பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும்


madhu-_7_

உலகம் பொருளாதார நெருக்கடியின் பிடியில் சிக்கி முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது. ஆலமரம் என கருதப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரம் அடியோடு சாய்ந்து அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நீண்ட நெடிய நெருக்கடி நிலையில் விழுந்து கிடக்கிறது.

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி உலகெங்கும் சல்லி வேர் பரப்பி உலகின் எல்லா பாகங்களிலும் அதன் பாதிப்பு பலமாகவே இருக்கிறது.

நிறுவனங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு தினமும் ஆயிரக்கணக்கான ஆட்களை வேலையை விட்டு உதறிக்கொண்டே இருக்கிறது. வீதியில் வேலை தேடுவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.

கடுமையான நெருக்கடியும், வேலை வாய்ப்பின்மையும் மக்களை கலங்கடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உண்மையான திறமையும், அதை சிறப்பாக வெளிப்படுத்தத் தெரிந்திருத்தலும் அவசியமாகிறது.

அதற்கெல்லாம் முன்பு நமது கையிலிருக்கும் பயோடேட்டா மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டும். பயோடேட்டாவைப் பார்த்தவுடன், “இந்த நபர் தான் நமது வேலைக்குச் சரியான ஆள்” என நிறுவனங்கள் நினைக்க வேண்டும்.

நம்பினால் நம்புங்கள், பத்து முதல் பதினைந்து வினாடிகளில் ஒரு பயோடேட்டா அங்கீகரிக்கப்படும், அல்லது நிராகரிக்கப்படும் என்பது தான் பொதுவான உண்மை.

அதற்கு என்ன செய்யலாம் ?

1. நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒரே செயலை அவரவர் பாணியில் பெயரிட்டு அழைப்பார்கள். எனவே நிறுவனங்கள் பயன்படுத்தும் சொற்றொடர்கள் உங்கள் பயோடேட்டாவில் இருப்பது அவசியம். உங்கள் பயோடேட்டாவில் இருக்கும் செய்திகளை வாசித்து அதன் வாக்கிய அமைப்புகள், பெயர்கள் போன்றவற்றை நிறுவனம் பயன்படுத்தும் பெயர்களாகவும், சொற்களாகவும் மாற்றுங்கள்.

2. நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட திறமையை எதிர்பார்ப்பார்கள். எனவே உங்கள் பயோடேட்டாவில் அந்தந்த செயல்களை முதன்மைப் படுத்துங்கள். உங்கள் பயோடேட்டா குறிப்பிட்ட வேலைக்கு நீங்கள் தகுதியானவரா என்பதை காண்பிக்கத் தான், உங்கள் வரலாறை எழுத அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

3. குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே விண்ணப்பியுங்கள். குறிப்பாக இணையம் மூலமாக விண்ணப்பிக்கிறீர்களெனில் மிகவும் தேர்வு செய்து விண்ணப்பியுங்கள். நீங்கள் இலட்சிய வாதிபோல தோற்றமளிக்க வேண்டுமே தவிர, ஏதோ ஒரு வேலை  கிடைத்தால் போதும் என அலைந்து திரிபவராய் தோற்றமளிக்கக் கூடாது.

4. பயோடேட்டாவின் முதல் பக்கம் மிக மிக முக்கியமானது. பெரும்பாலான நிறுவனங்கள் முதல் பக்கத்தைப் பார்த்தவுடன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ செய்கின்றன. எனவே முதல் பக்கத்தில் முக்கியமான அனைத்து செய்திகளும் இடம்பெறல் அவசியம். குறிப்பாக உங்கள் திறமை, அனுபவம், கல்வி, பெற்ற விருதுகள் போன்றவை

5. பயோடேட்டா தெளிவாக, போதிய இடைவெளியுடன் வாசிக்க மிகவும் எளிதாக இருக்க வேண்டும்.  எழுத்துருக்கள் தெளிவாகவும், கண்ணை உறுத்தாத அளவிலும் இருத்தல் அவசியம். தேவையற்ற அலங்கார எழுத்துருக்களை விலக்குங்கள்.

6. உங்களுக்கு திறமை எதிலெல்லாம் உண்டென நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ அந்தத் திறமை எப்படி வந்தது என்பதையும் குறிப்பிடுங்கள். அதுவே ஒரு முதல் நம்பிக்கை உருவாக காரணமாகும்.

7. தேவையற்ற பகுதிகளை வெட்டி விடுவதில் ஈவு இரக்கம் காட்டாதீர்கள். எது தேவையோ அது மட்டுமே உங்கள் பயோடேட்டாவில் இருக்க வேண்டும்.

8. ஓரிரு பக்கங்களில் உங்கள் பயோடேட்டாவை சுருக்க முடிந்தால் அதுவே மிகச் சிறப்பானது. முக்கியமான வாக்கியங்களை அல்லது வார்த்தைகளைத் தடிமனான எழுத்தில் போடுங்கள்.

9. எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருத்தல் மிக அவசியம். தெளிவான வாக்கிய அமைப்பு, நல்ல ஒளியச்சு அல்லது நகல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.

10. நீங்கள் முன்பு பணிபுரிந்த அலுவலகங்களின் தொடர்பு எண்கள், அதிலுள்ள முக்கியமான நபர்களின் தொடர்பு எண்கள் போன்றவற்றை அளிப்பதும் உங்கள் மீதான நம்பகத் தன்மையை அதிகப்படுத்தும்.
உங்கள் பயோடேட்டா உங்களுடைய வேலைக்கான முதல் சுவடு. அதைச் சரியான திசையில் எடுத்து வைப்பதில் தான் இருக்கிறது பயணத்தின் வெற்றியும் தோல்வியும்.


2 comments :

Information at August 28, 2015 at 12:29 PM said...

Mikavum Arumai

Information at August 28, 2015 at 12:30 PM said...

Mikavum Arumai

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes