எல்.ஜி. (LG) கிளாஸ் 4 ஸ்மார்ட் போன்

முழுவதும் உலோகத்தாலான உறைகளுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றை, எல்.ஜி. நிறுவனம், பல ஊகமான தகவல்களை அடுத்து வெளியிட்டுள்ளது. இதன் பெயர் LG Class. 

இதன் 5 அங்குல அளவிலான எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை, 1280× 720 பிக்ஸெல் திறனுடன், ஹை டெபனிஷன் டிஸ்பிளே தருகிறது. வளைவான ஓரங்கள் இருப்பதால், முப்பரிமாண விளைவினை காட்சித் தோற்றத்தில் காண முடிகிறது. 

இதனை இயக்கும் ப்ராசசர், குவாட் கோர் ஸ்நாப்ட்ரேகன் 64 பிட் ப்ராசசர் (Snapdragon 410 (MSM8916)) என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் லாலிபாப். பின்புறக் கேமரா 13 எம்.பி. திறன் கொண்டதாய், எல்.இ.டி. ப்ளாஷ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

முன்புறக் கேமராவின் திறன் 8 எம்.பி. திறனுடையது. இந்த கேமராவில் Gesture Interval Shot, Beauty Shot போன்ற சில சிறப்பு வசதிகள் தரப்பட்டுள்ளன. 

இதில் 2GB LPDDR3 ராம் மெமரி தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 2 டெரா பைட் வரை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். 

ஒரு வாட் திறனுடைய லவுட் ஸ்பீக்கர் துல்லியமான ஒலியைத் தருகிறது. இந்த போனின் தடிமன் 7.4 மிமீ. எடை 147 கிராம். பரிமாணம் 142 x 71.8 x 7.4 மிமீ. எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இதில் தரப்பட்டுள்ளன. 

உலோக உறைகள் இருந்தாலும், எடை குறைவாகவே உள்ளது இதன் சிறப்பு. பவர் பட்டன் மற்றும் ஒலி அளவுக் கட்டுப்பாட்டிற்கான பட்டன்கள், போனின் பின்புறத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. 

நெட்வொர்க் இணைப்பிற்கு, 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.1, ஜி.பி.எஸ். மற்றும் என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.

இதன் உள்ளாக இணைக்கப்பட்ட பேட்டரி 2,050mAh திறன் கொண்டதாக உள்ளது. இந்த குறிப்பினை எழுதும் வரை இதன் விலை அறிவிக்கப்படவில்லை. உத்தேசமாக ரூ. 22,475 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய கூகுள் பிளே ஸ்டோரில் தள்ளுபடி விலை

கூகுள் பிளே ஸ்டோர் இந்தியா, முதல் முறையாக, தான் வழங்கும் அப்ளிகேஷன்களின் விலையை மிகக் குறைத்துள்ளது. 

அப்ளிகேஷன்களின் தொடக்க விலை ரூ.10 மட்டுமே. இந்த செய்தி நம்ப முடியாததாக இருந்தாலும், அதுதான் உண்மை. 

Facetune, Age of Zombies போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள், Fruit Ninja போன்ற கேம்ஸ் ஆகியவை ரூ.10க்குக் கிடைக்கின்றன. Talking Tom சார்ந்த பொருட்கள் ரூ.20க்குக் கிடைக்கின்றன. 

இதுவரை கூடுதலான விலையில் தரப்பட்டுள்ள பல அப்ளிகேஷன்களும், கேம்ஸ்களும் மிகக் குறைந்த விலையில் தரப்படுவதால், மக்கள் அதிகமான எண்ணிக்கையில் இவற்றை டவுண்லோட் செய்து, பயன்படுத்துவார்கள் என கூகுள் பிளே ஸ்டோர் நிர்வாகம் அறிவித்துள்ளது.


ஆப்பிள் தந்த புதிய தொழில் நுட்பங்களும் சாதனங்களும்

சென்ற செப்டம்பர் 9 அன்று, சான் பிரான்சிஸ்கோ நகரில், 7,000 பேர் அமரக் கூடிய Bill Graham Civic Auditorium அரங்கத்தில், தான் நடத்திய விழாவில், ஆப்பிள் நிறுவனம் பல புதிய சாதனங்களையும், அறிமுகமாக இருக்கும் அதன் புதிய தொழில் நுட்பங்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. 

முப்பரிமாண தொடுதல் கொண்ட புதிய ஐபோன் முதல், செறிவான திறன் கொண்ட புதிய ஐ பேட் சாதனம், ஆப்பிள் பென்சில் ஸ்டைலஸ், ஆப்பிள் வாட்ச் என இன்னும் பல புதிய அதிசயங்கள் அங்கு காட்டப்பட்டன. அவை குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன.

ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ்: ''நமக்குப் பழகிய தோற்றத்தை இந்த போன்கள் கொண்டிருந்தாலும், நாங்கள், இவற்றின் அனைத்து அம்சங்களையும் மாற்றி விட்டோம்” என ஆப்பிள் நிறுவனத் தலைமை அதிகாரி, டிம் குக் கூறினார். 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போனை இதுவரை நாம் பயன்படுத்தி வந்த முறையில், தற்போது புதிய மாற்றம் ஒன்று அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. அது, முப்பரிமாண தொடுதல் கொண்ட ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் ப்ளஸ். 

இது, இந்த இரண்டு போன்களிலும், தகவல்களைத் தருவதில் ஒரு புதிய பரிமாணத்தைத் தர இருக்கிறது. போனின் திரை, வெவ்வேறு வகையான தொடுதல் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுகிறது.

எடுத்துக்காட்டாக, போன் திரையில் சற்று கூடுதலாக அழுத்தத்தினைத் தந்தால், ஓர் அப்ளிகேஷனில் போட்டோ ஒன்று காட்டப்படும். இன்னொன்றில் பைல் ஒன்று இன்னொரு அப்ளிகேஷன் வழியே திறக்கப்படும். டாகுமெண்ட் ஐகானில் சற்று அதிகமாக அழுத்தினால், அதன் முன் காட்சி காட்டப்படும். மின் அஞ்சலில் உள்ள முகவரியில் அழுத்தினால், மேப் ஒன்று திறக்கப்படும். 

ஆனால், அதற்காக, இந்த போன்களின் திரை அளவு பெரிதாக்கப்படவில்லை. சென்ற ஆண்டு, எந்த அளவில், இவற்றின் திரை இருந்தனவோ, அதே அளவில் தான் இப்போதும் இவை உள்ளன.

இந்த இரண்டு போன்களிலும் இன்னொரு முக்கிய அம்சம், இதில் தரப்பட்டுள்ள கேமராக்களாகும். ஐபோன் 4 எஸ் போனில், 8 எம்.பி. கேமரா சென்சார் கொடுத்து, அதனையே தொடர்ந்து தந்தது ஆப்பிள். தற்போது இதன் மெகா பிக்ஸெல் திறன் உயர்த்தப்படுள்ளது. 

இந்த இரண்டு போன்களிலும் 12 எம்.பி. பின்புறக் கேமராவும், 5 எம்.பி. முன்புறக் கேமராவும் தரப்பட்டுள்ளன. இதன் போகஸ் பிக்ஸெல்களின் எண்ணிக்கை 50% அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆட்டோ போகஸ் மிக வேகமாக இயங்கும். 

இந்த கூடுதல் அம்சங்களினால், இதுவரை இல்லாத வகையில், ஆப்பிள் போன்கள் மிகத் துல்லியமாக போட்டோக்களை எடுத்துக் கொடுக்கும். ஆப்பிள் போன்களுக்கே உரிய பனாரமிக் ஷாட் என அழைக்கப்படும் “அகன்ற காட்சி” புகைப்படங்கள், 63 மெகா பிக்ஸெல் ரெசல்யூசனில் கிடைக்கும். வீடியோஸ் 4கே தன்மையில் கிடைக்கும். 

செல்பி கேமராவும், இம்முறை அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் போன்களில், இது 1.2 எம்.பி. திறனுடன் இருந்தது. இம்முறை, இது 5 எம்.பி. ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்புறக் கேமராவில் எல்.இ.டி. ப்ளாஷ் இல்லை. 

இருப்பினும், Retina Flash என்னும் தொழில் நுட்பத்தினை, ஆப்பிள் இந்த போன்களில் தந்துள்ளது. இந்த தொழில் நுட்பம், திரையின் ஒளிப் பொலிவினை மூன்று மடங்கு அதிகரிக்கிறது. இது பின்புறம் உள்ள கேமராவின் டூயல் எல்.இ.டி.ப்ளாஷ் திறனுக்கு இணையானது என்று ஆப்பிள் அறிவித்துள்ளது. 

இந்த கேமராக்களில், Live Photos என்னும் புதிய தொழில் நுட்பத்தினையும், ஆப்பிள் இந்த கேமராக்களில் தந்துள்ளது. போட்டோ ஒன்றைக் கிளிக் செய்வதற்கு முன்னும், பின்னும் 1.5 விநாடி விடியோ காட்சியினையும் பதிவு செய்கிறது. எடுத்த போட்டோவினை, மீண்டும் பார்க்கையில், போட்டோவிற்கு முன்னும் பின்னும், இந்த நொடிப்பொழுது விடியோ காட்டப்படுகிறது. 

அப்ளிகேஷன்களை இயக்கும் ப்ராசசர் சக்தி, இப்போது 70% அதிகரிக்கப்பட்டுள்ளது. விரல் ரேகை உணர்ந்து செயல்படும் செயலி, இரண்டு மடங்கு கூடுதலான வேகத்தில் இயங்குகிறது. 

போன்களில், புதியதாக இளஞ்சிகப்பு கலந்த தங்க வண்ண போன் ஒன்றும் அறிமுகமாகியுள்ளது. இது ஐபோன் 6 எஸ் ப்ளஸ் போனில் மட்டும் வழங்கப்படுகிறது. வழக்கம் போல, இவை இரண்டும் ஸ்டாண்டர்ட் சில்வர், கோல்ட் மற்றும் ஸ்பேஸ் கிரே வண்ணங்களில் கிடைக்கின்றன.

வடிவத்தில், முன்பு வந்த போன்கள் போல இருந்தாலும், இவற்றில் சற்று பலமான கெட்டிப் பொருளால், (aircraft-grade 7000 aluminium alloy) மேலே உள்ள ஷெல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது அடர்த்தியில் குறைவாகவும், எடையில் சிறிதளவாகவும் இருந்தாலும், கடினமான பொருளாக இருந்து போனைக் காத்து நிற்கும். அதே போல, திரை மேல் உள்ள கண்ணாடியும் கடினமான ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது. 

ப்ராசசர், விரல் ரேகை உணர் செயலாக்கம், 4ஜி நெட்வொர்க் செயல்பாடு, வை பி செயல்பாடு என அனைத்து செயலிகளும் இரு மடங்கு கூடுதலாகத் திறன் கொண்டு செயல்படுகின்றன.

அமெரிக்காவில், வழக்கமாக, ஏதேனும் மொபைல் சேவை நிறுவனத்தின் சேவையுடன் தான் மொபைல் போன்களை வாங்க வேண்டும். அவ்வாறு கட்டுப்பாடு இல்லாத மொபைல் போன்கள் ஒரு சில மாடல்களில் மட்டுமே தரப்படும். இம்முறை இந்த இரண்டு போன்களும், கட்டுப்பாடு இல்லாத நிலையிலும் விற்பனைக்கு வருகின்றன. 

ஐபோன் 6 எஸ் 16 ஜி.பி. 32 ஜி.பி. மற்றும் 64 ஜி.பி. முறையே டாலர் 649, 749 மறும் 849 என்ற விலையில் கிடைக்கின்றன. இதே போல ஐபோன் 6 எஸ் ப்ளஸ், இதே ஸ்டோரேஜ் அளவிற்கு முறையே, 749, 849 மற்றும் 949 டாலர் என்ற விலையில் கிடைக்கும். 

இந்தியாவில் இந்த போன்களின் விலையினைச் சில வர்த்தக நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ் சில்வர் 64 ஜி.பி. விலை ரூ. 63,988. ஐபோன் 6 ப்ளஸ் 16 ஜி.பி. ரூ. 50,746. ஐபோன் 6 ப்ளஸ் சில்வர் 16 ஜி.பி. ரூ. 71,500.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் ஜப்பான் நாடுகளில், இந்த போன்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12ல் தொடங்கியது. 

இவை கடைகளில் செப்டம்பர் 25 முதல் கிடைக்கத் தொடங்கும். இந்த புதிய மாடல்கள், இந்தியாவிற்கு எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 


கூகுளின் புதிய இலச்சினை

கூகுள் தன் நிறுவனங்களின் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, அனைத்திற்கும் முதன்மையானதாக 'ஆல்பபெட்' என்னும் நிறுவனத்தை உருவாக்கியது. இந்த மாற்றத்தின் போது கூகுள் நிறுவனப் பிரிவின் தலைவராக, தமிழர் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். 

இப்போது, கூகுள் நிறுவனப் பிரிவின் இலச்சினை மாற்றப்பட்டு புதிய இலச்சினை ஒன்று வெளியாகியுள்ளது.

மாற்றி அமைக்கப்பட்ட இலச்சினையிலும் அதே நீலம், சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை வண்ணங்கள் உள்ளன. இந்த நிறங்கள், கூகுள் நிறுவனத்தின் கடந்த 17 ஆண்டுகள் வரலாற்றில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டவையாகும்.

ஒரு காலத்தில், கூகுள் தேடல் சாதனமாகப் புகழ் பெற்று வளர்ந்து கொண்டிருந்த நிலையில், அதனைப் பெர்சனல் கம்ப்யூட்டர் வழியாக மட்டுமே பெற்று வந்தோம். தற்போது, கூகுள் தளத்தினைப் பல சாதனங்கள் வழியாக, பல இயக்க முறைமைகள் வழியாகப் பெற்று வருகிறோம். 

ஒரே நாளில், பலவகை சாதனங்கள் மூலம் ஒருவர் கூகுள் தளத்திற்கு செல்வதையும் பார்க்கலாம். டேப்ளட் பி.சி.,மொபைல் போன்கள் மட்டுமின்றி, இப்போது தொலைக் காட்சிப் பெட்டி, கை கடிகாரங்கள், ஏன் கார் டேஷ் போர்ட் வழியாகக் கூட, கூகுள் தளத்தினைக் காண்கிறோம். இவை அனைத்திலும் தரப்படும் சேவைகள், ஒரே நிறுவனத்தினிடமிருந்து வருகின்றன என்ற எண்ணத்தைக் காட்ட, கூகுள் தனது இலச்சினையை மாற்றியுள்ளது.

எனவே, சிறிய திரைகளில் கூட, கூகுள் நமக்காகச் செயல்படும் தருணத்தை நன்கு காட்ட, இந்த இலச்சினை மாற்றப்பட்டுள்ளதாக கூகுள் தன் வலைமனைச் செய்தியில் அறிவித்துள்ளது.

மொபைல்போன் போன்ற சிறிய சாதனங்களில், புதிய இலச்சினையில், எழுத்து 'G' பெரிய (Capital) எழுத்தாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு வெள்ளை வண்ணத்தில், சிறிய (lower case letter) எழுத்தாக இருந்தது. கூகுள் நிறுவனத்தின் வேறு சேவைகள் தரப்படுகையிலும், நம் ஒலி வழி கட்டளைக்குக் கூகுள் செயல்படும்போதும், இந்த எழுத்தினைச் சுற்றி சிறிய அளவில் வண்ணப் புள்ளிகள் சுழன்று வருவதனைக் காணலாம். இதுவும் புதிய மாற்றமே.

முதன் முதலில், 1977ஆம் ஆண்டில், கூகுள், இலச்சினை ஒன்றைத் தனக்கென வெளிக் காட்டியது. அது அப்போதைய வேர்ட் ஆர்ட் என்னும் டூல் மூலம் உருவானது போன்ற தோற்றத்தினைக் கொண்டிருந்தது. இது செப்டம்பர் 1998 வரை பயன்படுத்தப்பட்டது. பின்னர், அக்டோபர் 1998 முதல் மே, 1999 வரை இருந்த இலச்சினையில், ஆச்சரியக்குறி ஒன்று இறுதியில் இருந்தது. 

பின்னர் பத்தாண்டுகளுக்கு, முப்பரிமாண அடிப்படையில் அமைக்கப்பட்டு, மே 31, 1999 முதல், மே 5, 2010 வரை பயன்படுத்தப்பட்டது. அடுத்ததாக வந்த இலச்சினையில், எழுத்துகள் எளிமையாக்கப்பட்டு, ஒரு 'O' மட்டும் ஆரஞ்சு வண்ணத்தில் அமைந்திருந்தது. இது மே 6, 2010 முதல் செப்டம்பர் 18, 2013 வரை இருந்தது. 

இறுதியாக தற்போது விலக்கப்பட்ட இலச்சினை செப்டம்பர் 19, 2013 முதல், செப்டம்பர் 1, 2015 வரை இருந்தது. இப்போது காட்டப்படும் இலச்சினை செப்டம்பர் 2, 2015 முதல் இருந்து வருகிறது. கூகுளின் இலச்சினை சில சோக நிகழ்வுகளைக் காட்டுகையில், வண்ணங்களில் இல்லாமல், அந்த நிகழ்வுகள் நடந்த நாட்டினைச் சுற்றிக் காட்டப்பட்டு வந்தது. 

முதன் முதலாக,போலந்து நாட்டில் நடைபெற்ற விமான விபத்தின் போது கூகுள் போலந்து என்ற பிரிவின் லோகோ, எந்த வண்ணத்திலும் இல்லாமல் இருந்தது. இந்த விபத்தில், போலந்து நாட்டின் அதிபர் மரணமடைந்தார். அடுத்து சீனாவில் நடந்த பூகம்பத்தில் பலர் இறந்த போது இதே போலக் காட்டப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டின் சில விசேஷ தினங்களில், தன் மாறா நிலையில் உள்ள இலச்சினையை மாற்றி, கூகுள் டூடில் என அவ்வப்போது அந்த தினங்களின் நிகழ்வுகளுக்கேற்ப சிறிய அனிமேஷன் படங்களாகக் காட்டப்படுவதனையும் நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.


மைக்ரோசாப்ட் மூடிய விண்டோஸ் போன் 8.1 செயலிகள்



தன்னுடைய விண்டோஸ் அப்ளிகேஷன் ஸ்டோரில் (Windows App Store) இதுவரை தரப்படும் சில விண்டோஸ் மொபைல் சார்ந்த செயலிகளை மைக்ரோசாப்ட் நீக்க உள்ளது. 

லூமியா போன்களில் கேமரா சார்ந்த செயலிகள் இவை. இந்த செயலிகள் விண்டோஸ் போன் 8.1 சிஸ்டத்தில் செயல்படுபவை. 

லூமியா ஸ்டோரி டெல்லர் (Lumia Storyteller), லூமியா பீமர் (Lumia Beamer), போட்டோ பீமர் (Photobeamer) மற்றும் லூமியா ரிபோகஸ் (Lumia Refocus) ஆகிய செயலிகள் வரும் அக்டோபர் 30க்குப் பின், விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்காது. 

ஏற்கனவே, இவற்றைப் பெற்று பதிந்து இயக்குபவர்களுக்கும், இது குறித்த எந்த சப்போர்ட் பைலும் வழங்கப்பட மாட்டாது. இவை அப்டேட் செய்யப்படவும் மாட்டாது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால், மொபைல் போன்களில் இயங்கிக் கொண்டிருந்தால், மைக்ரோசாப்ட் இவற்றை நீக்காது. 

“மிகச் சிறந்த வகையில் செயல்படும் செயலிகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தருவதை நாங்கள் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம். 

அதன்படி, இந்த செயலிகளுக்குப் பதிலாக விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தினையும், அதில் இயங்கும் இந்த பதிலி செயலிகளையும் தருகிறோம்” என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. 

லூமியாவில் இயங்கும் செயலிகள் பல விண்டோஸ் 10ல் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.


ஆப்பிள் நிறுவனத்தின் அதிசய உலகம்

மறைந்த ஆப்பிள் நிறுவன அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் மரணத்திற்கு முன், 2006 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்திற்கென, 175 ஏக்கர் பரப்பளவில், அலுவலக வளாகம் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தார். 

உலகிலேயே தனித்துச் சொல்லப்படும் அளவிற்கு அது இருக்கும் என்றார். அவரின் கனவு விரைவில் நனவாகப் போகிறது. இதனை 'ஆப்பிள் வளாகம் இரண்டு (Apple Campus 2)' என அவர் அழைத்தார். 

அந்த வளாகம் தொடர்ந்து கட்டப்பட்டு, தற்போது அனைத்து வேலைகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. அடுத்த 2016 ஆண்டு முடிவதற்குள் அல்லது 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த அலுவலகம் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வளாகத்தினை விண்வெளி ஓட வளாகம் (ஸ்பேஸ் ஷிப்) என்றே அனைவரும் அழைக்கின்றனர். இதன் தோற்றம் அந்த வகையில் அமைந்துள்ளது. 

இது 176 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இடத்தில் அமைக்கப்படுகிறது. அலுவலக வளாகம் 28 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைகிறது. ஒரே கட்டடத்தில், ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் 13,000 பேர் பணியாற்றுவார்கள். சுற்றி வந்தால், இது ஒரு மைல் தூரத்திற்கும் சற்று அதிகமாகவே இருக்கும்.

வட்ட வடிவ வளாகமாக அமைக்கப்படும் இந்த கட்டடம் நான்கு மாடிகளால் ஆனது. இதன் இரு பக்க சுவர்களும் கெட்டியான கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கு பணி புரிபவர்கள், இரண்டு பக்கமும் உள்ள இயற்கைச் சூழலைக் கண்டவாறே பணியாற்றலாம். 

கண்ணாடிகளால் ஆன மாடிப் படிக்கட்டுகளை அமைக்கும் சீலே (Seele) நிறுவனத்தின் கட்டட பொறியாளர் பீட்டர் ஆர்பர் இது பற்றிக் குறிப்பிடுகையில், இந்த கட்டடத்தில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகளை வரிசைப்படுத்தினால், ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான Foster+Partners இந்த வளாகத்தினைக் கட்டித் தரும் பொறுப்பினை ஏற்றுள்ளது. உலகின் மிகச் சிறந்த, பல பெரிய கட்டடங்களைக் கட்டிய அனுபவம் கொண்டது இந்த நிறுவனம். இந்தக் கட்டடத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளன. 

மிகப் பெரிய வளாகமாக அமைக்கப்பட்டுள்ளதால், ஆங்காங்கே உணவு நிலையங்களும், நடைவெளிகளும், நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய உணவகம், அங்குள்ள பரந்த புல்வெளியை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் பரப்பளவு மட்டும் 21,468 சதுர அடியாகும். Caffè Macs என அழைக்கப்படும் இந்த உணவகம், ஆப்பிள் நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே. இரண்டு மாடிகளில் இது அமைகிறது. பொது மக்கள், இந்த வளாகத்தினுள் நுழைய அனுமதி இல்லை. ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இதன் ஊழியர்களும், ஆய்வாளர்களும் கலந்தாலோசிக்கும் வகையில், பொதுமக்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புல்வெளியின் கீழாக, பூமிக்கு அடியில் கார்களை நிறுத்துமிடம் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 14,200 கார்களை நிறுத்தலாம்.இதனால், கார்கள் நிறுத்தப்பட்டு அவை வளாகத்தின் அழகான தோற்றத்தைக் குறைக்கும் நிலையே ஏற்படாது. வளாகத்தைச் சுற்றி 7,000 மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பார்ப்பதற்கு இந்த வளாகம் ஒரு மிகப் பெரிய பூங்காவாக இருக்கும். மொத்தப் பரப்பளவில், 80% இடம் 'பசுமை வளாகம்' ஆக அமையும். 

இந்த வளாகம் அமைய இன்றைய திட்ட மதிப்பீட்டின்படி 500 கோடி டாலர் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது தேவையற்ற ஆடம்பரம் என ஆப்பிள் நிறுவன பங்கு முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் தனி இருப்பு நிதியில் 1% என்பது நூறு கோடி டாலர் ஆகும். இருந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இங்கு அமையும் உடற்பயிற்சி மையம் 7.5 கோடி டாலர் செலவில் அமைக்கப்படுகிறது. இதனை சிலிகான் பள்ளத்தாக்கில் வசிக்கும் 20 ஆயிரம் ஆப்பிள் நிறுவனத்தினர் பயன்படுத்தலாம். 

வளாகத்தைச் சுற்றி சுற்றி, நடை பயிற்சி மற்றும் ஓடும் பயிற்சி மேற்கொள்ள பல மைல்கள் அளவிலான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்திற்குள்ளாக ஊழியர்கள் சென்று வருவதற்கெனத் தனியே 1,000 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படும்.

இது பயன்பாட்டிற்கு வந்த பின்னரும், குபர்டீனோ நகரில் உள்ள தற்போதைய ஆப்பிள் நிறுவன வளாகம் அப்படியே இருக்கும். 

இடிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மியூசியம் ஒன்று அமைக்கப்படும் என சிலர் தவறாகக் கருத்து தெரிவித்து வந்தனர். அதற்கு 'ஆப்பிள் மனித இனத்தின் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதில் தான் பாடுபடும்; கடந்த காலத்தைக் கொண்டாடாது' எனப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் பேர் ஒருங்கே அமர்ந்து காணக் கூடிய அரங்கம் ஒன்று, பூமிக்கடியில் எழுப்பப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் சோதனைக் கூடங்கள் பல லட்சம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வளாகத்தில் யாருக்கும் புகை பிடிக்க அனுமதி இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் இதன் திட்டம் குறித்துப் பேசுகையில், இதனை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். (பார்க்க: https://www.youtube.com/watch?v=oPzVsrgaxmc) தன் பெற்றோர்கள் இருவரும், புகை பிடிக்கும் பழக்கத்தால், நுரையீரல் புற்று நோயால் இறந்ததாகவும், அதனால், புகை பிடிப்பது மனிதனுக்கு ஆகாது எனவும், அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இங்கு ஏறத்தாழ 7 லட்சம் சதுர அடி அளவில் சூரிய வெப்பத்திலிருந்து மின் சக்தியை உருவாக்கும் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகம் முழுவதும் இயங்குவதற்குத் தேவையான மின் சக்தியினை இந்த பேனல்கள் தரும்.

பல புகைப்படக் கலைஞர்கள் மற்றும் விடியோ தயாரிப்பாளர்கள், ஆளில்லா சிறிய விமானத்தினை அனுப்பி, இந்த வளாகம் கட்டப்படுகையில், அதன் பல நிலைகளை போட்டோவாக எடுத்து, விடியோ படங்களாக யு ட்யூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர். 

மாதிரிக்கு ஒன்று https://www.youtube.com/watch?v=mj8cI4G5_PQ என்ற தளத்தில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு மிகப் பிரம்மிப்பாகவும் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புகழை அதன் சாதனங்கள், மனித இனச் சரித்திரத்தில் பதித்தாலும், இந்த வளாகம் கூடுதலாகப் புகழை இணைக்கும் என்பதில் ஐயமில்லை.


விண்டோஸ் 10ல் நீக்கப்பட்ட விண் 8 சறுக்கல்கள்

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின்னர், தன் தொடு உணர் திரை தொழில் நுட்பத்துடன், விண்டோஸ் 8 சிஸ்டத்தை, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியது. 

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இயக்கமும் வெகு சிறப்பாக இருந்தது. புதிய வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம், டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் கிடைத்து பலர் மகிழ்ச்சியுடன் மாறிக் கொண்டனர். 

ஆனால், சில பழகிப்போன விஷயங்கள் இல்லாதது மக்களுக்கு எரிச்சலைத் தந்தது. அவை அவர்களின் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மிகவும் ஊறிப்போன வசதிகளாக இருந்தமையால், விண்டோஸ் 8 சிஸ்டம் முழுமையும் மக்களால் ஒதுக்கப்பட்டது. 

மாறியவர்கள் வேறு வழியில்லாமல், தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். அவர்களின் பிரச்னைகளை அறிந்த மைக்ரோசாப்ட் தன் தவறுகளை உணர்ந்து, புதியதாக அறிமுகமான விண்டோஸ் 10 சிஸ்டத்தில், அதற்கான பரிகாரத்தை மேற்கொண்டது. 

எப்படியும், தன் பயனாளர்களைத் தன் கைகளுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் அனைத்து அம்சங்களையும் அலசி, பல வழிகளில் இந்த இலக்கினை அடைய, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை வடிவமைத்து அளித்துள்ளது. 

நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்துபவராக இருந்து, விண்டோஸ் 10க்கு மாறலாமா வேண்டாமா என மதில்மேல் பூனையாக உள்ளீர்களா? இதோ, விண்டோஸ் 10ல் நீக்கப்பட்ட விண்டோஸ் 8 உறுத்தல்களையும், அவற்றின் இடத்தில் இடம் பெற்றுள்ள விண்டோஸ் 10 அம்சங்களையும் இங்கு பார்க்கலாம்.

ஸ்டார்ட் ஸ்கிரீன் இடத்தில் ஸ்டார்ட் மெனு: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், மிக மோசமாகப் பயனாளர்களை எரிச்சல் அடைய வைத்தது, சிஸ்டம் இயங்கத் தொடங்கியவுடன், நேராக அதன் Start ஸ்கிரீன் திறக்கப்பட்டு நமக்குக் காட்சி அளித்ததுதான். 

உங்களிடம் டேப்ளட் பி.சி. அல்லது மொபைல் போன் இருந்தால், இது சரியானது என்ற எண்ணம் ஏற்படும். ஆனால், பாரம்பரியமாக நாம் பயன்படுத்திப் பழகிப் போன, கீ போர்ட் மற்றும் மவுஸ் இணைத்துச் செயல்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டரில் இந்த ஸ்கிரீன் தோற்றம் அந்நியமாக இருந்தது. 

நம் கைகளைக் கட்டிப் போட்டது போல உணர்வு ஏற்பட்டது. ஏன் என்றால், வழக்கமாக நாம் பயன்படுத்திய ஸ்டார்ட் மெனு அதில் இல்லை. மைக்ரோசாப்ட் இதனை அடுத்து வந்த விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் ஒரு மாதிரியாகச் சரிப்படுத்தியது. 

அப்போது கூட ஸ்டார்ட் மெனு தராமல், ஸ்டார்ட் பட்டனைத் தந்தது. முழு மெனு தரப்படவில்லை. இதனை மக்கள் விரும்பவில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொறியாளர்களுக்குத் தெரிய வர, விண்டோஸ் 10ல், ஸ்டார்ட் மெனுவினை இணைத்துவிட்டனர். அத்துடன், விண்டோஸ் 8ல் மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட செயலிகளுக்கான மற்றும் உயிர்த்துடிப்புடன் இயங்கும் டைல்ஸ் கட்டங்களும் தரப்பட்டுள்ளன.

சார்ம்ஸ் பார் (Charms Bar) இடத்தில் ஆக் ஷன் செண்டர் (Action Center): விண்டோஸ் 8 வெளியானபோது, அதனை வடிவமைத்தவர்கள் தாங்கள் தரும் மிக அருமையான வசதி என்று சார்ம்ஸ் பார் வசதியைக் குறிப்பிட்டனர். இது தொடு உணர் திரை உள்ள சிஸ்டங்களுக்குத் தான் சரியானதாக இருந்தது. 

டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வைத்திருந்தவர்கள், இதனை அவ்வளவாகப் பயன்படுத்துவதே இல்லை. ஆனால், நாம் எதிர்பாராத நேரத்தில், இந்த சார்ம்ஸ் பார் தானாக எழுந்து வந்து இம்சை தருவதாகவே பயனாளர்கள் உணர்ந்தனர். 

எனவே, இது விண்டோஸ் 10 சிஸ்டத்தில் நீக்கப்பட்டுவிட்டது. அதனிடத்தில் Action Center தரப்பட்டுள்ளது. இங்கு இமெயில், ட்விட்டர், சிஸ்டம் குறித்த அறிவிப்புகள் மற்றும் பிற அப்ளிகேஷன் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. இதனை நாம் வேண்டும் என்றால் பார்க்கவும், விரும்பாத நேரத்தில் அழுத்தி வைக்கவும் கீ தரப்பட்டுள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இடத்தில் எட்ஜ் பிரவுசர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இருந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இரண்டு பதிப்புகளுக்குப் பதிலாக, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10ல், எட்ஜ் பிரவுசரைத் தந்துள்ளது. விண்டோஸ் 8ல் இருந்த ஒரு இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு தொடு உணர் திரைகளுக்கானது. இன்னொன்று, வழக்கமான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இயக்கத்திற்கானது. ஆனால், இந்த இரு பதிப்புகளின் செயல்பாடு வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருந்து இயங்கியது. 

நாம் இணைய தளத்திற்கான முகவரி லிங்க்கைக் கிளிக் செய்தால், எந்த பதிப்பு அதனை நமக்குத் தரப்போகிறது என்பது தெரியாது. இந்தக் குழப்பமும், பிரவுசர்களும் இருந்த இடத்தில், முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் இயங்கும் எட்ஜ் பிரவுசர் தரப்பட்டுள்ளது. பழைய தொழில் நுட்பத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. 

எட்ஜ் பிரவுசர் நம் எதிர்பார்ப்புக்கேற்றபடி செயல்படுகிறது. மிக வேகமாகவும் இயங்குகிறது. 


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes