ஆப்பிள் சாதனங்களில் தமிழ்


விண்டோஸ் பயன்படுத்தப்படும் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த பல வகை எழுத்துருக்களும், அவற்றை இயக்க பல ட்ரைவர் தொகுப்புகளும் உள்ளன. 

ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களான மேக் கம்ப்யூட்டர், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் தமிழ் பயன்படுத்த, யாரும் அவ்வளவாக முயற்சி எடுக்கவில்லை. 

இந்த வகையில் கம்ப்யூட்டரில் வெகு காலமாக தமிழைப் பயன்படுத்துவதில் ஆய்வு மேற்கொண்டு வரும், மலேசியாவைச் சேர்ந்த முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன், மொபைல் போன் மற்றும் ஐ பேட் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த "செல்லினம்' என்ற ஒரு தமிழ் மென் பொருளை உருவாக்கித் தந்துள்ளார். 

இவரே 1994 ஆம் ஆண்டு வாக்கில், விண்டோஸ் சாதனங்களில் பயன்படுத்த முரசு அஞ்சல் என்னும் மென்பொருளை உருவாக்கி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் வகையில் தன் இணைய தளத்தில் தந்தார். இதில் என்ன சிறப்பு எனில், தமிழுக்கென இவர் தரும் அனைத்து மென்பொருள் தொகுப்புகளும், எழுத்துரு கோப்புகளும் முற்றிலும் இலவசமாகவே தரப்பட்டு வருகின்றன. 

தமிழ் மொழிக்குத் தன் சேவையாகவே இதனைக் கருதுகிறார். ஆப்பிள் சாதனங்களுக்கான தமிழ் தெரிந்து கொள்ளும் முன், தமிழ் மொழி ஏன் மிகத் தாமதமாகவே கம்ப்யூட்டரில் செயல்படுத்தப்பட்டது எனப் பார்க்கலாம். 

கம்ப்யூட்டர் பயன்பாடு தொடங்கிய காலத்திலிருந்து, ஆங்கிலம், அதுவும் அமெரிக்க ஆங்கிலமே அதன் மொழியாக இருந்து வந்தது. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு, ஆங்கிலம் அல்லா மற்ற மொழிகளும், கம்ப்யூட்டரில் இருக்க வேண்டிய கட்டாயத்தினைக் கொண்டு வந்தன. 

இதனை அடுத்து, ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கூடப் பயன்படுத்தாத நாடுகளின் மொழிகள், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சீனா, ஜப்பான், கொரியா மற்றும் அரபு நாடுகளின் மொழிகள், கம்ப்யூட்டரில் இடம் பெற்றன. 

இந்தியாவில் பெர்சனல் கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்தியவர்கள், ஆங்கில மொழிப் பயன்பாட்டில் சிறப்பாக இயங்கியதால், மாநில மொழிகள் தேவை முதல் கட்டத்தில் இல்லாமல் இருந்தது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் போல, அரசு, நம் மொழிகள் கட்டாயமாக கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றவில்லை. 

1985 ஆம் ஆண்டுக்குப் பின்னரே, ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்தன. இந்திய மாநில மொழிகள், 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னரே செம்மைப் படுத்தப்பட்டன. பல்வேறு காரணங்களால், தமிழ் இடம் பெறுவதில் குழப்பங்கள் ஏற்பட்டன. 

கம்ப்யூட்டர் வல்லுநரான தமிழர்கள், அவரவர் எண்ணப்படி பலவகைகளில் தமிழ் மொழி பயன்பாட்டினைக் கொண்டு வந்தனர். இன்று தமிழ் மொழி பயன்பாடு, யூனிகோட் என்ற வகையில், ஒருமுகப்படுத்தப்பட்ட பின்னரும், சில சொந்த காரணங்களுக்காக, தமிழ் இன்னும் பல முகங்களில் கம்ப்யூட்டரில் இடம் பெற்று வருகிறது. 

இது சாதாரணப் பயனாளர், எளிமையாகத் தமிழைப் பயன்படுத்தத் தடையாக உள்ளது. இந்தக் குழப்பம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று சொல்ல இயலவில்லை.

தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில் பயன்படுத்த மெல்லினம் அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. தமிழில் மெல்லினம், வல்லினம் மற்றும் இடையினம் என மெய்யெழுத்துக்கள் பிரிவிற்குப் பெயர்கள் இருப்பதைப் போல, டிஜிட்டல் தமிழை, குறிப்பாக மொபைல் சாதனங்களுக்கான தமிழை, மெல்லினம் என, இதனைத் தயாரித்தவர் பெயரிட்டுள்ளார்.

மொபைல் போனில் தமிழ் என்றவுடன், நமக்கு எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திதான் நினைவுக்கு வரும். மொபைலில் தமிழ் பெற, அனுப்புபவர் மற்றும் பெறுபவர் இருவருமே, தமிழ் மென்பொருளைப் பதிந்து வைத்திருக்க வேண்டும். செல்லினம் ஆப்பிள் சாதனங்களில் இயங்க, ஐ.ஓ.எஸ்.4 (iOS4) ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்க வேண்டும். 

இது இல்லாதவர்கள், ஐ போன் 3ஜி, ஐபோன் 3ஜி எஸ் மற்றும் ஐபாட் டச் வைத்திருப்பவர்கள், இலவசமாகவே இதனை அப்கிரேட் செய்து கொள்ளலாம். http://www.apple.com/ iphone/softwareupdate/ என்ற முகவரியில் உள்ள தளத்தில், இதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. இதன்படி, ஐட்யூன்ஸ் சாப்ட்வேர் ஏற்கனவே இன்ஸ்டால் செய்து, அதற்கான அக்கவுண்டினைக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான், கீழே உள்ள லிங்க் நமக்குத் திறக்கப்பட்டு, செல்லினம் மென்பொருள் கிடைக்கும். 

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்த பின்னர், http://www.iphoneappshome. com/sellinamiphone337936766.html என்ற ஆப்பிள் நிறுவன இணையதளத்திற்குச் சென்று, செல்லினம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து, பதிந்து கொள்ளலாம். 

http://download. cnet.com/Sellinam/300012941_475091250.html என்ற முகவரியிலும் இந்த மென்பொருள் கிடைப்பதாகக் கூகுள் தேடுதளம் தகவல் தரும். இங்கு சென்றாலும், முதலில் சொல்லப்பட்ட ஆப்பிள் இணைய தளத்திற்குத் தான் நாம் அழைத்துச் செல்லப்படுவோம். 

இந்த மென்பொருளை, ஆப்பிள் சாதனங்களில் பதிவதும் எளிதே. தற்போது செல்லினம் பதிப்பு 3.0 கிடைக்கிறது. பைலின் அளவு 1.7 எம்.பி. இதனை இறக்கிப் பதிந்து பயன்படுத்த எந்தக் கட்டணமும் இல்லை. 

இதனைப் பயன்படுத்தும் வழிகளை http://www.ucsc.cmb.ac.lk/ltrl/projects/TamilSMS/html/usermanual.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியலாம். செல்லினம் மென்பொருளுக்கென இயங்கும் தளத்திலும் (http://sellinam.com/) வேண்டிய தகவல்கள் கிடைக்கின்றன. 

செல்லினம் மூலம், நாம் தமிழில் செய்திகளை அமைத்து அனுப்பலாம். இதில் அமைக்கப்பட்ட செய்திகளை, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களிலும் அமைக்கலாம். போனடிக் எனப்படும் (ஆங்கில) ஒலி அடிப்படையில் இதன் கீ போர்டு இயங்குகிறது. இதனை பதிந்து வைத்திருந்தால், சில நூல்களையும், இலக்கியங்களையும் படிக்கலாம். 

செல்லினம் தவிர, தமிழர்களிடையே பிரபலமான, ஆங்கிலம்- தமிழ், லிப்கோ அகராதியும், ஆப்பிள் மொபைல் சாதனங்களில் பயன்படும் வகையில் தரப்படுகிறது.ஆனால், இதனைப் பெற 5 டாலர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

இதனையும் ஆப்பிள் நிறுவனத்தின் இணைய தளத்தில், http://itunes.apple.com/ app/lifcosellinamtamildictionary/id391740615?mt=8 என்ற முகவரியில் பெறலாம். இந்த அகராதியில், சொற்களைத் தேடிப் பெரும் வசதி தரப்பட்டுள்ளது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes