இந்தியாவில் ஐபோன் 4 ஐ (8 ஜிபி) மீண்டும், ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது.
ரூ.15,000 என்று விலையிடப்பட்டு, தவணை முறையிலும், பழைய போன்களை வாங்கிக் கொண்டும் இது விற்பனை செய்யப்படும். இது அறிமுகமான போது ரூ.26,500 என விலையிடப்பட்டது.
தற்போது ரூ.11,500 குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் இந்தியாவில் தன் போன்களின் விற்பனைப் பங்கில், கணிசமான இடத்தினை சாம்சங் நிறுவனத்திடம் இழந்துவிட்டதனை அறிந்து, இந்த முடிவினை ஆப்பிள் எடுத்துள்ளது.
ஆனால், தற்போதைய விலை கூட, ஆப்பிள் போனை மத்திய அளவில் விலையிடப்பட்டுள்ள ஸ்மார்ட் போன்கள் வரிசையில் கொண்டு வரவில்லை என, மொபைல் போன் விற்பனைச் சந்தையைக் கண்காணித்து வருபவர்கள் கூறுகின்றனர்.
ஆப்பிள், பெரும்பாலும் மத்திய அளவிலான விலையிடப்பட்ட போன் சந்தையில் தன் வாடிக்கையாளர்களை எப்போதும் கொண்டதில்லை. அது குறித்து எந்த விற்பனை தந்திரத்தினையும் மேற்கொண்டதில்லை.
இப்போது விலை குறைப்பும் இந்த நிலையை மாற்றவில்லை என்றே பலரும் எண்ணுகின்றனர். இந்தப் பிரிவில், மைக்ரோமேக்ஸ், ஸோலோ மற்றும் லாவா போன்கள் தொடர்ந்து போட்டியிட்டு, கணிசமான இடத்தைப் பிடித்து வருகின்றன.
ஆப்பிள் நிறுவனம், தன் புதிய ஐபோன் 5 வரிசை போன்களை விற்பனைக்கு அனுப்பிய பின்னர், ஐபோன் 4 தயாரிப்பினை முற்றிலுமாக நிறுத்தியது.
ஆனால், ஐபோன் 5 விலை மிக மிக அதிகமாக இருந்ததால், ஆப்பிள் போன் விற்பனை மந்தமாகவே தொடர்ந்து இருந்தது. ஐபோன் 4 எஸ் போனை விலை குறைத்து கொடுக்க ஆப்பிள் முன்வரவில்லை.
ஏனென்றால், அதன் லாப விகிதம் கணிசமாகக் குறைந்துவிடும். எனவே, விற்பனைக்குச் செல்லாமல் தங்கிய ஐபோன் 4 அனைத்தையும், குறைவான விலையில், நம் நாட்டுச் சந்தையில் தள்ளுகிறது.
0 comments :
Post a Comment