நரகமல்ல, அதைவிடக் கொடியது ! உயிரை உலுக்கும் ரகசிய டாக்குமெண்டரி படம் ஒன்று ஜிம்பாவே சிறைகளின் இருண்ட அறைகளைப் படம்பிடித்து உலகத்தின் மனிதாபிமான மனங்களையெல்லாம் உலுக்கி எடுத்திருக்கிறது. ஜிம்பாவேயின் சிறைகள் எப்படி இருக்கின்றன ? அங்கே கைதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் எனும் உண்மை முதன் முறையாக உலகத்தின் பார்வைக்கு HELL HOLE (நரக வாசல் ) எனும் இந்த ரகசிய செய்திப்படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சிறைகளெங்கும் எழும்பி நிற்கவே வலுவற்ற உதிர்ந்து விடும் நிலையில் எலும்புக் கூடாய் அசையும் கைதிகளின் பிம்பங்கள் மனதைப் பிசைகின்றன. நிராகரிப்பு, பட்டினி என குற்றுயிராய் கிடக்கும் கைதிகளில் பலருக்கு கிடைக்கும் சிறு சிறு உணவுப் பதார்த்தத்தை கையால் தூக்கி வாயில் வைக்கும் வலுவே இல்லை என்பதை இந்த டாக்குமெண்டரி படம் திடுக்கிடலுடன் பறைசாற்றுகிறது. ஜிம்பாவே சிறைகளில் நிகழ்ந்திருக்கின்ற இந்த மனித உரிமை மீறல் உலகின் இதயங்களைக் கனக்க வைத்து, கண்களை கசிய வைக்கிறது. இந்த சிறைகளில் ஈசல் பூச்சிகளைப் போல அடைந்து கிடக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதியுமே இல்லை. ஜிம்பாவேயிலுள்ள 55 சிறைகளில் மொத்தம் பதினேழாயிரம் பேரை அடைக்க முடியும். ஆனால் சுமார் நாற்பதாயிரம் பேர் அடைபட்டுக் கிடக்கிறார்கள் என்கிறது பதற வைக்கும் ஒரு செய்திக் குறிப்பு. ஒரு போர்வையுடன் முடிந்து போய்விடுகிறது அவர்களுக்கு தரப்படும் உடமைகளின் கணக்கு. எப்போதாவது கிடைத்து வந்த உணவும் கூட தற்போதைய பொருளாதார வீழ்ச்சியினால் நின்று போய் விட, ஒரு வேளை ஒரு கவளம் சோளம் கிடைத்தாலே பெரிய விஷயம் எனும் அளவுக்கு சிறை வசதிகள் சுருங்கிவிட்டன. காட்நோஸ் நேர் என்பவர் இந்த படத்தின் பின்னணியில் இயங்கியவர். கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு இன்னல்களுக்கு இடையே இந்த ரகசிய வன்முறையை படமெடுத்து வெளியிட்டிருக்கிறார். ஜிம்பாவே சிறைகளில் மனித உரிமைகள் பெருமளவு மீறப்படுகின்றன என்பதை பல முறை மனித உரிமை கமிஷன் கூறியும் அதற்கான போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை, இதெல்லாம் வெறும் புரளி என நிராகரித்து விட்டது ஜிம்பாவே அரசு. இப்போது கிடைத்திருக்கும் இந்த ஆதாரங்கள் மனித உரிமைக் குழுக்களின் எச்சரிக்கைச் செய்திகளை மெய்யாக்கியிருக்கிறது, வெறும் வார்த்தைகளை வைத்து எதையும் சாதிக்க முடிவதில்லை, எனவே தான் பல சிரமங்களுக்கிடையே, சிறையில் வாடும் மக்களை வைத்தே ரகசியமாக இந்தப் பதிவுகளைச் செய்திருக்கிறேன். இதன் மூலம் இந்த சிறைக் கைதிகளுக்கு ஏதேனும் விடிவு ஏற்படுமெனில் அதை விடப் பெரிய ஆனந்தம் ஏதும் இல்லை என்கிறார் காட்நோஸ் நேர் கண்கள் பனிக்கப் பனிக்க. ஜிம்பாவே சிறைகள் “கொடூரத்தின் சின்னங்கள். சித்திரவதைக் கூடங்கள் ” என்கிறார் ஜிம்பாவே வழக்கறிஞர் ஆனா மேயோ எனும் பெண்மணி. ஜிம்பாவே சிறைக்கு ஒருவன் செல்வது என்பது சாவுக்குச் செல்வது போல திரும்பி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அது பலருக்கும் தெரிந்தது தான் என்கிறார் அவர். பொருளாதார பலவீனத்தினால் சிறைக் கைதிகளுக்குத் தேவையான உணவுகள் கிடைப்பதில்லை என அரசு சப்பைக் கட்டு கட்டினாலும், உண்மையில் சிறைக்குச் செல்ல வேண்டிய உணவுகளை அதிகாரிகள் கடத்தி கள்ளச் சந்தையில் விற்று சம்பாதிக்கின்றனர் என மேயோ கூறும் போது பகீர் என்கிறது. எத்தனை உயிர்களுக்கான விலை அது என்பது எப்படி அதிகாரிகளுக்குப் புரியாமல் போனது என்பதும், அவ்வளவு தூரமா மனிதனை விட்டு மனித நேயம் விலகிச் சென்று விட்டது என்பதுமான கனமான கேள்விகளை ஜிம்பாவே சிறை சமூகத்தின் மீது வீசுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் அரசியல் கைதிகள் எனவும், ஜிம்பாவேயின் அரசியல் மாற்றத்தை எதிர்த்தவர்கள் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகிறார்கள் எனவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். உணவுக்கே வழியில்லாத நிலையில் மருத்துவ உதவிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். சுகாதாரமற்றுப் போன சிறைகளின் வராண்டாக்களில் நோய்கள் வந்து தங்கும் போது சாவைத் தவிர எதையும் பெற்றுக் கொள்ளும் சக்தியற்றுப் போய்விடுகின்றனர் கைதிகள். அடிக்கடி கைதிகள் வறுமையின் உச்சத்துக்குப் போயும், நோயின் மிச்சத்துக்குள் விழுந்தும் மரணமடைவதும், அந்த பிணங்கள் கைதிகளுடன் கூடவே ஓரிரு நாட்கள் கவனிக்கப்படாமல் கிடப்பதும் தினசரி வாடிக்கை என்கின்றனர் சக கைதிகள். அப்படி தினம் தோறும் சுமார் இருபது கைதிகள் வரை மரணமடைவதாகவும், அப்படி மரணமடையும் கைதிகளை ஒரு பெரிய குழியில் கொண்டு போட்டு புதைத்து விடுவதாகவும் அதிர்ச்சிச் செய்திகள் தொடர்கின்றன. இந்தச் சிறையை நீங்கள் நரகம் என்று சொல்வதை விட, நரகத்தை விடக் கொடியது என்றே சொல்லுங்கள் என்கிறார் சமீபத்தில் விடுதலையான கைதி ஒருவர். ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த செய்திப்படம் எங்கே போயிற்று மனித நேயம் என திகிலுடம் கதற வைக்கிறது. ஏற்கனவே பொருளாதாரம் படுகுழிக்குள் போனதற்கு ஒரே காரணம் என பலராலும் வெறுக்கப்படும் ஜனாதிபதி ராபர்ட் முகாபேயின் ஆட்சியின் மீது மீண்டும் ஓர் அவமானச் சின்னமாக பதிந்திருக்கிறது இந்த Hell Hole செய்திப்படம்.
உலகை உலுக்கிய செய்திப்படம் : Hell Hole !
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment