வெப் மெயில் ( GMail ) பேக் அப்

மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர். Web based email என அழைக்கப் படும் இந்த வசதியை, அந்த தளங்களுக்குச் சென்றால் தான் பயன்படுத்த முடியும்.

இவை அனைத்துமே இலவசமாகவே கிடைக் கின்றன. எடுத்துக் காட்டாக, பிரபலமான ஜிமெயில், யாஹூ மெயில், ஹாட் மெயில் போன்றவற்றைக் கூறலாம். இந்த தளங்கள் தரும் இலவச அளவினை மீறுகையில், நம் முந்தைய மெயில்கள் அழிக்கப்படும்.

ஏன், இந்த வசதியினை இந்த தளங்கள் என்ன காரணத்தினாலோ, தருவதற்கு மறுத்தால், அல்லது அதன் சர்வர்கள் கெடுக்கப்பட்டால், நம் மின்னஞ்சல்கள் என்ன ஆகும்?

பெரும்பாலானவர்கள், நமக்குத் தேவையான முக்கிய தகவல்களை, இத்தகைய மின்னஞ்சல்களில் தான் வைத்துள்ளனர். அப்படியானால், இவற்றுக்கு பேக் அப் தான் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு எப்படி பேக் அப் எடுப்பது என்ற வழிகளை இங்கு காணலாம்.

ஜிமெயில்: கூகுள் நமக்குத் தந்துள்ள மிகப் பெரிய சேவை அதன் இலவச ஜிமெயில் ஆகும். ஏறத்தாழ 7.5 கிகா பைட்ஸ் அளவில் ஒவ்வொருவருக்கும் இடம் தந்து, நம் மின்னஞ்சல் கணக்கை வைத்துக் கையாள வசதி செய்துள்ளது. இதற்காக, நம் குப்பை மெயில்கள் அனைத்தையும் இதில் தேக்கி வைப்பது நியாயமாகாது.

தேவையற்ற வற்றை நீக்கலாம். நமக்கு முக்கியமான மெயில்களைக் குறித்து வைக்கலாம். அவற்றை பேக் அப் செய்திடலாம். அதிர்ஷ்டவசமாக, இதற்கென ஜிமெயில் பேக் அப் என்று ஒரு புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது.ஜிமெயில் பேக் அப், விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்குகிறது.

இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, ஒரு சில நிமிடங்களில் நம் ஜிமெயில் அக்கவுண்ட்டை பேக் அப் செய்திடலாம்.1.1 முதலில் ஜிமெயில் பேக் அப் புரோகிராமினை http://www.gmailbackup.com/download என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடவும்.

மிக எளிதாக இதனை மேற்கொண்டவுடன், நம் ஸ்டார்ட் மெனுவில் ஒரு ஷார்ட் கட் மற்றும் டெஸ்க்டாப்பில் ஐகானாக இந்த புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது. 1.2 ஜிமெயில் பேக் அப் புரோகிராமினைத் திறக்கவும். உங்கள் முழு ஜிமெயில் முகவரியினையும் பாஸ்வேர் டையும் தரவும். எந்த போல்டரில் பேக் அப் சேவ் செய்திட என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

மாறா நிலையில் தரப்படும் ஜிமெயில் பேக் அப் போல்டரையும் வைத்துக் கொள்ளலாம். 1.3 எந்த எந்த மின்னஞ்சல் செய்திகளை பேக் அப் செய்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேதி வாரியாகவும் தேர்ந்தெடுக்கலாம். 1.4. அடுத்து Backup பட்டனை அழுத்தி, பேக் அப் வேலையைத் தொடங்கலாம்.

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள அஞ்சல்களின் எண்ணிக்கைக்கேற்ப, நேரம் எடுத்துக் கொள்ளப்படும். பேக் அப் வேலை நடக்கையில், மற்ற பணிகளை நீங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளலாம். எவ்வளவு பேக் அப் ஆகியுள்ளது என்பதுவும் உங்களுக்குக் காட்டப்படும். மொத்தமாக அனைத்தையும் ஒரே நேரத்தில் பேக் அப் செய்திடாமல், குறிப்பிட்ட அளவில், நமக்கு வசதியான நேரத்திலும் பேக் அப் செய்திடலாம்.

அடுத்தடுத்து பேக் அப் செய்கையில், ஏற்கனவே பேக் அப் செய்த மெயில்களை ஜிமெயில் பேக் அப் விட்டுவிடும்.1.5. பேக் அப் செய்த மெயில்களை, பின்னர் மீண்டும் அக்கவுண்ட்டிற்குக் கொண்டு செல்லலாம். மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேர்ட், பேக் அப் செய்து வைத்துள்ள போல்டர் ஆகிய தகவல்களை அளித்து மீண்டும் கொண்டு வரலாம்.

ஒரு அக்கவுண்ட் டிலிருந்து பேக் அப் செய்ததை, இன்னொரு அக்கவுண்ட்டிற்கும் மாற்றலாம். ஜிமெயில் பேக் அப் செய்து பார்த்தபோது, மிக அருமையாக இருந்தது. நம் இன்பாக்ஸ், சென்ட் போல்டர், லேபில் என அனைத்தும் பேக் அப் செய்யப்பட்டு மீண்டும் கிடைக்கின்றன. ஜிமெயில் பேக் அப் பைல்கள் .EML என்ற பார்மட்டில் ஏற்படுத்தப்படுகின்றன.

இவற்றை எந்த இமெயில் கிளையண்ட் புரோகிராமிலும் திறந்து பார்க்கலாம்.இந்த பேக் அப்பில் ஒரே ஒரு குறை உள்ளது. ஜிமெயில் தொகுப்பில் நாம் ஏற்படுத்தும் சேட் லாக் (chat logs) பைல்கள் பேக் அப் செய்யப்படுவது இல்லை.


விண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்

விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கம்ப்யூட்டர் வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன் படுத்தி வருகின்றனர்.

எனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து, தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப் பட்டுள்ளன.
1. பின் அப் (Pin Up): நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டர்களை, டாஸ்க் பாரில் வைத்து இயக்க விண்டோஸ் 7 வழி கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் போல்டரில், மவுஸை வைத்து, ரைட் கிளிக் செய்து, அப்படியே டாஸ்க் பாருக்கு இழுத்து விட்டுவிடவும்.

2. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இயக்கிக் கொண்டிருக்கையில், எளிதாக அதில் வேலை செய்திட, இன்னொரு விண்டோவிலும் அதே அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்க விரும்புவீர்கள். இதற்கு அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இடம் தருமானால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டாஸ்க் பாரில் உள்ள அந்த புரோகிராமின் ஐகானில் கிளிக் செய்தி டவும்.

3. விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மூலம், மிகத் தெளிவான, துல்லியமான காட்சியைத் திரையில் பெறலாம். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் படங்களில் உள்ள நுண்ணிய தகவல்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, இந்த வசதி லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உதவியாய் இருக்கும்.

டெக்ஸ்ட் துல்லியமாகக் காட்டப்படவும், படங்கள் தெளிவாகத் தெரியவும் இரண்டு சிஸ்டம் பைல்கள் இதற்கு உதவுகின்றன. அவை cttune.exe (Clear Type Text Tuning) dccw.exe (Display Color Calibration): நேரடியாக இவற்றை இயக்கலாம்; அல்லது கண்ட்ரோல் பேனலில் இவற்றைக் காணலாம்.

4. டாஸ்க் பாரில் ஐகான்களை எந்த வரிசையில் அமைக்க வேண்டும் என விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு உதவிடுகிறது. அவற்றின் ஐகான் மீது, கர்சரைக் கொண்டு சென்று இழுத்து விடுவதன் மூலம் இதனை மேற்கொள்ள லாம். முதல் ஐந்து ஐகான்களில் உள்ள புரோகிராம்களை இயக்க, சில கீகளை அழுத்தி இயக்கநிலைக்குக் கொண்டு வரலாம். எடுத்துக்காட்டாக, முதலில் காணப்படும் ஐகானில் உள்ள புரோகிராமினை இயக்க, விண்டோஸ் கீ +1 அழுத்த வேண்டும். இரண்டாவது ஐகான் புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ+2 அழுத்த வேண்டும்.

5. டாஸ்க் பாரில் கவனம் செலுத்தி, அங்கு இயக்கத்தினை மேற்கொள்ள, விண்டோஸ் கீ + T அழுத்த வேண்டும். இப்போது டாஸ்க் பார் மெனு கிடைக்கும். பின்னர் அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தி, புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் போதும். இந்த விளைவிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்தினால் போதும்.

6. ஹெல்ப் டெஸ்க் எனப்படும் உதவிடும் குறிப்புகளை விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு கம்ப்யூட்டரிலேயே வழங்குகிறது. “fix” அல்லது “Troubleshoot” என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்தால், பலவகையான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் பிரிவுகள் காட்டப்படுகின்றன. இவற்றில் எந்த பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமோ, அந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, தீர்வைத் தெரிந்து கொள்ளலாம்.

விண்டோஸ் 7 தரும் புதிய கூடுதல் வசதிகள் இன்னும் நிறைய உள்ளன. இவற்றைத் தெரிந்து கொள்வதனாலேயே இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது ஈர்க்கப்பட்டு பலர் இதற்கு மாறி வருகின்றனர். தொடர்ந்து இவற்றைத் தெரிந்து கொள்வோம்.


நார்ட்டன் தரும் இணைய சோதனை

இன்றைய இணையதளங்களில், எந்த தளத்தில் என்ன மோசமான வைரஸ் அல்லது திருடும் நோக்கம் கொண்ட புரோகிராம் இருக்கும் என நம்மால் கண்டறிய முடியவில்லை.

பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கம்ப்யூட்டருக்குள் அனுப்பி விடுகின்றனர்.

இந்த சூழ்நிலையில், ஓர் இணைய தளம், இது போல தீங்கு எதுவும் இல்லாததுதானா என்று கண்டறிந்து கூறும் சேவையினை சைமாண்டெக் நிறுவனம் இலவசமாக நமக்குத் தருகிறது. இதற்கெனhttp://safeweb.norton என்ற முகவரியில் தளம் ஒன்றை அமைத்துள்ளது.

இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இந்த தளம் சென்று, நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பும் தள முகவரியினை அப்படியே காப்பி செய்து, அதற்கான இடத்தில் பேஸ்ட் செய்திடலாம்; அல்லது நாமாக டைப் செய்து அமைக்கலாம்.

சோதனை செய்து முடிவுகளைக் காட்ட, பாக்ஸ் அருகே உள்ள லென்ஸ் படத்தில் கிளிக் செய்தால் அல்லது என்டர் அழுத்தினால், சில நொடிகளில் சோதனை முடிந்து நமக்கு அந்த தளத்தின் பாதுகாப்பு தன்மை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.

இந்த பாதுகாப்பு நிலை தகவல்கள் நான்கு வகைகளில் கிடைக்கின்றன. 1) மிக மோச எச்சரிக்கை - சிகப்பு வண்ண பட்டன். 2) எச்சரிக்கை - சிகப்பு வண்ண ஆச்சரியக் குறி. 3) பாதுகாப்பானது - பச்சை நிற செக் குறியீடு. 4. சோதனையிடப்படவில்லை - சாம்பல் வண்ணத்தில் கேள்விக் குறி.

அறிக்கையில், மொத்த தளம் குறித்த பாதுகாப்பு தன்மை கூறப்படுகிறது. வர்த்தக ரீதியில் இல்லாத தளம் என்றால் பொதுவான பாதுகாப்பு நிலை தரப்படுகிறது. அடுத்ததாக, வர்த்தக தளம் எனில், அதனுடன் வர்த்தகம் மேற்கொள்கை யில் நமக்கான பாதுகாப்பு எப்படி என்று காட்டப்படுகிறது. அடுத்ததாக, பொதுவான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தகவல்கள் உள்ளன. இறுதியாக, என்ன என்ன பயமுறுத்தல் களை இந்த தளம் கொண்டுள்ளது என்று அதிலிருந்து அனுப்பப்படும் கெடுதல் விளைவிக்கும் வைரஸ் மற்றும் பிற புரோகிராம்கள் காட்டப்படுகின்றன.

வலது பக்கத்தில், நீங்கள் சோதனை செய்திடும் தளம் சமுதாய கண்ணோட்டத் தில் எப்படிப்பட்டது என்று காட்டப்பட்டு, அந்த தளம் குறித்த கருத்துக்களும் வைக்கப் படுகின்றன. இதற்கு முன்னதாக, இந்த தளத்தினை நமக்குக் காட்டும் பொதுவான குறியீடுகள் (tags) தரப்படுகின்றன.

இறுதியாகச் சொல்லப்பட்ட சமுதாயக் கண்ணோட்ட அறிக்கை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எடுத்துக்காட்டாக, யு-ட்யூப் தளம் குறித்து கேட்டபோது, மிக நல்ல தரம் கொண்டது எனக் காட்டப்பட்டது. சமுதாயக் கண்ணோட்ட அறிக்கையில், யு-ட்யூப் தளத்தில் காட்டப்படும் வீடியோ குறித்த தகவல்களில் உள்ள லிங்க்குகள் மோசமான தளத்திற்கு உங்களை எடுத்துச் செல்லலாம் என்ற எச்சரிக்கை தரப்படுகிறது.

இப்போதெல்லாம், நீளமான தள முகவரிகளைச் சுருக்கி நமக்குத் தருகின்றனர். இதில் எந்த தளம் மோசமானது என்று நாம் சிறிது கூட எண்ணிப் பார்க்க இயலாது. எனவே நார்டன் தரும் இந்த தளம் நமக்கு நல்ல பாதுகாப்பினை அளிக்கிறது.

30 விநாடிகளில் முழு பாதுகாப்பு குறித்தும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே அறியாத தளங்களுக்குச் செல்லும் முன், இந்த தளம் சென்று சோதனை செய்து கொள்வது நல்லதல்லவா! 30 விநாடிகள் செலவழித்தால், பின்னர் நாம் அறியாமல் மாட்டிக் கொண்டு துன்பப்பட வேண்டியதில்லையே.


மொஸில்லா தடுக்கும் ஆட்ஆன் புரோகிராம்கள்

தன்னுடைய பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு 8 னை, மற்ற சாப்ட்வேர் தொகுப்புடன் தரப்படும் ஆட் ஆன் புரோகிராம்களைத் தடுக்கும் வகையில் வடிவமைக்க இருப்பதாக மொஸில்லா அறிவித்துள்ளது. பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள், அனுமதித்த பின்னரே, அத்தகைய ஆட் ஆன் தொகுப்புகள் இயங்க முடியும்.

சில சாப்ட்வேர் தொகுப்புடன் வரும் ஆட் ஆன் புரோகிராம்கள், பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள் எதிர்பாராத வகையில் சில விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

எடுத்துக் காட்டாக, ஸ்கைப் புரோகிராமில் இணைத்துத் தரப்பட்டிருந்த ஆட் ஆன் புரோகிராம், பயர்பாக்ஸ் பிரவுசர் பல முறை கிராஷ் ஆகும் விளைவினைத் தோற்றுவித்தது. இதனால், அதனை அடியோடு விலக்க மொஸில்லா நடவடிக்கை எடுத்தது.

2009 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட், சத்தமில்லாமல், பயர்பாக்ஸ் பிரவுசரில் ஒரு ஆட் ஆன் புரோகிராமினை இணைத்தது. இதனை ஹேக்கர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

இது போல சாப்ட்வேர் புரோகிராமுடன் வரும் ஆட் ஆன் புரோகிராம்களில் சில மட்டுமே, பிரவுசருடன் இன்ஸ்டால் செய்திட அனுமதி கேட்கின்றன. மற்றவை, அனுமதியின்றி, இன்ஸ்டால் ஆகி, தொல்லைகளைத் தருகின்றன.

பிரவுசர் மெதுவாக இயக்கத்திற்கு வருதல், இணையப் பக்கங்கள் தோன்ற அதிக நேரம் எடுத்துக் கொள்ளுதல் போன்ற பிரச்னை களை இந்த ஆட் ஆன் புரோகிராம்கள் உருவாக்குகின்றன. பயனாளர்கள் இவற்றை உணரும் பட்சத்தில், இவை இயங்காமல் தடுக்கவும் அவர்களால் இயலுவதில்லை.

எனவே தான், மொஸில்லா, நவம்பர் மாதம் வெளியிடப்பட இருக்கும் தன் பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 8 முதல், பயனாளர்களின் அனுமதியின்றி, இத்தகைய ஆட் ஆன் புரோகிராம்கள் இன்ஸ்டால் ஆக அனுமதி தராத வகையில், தன் பிரவுசரை வடிவமைக்க இருக்கிறது.


தொடர்ந்து பயன்படும் தொழில் நுட்பங்கள்

பொதுவாக, ஒரு தொழில் நுட்பம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர், அது மேம்பாடு அடையும் பொழுது, புதிய தொழில் நுட்பம் அதன் இடத்தைப் பிடித்துக் கொள்ளும். பத்து அல்லது இருபது ஆண்டுகள் மட்டுமே, எந்த தொழில் நுட்பமும் பயன்பாட்டில் இருக்கும்.

பின்னர், பழையதாகி, பயன்பாட்டிற்கு வேகமற்றதாக ஒதுக்கப்படும். திரைப்படம், தொலைபேசி, ரேடியோ, தொலைக்காட்சி பெட்டி என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல சாதனங்களில் இயங்கும் தொழில் நுட்பங்கள் இதற்கு சாட்சியாகும்.

கம்ப்யூட்டர் உலகில் இயங்கும் தொழில் நுட்பங்களின் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், அறிமுகப் படுத்தப்பட்டுப் பல ஆண்டுகள் ஆன பின்னரும், இன்னும் பல அடிப்படைத் தொழில் நுட்பங்கள், உயிர்த்துடிப்புடன் இயங்கி வருகின்றன. இன்னும் 30 ஆண்டுகளுக்காவது இவை சிறந்த பயன்பாட்டில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.

கம்ப்யூட்டர் உலகில் மறைந்த தொழில் நுட்பங்களும் உண்டு. போர்ட்ரான், எம்.எஸ். டாஸ், நெட்வேர், லோட்டஸ் 1-2-3 என சிலவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் சில இன்னும் மறையாமல் இயங்கி வருகின்றன. அவற்றை இங்கு காணலாம்.

1. கோபால் 1960 (COBOL): அரசும், தொழிற்பிரிவும் இணைந்து, ஓர் அமைப்பை உருவாக்கி, கோபால் மொழியை (Common Business Oriented Language) உருவாக்கின. நிதி மற்றும் அரசு இயக்கங்களுக்கு இதுவே இன்றும் அடிப்படை மொழி அமைப்பாக இயங்கி வருகிறது.

தொழிற்சாலை மற்றும் அரசு நிர்வாகம், நிறுவன அமைப்பின் இயக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படை கட்டமைப்பாக இதுவே இன்றும் இயங்கி வருகிறது.

2. விர்ச்சுவல் மெமரி (Virtual Memory) 1962: மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில், சில அறிவியல் வல்லுநர்கள் இணைந்து திட்டம் ஒன்றில் செயலாற்றிக் கொண்டிருக்கையில், தங்கள் வசதிக்காக, விர்ச்சுவல் மெமரி என்னும் தொழில் நுட்பத்தினை உருவாக்கினார்கள்.

கம்ப்யூட்டர் அவற்றை இயக்குபவர் களுக்கும், புரோகிராம்களுக்கும் இடையே இயங்குகையில், தன் நினைவக இடத்தைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில், இந்த விர்ச்சுவல் மெமரி கண்டுபிடிப்பு, பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதன் மூலம் தான், நேரத்தைப் பகிர்ந்து கம்ப்யூட்டர் வேலைகளை மேற்கொள்ளும் முறையும் உருவானது.

3. ஆஸ்க்கி (ASCII) 1963: ஆங்கில மொழி எழுத்துக்கள், எண்கள் மற்றும் சில உரு அடையாளங்கள் கம்ப்யூட்டரில் காட்டப் பட வேண்டிய வழிமுறையே ஆஸ்க்கி – American Standard Code for Information Interchange – எனப்படும் கட்டமைப்பு ஆகும். 1963 ஆம் ஆண்டில் இது உருவாக்கப்பட்டது. 128 கேரக்டர் குறியீட்டிற்கு முதலில் உருவாக்கப்பட்டுப் பின்னர் 256 கேரக்டர் குறியீட்டிற்கு உயர்த்தப்பட்டு, பல புதிய அடையாள உருக்களையும் சேர்த்துக் கொண்டது.

1988ல் யூனிகோட் தொழில் நுட்பம் உருவானாலும், அதன் அடிப்படைக் கட்டமைப்பாக இன்னும் ஆஸ்க்கி தான் இருந்து வருகிறது.

4. ஓ.டி.எல்.பி. (OTLPonline transaction processing) 1964: ஐ.பி.எம். நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பம். ஆன்லைன் மூலமாக நிதி பரிவர்த்தனைக்கென உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கென, பயணிகள் முன்பதிவினை மேற்கொள்ள இது முதலில் உருவாக்கப்பட்டது. அப்போது தொலைபேசி வழியாக, ஏறத்தாழ 2,000 டெர்மினல்கள், ஐ.பி.எம். 5070 என்ற இரு கம்ப்யூட்டர்களுடன் இணைக்கப்பட்டு இந்த சிஸ்டம் செயல்படுத்தப்பட்டது.

சில நொடிகளில் முன்பதிவு ஏற்படுத்தப்பட்ட போது, அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இன்றைக்கு விமான நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, மின்னணு வழியிலான வர்த்தக முறைகள் அனைத்திற்கும் இதுவே அடிப்படைக் கட்டமைப்பாக இயங்குகிறது.

5. ஐ.பி.எம். சிஸ்டம் /360 மெயின் பிரேம் (IBM System 360 Mainframe)1964: முதன் முதலில் ஐ.பி.எம். நிறுவனம் மெயின் பிரேம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தை வடிவமைத்த போது 500 கோடி டாலர் செலவானது. ஒத்திசைவான ஆறு கம்ப்யூட்டர்கள் மற்றும் 40 துணை சாதனங்கள் இணைந்து இது உருவாக்கப்பட்டது. பின் வர்த்தக ரீதியாகத் தொடங்கிய போது, ஆண்டுக்கு 10,000 மெயின் பிரேம் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்தது. இப்போது அமைக்கப்படும் மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களிலும் System 360கட்டமைப்புதான் அடிப்படைக் கட்டமைப்பாக உள்ளது.

6. எம்.ஓ.எஸ். சிப் (MOS Chip) 1967: MOS (Metal Oxide Semi Conductor) என அழைக்கப்படும் மெட்டல் - ஆக்ஸைட் செமி கண்டக்டர் தொழில் நுட்பம் தான் இன்றும் கம்ப்யூட்டர் சிப் உருவாக்கத்தில் பயன்படுத்தப் படுகிறது. இன்று இதனை CMOS Complementary Metal Oxide Semi Conductor என அழைக்கின்றனர். முதன் முதலில் உருவான பேர் சைல்ட் சி.பி.யு. தொடக்கத்தில் 8 பிட் அளவில் இயங்கியது.

7. சி மொழி (C Programming Language) 1969: பெல் லேப்ஸைச் சேர்ந்த டெனிஸ் ரிட்சி (Dennis Ritchie), அப்போது வந்த புதிய யூனிக்ஸ் சிஸ்டத்தில் இயக்க "சி' புரோகிராமிங் மொழியை உருவாக்கினார். உலகில் மிகப் பிரபலமான கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழியாக இன்றும் சி மொழிதான் உள்ளது. இந்த அமைப்பிலிருந்து பல வகையான சி மொழிகள் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

8.யூனிக்ஸ் (UNIX) 1969: மினி கம்ப்யூட்டர் களில் பயன்படுத்த, ஒரே ப்ராசசரில், பலர் இயக்குவதற்குத் தேவையான கட்டமைப் பை வழங்கும் வகையில் யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, பெல் லேப்ஸைச் சேர்ந்த கென்னத் தாம்ப்ஸன் மற்றும் டெனிஸ் ரிட்சி உருவாக்கினார்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் இயக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, பலர் ஒரே நேரத்தில் பைல்களைப் பகிர்ந்து, பலவகையான பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப் பட்டது.

9. எப்.டி.பி. (FTP File Transfer Protocol) 1971: எம்.ஐ.டி.யில் பயின்ற மாணவர் அபே பூஷான் (Abhay Bhushan) FTP என அழைக்கப் படும் பைல் மாற்றும் வழிமுறையை உருவாக்கினார். முதலில் இது RFC 114 Draft Standard என அழைக்கப்பட்டது. அவரே பின் நாளில், மின்னஞ்சல் அனுப்பிப் பெறுவதற்கான வழிமுறைகளையும் உருவாக்கினார்.

இவர் உருவாக்கிய வழிமுறை, ARPAnet பாதுகாப்பு பணியில் பயன்படுத்தப்பட்டு பின்னர் மக்களுக்கு வழங்கப்பட்டது. 1984ல் இதன் முன்னேறிய வழிமுறையாக TCP/IP புரோட்டோகால் உருவானது. இன்டர்நெட் மற்றும் நிறுவனங்களுக்கிடையேயான நெட்வொர்க்கில் பயன் படுத்தப்படும் வழிமுறையாகத் தொடர்ந்து இது பயன்பாட்டில் உள்ளது.

10. சி ப்ளஸ் ப்ளஸ் (C ++) 1985: ஆய்வு மையத்தில், ஸ்ட்ரூஸ்ட்ரப் (Bjarne Stroustrup) சி ப்ளஸ் ப்ளஸ் புரோகிராமிங் மொழி குறித்த நூலை வெளியிட்ட போது, அது ஆப்ஜெக்ட் ஓரியண்டட் புரோகிராமிங் வழிமுறையினை முன்னுக்குக் கொண்டு வந்தது. இதுவே இன்றைய நடைமுறையில் உள்ள பல குறியீடுகளுக்கு அடிப்படையாய் அமைந்தது.
இதே போல, இன்னும் பல தொழில் நுட்பங்கள் கம்ப்யூட்டர் உலகில் கோலோச்சிக் கொண்டு இருக்கலாம். அவற்றின் இடத்தில் நம் தேவைகளுக்கேற்ப புதிய தொழில் நுட்பங்கள் வந்தாலே அவை மறைந்து போகும். அதுவரை இவற்றின் திறன் கூடிக் கொண்டு இருக்கும்.


மறைந்துவிடுமா பெர்சனல் கம்ப்யூட்டர்?

சென்ற ஆகஸ்ட் 12ல் தன் முப்பது வயதை எட்டிய பெர்சனல் கம்ப்யூட்டர், வரும் காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று பலரும் எண்ணத் தொடங்கியுள்ளனர். 1981 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்த குழுவில் இடம் பெற்ற வல்லுநர் மார்க் டீன் இந்தக் கருத்தினை முன் வைத்துள்ளார். இன்னும் புதியதாக ஒரு தொழில் நுட்பம், பெர்சனல் கம்ப்யூட்ட ரின் இடத்தைப் பிடிக்கும் என்று அறிவித்துள்ளார்.

ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், இதன் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றவையாக இருந்தாலும், புதிய வழிகளில் கணிப்பொறி செயல்பாடு திருப்பப்பட்டு, புதிய சாதனங்கள் வடிவமைக்கப்படலாம் என இவர் கணித்துள்ளார்.

கம்ப்யூட்டரில் தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள், இனி பெர்சனல் கம்ப்யூட்டர் போன்ற ஒரு சாதனத்தின் வழி மட்டும் என முடங்காது, அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் மேற்கொள்ளப்படும். அப்போது பெர்சனல் கம்ப்யூட்டர் என்ற ஒரு தனி சாதனம் இருக்காது என்கிறார் இவர்.

இன்றைய பெர்சனல் கம்ப்யூட்டர் மறைவதற்கு இவர் கூறும் இன்னொரு காரணம் சரியாகவே உள்ளது. இப்போது கணிப்பொறியில் மேற்கொள்ளப்படும் வேலைகளெல்லாம், இணையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. வேகமாகப் பரவி வரும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு. பைல்கள் உருவாக்கப்படுவதும், சேமிக்கப்படுவதும், பகிர்ந்தளிக்கப் படுவதும், தகவல்கள் சேமிக்கப்பட்டு, தேடப்பட்டு பயன்படுத்தப் படுவதும் இப்போது இணையத்திலேதான் நடக்கிறது.

பெர்சனல் கம்ப்யூட்டர் இதனை மேற்கொள்ள வழி தரும் ஒரு சாதனமாகத்தான் உள்ளது. நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் கணிக்கும் பணியினைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வருகிறோம். எனவே நாம் இதுவரை மேற்கொண்ட வேலைகள், பயன்பாடுகளைக் கொண்ட பெர்சனல் கம்ப்யூட்டர் இனி காணாமல் போய் விடும் என்கிறார் மார்க் டீன். இந்தக் கருத்து சரியானதாகவே தோன்றுகிறது.

ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை மறுத்துள்ளது. இது குறித்து உயர்நிலை நிர்வாக வல்லுநர் கருத்து தெரிவிக்கையில், இந்த ஆண்டு 40 கோடி பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

எனவே பெர்சனல் கம்ப்யூட்டருக்குப் பிந்தைய காலம் என்று குறிப்பிடுவது தவறு. பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைந்த காலம் என்று தான் புதிய சாதனங்களைச் சொல்ல வேண்டும். இனி வரும் காலங்களில், பெர்சனல் கம்ப்யூட்டர் (அல்லது மேக் கம்ப்யூட்டர்) இல்லாத ஒரு வீடு இருக்கவே இருக்காது என அடித்துச் சொல்கிறார்.

இதுவும் சரியென்றே படுகிறது. இருப்பினும் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம்.


வெயிலா? மழையா? தேடுங்கள் கூகுளில்

உங்கள் ஊரிலிருந்து வெளியூருக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ செல்ல விரும்புகிறீர்கள்... ஆனால் நீங்கள் செல்ல விரும்பும் இடத்தில் தற்போது எவ்வகையான காலநிலை நிலவுகிறது என்று அறிந்து கொள்ள விருப்பமா...

கவலை வேண்டாம் இருக்கவே இருக்கிறது கூகுள் மேப்ஸ். நீங்கள் செல்ல விரும்பும் அல்லது அறிந்து கொள்ள விரும்பும் ஊரில் தற்போது வெயிலடிக்கிறதா அல்லது மழை பெய்கிறதா என்பதை தெளிவாக சொல்லிவிடும் வசதியை கூகுள் மேப்ஸ் நிறுவனம் தருகிறது.


லேப்டாப் கம்யூட்டரில் மின்சக்தி

பேட்டரி சக்தியில் இயங்கும் லேப்டாப்பில், நாம் எந்த அளவிற்கு அதனைச் சரியாக, செட் செய்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு அதன் திறன் நமக்கு நீண்ட நேரம் கிடைக்கும். லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கான செட்டிங்ஸ் அமைத்திடும் விண்டோக்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

மின்சக்தி நிர்வாக அமைப்பினை மேற்கொள்ள நமக்குத் தரப்படும் விண்டோ Power Options என்பதாகும். இதனைப் பெற ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன. எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில், Run கட்டளை மூலம் இயக்கிப் பெறலாம்.

Win+R கீகளை அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில் powercfg.cpl என டைப் செய்திடவும். அல்லது விஸ்டாவிலும், விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் ரன் கட்டளை கொடுக்காமல், power options என ஸ்டார்ட் சர்ச் கட்டத்தில் டைப் செய்து என்டர் தட்டினால், இந்த விண்டோ கிடைக்கும்.

கிடைக்கும் பவர் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில், மின்சக்தி யை நிர்வாகம் செய்திட பல ஆப்ஷன்ஸ் தரப்பட்டுள்ளதைக் காணலாம்.

விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Balanced, Power saver, and High performance. Power saver எனப் பல வழிமுறைகள் காட்டப்படுகின்றன. இவை வழக்கமான மின் சக்தி மிச்சப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு வழி காட்டுகின்றன.

இவற்றுடன் தரப்படும் Balanced என்ற திட்டம், மின்சக்தி சேமிப்பு மற்றும் கூடுதல் திறன் இயக்கத்தினை இணைத்துத் தருகிறது. மூன்றாவதாக, High performance என்ற திட்டம், எப்படி அதிக திறன் கொண்டதாக லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கலாம் என்று வழி காட்டுகிறது.

இந்த விண்டோவின் இடது பக்கத்தில் மேலும் சில ஆப்ஷன்கள் காட்டப் படுகின்றன. இவற்றில் ஒன்று நாம் லேப்டாப் கம்ப்யூட்டரின் மேல் பகுதியைக் கொண்டு அதனை மூடுகையில் (Choose what closing the lid does) என்ன நடக்கிறது என்று சொல்கிறது.
இதில் Change plan settings என்ற லிங்க்கில் கிளிக் செய்கையில், Edit Plan Settings என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படுகிறது. இங்கு எப்படி மின்சக்தியை மிச்சப்படுத்துவதுடன், கம்ப்யூட்டரையும் கூடுதல் திறனுடன் இயக்கலாம் என்பதற்கான வழிகள் காட்டப்படுகின்றன.

நாம் அமைத்த மாற்றங்களை, சில காரணங்களுக்காக நீக்க வேண்டும் என்றால், Restore default
settings for this plan என்பதில் கிளிக் செய்திட மீண்டும் தொடக்க நிலைக்கு நாம் அழைத்துச் செல்லப்படுவோம்.
Power Options டயலாக் பாக்ஸில் Change advanced power settings என்பதில் கிளிக் செய்தால், மேலும் சில கூடுதல் வழிகள் காட்டப்பட்டிருப்பதனைக் காணலாம். இதனைக் கிளிக் செய்தவுடன் அAdvanced settings என்ற விண்டோ கிடைக்கும். இதன் மூலம் மின்சக்தியினை நிர்வாகம் செய்திட, கூடுதலாக அது குறித்து நன்கு அறிந்திருப் பது நல்லது. அல்லது இதனைப் பயன்படுத்தாமல் இருக்கலாம்.


மின்னஞ்சல் முன்னெச்சரிக்கைகள்

இன்று அனைத்து தகவல் பரிமாற்றத்திலும் இமெயில் எனப்படும் மின்னஞ்சல் இடம் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பல முறை, நாம் பல்வேறு வகையான தகவல் பரிமாற்றத்திற்கு இதனைப் பயன்படுத்துகிறோம்.

ஆனால், இதனை அமைப்பதிலும், அனுப்புவதிலும் பல தவறுகளை பலமுறை செய்கிறோம். எங்காவது சில வேளைகளில் தடுமாறி விடுகிறோம். நான் எவ்வகையான தவறுகளைச் செய்கிறோம் என்று எண்ணிப் பார்க்கலாமா!

1. முகவரிகளை அதன் அட்ரஸ் புக்கிலிருந்து கிளிக் செய்கையில், அனுப்ப வேண்டியவரின் முகவரிக்குப் பதிலாக, வரிசையில் அடுத்தபடியாக இருப்பவரின் முகவரியைக் கிளிக் செய்து, சரியான நபரின் முகவரியைக் கிளிக் செய்துள்ளோமா என்று பார்க்காமலேயே அனுப்பி விடுகிறோம்.
2. அஞ்சல் செய்தியை அமைக்கையில் இடையே எழுந்து செல்ல வேண்டி வரும். பின்னர், எழுதி முடித்துவிட்டோம் என்று எண்ணி, அனுப்பிவிடுவோம்.
3. பலர் எழுதியுள்ள அஞ்சல்களின் இடையே, நம் பதிலை ஒரு வருக்கு மட்டும் அனுப்ப எண்ணி, கடிதத்தினை எழுதி, பின்னர், அதனை அனைவருக்கும் அனுப்பி கெட்ட பெயர் வாங்கிக் கொள்வோம்.
4. அஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டிய பைல்களை இணைக்காமலேயே, அல்லது இணைக்கப்படுகையில் இடையிலேயே Send பட்டனை அழுத்தி, அரைகுறையாக அனுப்பிவிடுவோம்.
5. ஒருவரின் அஞ்சலுக்குப் பதில் அனுப்புகையில், அவரின் மாற்றப்பட்ட அஞ்சல் முகவரிக்குப் பதிலாகப் பழைய அஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுவோம். அவர் தனக்கு வரவில்லை என்று அடுத்து அஞ்சல் அனுப்பிய பின்னரும், சரியாகச் சோதனை செய்து பார்க்காமல், ""நான் அனுப்பினேன்'' என அடித்துச் சொல்வோம்.
6. பல வேளைகளில் அஞ்சல் முகவரிகளைத் தொலைபேசி வழியாகப் பெறுவோம். அப்போது தவறாகக் குறித்துக் கொண்டு, அஞ்சல் அனுப்புவோம். அது திரும்பி வருகையில், முகவரியைச் சொன்னவரைக் குறை சொல்வோம்.
7. மிகவும் பெரிய பைலை இணைத்து அனுப்பி, அதனைப் பெறுபவரின் பொறுமையைச் சோதிப்போம்.
8. சப்ஜெக்ட் கட்டத்தில், அஞ்சலின் பொருளை எழுதாமல், என்னைக் கண்டுபிடி என்கிற மாதிரி வாசகம் எழுதுவோம்.
9. பல வேளைகளில் நமக்குக் கிடைத்த இணைய லிங்க்குகளை மற்றவருக்கு அனுப்பி, இதை எல்லாம் கிளிக் செய்து, இணைய தளங்களைப் பார் என்று செய்தியும் அனுப்புவோம். அதனை காப்பி செய்து பேஸ்ட் செய்கையில், டைப் செய்து அனுப்புகையில், ஏதேனும் தவறு இருக்கிறதா எனச் சோதிப்பதில்லை. இறுதியில் அஞ்சல் மூலம் அவற்றைப் பெற்றவருக்குச் சோதனையாக இவை அமையும்.
இது போன்ற பல தவறுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவற்றில் பல பெரிய தவறுகளை எப்படி முன்னெச் சரிக்கையாக தடுக்கலாம் என்று இங்கு காணலாம்.
1. எப்போதும் அஞ்சலைப் பெறுபவர் அல்லது பெறுபவர்களின் முகவரிகளை, அஞ்சல் செய்தியை டைப் செய்து அடித்து முடித்த பின்னர், இணைப்புகளை இணைத்த பின்னர், இறுதியாக அமைக் கவும். இது நாம் அஞ்சலை முழுமையாக முடித்துவிட்டோம் என்பதனை உறுதி செய்கிறது. அவசரப்பட்டு அனுப்புவதனைத் தடுக்கிறது.

முகவரி இல்லாமலேயே அனுப்ப முயற்சித்தால், இமெயில் புரோகிராம் நம்மை எச்சரிக்கும். அப்படியே அனுப்பிவிட்டாலும், அது யாருக்கும் போய்ச் சேராது. இதே போல அஞ்சலுக்குப் பதில் அஞ்சல் அனுப்புகையில், ரிப்ளை பட்டன் அழுத்தியவுடன், இமெயில் புரோகிராம் அஞ்சலை அனுப்பியவரின் முகவரியை அமைத்துக் கொள்ளும் அல்லவா! உடனே அதனை காப்பி செய்து, கட் செய்து, அஞ்சல் செய்தியின் முதல் வரியாக வைத்துக் கொள்ளவும்.

அஞ்சலை டைப் செய்து முடித்தவுடன், முதல் வரியில் உள்ள முகவரியை மீண்டும் கட் செய்து, பெறுபவரின் முகவரிக்கான கட்டத்தில் பேஸ்ட் செய்திடவும்.
2. பைல் ஒன்றை இணைக்க விரும்பினால், அஞ்சல் செய்தியினை எழுதும் முன் இணைக்கவும். இது அந்த பைலை இணைக்க முடியுமா என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். இணைக்க மறப்பதைத் தடுக்கும்.
3. உங்களிடமிருந்து பதில் அஞ்சல் வரவில்லை என்று பதில் கடிதம் அனுப்புபவருக்கு, நீங்கள் பயன்படுத்திய அவரின் முகவரியை செய்தியாக அவருக்கு அனுப்பவும். அவர் வேறு முகவரிகள் பயன்படுத்துகிறாரா என்பதனைக் கவனிக்கவும்.
4. ஒருவருக்கு பதில் அஞ்சல் அனுப்புகையில், அவர் எந்த முகவரியைப் பயன்படுத்தி அஞ்சல் அனுப்பினாரோ, அதனையே பயன்படுத்தவும். வேறு பழைய முகவரிக்கு அனுப்பினால், அவரின் ஸ்பேம் பில்டர் போன்ற வசதிகள், அதனைத் தடை செய்திட வாய்ப்பு உண்டு.
5. நீங்கள் புதிய மின்னஞ்சல் முகவரி ஒன்றினைப் பயன்படுத்துகையில், அதனைப் பெறுபவருக்கு
உறுதியாகத் தெரிவிக்கவும்.
6. புதிய முகவரி ஒன்றை ஒருவரிடம் இருந்து அறியும் போதும், பேச்சு வாயிலாக ஒருவரின் மின்னஞ்சல் முகவரியைப் பெறும் போதும், அதற்கு சோதனை மடல் ஒன்று அனுப்பி, அதனை உறுதி செய்து கொள்ளவும்.
7. நீங்களாக முகவரியினை டைப் செய்திடுவதைத் தவிர்க்கவும். அனுப்பு பவரிடமிருந்து அஞ்சல் வந்திருந்தால், அல்லது அட்ரஸ் புக்கில் அவர் முகவரி இருப்பின், அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்திடவும். கிளிக் செய்து அமைக்கும் வசதி இருப்பின் அதனைப் பயன்படுத்தவும்.
8. முகவரிகளை அமைக்கையில் தானாக அதனை அமைக்கும் வசதி கொண்ட இமெயில் புரோகிராம்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிலரின் இமெயில் முகவரிகளின் முதல் ஐந்தெழுத்துக்கள் வரையில் ஒரே மாதிரியாக இருக்க சந்தர்ப்பம் உண்டு. Anandan, Ananya, Anandu, Ananthi ... என்ற பெயர்கள் உள்ள முகவரியை டைப் செய்கையில், உங்கள் இமெயில் புரோகிராம் எதனை வேண்டுமானாலும் அமைக்கலாம். எனவே எது அமைக்கப்படுகிறது;

அதுதான் நீங்கள் அனுப்ப விரும்பும் நபரின் முகவரியா என ஒருமுறைக்கு இருமுறை பார்த்து உறுதிப் படுத்திக் கொள்ளவும். இதே போல இணைய தள லிங்க்குகளை அப்படியே மற்றவருக்கு அனுப்ப வேண்டாம். அதில் நீங்கள் கிளிக் செய்து, தளங்கள் தடங்கலின்றிக் கிடைக்கின்றனவா என்று சோதனை செய்த பின்னர், சரியாக இருந்தாலே அனுப்பவும். சில வேளைகளில், மோசமான தளங்கள் இந்த முகவரிகளில் இருக்கலாம். கவனிக்காவிட்டால், நமக்குக் கெட்ட பெயர் கிடைக்கும்.
9. சப்ஜெக்ட் கட்டத்தில், சுருக்கமாக செய்தியின் சாராம்சத்தை தெரிவிக்கவும். சிலர் செய்திக்கு மாறாக சப்ஜெக்ட் லைன் அமைப்பார்கள். அதனை மட்டும் படித்து மாறாக செய்தியை எண்ணிக் கொள்ளலாம்.
10. பெரிய பைல்களை இணைத்து அனுப்பாமல், அவற்றை அனுப்ப வேறு இணைய தளங்கள் தரும் வசதியைப் பயன்படுத்தவும். அஞ்சலில் அதற்கான காரணத்தையும், லிங்க்கையும் தரவும்.


ஜிமெயிலின் முன்தோற்றம்

சென்ற ஆகஸ்ட் 4 அன்று, கூகுள் அனைவரும் விரும்பும் ஒரு சிறப்பான வசதியைத் தன் ஜிமெயில் தளத்தில் தந்துள்ளது. பொதுவாக, நமக்கு வந்துள்ள மெயில்களைப் பார்க்கையில், அனுப்பிய வர் பெயர், நாள் மற்றும் நேரம், மெயிலின் தொடக்க சொற்கள் காட்டப்படும்.

இதனால், நாம் உடனே பார்க்க விரும்பும் மெயில்களுக்கு முன்னுரிமை கொடுத்து, கிளிக் செய்து பார்க்கலாம். இதனால் இன் பாக்ஸில் ஒவ்வொரு மெயிலாகக் கிளிக் செய்து அலைய வேண்டியதில்லை.

அஞ்சலைத் திறக்காமலேயே, அதனைப் பார்க்கும் சந்தர்ப்பத்தினை இந்த புதிய வசதி தருகிறது.மைக்ரோசாப்ட் அவுட்லுக் மற்றும் வெப் இமெயில் கிளையண்ட் புரோகிராம் களான யாஹூ மற்றும் ஹாட் மெயில் ஆகியவை, மெயில் தளத்தில் மூன்று பிரிவுகளைக் காட்டுகின்றன.

இடதுபுற பிரிவில் போல்டர்கள், மின்னஞ்சல் செய்திகள் நடுவில் மற்றும் அஞ்சல் களைப் படித்துப் பார்க்க வலது ஓரத்தில் ஒரு பிரிவு எனக் கொண்டுள்ளன. இந்த மூன்றாவது பிரிவினை, நீங்கள் விரும்பினால், செய்திகளுக்குக் கீழாகவும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த வாசிக்கும் பிரிவு (reading pane) நமக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். இதன் மூலம் வெகு வேகமாக, நமக்கு வந்துள்ள அஞ்சல் செய்திகளை, அவற்றைத் திறக்காமலேயே பார்த்து, நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
இதனை ஜிமெயில் இப்போதுதான் சேர்த்துள்ளது. இதனை இயக்க, ஜிமெயில் அக்கவுண்ட் திறந்து, ஜிமெயில் லேப்ஸ் செல்லவும். அங்குள்ள சர்ச் கட்டத்தில் Preview Pane என டைப் செய்தால், உங்களுக்குத் திரையில் அந்தப் பிரிவு காட்டப்படும். இதனை முதலில் Enable செய்திட வேண்டும். பின்னர், இது எந்த பக்கத்தில், இடது/வலது, இருக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம்.

அல்லது இன்பாக்ஸுக்குக் கீழாகக் கூட இருக்கும்படி செட் செய்திடலாம். இத்துடன், ஒரு மின்னஞ்சல் செய்தியினை அதிக பட்சம் எத்தனை விநாடிகள் பார்க்க விருப்பம் என்பதனையும் செட் செய்திடலாம். மாறா நிலையில் இது மூன்று விநாடிகள் தரப்பட்டுள்ளது.
இவ்வாறு செட் செய்து, ஜிமெயில் இன்பாக்ஸ் சென்றவுடன் முன் தோற்றப் பிரிவு காட்டப்படும் என எண்ண வேண்டாம். ஏற்கனவே உள்ள பிரிவுகள் மறைக்கப்பட்டுவிடுமே என அஞ்ச வேண்டாம். நீங்கள் விரும்பினால் மட்டுமே காட்டப்படும். இன்பாக்ஸ் வலது மேல் மூலையில், ஒரு பட்டன் காட்டப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், பல விருப்பங்கள் காட்டப்படுகின்றன.

வழக்கமான லே அவுட் அல்லது இந்த முன் தோற்றலே அவுட் இவற்றில் எதனை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். வழக்கமான லே அவுட்டைத் தேர்ந்தெடுத்தால், பழையபடி தோற்றம் நமக்குக் கிடைக்கும்.
திரைக்குக் குறுக்காக அல்லது நெட்டுத் தோற்றம் என எந்த வகையில் இது காட்டப்பட வேண்டும் என்பதனைத் தேர்வு செய்து, கிளிக் செய்து அமைக்கலாம். பிரிவின் அகலத்தையும் விரித்து, குறைத்து அமைக்கலாம்.
பிரிவு ஏற்படுத்தப்பட்டுப் பார்த்த பின்னர், இதே பட்டனை அழுத்தி, No Split என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்தால், இந்த பிரிவு மறைந்திடும். இந்த முன் தோற்றக் காட்சி இதுவரை ஜிமெயிலில் இல்லாத ஒன்றை இப்போது தந்துள்ளது.


மறையும் சிடி-டிவிடிக்கள்

கம்ப்யூட்டர் மார்க்கட்டில் இருந்து சிடி மற்றும் டிவிடிக்கள் மறையும் காலம் வந்துவிட்டது. பிளாப்பி டிஸ்க்குகளைப் போல இவையும் காணமால் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஒரு காலத்தில், 1985க்கு முன்னர், +2 சயின்ஸ் லேப் பிராக்டிகல் ரெகார்ட் அளவிலான டிஸ்க்குகள் பயன்பாட்டில் இருந்தன. துளையிடப்பட்டு பயன்படுத்தப் பட்டு வந்த கார்டுகளுக்குப் பதிலாக இவை பயன்பாட்டில் இருந்தன.

இவற்றை ஐந்தே கால் அங்குல அகல அளவிலான டிஸ்க்குகள் வெளியேற்றின. இதன் கொள்ளளவு கேபி அளவிலேயே இருந்தன. அடுத்து வந்த சிறிய பிளாப்பி டிஸ்க்குகள் 1.44 எம்பி அளவு டேட்டாவைக் கொள்ளும் அளவில் இருந்தன.

பின்னர் அதிக அளவில் கொள்ளளவு கொண்டி ருந்த ஸிப் டிரைவ்கள் ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. சிடி, அதன் பின் டிவிடி வந்த பின்னர், பிளாப்பி டிஸ்க்குகள் மறைந்து, அதற்கான ட்ரைவினை கம்ப்யூட்டரில் காண்பது அரிதாக உள்ளது.
இப்போது பிளாஷ் ட்ரைவ், எக்ஸ்டர்னல் ட்ரைவ் வந்த பின்னர், டிவிடி ட்ரைவ் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில், தற்போது வந்து கொண்டிருக்கும் மேக் கம்ப்யூட்டர்களில் டிவிடி ட்ரைவ் பொருத்தப்படுவதில்லை.

பெர்சனல் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும், டிவிடி ட்ரைவ் ஒரு விருப்பத் தேர்வாக அமைக்கப்பட்டு, தனியே வாங்கிப் பயன்படுத்தும் வகையில் உள்ளன. விரைவில் டிவிடிக்களும் சிடிக்களும் காணாமல் போய்விடும் என்றேஅனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதற்கான முக்கிய காரணங்கள் ஆறினை இங்கு பார்க்கலாம்.

1. சத்தம்: சிடி மற்றும் டிவிடி ட்ரைவ்கள் இயக்கத்தின் போது, உள்ளே சுழலும் மற்றும் நகரும் பாகங்கள் இயங்குவதால், தேவையற்ற சத்தம் ஏற்படுகிறது. எக்ஸ் பாக்ஸ் 360 போன்ற சாதனங்களில் இந்த சத்தம் சற்று அதிகமாகவே உள்ளது.

2. பராமரிப்பு: அதிக வேகத்தில் சிடிக்களைச் சுழற்றி, லேசர் கதிர்கள், அவற்றைப் படிக்கையில், தூசு சேர்ந்து அவையும் சுழற்சியில் பங்கேற்கின்றன. இவை சேராமல் இருக்க இதனை நாம் பராமரிக்க வேண்டியுள்ளது. மேலும், விரைவில் தங்கள் பயன் நாட்களை இழந்திடும் கம்ப்யூட்டரின் துணை சாதனமாக, சிடி ட்ரைவ் உள்ளது.

3. இயக்க சக்தி: மிக அதிக வேகத்தில் டிவிடிக்களை சுழற்ற வேண்டிய நிலையில், அதற்கான மின் சக்தியும் சற்று அதிகமாகவே செலவாகிறது. இதனால் லேப்டாப் போன்ற கம்ப்யூட்டர்களில் பிரச்னை ஏற்படுகிறது.

4. வேகம்: சிடி அல்லது டிவிடியிலிருந்து டேட்டா படிக்கப்படுகையில், அதிக வேகத்தில் அவை சுழல்கின்றன. இதே நிலை ஹார்ட் டிஸ்க் அல்லது சாலிட் ஸ்டேட் டிஸ்க்கில் ஏற்பட்டாலும், சுழல் வேகம் குறைவாகவே உள்ளது. அதிக வேகத்தில் டிவிடி சுழன்றாலும், தகவல் அனுப்பிப் பெறும் விஷயத்தில், ஹார்ட் டிஸ்க் மற்றும் பிறவற்றிலிருந்து தகவல்களைப் பெறுவதே அதிக வேகத்தில் நடைபெறுகிறது.

5.மீடியா: இந்த ஒரு விஷயத்தில் தான், பலரும் சிடி, டிவிடிக்கள் காணாமல் போவதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. முதலாவதாக, டிஸ்க்குகள் அதிக இடத்தை எடுத்துக் கொள்கின்றன. பல மாதங்கள் கழித்து, நாம் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால், அந்த குறிப்பிட்ட சாப்ட்வேர் உள்ள சிடி அல்லது டிவிடி எங்கே உள்ளது என்று பல சிடிகளுக்கிடையே தேட வேண்டியுள்ளது.

பயன்படுத்தாமல் பல காலம் இருந்தாலும், அதில் ஸ்கிராட்ச் எதுவும் இல்லாமல், ஈரப்பதத்தினால், மேலாகப் பங்கஸ் பூச்சு எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் இந்த பிரச்னைகளுக்காக ஹார்ட் டிஸ்க்கினை ஒப்பிட்டுப் பார்த்தால், விலை குறைவு, அளவிற்கு எல்லை இல்லை மற்றும் தேடிப் பார்த்து அறிவது மிக எளிது.

6. வசதி: இணையம் இப்போது நமக்கு எல்லாவிதத்திலும் உதவுகிறது. பைல்களை ஸ்டோர் செய்து எப்போது வேண்டு மானாலும் அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். பல வேளைகளில் கட்டணம் எதுவுமின்றி இந்த சேவை கிடைக்கிறது.
மேற்கண்ட காரணங்களினால், நிச்சயம் சிடி, டிவிடிக்களின் பயன்பாடு விரைவில் இல்லாமல் போகும்.


ஜி-5 வழங்கும் புதிய 2 சிம் மொபைல்கள்

கூடுதல் வசதிகளுடன், பட்ஜெட் விலையில் மொபைல் போன்களை வடிவமைத்துத் தரும் ஜி-5 நிறுவனம், அண்மையில் நான்கு புதிய மொபைல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இவை அனைத்து இரண்டு சிம்களை இயக்கக் கூடிய போன்களாகும். முதல் மூன்று போன்கள் G’Five E680, E620 மற்றும் E650 என அழைக்கப்படுகின்றன. அடுத்ததாக G’FIVE G20 என்ற பெயரில் கேம்ஸ் போன் ஒன்று வெளியிடப்படுகிறது.

இதில் G’Five E680 மொபைல் போன், டூயல் ஸ்டேண்ட் பை சிறப்புடன் கூடிய இரண்டு சிம் போனாகும். 2.2. அங்குல திரை, இரண்டு கேமரா, யமஹா ஆம்ப்ளிபையர், எப்.எம். ரேடியோ பிளேயர், மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர் ஆகியன தரப்பட்டுள்ளன.

அடுத்த போன் G’Five E620 மேலே கூறப்பட்டுள்ள வசதிகளுடன், அனலாக் டிவி ஒன்றையும் கொண்டுள்ளது. G’Five E650 போன், 2.5 அங்குல வண்ணத்திரையுடன், பிளிப் டைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று போன்களும் மூவி கிங் போன்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த போன் ஒவ்வொன்றுடனும் 4 ஜிபி டேட்டா கார்ட் இணைக்கப்பட்டுத் தரப்படுகிறது.

இதில் 20 திரைப்படங்கள் பதியப்பட்டுத் தரப்படுகின்றன. இப்போதைக்கு இந்தி, பஞ்சாபி, போஜ்பூரி என அந்த மாநில மொழிகளில் இவை உள்ளன.
G’FIVE G20 மொபைல் போனில், 2.4 அங்குல திரை உள்ளது. இதில் ஆயிரம் வீடியோ கேம்கள் பதிந்து தரப்படுகின்றன. யமஹா ஆம்ப்ளிபையர் தரப்பட்டுள்ளது.
மேலே சொல்லப்பட்ட நான்கு போன்களின் விலை ரூ. 2,500 முதல் ரூ.3,500 வரை உள்ளது.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes