இந்திய இன்டர்நெட் சந்தையில் போட்டி

தொடர்ந்து வளர்ந்து வரும் இன்டர்நெட் பயன்பாட்டில், இந்திய வாடிக்கையாளர்களைப் பிடித்துப் போட முன்னணி நிறுவனங்களிடையே போட்டி தொடங்கி, நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது.

கூகுள் தன்னுடைய சோசியல் நெட்வொர்க் ஆர்குட் தளத்தினை முழுவதுமாகப் புதுப்பித்துள்ளது. யாஹூ மிகப் பெரிய அளவில் முன்னணி ஆங்கில செய்தித்தாளில் முதல் பக்க விளம்பரம் அளித்துள்ளது. இதெல்லாம் எதற்காக? எப்படி இவர்களுக்கு வருமானம் வரும்?

ஒரு இன்டர்நெட் தளத்தின் பெருமை அதில் மேற்கொள்ளப்படும் கிளிக்குகளின் எண்ணிக்கையில் தான் உள்ளது. எவ்வளவுக்கெவ்வளவு ஹிட்களும் கிளிக்குகளும் அதிகரிக்கின்றனவோ, அந்த அளவிற்கு விளம்பரம் அதிகரிக்கும்.

வருமானம் பெருகும். எனவே வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க இந்த தளங்களில் நாள்தோறும் ஏதேனும் புதுமை வந்து கொண்டே இருக்கிறது.

ஆர்குட் தளத்தில் புதிய வடிவமைப்பு வரக்காரணம், அதன் போட்டியாளரான பேஸ் புக் மாற்றம் பெற்றதாகும். இதை அந்த நிறுவனம் மறுத்தாலும் உண்மை அதுதான்.

புதிய ஆர்குட் தளம் முழுக்க முழுக்க கூகுள் வெப் டூல் கிட் பயன்படுத்தி அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தளத்தில் பதிந்து இதனைப் பயன்படுத்தி வருபவர்கள், மிக எளிதாக ஹோம் பேஜ் மூலமாகவே தங்கள் பைல்களை அப்லோட் செய்திட முடியும் என கூகுள் இந்திய பிரிவு தலைமை அலுவலர் வினய் கோயல் கூறி உள்ளார்.

தளத்தின் உள்ளாக அமைந்த சேட் ரூம் வழி ஒரே நேரத்தில் பலருடன் அரட்டை அடிக்கும் வசதி உள்ளது. தானாக போட்டோ முகம் அறிந்து உணரும் வசதி. போட்டோ ஆல்பம் பகிர்ந்து கொள்ளும் வழிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் தரப்பட்டுள்ளன. இவற்றால் ஆர்குட் தளம் பலரை ஈர்க்கத் தொடங்கி உள்ளது.

இதன் மூலம் விளம்பரங்கள் அதிகரிக்கும் என கூகுள் எதிர்பார்க்கிறது. நுகர்வோர் பொருட்களுக்கான விளம்பரங்கள் இப்போது இதில் வரத் தொடங்கி உள்ளன. இந்தியாவில் நுகர்வோர் பொருட்களுக்கு மட்டுமின்றி, பொதுவாகவே விளம்பரங்களைத் தருவதிலும், அவற்றைப் படிப்பதிலும் மக்களுக்கு ஆர்வம் உள்ளது.

இதுவே இப்போதைக்கு ஆர்குட் தளத்தினை நஷ்டத்தில் இல்லாமல் இயங்க வைக்கிறது என்று கூகுள் அலுவலர்கள் கூறுகின்றனர். கூகுள் நிறுவனத்தின் ஆர்குட் தளத்தினை பத்து கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். பிரேசில் நாட்டுக்கு அடுத்தபடியாக அதிக நேயர்களை இந்தியாவிலிருந்து ஆர்குட் பெற்றுள்ளது.

இன்டர்நெட் வெப்சைட்டையும் பயன்பாட்டையும் தனி ஒருவனுடையதாக்க முடியும் என மக்களிடையே செய்தியைக் கொண்டு செல்ல இந்த சோஷியல் தளங்கள் முயற்சிக்கின்றன. யாஹூ வின் விளம்பரமும் பெரிய அளவில் இதனைத்தான் சொன்னது. உலக அளவில் இந்த விளம்பரத்திற்கு 10 கோடி டாலர் செலவழிக்கப்பட்டது.

இந்த தளங்களில் இப்போது இன்டர்நெட் வீடியோவினைப் பதிந்து மக்களைக் கவரும் வழிகளும் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக ஆர்குட் இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் 20 கோடி பேர் இன்டர்நெட் பிராட்பேண்ட் பயன்படுத்துவார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

எனவே அவர்களை மையமாக வைத்து இந்த தளங்கள் தங்கள் வர்த்தகத்தை வளப்படுத்துகின்றன. ஆனால் வருமானம் என்னவோ மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இன்னும் இருக்கிறது என்று ஒத்துக் கொள்ள வேண்டும்.

ஆர்குட் மற்றும் பேஸ்புக் ஒரு பயனாளர் வழி ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே ஈட்டுகின்றன. ஆனால் கூகுள் 25 டாலர் ஈட்டுகிறது. இருப்பினும் இந்த சோஷியல் நெட்வொர்க் தளங்கள் தங்கள் முயற்சிகளில் சற்றும் தளராமல் தொடர்ந்து முயன்று வருகின்றன


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes