் உள்ளாக இயங்கக் கூடிய சில குறியீடு வரிகள் அடங்கிய தொகுப்பாகும். இவை சில வேண்டத்தகாத செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றன.
டிஸ்பிளே விளம்பரங்கள் காட்டுவது, நாம் காணும் இணைய தளங்கள் எவை எனப் பின் தொடர்வது மற்றும் நம் பாஸ்வேர்ட், தனிப்பட்ட தகவல்களைக் கைப்பற்றுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றன.
ஒரு பாதுகாப்பான எக்ஸ்டன்ஷன் புரோகிராம் கூட தானாகவே அப்டேட் செய்து கொண்டு, மோசமான மால்வேர் புரோகிராமாக மாறக் கூடிய சந்தர்ப்பங்கள் இப்போது பெருகி வருகின்றன.
குரோம் பிரவுசர், நாம் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையில் காட்டப்படும் டயலாக் பாக்ஸ்களில் இதனைக் காட்டுகிறது. இந்தப் பிரச்னை குரோம் பிரவுசருக்கு மட்டுமின்றி, அனைத்து பிரவுசர்களுக்கும் உள்ளது. குறிப்பாக பயர்பாக்ஸ் ஆட் ஆன் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் அனைத்தும் இந்த பிரச்னைகளை எதிர் கொள்கின்றன.
குரோம் வெப் ஸ்டோர் அல்லது மொஸில்லா ஆட் ஆன் ஆகிய தளங்களில் இருந்து, பிரவுசர் எக்ஸ்டன்ஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், உங்கள் பிரவுசரில் உள்ளாக இயங்கும் ஒன்றை நீங்கள் இன்ஸ்டால் செய்கிறீர்கள்.
அப்போது குரோம் பிரவுசர், அது சிறிய ஆட் ஆன் புரோகிராமாக இருந்தாலும், பல்வேறு நிலைகளில் உங்களிடம் அனுமதி கேட்கிறது. மேலும் சிறிய வேலையை மேற்கொள்ளும் ஆட் ஆன் புரோகிராமாக இருந்தாலும், அது அனைத்து இணையதளப் பக்கங்களில் இருந்தும் உங்களுடைய தகவல்களை அணுகும் வகையில் தன்னை மாற்றிக் கொள்கிறது. ஏனென்றால், அந்த சிறிய புரோகிராம் கூட, உங்கள் பிரவுசரின் உள்ளீடாக இயங்குகிறது.
இதிலிருந்து நம்மால் தப்பிக்க இயலவில்லை. இணைய தளங்களை நாம் விரும்பும் வகையில் மாற்றிக் கொடுக்கும் போது, அவை தாங்கள் விரும்பும் விளம்பரங்களை நுழைக்கும் வகையிலும் செயல்படுகின்றன. ஆனால், பயர்பாக்ஸ் பிரவுசர் இந்த வகையான எச்சரிக்கையை வழங்குவதில்லை. அதற்கெனப் பதியப்படும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், தன்னிச்சையாக, நம் தனித் தகவல்களைப் பெறும் வேலையில் ஈடுபடுகின்றன.
பல ஆட் ஆன் புரோகிராம்கள், இந்த பிரிவில் இயங்கி வரும் பெரிய நிறுவனங்களால் தயார் செய்து வழங்கப்படுகின்றன. இவை எல்லாம், தனி மனிதர் ஒருவர் தன் இச்சைக்கேற்ப உருவாக்கப்படும் புரோகிராம்களாகும். இவற்றில் சில, நீங்கள் இன்ஸ்டால் செய்கையில் நல்ல பாதுகாப்பான தன்மையுடனேயே இருக்கும். இவற்றை சில நிறுவனங்கள் பெற்று தங்கள் உரிமைப் பொருட்களாக வைத்துக் கொள்கின்றன.
இந்த நிறுவனங்கள், தாங்கள் பணம் சம்பாதிக்க, நம்மைப் போன்றவர்களின் தனி நபர் தகவல்களை இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் வழியாகப் பெற்று, விற்பனை செய்கின்றன. இதற்கு தங்களின் விளம்பரங்கள் வழியாக, ஏற்கனவே பாதுகாப்பானது என்று அறியப்பட்ட புரோகிராம்களில் மாற்றங்கள் செய்கின்றன.
அல்லது இவற்றை அப்டேட் செய்திட வேண்டும் என்ற தகவலை அனுப்பி நம்மை அப்டேட் செய்திட வைக்கின்றன. அல்லது இன்ஸ்டால் செய்திடுகையில், தானாக அப்டேட் செய்திடும் வகையில் செட்டிங்ஸ் அமைக்கச் சொல்லி நம்மைத் தூண்டி, அவர்கள் வலையில் சிக்க வைக்கின்றன.
இது போன்ற கெடுதலை விளைவிக்கும் பல ஆட் ஆன் புரோகிராம்கள் குரோம் வெப் ஸ்டோரில் இன்னும் இருக்கின்றன என்று இந்த பிரிவினைக் கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன. வங்கிகளின் இணைய தளங்களை நாம் அணுகிச் செயல்படுகையில், இவை நம் கிரெடிட் கார்ட் எண், அக்கவுண்ட் பாஸ்வேர்ட் ஆகியவற்றை எளிதாகத் திருடி அனுப்புகின்றன.
பிரவுசர் எக்ஸ்டன்ஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வது என்பது, அப்ளிகேஷன் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வதற்கு இணையாகும். எனவே, அவை நம்பகத் தன்மை கொண்டவையா என நாம் முதலில் ஆய்வு செய்து அறிந்து கொள்ள வேண்டும்.
முதலில் உண்மையானவை என அறியப்பட்டாலும், பின்னாளில் இவை மற்ற நிறுவனங்களிடம் செல்கையில், மோசமானதாக மாறக் கூடியவை என்பதால், இதனை இன்ஸ்டால் செய்த பின்னரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நம்மிடம் அனுமதி பெறாமல், அப்டேட் செய்திட அனுமதிக்கக் கூடாது.
1 comments :
பயனுள்ள தகவல்! நன்றி!
Post a Comment