அதிசய சாதனங்கள், அதிவேக தொலை தொடர்புகள்


வரும் ஆண்டில், தகவல் தொழில் நுட்ப பிரிவில் நாம் எதிர்பார்க்கக் கூடிய சாதனங்கள், இயக்க முறைகள் மற்றும் வழிமுறைகளை இங்கு காண்போம். 

இவற்றில் சில இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன. இருப்பினும் 2013 முடிவதற்குள் இவை முழுமை அடைந்து நமக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 

சர்பேஸ் புரோ (Surface Pro):

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே டேப்ளட் மற்றும் நோட்புக் இணைந்த சாதனமான சர்பேஸ் ஆர்.டி. (Surface RT)யினை விற்பனை செய்து வருகிறது. அடுத்து Surface Pro வர இருக்கிறது. சர்பேஸ் ஆர்.டி. போல இது இருந்தாலும், முற்றிலும் மாறுபட்டதாகவே இது இருக்கும். 

இது விண்டோஸ் 8 சிஸ்டத்தினை முழுமையாகக் கொண்டிருக்கும். இது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களையும் சப்போர்ட் செய்திடும் வகையில் இருக்கும். 

இதன் 1920x1080 பிக்ஸெல் டிஸ்பிளே, பத்து மல்ட்டி டச் மற்றும் ஸ்டைலஸ் உள்ளீட்டினை சப்போர்ட் செய்திடும். இந்த திரையும், இன்டெல் கோர் ஐ5 ப்ராசசர் இணைவும் சேர்ந்து, மிகச் சிறந்த டேப்ளட் மற்றும் லேப்டாப்பாக Surface Pro செயல்படும். இதன் தொடக்க விலை 900 டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரியிலேயே இது நமக்குக் கிடைக்கும்.

ஐபேட் 5:

தற்போது கிடைக்கும் வதந்திகளை வைத்துப் பார்த்தால், 2013 ஆம் ஆண்டில் ஐபேட் 5 நிச்சயம் கிடைக்கும் எனத் தெரிகிறது. சிலர் இந்த டிசம்பரிலேயே இதனைத் தயாரிக்கும் முயற்சிகள் தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால், ஆப்பிள் இதனைப் பொறுத்தவரை மௌனம் சாதிக்கிறது. 

ஐபேட் 4 ஐக் காட்டிலும் இது தடிமன் குறைவாக இருக்கும். GF2 என அழைக்கப்படும் தொடுதிரை தொழில் நுட்பம், தடிமனைக் குறைக்க உதவும். ஏற்கனவே ஐபேட் மினியில் இது பயன்படுத்தப்பட்டு வெற்றி கண்டது.

ஐபோன் 6:

இதுவும் வதந்திகளின் அடிப்படையில் இருந்தாலும், அடுத்த ஐபோன் வர இருப்பது சாத்தியமே. ஜூன் மாதத்திற்குள் இது கிடைக்கலாம். நீள் சதுர தொடு உணர் நிலையில் இயங்கும் வகையில் ஹோம் பட்டன் இருக்கும். இதில் A6X ப்ராசசர் இருக்கும் எனச் சிலர் தெரிவித்துள்ளனர். 

சிலர் A7 ப்ராசசர் இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் யாரும் உறுதியாக இது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. பெயர் கூட ஐ போன் 6க்குப் பதிலாக ஐபோன் 5 எஸ் என இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் போன்:

இதுவும் வதந்தி தான். ஆனால் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையில் வெளி வந்ததனால், அனைவரும் எதிர்நோக்கும் நிலை உருவாகி உள்ளது. 

போன் தயாரிக்கும் பல நிறுவனங்களுடன் மைக்ரோசாப்ட் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், தான் அமைத்துள்ள வடிவமைப்பிற்கேற்ப போன் துணைப் பாகங்களைத் தயாரித்துத் தரக் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

இது உண்மையாகி, மைக்ரோசாப்ட் நிறுவன போன் கிடைக்கும் பட்சத்தில், ஹார்ட்வேர் பிரிவிலும் மைக்ரோசாப்ட் ஆழமாகத் தடம் பதிக்கும் ஆண்டாக, 2013 இருக்கும். 

பிளாக்பெரி 10 ஸ்மார்ட் போன்:

பிளாக் பெரி போன்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் வர்த்தகத்தினைக் காப்பாற்றும் வகையில், பிளாக்பெரி 10 ஸ்மார்ட் போன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வரும் ஜனவரி 30ல், இதன் அறிமுகம் இருக்கும் எனவும், அடுத்த இரண்டு மாதங்களில், படிப்படியாக வர்த்தக ரீதியாகக் கிடைக்கும் எனவும் தெரிகிறது. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களின் தொடு உணர் திரை இயக்கங்கள் அனைத்தும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டு கிடைக்கும். பயனாளரின் தனிப் பயன்பாடு மற்றும் நிறுவனப் பயன்பாடு ஆகியவற்றைப் பிரித்துக் கையாளும் வகையில் இந்த போனில் வசதிகள் கிடைக்கும். 

ஏறத்தாழ 5,000 போன்கள் வடிவமைக்கப்பட்டு, அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை வடிவமைப்போருக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பான செயல்பாட்டினையும் பயன்பாட்டினையும் இதில் எதிர்பார்க்கலாம். விலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes