ஆதி காலத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பணம் செலுத்துமிடத்தில் ஒரு கணினி இருக்கும். பொருட்களைத் தேர்ந்தெடுத்து நீங்கள் காசாளரிடம் கொண்டு போய் நீட்டுவீர்கள். ஒவ்வொரு பொருள் மீதும் அதன் விலை எழுதப்பட்டிருக்கும். காசாளர் ஒவ்வொரு பொருளாக எடுத்து, அதன் விலையை கணினியில் உள்ளீடு செய்வார். இறுதியில் கணினி, மொத்தத் தொகையைக் கூட்டிச் சொல்லும். காசைக் கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு நீங்கள் வெளியேறலாம். இப்படியாக அந்தக் காலத்தில் சூப்பர் மார்க்கெட்டில் கணினி ஒரு கால்குலேட்டரின் வேலையைச் செய்து வந்தது.
கொஞ்ச நாள் கழித்து அதில் ஒரு முன்னேற்றம் வந்தது. சூப்பர் மார்க்கெட்டுகளில் Bar code-களும் Scanner-களூம் பயன்படுத்தும் முறை பரவலாகியது. பொருளின் மீது இந்த Bar Code ஒட்டப்படும். இந்த Barcode-ல் பொருளின் விலை இருக்காது. அது என்ன பொருள் என்பதற்கான குறிப்பு மட்டுமே இருக்கும். விலைப்பட்டியல் கணினியில் ஒரு database-ல் இருக்கும். பொருளின் Barcode-ஐ ஸ்கேன் செய்ததும் கணினி தானாகவே விலையைக் காண்டுபிடித்து பில்லில் சேர்த்துக் கொள்ளும். இப்படியாக சூப்பர் மார்க்கெட்டில் கணினிமயம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியது. இதிலே குறிப்பிடத்தக்க நன்மை என்னவென்றால், முந்தைய முறையில், பொருளின் விலையில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டியிருந்தால் ஒவ்வொரு பொருளின் மீதும் அதைச் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இந்த முறையில் விலை மாற்றங்களைக் கணினியிலுள்ள விலைப்பட்டியலில் மாற்றினால் போதுமானது. எனவே சிறப்பு விற்பனைத் திட்டங்களை அமல் செய்வதில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டது.
இதில் அடுத்த கட்ட முன்னேற்றம், Loyalty Card என்னும் வாடிக்கை அட்டை மூலம் ஏற்பட்டது. குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்டிலேயே வாடிக்கையாகப் பொருள் வாங்குபவர்களுக்கு இத்தகைய அட்டை வழங்கப்பட்டது. பில் செய்யும் போது, இந்த அட்டையையும் அதற்குரிய இயந்திரத்தில் தேய்த்து, அவர்கள் வாங்கிய பொருட்களின் அளவிற்கேற்ப சலுகை விலைகள் அளிக்கப்பட்டன. வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் பொருள் கிடைப்பதனால் நன்மை. ஆனால் சூப்பர் மார்க்கெட்டுக்கு என்ன நன்மை? எந்த வாடிக்கையாளர், எந்தப் பொருட்களை, எந்த அளவுகளில் வாங்குகிறார் என்பதை அவர்களால் டிராக் செய்ய முடிந்தது. பால் எவ்வளவு வாங்குகிறார், காய்கறிகள் எவ்வளவு, எந்த வகையான காய்கறிகள் போன்றவை. புதிதாக குழந்தைகளுக்கான உணவும் டயப்பர்களும் ஒருவர் வாங்க ஆரம்பித்தால் அவரது வீட்டில் புதிதாகக் குழந்தை ஒன்று பிறந்திருப்பதாக ஊகித்து அந்த 'தகவலை'ப் பயனுள்ள வகையிலே பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டது. வாடிக்கையாளர் பற்றிய தகவல் தான் வர்த்தகத்தின் முக்கிய சொத்து என்ற கருத்து இதன் மூலம் வலுப்பட்டது.
இதில் மற்றுமொரு முன்னேற்றமாக Self-checkout என்ற சித்தாந்தம் முளைத்தது. காசாளர் ஒருவருக்காகக் காத்திருக்காமல், நம்மிடம் உள்ள பொருட்களை நாமே scanner-ல் காண்பித்து நமக்கான பில்லை உருவாக்கிக் கொள்வது இதன் அடிப்படை. பணம் செலுத்துவது கூட தானியங்கி இயந்திரங்களின் மூலம் சாத்தியமே.
இவ்வாறாக வேக வேகமாக முன்னேறி வரும் சூப்பர் மார்க்கெட் நடவடிக்கைகளில் அடுத்த கட்ட பாய்ச்சலை உருவாக்கியிருக்கிறது, Portable Shopping System என்னும் புதிய முறை.
இதன் மூலம் நமது வாடிக்கை அட்டையை அங்காடி வாயிலில் பயன்படுத்தி மேலே படத்தில் உள்ள கருவியைப் பெற்றுக் கொள்ள முடியும். இதைப் பயன்படுத்தி, அங்காடியின் உள்ளே ஒவ்வொரு பொருளாக நாம் எடுக்கும் போதே அதை scan செய்து விடலாம். ஒவ்வொரு பொருள் எடுக்கப்படுவதையும் இதன் மெமரி பதிவு செய்து கொள்ளும். இறுதியில் பணம் செலுத்துமிடம் வரும்போது, இந்தக் கருவியை அதற்குரிய சாதனத்தில் பொருத்துவத்ன் மூலம் நாம் வாங்கிய அனைத்து பொருட்களுக்காக பில்லை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நேரம் மிச்சமாகிறது. சூப்பர் மார்க்கெட்டுக்கு என்ன நன்மை?
வாடிக்கையாளர்களின் முந்தைய விற்பனை சரித்திரத்தை வைத்து அவர்களுக்கு வாங்குவதற்கான பொருட்களை இந்தக் கருவி சிறிய செய்திகளாக அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கும். வாடிக்கையாளர்கள் எதையேனும் வாங்க மறந்திருந்தாலும் அது நினைவுபடுத்தும். மேலும் சென்ற முறை அந்த வாடிக்கையாளர் சவரப் பசை (shaving cream) வாங்கியிருந்து இந்த முறை சவரப் பசை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கடந்து வாங்காமல் சென்றால் உடனடியாக அவருக்கு அதை நினைவூட்டி வாங்க வைக்கலாம்.
இப்படியாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கணினி மயம் விற்பனைப் பெருக்கலுக்குத் துணை புரிந்து கொண்டிருக்கிறது.
0 comments :
Post a Comment