இணைத்த நோக்கியா இளைத்தது ஏன்?

முதன் முதலில் மொபைல் போன்கள் மக்களை அடைந்த போது அனைவரின் மனதிலும் இருந்த ஒரு பெயர் நோக்கியா. 

பின்லாந்து நாட்டில் எஸ்போ (Espoo) நகரில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, பன்னாடுகளில் கிளைகளை அமைத்து, மொபைல் போன்களை அனைத்து நிலை மக்களுக்கும் என தயார் செய்து வளர்ந்து, உயர்ந்த நிறுவனம் நோக்கியா. 

கடந்த 12 ஆண்டுகளாக மொபைல் போன் பயன்படுத்தும் அனைவரும், நோக்கியா போனில் தான் முதன் முதலில் தொடங்கி இருப்போம். 

பச்சை நிறப் பின்னணியில், ஒரே நிற எழுத்துக்களோடும், தெளிவான அழைப்பு பரிமாற்றங்களுடனும், ஸ்நேக் என்னும் விளையாட்டுடனும் நமக்குக் கிடைத்த நோக்கியாவை ஒரு பொக்கிஷமாகவே தொடர்ந்து கருதி வந்திருக்கிறோம். 

கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனமாக, நோக்கியா போன்கள் தான் முதலில் நமக்கு அறிமுகமாயின. 

இன்று அதற்கு விடை கொடுத்துவிட்டோம். நோக்கியாவினை முழுமையாக, மைக்ரோசாப்ட் சென்ற ஏப்ரல் 25 அன்று தனதாக்கிக் கொண்டது. அதற்கு Microsoft Mobile Oy எனப் பெயர் சூட்டியுள்ளது. 

மிக நன்றாக இயங்கும் வலிமையான நிறுவனங்கள் கூட ஒரு நாளில் விழலாம் என்ற படிப்பினையை நாம் நோக்கியாவிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளோம். 750 கோடி டாலர் தொகைக்குத்தான் நோக்கியா கை மாறியுள்ளது. 

2007 வரை 41 சதவீத சந்தைப் பங்கினைக் கொண்டிருந்த நோக்கியா தொடர்ந்து சரிந்து, வேறு வழியின்றி தன்னை மைக்ரோசாப்ட் வசம் ஒப்படைத்துள்ளது. ஏன், சென்ற ஆண்டு கூட, நோக்கியா 15% பங்கு கொண்டிருந்தது.

நோக்கியா உச்சத்திலிருந்த போது, வேறு எந்த நிறுவனமும் அதனைத் தொட முடியவில்லை. அதுவே, ஓர் அரக்கத்தனத்தை அந்நிறுவனத்திற்குக் கொடுத்தது. முதலில் அதனை அசைத்துப் பார்த்தது மோட்டாரோலா ரேசர் மற்றும் ஆப்பிள் ஐபோன்களே. 

தன்னுடைய பங்கு இல்லாமலே, தான் ஆண்டு வந்த மொபைல் சாம்ராஜ்யம் முன்னேறுவதனைப் பார்த்த போது, நோக்கியா தன் தவறை உணர்ந்தது. தனக்கே உரிமையான மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கைவிட்டு, விண்டோஸ் போன் சிஸ்டத்தினை தத்தெடுத்தது. 

மூன்று ஆண்டுகள், தன் லூமியா போன்களை சந்தையில் கொண்டு வந்து ஓரளவு இடம் பிடித்தது. ஆனாலும், இறுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் தஞ்சம் கொண்டது. இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாதனங்கள் பிரிவின் ஒரு அம்சமாக நோக்கியா இயங்க உள்ளது.

1992 ஆம் ஆண்டில், ஜோர்மா ஒலைலா, நோக்கியா சிதிலமடைந்து திண்டாடிய போது தலைமைப் பொறுப்பினை ஏற்றார். அதன் மொபைல் போன் பிரிவினை மற்றவருக்கு விற்று விடலாம் என்ற முடிவை, வன்மையாக எதிர்த்தார். அதனை விட்டுவிட வேண்டாம் என்று அறிவித்து, தொலை தொடர்பு கட்டமைப்பு தொழில் பிரிவுடன், மொபைல் போன் பிரிவையும் வளமாக்க முயற்சிகள் எடுத்தார். 

அதன் பின்னர், இன்று உலக நாடுகள் அனைத்திலும் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் ஜி.எஸ்.எம். தொழில் நுட்பத்தினை முன்னெடுத்துச் செல்வதில், நோக்கியா பெரும் பங்கு வகித்தது. கூடவே, மொபைல் போன் வடிவமைப்பிலும், தயாரிப்பிலும் பெரும் மாற்றங்களை மேற்கொண்டது. 

இனி, மைக்ரோசாப்ட் நிறுவனம், லூமியா போன்களில், தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் கூடுதல் வசதிகளைத் தந்து, நோக்கியா போன்களை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு வரலாம்.

இருந்தாலும், அந்தக் காலத்தில் எளிமையான வசதிகளுடன், அனைவரும் வாங்கும் விலையில் வந்த நோக்கியா மொபைல் போன்கள், என்றும் மக்கள் மனதில், நோக்கியா நிறுவனத்தை நிலை நிறுத்தும். 

அனைவரையும் இணைத்த நோக்கியாவிற்கு இனிய வணக்கமும் நன்றியும் கூறுவதைத் தவிர இனி என்ன இருக்கிறது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes