பத்து ஆண்டுகளைக் கடந்த ஜிமெயில்

ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுவது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது. 

அதனால் தான், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 1 அன்று, ஒரு ஜிபி சர்வர் இடத்துடன், இலவச மின் அஞ்சல் சேவையினை அனைவருக்கும் வழங்க இருப்பதாக, கூகுள் அறிவித்த போது, எல்லாரும் அதனை முட்டாள் தினச் செய்தியாக எடுத்துக் கொண்டனர். 

அப்போது மின் அஞ்சல் சேவையில் கொடி கட்டிப் பறந்த ஹாட் மெயில் தந்து வந்த இடத்தைக் காட்டிலும் 500 மடங்கு அதிகமான இடம் என்பதாலேயே இந்த சந்தேகம் அனைவருக்கும் வந்தது. 2004 ஆம் ஆண்டில், ஒவ்வொருவருக்கும் 1 ஜிபி இடம் என்பது, மிகப் பெரிய நம்பமுடியாத செய்தியாகும். 

ஆன்லைனில் 2 எம்.பி. ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைப்பதே பெரிய விஷயமாக அப்போது பேசப்பட்டு வந்தது. எனவே தான் கூகுள் அறிவித்த 1 கிகா பைட் இடம் என்பது முற்றிலும் கற்பனையான ஒன்று என அனைவரும் எண்ணினார்கள். 

ஆனால், அது முற்றிலும் உண்மையான ஓர் அறிவிப்பு எனத் தெரிய வந்தபோது, இணைய உலகில் மாபெரும் புரட்சியாக கருதப்பட்டது. அதுவே தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக, கூகுள் சாம்ராஜ்ஜியத்தை மற்றவர்கள் அணுக முடியாத வகையில் நிலை நிறுத்தி வருகிறது. 

(தற்போது அனைத்து கூகுள் சேவைகளுக்குமாகச் சேர்த்து ஒவ்வொருவருக்கும் 15 ஜிபி இடம் இலவசமாக வழங்கப்படுகிறது)

1998 ஆம் ஆண்டு, கூகுள் நிறுவனத்தின் தேடல் சாதனம் வெளியானது. அப்போது பிரபல மாயிருந்த ஹாட்மெயில் மற்றும் யாஹூ மெயில் சேவைகளை கூகுள் ஊதித் தள்ளிவிடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 

அதிகமான ஸ்டோரேஜ் இடம், இடைமுகம், உடனடித் தேடல் மற்றும் பிற வசதிகளுடன், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தன்னை மிஞ்ச ஆள் இல்லை என்ற நிலையை உருவாக்கியது கூகுள்.

கூகுளின் ஜிமெயில் கூறுகளைப் பார்த்த பின்னர், இணையம் இந்த வழியில் தான் செல்லப் போகிறது என அனைவரும் எண்ணத் தொடங்கினர். அஞ்சல் செய்திகளில் உள்ள சொற்களைத் தேடிப் பார்த்து, அவற்றின் அடிப்படையில் விளம்பரங்களுக்கு இடம் ஒதுக்கிய போது, கூகுள் தொட்ட விளம்பர அலாவுதீன் பூதத்தின் வர்த்தகத் திறனை அனைவரும் உணர்ந்தனர். 

கூகுள் இவ்வாறு நம் அஞ்சல் செய்திகளைத் தேடி அலசித் தெரிந்து கொள்ளலாமா? அது நம் தனிமனித உரிமையைப் பாதிக்காதா? என்ற கேள்விகள், இன்றைய அளவிலும் கேட்கப்பட்டு விடை காண முடியாத நிலையில், திருடன் போலீஸ் விளையாட்டாக இணைய உலகில் பேசப்பட்டு வருகிறது. 

கூகுள் நிறுவனம் திடீரென ஜிமெயில் கட்டமைப்பை உருவாக்கித் தரவில்லை. மூன்று ஆண்டுகள், இதற்கென பெரிய வல்லுநர் குழு ஒன்று உழைத்தது. பலமுறை, இது சாத்தியமா, வெற்றி பெறுமா என்ற சந்தேகம் அந்த குழுவினருக்கு வந்தது. ஆனால், வெளி வந்த போது, இணைய உலகிற்கே அது சாதனைக் கணமாக அமைந்தது.

கூகுள் நிறுவனம் தன் ஊழியர்களை, அவர்களின் வேலை நேரத்தில் 20 சதவீத நேரத்தைத் தாங்கள் புதியதாக முனைய விரும்பும் திட்டங்களில் செலவிட அனுமதித்தது. அப்படிப்பட்ட நேரத்தில், பல வல்லுநர்கள் சேர்ந்து உருவாக்கியதுதான் ஜிமெயில். இதனை உருவாக்கிய குழுவின் தலைவர் Paul Buchheit ஆகஸ்ட் 2001ல் இதனைத் தொடங்கினார். 

ஆனால், இதற்கான விதை அவர் மனதில், கூகுள் நிறுவனத்தின் 23 ஆவது ஊழியராகச் சேர்வதற்கு முன்னரே, 1996 ஆம் ஆண்டிலேயே இருந்து வந்ததாக அவர் குறிப்பிடுவார். "பயன் தரத்தக்க ஒன்றை அமைத்துவிடு; பின்னர் அதனைத் தொடர்ந்து மேம்படுத்து என்பதே என் பணித் திட்டத்தின் தாரக மந்திரமாக இருந்தது” என்று அவர் அடிக்கடி கூறுவார். 

ஜிமெயில் திட்டம் முதலில் Caribou என்று பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டது. புக்கெயிட் முதலில் தன் மின் அஞ்சல்களுக்கான தேடல் சாதனம் ஒன்றைத் தனக்கென வடிவமைத்தார். பின்னர், அதனையே ஏன் மற்றவர்களுக்கான அஞ்சல் சேவையோடு தரக் கூடாது என்று இலக்கை அமைத்துக் கொண்டு செயலாற்றினார்.

வேறு எந்த மின் அஞ்சல் சேவைத் தளமும், அஞ்சல்களில் தேடும் சாதனத்தைத் தராத நிலையில், புக்கெயிட் அதனைத் தந்தது, உலகைத் திருப்பிப் பார்க்க வைத்தது. 

அடுத்த இதன் சிறப்பம்சம், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கொடுத்த இடம் தான். ஹாட் மெயில் போன்றவை, மெகா பைட் அளவில் சிறிய இடத்தைத் தந்து வந்த நிலையில், ஒரு கிகா பைட் என்ற அதிக பட்ச உயரத்தை எட்டியது அனைவரின் ஆச்சரியத்தையும் இழுத்தது. இதுவே, மின் அஞ்சல் சேவையினை மையமாகக் கொண்டு, கூகுள், ஓர் இணையப் பண்பினை வளர்த்துக் கொள்ள உதவியது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes