அறியப்படாத ஐந்து பிரவுசர்கள்

இணையத்திற்கான இணைப்பினைப் பெறுவதில், நாம் அதிகம் பயன்படுத்துவது, கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பிள் சபாரி ஆகியவையே. 

இவை மட்டுமே நமக்குக் கிடைக்கக் கூடிய பிரவுசர்கள் அல்ல. பாதுகாப்பாக இணையம் உலா வர இன்னும் ஐந்து பிரவுசர்கள் உள்ளன.

பாதுகாப்பாகவும், தனிப்பட்ட முறையிலும் பிரவுஸ் செய்திடும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது இன்னும் ஒரு கூடுதலான சிறப்பாகும். 

இந்த பிரவுசர்களின் முழு செயல்பாடும், மற்றவற்றில் தரப்படும் “private” அல்லது “incognito” நிலைக்கு இணையானவை என இவற்றைப் பயன்படுத்தியவர்கள் கூறுகின்றனர். இவற்றை இயக்குவதும் எளிதானதாகும். இவை இலவசமாகவும் கிடைக்கின்றன. இவை குறித்து இங்கு காணலாம்.


1. ஒயிட்ஹேட் ஏவியேட்டர் (WhiteHat Aviator): 

நீங்கள் ஏற்கனவே கூகுள் குரோம் பயன்படுத்தி, பின்னர் இதனைப் பயன்படுத்தினால், இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடில்லை என எண்ணுவீர்கள். ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். ஏனென்றால், இரண்டும் ஒரே கட்டமைப்பில் உருவாக்கப்பட்டவை. 

ஏவியேட்டர் பிரவுசரை வடிவமைத்த ஒயிட் ஹேட் செக்யூரிட்டி லேப்ஸ், இந்த பிரவுசரை “இணையத்தில் மிகவும் பாதுகாப்பான பிரவுசர்” என்று அறிவித்துள்ளது. மற்ற பிரவுசர்கள் போலின்றி, இது முழுமையான பாதுகாப்பு தரும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியே வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பயனாளருக்குத் தேவையான தனிநபர் பயன்பாட்டிற்கான அனைத்து ப்ளக் இன் புரோகிராம்களும், பிரவுசருடனேயே தரப்பட்டுள்ளன. எனவே, பாதுகாப்பிற்கென நாம் எதுவும் கூடுதலாக முயற்சிகள் எடுக்கத் தேவை இல்லை. 

இதில் கூகுள் குரோம் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களையும் இணைத்துப் பயன்படுத்தலாம். ஏனென்றால், இரண்டிலும் ஒரே சோர்ஸ் கோட் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் குரோம் போலின்றி, இது குக்கீஸ் பைல்களை, விளம்பர நெட்வொர்க், ஹேக்கர்கள் மற்றும் வைரஸ் புரோகிராம்கள் பின்பற்றுவதனைத் தடுக்கிறது. இவ்வளவு வேலைகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டாலும், இது வேகமாகச் செயல்படுகிறது. நமக்கு விருப்பமான இணைய தளங்களை விரைவாக நமக்குப் பெற்றுத் தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி: https://www.whitehatsec.com/aviator/


2. மேக்ஸ்தான் க்ளவ்ட் பிரவுசர்: 

இந்த பிரவுசர், அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. மொபைல் போனுக்கான வடிவமும் இதில் அடக்கம். இதனைத் தயாரித்த நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு க்ளவ்ட் சேவையை வழங்கி, பைல்களை சேவ் செய்திட இடம் தருகிறது. 

பைல்கள் மட்டுமின்றி, நாம் விரும்பும் இணைய தள முகவரிகள் (favorites), நம்மைப் பற்றிய தனிநபர் தகவல்கள், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய தகவல்கள் ஆகியவையும் சேவ் செய்யப்படுகின்றன. இது மற்ற எந்த பிரவுசரிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த பிரவுசர் தானாகவே இயங்கி, கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கு நாம் செல்வதைத் தடுக்கிறது. அவற்றைத் திறக்கும் முன்னர், அந்த தளங்களை ஸ்கேன் செய்து, அவை பாதுகாப்பானவை என்று உறுதி செய்த பின்னரே, நம்மை அனுமதிக்கிறது. 

பிரவுசரின் கூடுதல் செயல்பாடுகளுக்கென, இந்த பிரவுசரிலேயே சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றைத் தேவை இருந்தால், நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் பிரவுஸ் செய்திடும் தளம் குறித்த தகவல்கள் ஸ்டோர் செய்வதனைத் தடுக்க, private ஆகவும் இதில் பிரவுஸ் செய்திடலாம். 

மேக்ஸ்தான் பிரவுசரில் தரப்படும் snapshot வசதியை அனைத்துப் பயனாளர்களும் விரும்புவார்கள். ஒரே தளத்தை, ஒரே நேரத்தில், பல இடங்களில் திறந்து பயன்படுத்தும் வசதி, விளம்பரங்களைத் தடுக்க Ad Hunter என்னும் வசதி போன்றவையும் குறிப்பிடத்தக்க வசதிகளாகும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.maxthon.com/ 


3. ஆப்பரா பிரவுசர் (Opera): 

மேலே சொல்லப்பட்ட மேக்ஸ்தான் பிரவுசர் போல, ஆப்பரா பிரவுசரும், டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்த தனித்தனியே வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. 

தேடல் சாதனங்களைப் பயன்படுத்துகையிலும், சமூக இணைய தளங்களில் இயங்குகையிலும், நம் தேடல்களை வேறு புரோகிராம்கள் பின்பற்றுவதனை இது தானாகவே தடுக்கிறது. 

இதன் செயல்பாட்டு வேகம் எப்போதும் வேகமாகவே இருக்கிறது. நம் இணைய இணைப்பு சற்று குறைந்த வேகத்தில் செயல்படுகையில், இதில் உள்ள Turbo வசதி, நம் செயல்பாட்டினை வேகமாக மேற்கொள்ள உதவுகிறது. மொபைல் சாதனங்களில் ஆப்பரா பயன்படுத்துகையில், டேட்டாவினை சேவ் செய்திடும் வசதி இதில் கிடைக்கிறது. 

பயனாளர் விருப்பப்படி ஆப்பராவினை வடிவமைக்க, அதிகமான எண்ணிக்கையில் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் இந்த பிரவுசரிலேயே கிடைக்கின்றன. நாம் முதல் வரிசையில் வைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நான்கு பிரவுசர்களைக் காட்டிலும், இது கூடுதல் பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது என இதன் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த பிரவுசரைப் பொறுத்தவரை ஒரு சிறிய குறை ஒன்று உள்ளது. தங்கள் இணைய தளங்களை வடிவமைப்பவர்கள், இந்த பிரவுசரில் இயங்கும் வகையிலும், தங்கள் தளங்களை வடிவமைப்பதில்லை. எனவே, சில தளங்கள் இந்த பிரவுசரில் இயங்கா நிலை ஏற்படும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.opera.com/ 


4. கொமடோ ட்ரேகன் இன்டர்நெட் பிரவுசர் (Comodo Dragon Internet Browser): 

இணையத்திற்கான செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரிக்கும் கொமடோ நிறுவனம், இதனையும் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. குரோம் மற்றும் ஏவியேட்டர் பிரவுசர்கள் வடிவமைப்பின் கட்டமைப்பான குரோமியம் குறியீட்டு வரிகளைப் பயன்படுத்தியே, இந்த பிரவுசரும் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதில் மட்டுமே காணப்படும் சில வசதிகள், இதற்கு ஒரு தனித்தன்மையினை அளிக்கின்றன. நம் இணையத் தேடல்களை வேறு புரோகிராம்கள் எதுவும் கண்டு கொள்ள முடியாதபடி தடுக்கிறது. நாம் செல்லும் ஒவ்வொரு இணைய தளத்தின் பாதுகாப்பு குறித்த சான்றிதழ்கள் (SSL certificates) அனைத்தையும் இது சோதனை செய்து பார்க்கிறது. இணைய தளம் பாதுகாப்பானது என்று உறுதி செய்த பின்னரே, நம்மை அனுமதிக்கிறது. 

நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால், கொமடோவின் ஐஸ் ட்ரேகன் (IceDragon) பதிப்பு பயர்பாக்ஸ் பிரவுசர் மாதிரியே இருப்பதனை உணர்வீர்கள். இந்த பிரவுசர் தற்போது விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் வகையில் மட்டுமே கிடைக்கிறது.


5. டார் பிரவுசர் (Tor browser): 

மேலே சொல்லப்பட்ட பிரவுசர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் செயல்படும் பிரவுசராக டார் பிரவுசர் உள்ளது. இந்த பிரவுசரின் தனிச் சிறப்பு என்னவென்றால், இது தரும் நம் தனிப்பட்ட தகவல்களுக்கான பாதுகாப்புதான். உலகெங்கும் இதன் நெட்வொர்க் கம்ப்யூட்டர்கள் இயங்கி இணைப்பு தருகின்றன. 

இதனால் இணையத்தில் உலாவும் ஹேக்கர்கள் நம் கம்ப்யூட்டரை இந்த பிரவுசர் வழி நெருங்க முடியாது. பல தன்னார்வலர்கள், இந்த தனி நெட்வொர்க் கம்ப்யூட்டர் சர்வர்களை இயக்கி வருகின்றனர். இணையத்தில் பாதுகாப்பாக இயங்க முடியும் என்பதனை நிரூபிக்கும் வகையில், இந்த நெட்வொர்க்கினைப் பராமரித்து வருகின்றனர். 

விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயக்க முறைமைகளில் இயங்கும் வகையில், இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. இந்த பிரவுசரை, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் கூட இன்ஸ்டால் செய்து இயக்கலாம். எனவே, நம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. பாதுகாப்பினைக் காட்டிலும், தனிப்பட்ட முறையில் இயங்க நினைப்பவர்களுக்கு இந்த பிரவுசர் உகந்ததாகும். 

இருப்பினும், இதனை வடிவமைத்தவர்கள், இணைய தள முகவரியில் “https” என்ற முன்னொட்டு கொண்ட தளங்களுக்கு மட்டுமே செல்லுமாறு, இதன் பயனாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.


1 comments :

MTM FAHATH at August 12, 2014 at 9:34 PM said...

அறியப்படாத தகவல் மற்றும் Browser

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes