முன்னொரு காலத்தில், இணையப் பயன்பாடு மக்களிடம் ஊன்றத் தொடங்கிய பொழுதில், அனைவரும் ஏறத்தாழ நெட்ஸ்கேப் (Netscape) கம்யூனிகேடர் என்ற பிரவுசரையே பயன்படுத்தி வந்தனர்.
எல்லாரும் அதனைப் பயன் படுத்துவதில் மனநிறைவு கொண்டனர். தொடர்ந்த காலங்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற பிரவுசர்கள் வந்தன.
பயனாளர்கள் இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, அதன் செயல் தன்மையின் அடிப்படையில், தர வரிசையில் வைத்தனர். இருப்பினும், அனைவரின் ஏகோபித்த பிரவுசராக நெட்ஸ்கேப் பல காலம் இருந்து வந்தது.
ஆனால், இப்போது பிரவுசர்களை வெகு எளிதாக ஒப்பிட முடியாது. பிரவுசர் ஒன்றின் செயல் தன்மைகள் பலவாறாகப் பெருகி உள்ளன. வாடிக்கையாளர்கள், தங்களின் தேவைகளின், எதிர்பார்ப்பின் அடிப்படையில் அவற்றிற்கு மதிப்பளித்தனர். மேலும், தற்போதைய பிரபலமான பிரவுசர்கள், ஒவ்வொரு 14 நிமிடத்திலும் அப்டேட் செய்யப்படுகின்றன.
புதிய வசதிகள் தரப்படுகின்றன. எனவே, மிக நல்ல பிரவுசர் எது என உடனடியாக முடிவிற்கு வர இயலவில்லை. மேலும், கம்ப்யூட்டர்களில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையிலும், பிரவுசரின் செயல்திறன் கணிக்கப்படுகிறது.
எக்ஸ்பி என்றால் ஒரு பிரவுசரையும், விண்டோஸ் 8 என்றால், இன்னொரு பிரவுசரையும், மேக் கம்ப்யூட்டரில் இயங்கும் பிரவுசர் எனில் அதன் தன்மை, எதிர்பார்ப்புகள் வேறாகவும் தற்போது உள்ளன. எனவே, நல்ல, பயனுள்ள பிரவுசர் எது என முடிவு செய்திட, பிரபலமாக உள்ள பிரவுசர்களின் இயக்கத்தை அவற்றின் அண்மைக் கால பதிப்புகளைக் கொண்டு பார்க்கலாம்.
விண்டோஸ் இயக்கத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11, பயர்பாக்ஸ் 28, குரோம் 33, ஆப்பரா 20 மற்றும் சபாரி 5.1.7 ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் விண்டோஸ் 8 மற்றும் விண் 8.1 ஆகியவற்றில் இயங்கு பவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
1. வேகமான இயக்கம்:
பிரவுசர்களின் இயக்க வேகத்தின் அடிப்படையில் முதலில் பார்க்கலாம். வேகத்திறனை சோதனை செய்திட நமக்குக் கிடைக்கும் ஒரு நல்ல புரோகிராம் Sunspider. இதனைக் கொண்டு சோதனை செய்ததில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா மற்றும் சபாரி என்ற வரிசையில் இடம் பிடித்தன.
2. ஆட் ஆன் தொகுப்புகள்:
பிரவுசர்களில் கூடுதல் வசதிகள் பெற, இப்போது அனைத்து பிரவுசர்களும், ஆட் ஆன் தொகுப்புகளைப் பெற்றுள்ளன. இவற்றில் தொடக்க நிலை தொட்டு முதல் இடத்தில் இருப்பது பயர்பாக்ஸ் தான். அடுத்து குரோம் மற்றும் ஆப்பரா ஆகியவை இடம் பெறுகின்றன. இந்த வகையில், சபாரி இறுதி இடத்தையும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அதற்கு முந்தைய இடத்தைப் பெறுகிறது.
3. விண்டோஸ் 8க்கான பிரவுசர்:
முன்பே குறிப்பிட்டபடி, நாம் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கேற்ற பிரவுசரைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே கூறியபடி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வேகத்தில் முதலிடம் பெறுகிறது. பயர்பாக்ஸ், விண் 8 சிஸ்டத்திற்கு பிரவுசரை மாற்றி வடிவமைக்கும் திட்டத்தினைக் கைவிட்டு விட்டது.
எனவே, விண் 8 சிஸ்டத்தில் இயங்கும் டெஸ்க்டாப் மற்றும் டேப்ளட் பி.சி.களுக்கு, இன் டர்நெட் எக்ஸ்புளோரர் ஒன்றுதான் சரியான பிரவுசராக நமக்குக் கிடைக்கிறது. ஆனால், தொடு உணர் திரை இல்லாத கம்ப்யூட்டர்களுக்கெனப் பார்க்கையில், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைக் காட்டிலும், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் வளைந்து விரிந்து கொடுத்து கூடுதல் வசதிகளைத் தருவதாக உள்ளது.
4. விண்டோஸ் 7:
இதே நிலை விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கும் பொருந்தும். வேகத்திற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூடுதல் வசதிகளுக்கு பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களைக் கொள்ளலாம்.
5.பிறர் அறியா தேடல்:
மற்றவர்கள் நம் தேடலை அறிந்திடாமல் இருக்க அனைத்து பிரவுசர்களும், பிரைவேட் மோட் அல்லது இன் காக்னிடோ மோட் போன்ற நிலைகளைத் தருகின்றன. ஆனால், தன்னிலை அறியக் கூடாத தன்மையில், இணையத்தில் உலா வர வேண்டும் என விரும்பினால், அதற்கென கிடைக்கும் தர்ட் பார்ட்டி ஆட் ஆன் புரோகிராம்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.
அந்த வகையில், HTTPS Everywhere, Disconnect மற்றும் AdBlock Plus ஆகியவை கிடைக்கின்றன. பொதுவாக, இது போன்ற தன்னிலை தெரியாமல் பிரவுஸ் செய்திட விரும்புபவர்கள், கூடுதல் வசதி களையும் எதிர்பார்க்கின்றனர். அந்த அடிப் படையில், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்கள் முதலிடம் பெறுகின்றன.
6. எச்.டி.எம்.எல்.:
எச்.டி.எம்.எல். பார்மட்டில் பிரவுசர் இயக்கத்தை விரும்புபவர்களுக்கு, குரோம் பிரவுசர், மற்ற அனைத்து பிரவுசர்களைக் காட்டிலும் சிறப்பான ஒன்றாக அமைகிறது. அடுத்த நிலையில், பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா ஆகியவை உள்ளன.
மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் உங்கள் பிரவுசரை தேர்ந்தெடுப்பதில் வழி காட்டுபவையாகவே கொடுக்கப்பட்டுள்ளன். உங்களுடைய தேவைகள் மற்றும் பழகிய நிலைகளே, உங்களுக்கான சரியான பிரவுசரைத் தேர்ந்தெடுப்பதில் அடிப்படையாக அமையும்.
0 comments :
Post a Comment