வடக்கா? வேண்டாம்


இந்தியா ஆன்மீகத்தில் மிகச் சிறந்த நாடு. நம் முன்னோர்கள் ஏற்படுத்திய பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிக்கோள் உடையதாகும். அந்தப் பழக்கத்தை கடைபிடிக்க ஒரு கதை சொல்லப்படும். இதன் நோக்கம் சிறு வயதிலிருந்தே அந்தப் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதே. அந்தப் பழக்கத்தைக் கடைபிடிப்பதால் நாம் அடையும் அனுகூலங்கள் பல. இவ்வகையான பழக்க வழக்கங்களில் ஒன்று தலையை வட திசையில் வைத்துப் படுப்பது தவறு என்பது. இதற்கு ஒரு கதையும் கூறுவர்.

1. வட திசையில் தலை வைத்துப் படுக்கக் கூடாது. ஏன்? வடதிசையில் தலையை வைத்துப் படுக்கப்போன பேரனைப் பார்த்து, "அப்படிப் படுக்காதே, அது தவறு. மற்ற திசையில் தலை வைத்துப் படு" என்றாள் பாட்டி. "ஏன் படுத்தால் என்னவாம்?" என்று கேட்டான் பேரன். "அப்படிப் படுத்தால் உன் தலை காணாமல் போய்விடும்" என்று சொல்லி ஒரு கதையும் சொன்னாள்.

பார்வதி தேவி ஒரு சமயம் வெளியே செல்ல வேண்டியிருந்தது. வீட்டைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் மண்ணால் ஒரு பொம்மை செய்து அதற்கு உயிர் கொடுத்துக் காவலுக்கு வைத்தாள். யார் வந்தாலும் உள்ளே விடாதே என்று சொல்லிப் போனாள். சிறிது நேரத்தில் சிவன் வந்தார். அவர் வீட்டிற்குள் செல்வதைக் காவல் காத்திருந்த பையன் தடுத்தான். சிவன் என்ன கூறியும் உள்ளே செல்ல விடவில்லை. கோபம் கொண்ட சிவபெருமான் அந்தப் பையன் தலையை வெட்டி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார். திரும்பி வந்த பார்வதி தேவி பையன் இறந்து கிடப்பதைப் பார்த்து திடுக்கிட்டாள். சிவனை விசாரித்தபோது அவர் நடந்ததைச் சொன்னார். நான் உருவாக்கிய பையனை அழித்து விட்டீர்களே! அவனை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்று பிடிவாதம் செய்தாள். உடனே சிவன் பூத கணங்களைக் கூப்பிட்டு எவனொருவன் வட திசையில் தலை வைத்துப் படுத்திருக்கிறானோ அவன் தலையைக் கொய்து எடுத்து வாருங்கள் என்று பணித்தார். பூதகணங்கள் தேடி அலைந்ததில் ஒரே ஒரு யானை அவ்விதம் படுத்திருப்பதைப் பார்த்து அதன் தலையை வெட்டி கொண்டு வந்தனர். சிவன் அந்த யானைத் தலையைப் பையன் உடம்பில் பொருத்தி அவனுக்கு உயிர் கொடுத்தார். அவர்தான் பிள்ளையார். ஆகையால் நீ வடதிசையில் தலை வைத்துப் படுத்தால் தலைக்கு ஆபத்து என்று பாட்டி பேரனுக்குச் சொன்னாள்.

இதை நாம் இப்பொழுது விஞ்ஞான பூர்வமாக ஆராய்வோம். நாம் வலு உள்ளவர்களாக இருப்பதற்குத் தேவையான இரும்பு, கோபால்ட் மற்றும் நிக்கல் முதலியவை சிறிய அளவில் நம்முடைய உடலில் உள்ளன. பூமியில் 0-40 பாகைக்கு உட்பட்ட இடங்களில் பூமியின் காந்தப் புல கிடைத்தளக் கூறு கணிசமான அளவில் உள்ளது. அதன் அளவு பூமத்திய ரேகையில் 0.38 ஆயர்ஸ்டெட் (Oersteds - C.G.S.Units) ஆகவும் 40 பாகையில் 0.31 ஆயர்ஸ்டெட் ஆகவும் உள்ளது. அதாவது ஒரு ஏலேடு காந்தமுனையை (unit pole) இந்த 0-40 பாகைக்குள் வைத்தால் அதனுடைய தன்மைக்கு ஏற்ப கவர்ச்சி அல்லது விலக்கு விசை 0.38 லிருந்து 0.31 டைன்ஸ் (dynes) வரை அந்த இடத்தின் அட்சக்கோட்டைப் பொறுத்து இருக்கும். காந்தப் புலக் கோடுகளின் விசை பூமியின் தெற்கு வடக்காகச் செல்லுகிறது. மனிதன் வடக்கு நோக்கித் தலை வைத்துத் தூங்கும் போது இந்த விசைக்கோடுகள் மனிதனின் உடல் மூலமும், செரிப்ரம்(ceribrum) வழியாகவும் செல்கிறது. ஒவ்வொரு கணத்திலும் உடம்பில் உள்ள இரும்பு, கோபால்ட், நிக்கல் இவை காந்தம் ஆக்கப்படுகி்றன (get magnetised). சிறிது நேரத்தில் நம் உடலே சிறு சிறு காந்தங்கள் உள்ளதாக ஆகிவிடுகிறது. இந்த சிறு காந்தங்கள் எல்லாம் சேர்ந்து காந்தத் திருப்புத்திறன் 'எம். (of magnetic moment M) உடைய காந்தமாகிவிடுகிறது. இதன் அளவு காந்த முனை வலிமையும் காந்தத்தின் நீளத்தின் பெருக்குத்தொகையும் ஆகும் (is the resultant of pole strength multiplied by the length of the magnet). இதனால் மனித உடலானது எம் எச் டைன்ஸ் (MH dynes) காந்த விசைக்கு உட்படுகிறது. 'எச்' என்பது பூமியின் காந்தப் புலக் கிடைத்தளக் கூறு. அதாவது காந்தப் புல செறிவு. (Horizontal component of earth's magnetc field).

வட திசையில் தலை வைத்துத் தூங்கும்போது அவன் காந்த விசைக்கோட்டுடன் 0 பாகை ஏற்படுத்துகிறான். ஆகையால் விசையின் கூறு தேகத்தின் வழியே எம் எச் கோசைன் 0 ஆகும். கோசைன் 0 = 1 ஆகையால் முழுமையாக எம் எச் டைன்ஸ் விசை தேகத்தின் செரிப்ரம் வழியாகச் செல்லும். அதாவது அவன் சேமித்து வைத்துள்ள சக்தியிலிருந்து ஒவ்வொரு கணமும் காந்த விசையை எதிர்த்து, உடம்பைச் சமனிலையில் வைக்க வேண்டி, எம் எச் டைன்ஸ் செலவழிக்க வேண்டியுள்ளது. அதாவது ஒவ்வொரு முறையும் உடலின் சேமிப்பு சக்தியில் எம் எச் டைன்ஸ் இழக்க வேண்டியுள்ளது. வடதிசையில் தலை வைத்துப் படுப்பதால் ஒரு பிரயோசனமும் இல்லாமல் நமது சக்தி வீணாகிறது. தென் திசையில் தலை வைத்துப் படுக்கும்போது உடலின் வழியாகச் செல்லும் விசையின் கூறு எம் எச் கோசைன் 180 ஆகும். இப்பொழுது இவன் இயங்கும் காந்த விசைக்கோட்டிற்கு எதிராகப் படித்திருப்பதால் கோசைன் 180 = -1 ஆகும். அவன் ஒவ்வொரு கணமும் - எம் எச் டைன்ஸ் இழக்கிறான். அதாவது எம் எச் டைன்ஸ் அவன் உடலில் கூடுகிறது. ஆகையால் தெற்கில் தலை வைத்துப் படுப்பது அவனுக்கு சாதகமாகிறது.

கிழக்கு மேற்காகப் படுக்கும் பொழுது இயங்கும் விசையின் கூறு எம் எச் கோசைன் 90 அல்லது எம் எச் கோசைன் 270 ஆகவும் ஆகிறது. இதன் அளவு சூன்யம் (0). ஏனென்றால் கோசைன் 90 அல்லது கோசைன் 270 = 0 இதனால் மனிதனுடைய உடல் எந்த ஒரு செயல்பாட்டிற்கும் உட்படுவதில்லை. உயர் அட்சக்கோட்டில் வாழும் ஜனங்களின் மீது இந்த காந்த விசை பாதிப்பதில்லை. ஏனென்றால் அதன் அளவு மேலே போகப்போகக் குறைந்துவிடுகிறது. அதன் அளவு U.K.வில் 0.18 சி.ஜி.எஸ். யூனிட் ஆகவும் துருவங்களில் சூன்யமாகவும் ஆகிவிடுகிறது. இதிலிருந்து அதிகமான (maximum) காந்த விசையால் பாதிக்கப்படுபவர்கள் இரண்டு ட்ராபிக்ஸ் (Tropics)க்கு இடையில் வசிக்கும் ஜனங்கள்தான் என்று தெரிகிறது. இந்தியா இந்த பாகத்தில் இருக்கும் ஒரு தேசமானதால், நம் முன்னோர்கள் மிகவும் சரியான, கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டிய பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் நோக்கம் உடலில் இருந்து எள்ளளவு சக்தியும் ஒரு பலனில்லாமல் வீனாக்கப்படக்கூடாது என்பதே இந்த கோட்பாட்டிற்கு காரணம். படித்தவர்களுக்கு, அதுவும் விஞ்ஞானம் படித்தவர்களுக்குத்தான் மேற்சொன்ன விளக்கம் புரியும். நம் முன்னோர்கள் படித்தவன், படிக்காதவன், எழுத்தறிவு இல்லாதவன் என்று பாரபட்சம் பார்க்காமல் யாவரும் பயனடைய வேண்டிக் கதைகள் மூலம் சில வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். நம் முன்னோர்கள் நோக்கம் மனிதன் பலனடைய வேண்டும் என்பதே தவிர, அந்தத் தகவல் எந்த முறையில் சொல்லப்படுகிறது என்பது அல்ல. இதிலிருந்து நம் முன்னோர்கள் எவ்வளவு விஞ்ஞான பூர்வமாக நல் வாழ்விற்கான கோட்பாடுகளை ஏற்படுத்தி உள்ளனர் என்பது தெரிகிறது.

மேற்கூறிய கதை போல்தான் எல்லாக் கதைகளுக்கும் ஓர் அறிவுபூர்வமான உள்ளர்த்தம் இருக்க வேண்டும் என்று நாம் உணர வேண்டும். எல்லாவற்றிற்கும் நமக்கு விஞ்ஞான பூர்வமான விளக்கம் தெரியாவிட்டாலும், அவற்றீன்படி நடக்க முடியாவிட்டாலும், அவை எல்லாம் நம் நன்மை கருதியே சொல்லப்பட்டன என்று அறிந்து உணர்ந்தால், அதுவே போதும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes