இந்த முறை ஐபோன் 6ல் பெரிய திரை தரப்பட்டுள்ளது ஆப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுமானால், புதிய விஷயமாக இருக்கலாம்.
ஆனால், பல ஸ்மார்ட் போன்கள் ஏற்கனவே இதனையும் மிஞ்சிய நிலையில் உள்ளன என்பதே உண்மை. ஐபோன் 6 திரை தரும் ரெசல்யூசனும், ஸ்மார்ட் போன்களில் புதிய விஷயமாகக் கருதப்பட வேண்டியதில்லை.
அதே போல, ஐபோன் கேமரா 8 எம்.பி. திறன் கொண்டது என்பது ஆண்ட்ராய்ட் போன்களில் முன்பே வந்த முன்னேற்றமாகும்.
வர இருக்கும் ஆப்பிள் வாட்ச் சாதனத்துடன் ஐபோன் 6 இணைக்கப்படும் என்ற அறிவிப்பு, கூகுள் ஏற்கனவே தந்துள்ள Android Wear smartwatch முன்னால் எடுபடுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டம் மூலம் ஐ க்ளவ்ட் பைல்களைக் கையாள, இதற்கு மட்டுமேயான அப்ளிகேஷன்கள் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் இதனை கூகுள் ட்ரைவ் மூலம் ஏற்கனவே தந்து வருகிறது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
ஐபோனில் தரப்படும் வை- பி வகை வேகம் (802.11ac), சாம்சங் கேலக்ஸி எஸ்5 போனில் இயங்கி வருகிறது.
எனவே, புதிய வசதிகள் என ஐபோனில் அறிவிக்கப்பட்டவை, ஆப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுமானால், புதியவையாக இருக்கலாம். இவற்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கி வருபவையாகவே உள்ளன. இரண்டிலும், எந்த வகை கூடுதல் சிறப்புடன் இயங்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கூகுள் வாலட் என்ற பெயரில், மொபைல் போன் மூலம் பொருள் விற்பனை மையங்களில் பணம் செலுத்தும் முறை மூன்று ஆண்டுகளுக்கு முன், கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஆப்பிள் பே (Apple Pay) என்ற பெயரில் ஆப்பிள் நிறுவனமும் இதே முறையினைக் கொண்டு வந்துள்ளது.
என்.எப்.சி. தொழில் நுட்பத்தினை இயக்கும் சிப் மூலம் இது மேற்கொள்ளப்படும். கூகுள் இந்த தொழில் நுட்பத்தில் தொடக்கத்தில் செம்மையாகச் செயல்பட முடியவில்லை. ஆப்பிள் இதனைத் திறமையாக இயக்கி பெயர் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிடையே பெருத்த வேறுபாடு உண்டு. ஆப்பிள் சிஸ்டத்தின் இயக்கத்தினை அதன் நிறுவனம் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில், கட்டுக் கோப்பாக வைத்துள்ளது.
இதற்கான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் மட்டுமே அனுமதிக்க முடியும். ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களை, தர்ட் பார்ட்டி எனப்படும் நிறுவனங்களால், தொழில் நுட்ப வல்லுநர்களால், வாடிக்கையாளர்களுக்கேற்ப மாற்றி அமைத்துத் தர முடியும்.
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் பல்வேறு இயக்க வகைகள் ஒரே நேரத்தில் இயங்கி வருகின்றன. 2013ல் வெளியான ஆண்ட்ராய்ட் கிட் கேட் இயக்க முறைமையை 21% போன்களும், ஜெல்லி பீன் வகையினை 54.2% போன்களும், 2010ல் வெளியான ஜிஞ்சர் ப்ரெட் வகையினை 14% போன்களும் பயன்படுத்தி வருகின்றன. இதற்கு மாறாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 7 இயக்க முறைமையில், 92% ஆப்பிள் போன்கள் பயன்படுத்துகின்றன.
ஆனால், கூகுள் நிறுவனத்தின் திறந்த வெளி தொழில் நுட்பப் போக்கு தான், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பெரிய அளவில் பயன்படுத்த வைத்துள்ளது என்பதனையும், மக்கள் அதில் தான் தங்கள் பெரும்பாலான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என உறுதியாக நம்புகின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.
அதே நேரத்தில், டிஜிட்டல் உலகில் வலம் வரும் மால்வேர் புரோகிராம்கள், ஆண்ட்ராய்ட் வழியாகத்தான் அதிகம் வருகின்றன. இந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டம் கூடுதல் பாதுகாப்பினைத் தருகிறது.
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வெளியாகும் மற்றவர்களின் புரோகிராம்களே இந்த மால்வேர் பரவலுக்குக் காரணம் என்றாலும், கூகுள் அவற்றை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் முழுமையான பலனைத் தரவில்லை.
அதற்கென கூகுள் மேற்கொண்டு வரும் சில தொழில் நுட்ப கூறுகளும் மக்களைச் சென்றடையவில்லை.
1 comments :
வணக்கம்
அருமையாக தகவலை தொகுத்து தந்தமைக்கு பாராட்டக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment