ஆப்பிளுக்குப் போட்டியாக கூகுள் திறக்கும் மியூசிக் கடை

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கென, ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் என்ற இணையதளக் கடையை ஆப்பிள் நிறுவனம் அமைத்து பல்லாயிரக்கணக்கான மியூசிக் பைல்களை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் டவுண்லோட் செய்திடும் வகையில் இயக்கி வருகிறது.

இப்போது இதற்குப் போட்டியாக, கூகுள் நிறுவனத்தின் மியூசிக் கடையும் இணையத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடை கூகுள் மியூசிக் என அழைக்கப் படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் மியூசிக் பைல்களுக்கென லட்சக்கணக்கில் அதனையே சார்ந்திருக்கும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

ஆனால் ஆப்பிள் நிறுவனம் எனக்கு வேண்டாம் என்று எண்ணுபவர் களுக்கு இப்போது கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் ஒரு இடத்தை அளிக்கிறது.

முதலில் தன்னுடைய கூகுள் ப்ளஸ் தளத்துடன், கூகுள் மியூசிக் தளத்தினையும் இணைக்க கூகுள் திட்டமிட்டிருந்தது. ஆனால், இப்போது தனியே இதனை வடிவமைத்துள்ளது.

கூகுள் சர்ச், கூகுள் ப்ளஸ், கூகுள் மேப்ஸ் போன்ற தேடுதல் தளங்களுடன் இந்த கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் தளமும் இணைக்கப் படும். தேடல்களில் பாடல்கள் சார்ந்த தகவல்கள் தேடப்பட்டால், மியூசிக் பைல்கள் குறித்த தகவல்களும் காட்டப் படும்.

எடுத்துக் காட்டாக, ஒரு குறிப்பிட்ட இசைக்குழு குறித்த அல்லது பாடல்கள் குறித்த தகவல்களைத் தேடினால், கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் தளத்தில் அவை பதியப்பட்டிருக்கும் பட்சத்தில், அந்த தளத்தில் இருந்து அந்த பாடல் டவுண்லோட் செய்யப்படும் அளவிற்கு லிங்க் தரப்படும்.

இதனால், கூகுளின் மற்ற சேவைகளுடன், மியூசிக் ஸ்டோர்ஸ் சேவையும் இணைந்தே கிடைக்கும். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் களைத் தன் தளத்திற்கு இழுத்துவிடலாம் என்று கூகுள் எண்ணுகிறது.


பங்குவர்த்தகத்தில் களமிறங்குகிறது பேஸ்புக்

சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக், பங்குவர்த்தகத்தில் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பேஸ்புக் நிறுவனம், 10 பில்லியன் டாலர்கள் அளவிற்கு பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக வால்ட் ஸ்டிரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதகுறித்து, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2012ம் ஆண்டில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இதற்கான பணிகள் நடைபெற உள்ளதாகவும், இதற்கான நடவடிக்கைகளில் பேஸ்புக் நிர்வாகம் தற்போது ஈடுபட்டுள்ளது.

இருந்‌தபோதிலும், பங்குவர்த்தகத்தில் களமிறங்குவதற்கான இறுதிமுடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

800 மில்லியன் பயனாளர்களை கொண்ட பேஸ்புக் இணையதளத்தை, தினமும், குறைந்தது 500 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தி வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூகுள் டாக்ஸ் அக்கவுண்டில் வீடியோ

கட்டணம் எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக் கிடைக்கக் கூடிய ஆபீஸ் அப்ளிகேஷன் கூகுள் டாக்ஸ் ஆகும். சில வாரங்களுக்கு முன்னர், கூகுள் டாக்ஸ் அக்கவுண்ட்டில் என்ன என்ன வசதிகளை மேற்கொள்ளலாம் என்று காட்டப்பட்டது.

இதில் டாகுமெண்ட் களை உருவாக்கலாம், பிரசன்டேஷன் பைல்களை வடிவமைத்துப் பயன் படுத்தலாம். மேலும் ஸ்ப்ரெட்ஷீட், படங்கள், சார்ட்கள் என இது போன்ற அனைத்தையும் உருவாக்கிப் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம்.

அது மட்டு மின்றி, நீங்கள் உருவாக்கும் பைல்களை அடுத்தவர்களும் பார்க்கலாம், திருத்தங் களை மேற்கொள்ளலாம் என எண்ணினால், அதற்கான அனுமதியை வழங்கும் வசதியை யும் கூகுள் டாக்ஸ் தருகிறது.

மேலே சொல்லப்பட்ட பைல்களுடன், வீடியோ பைலையும் கூகுள் டாக்ஸ் ஆபீஸ் தொகுப்பில் பதிந்து வைத்துப் பயன் படுத்தலாம். வீடியோ பைல்களை அப்லோட் செய்திட யு-ட்யூப், டெய்லி மோஷன் அல்லது பேஸ்புக் போன்ற தளங்கள் இருந்தாலும், கூகுள் டாக்ஸ் தொகுப்பின் மூலம் இவற்றைக் கையாள்வது சில கூடுதல் வசதிகளைத் தருகிறது.

கூகுள் டாக்ஸ் தொகுப்பில் வீடீயோ பைல்களை எப்படி அப்லோட் செய்வது மற்றும் அவற்றை பகிர்ந்து கொண்டு பயன்படுத்த, நம் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் அனுமதி எப்படி வழங்குவது என்பதை இங்கு பார்க்கலாம்.

முதலில் கூகுள் டாக்ஸ் சென்று உங்கள் கூகுள் அக்கவுண்ட் பதிவுத் தகவல்கள் மூலம் லாக் இன் செய்திடவும். டாக்ஸ் தளம் கிடைத்தவுடன், க்ணீடூணிச்ஞீ என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உடன் பைல்களை அப்லோட் செய்திட பைல் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

இப்போது உங்கள் டெஸ்க்டாப் அல்லது வேறு போல்டர்களில் இருக்கும் வீடியோ பைலை அப்படியே இழுத்து வந்து இந்த “File upload” பகுதியில் விட்டுவிடலாம். இவ்வாறு நீங்கள் அப்லோட் செய்திட விரும்பும் அனைத்து வீடியோ பைல்களையும் இழுத்துவிட்டவுடன், Start upload என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

இதற்கு முன் நீங்கள் இந்த வீடியோ பைல்களைக் குறிப்பிட்ட போல்டரில் சேவ் செய்திட விரும்பலாம். குறிப்பிட்ட ஒரு போல்டரைத் தேர்ந்தெடுத்து அமைக்க, Destination folder பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் நீங்கள் விரும்பும் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும்.

வீடியோ பைல் அப்லோட் செய்யப் படுகையில், பிரவுசரை மூடக்கூடாது. ஆனால், பிரவுசர் மூலம் வேறு வேலைகளில் ஈடுபடலாம்; இணைய தளங்களுக்குச் செல்லலாம்; இமெயில் செக் செய்து அவற்றிற்குப் பதில் அளிக்கலாம்; கம்ப்யூட்டரிலும் வேறு பணிகளைத் தொடரலாம். வீடியோ பைல்கள் அனைத்தும் அப்லோட் செய்யப்பட்ட பின்னர், கீழ்க்காணும் செய்தி உங்களுக்குக் காட்டப்படும்.

Congratulations, you have successfully uploaded one video clip to your Google Docs account. To upload more videos, simply click the Upload more files button.

இனி உங்கள் கூகுள் டாக்ஸ் அக்கவுண்ட் மூலம் இந்த பைல்களை எப்படிப் பார்ப்பது மற்றும் மற்றவர் களுடன் பகிர்ந்து கொள்வது என்று பார்க்கலாம்.

வீடியோ பைல்களைக் காண, கூகுள் டாக்ஸ் சென்று, All documents என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், அங்கு காட்டப்படும் டாகுமெண்ட்ஸ் பைல் பட்டியல் வரிசையில், நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோ பைல் மீது கிளிக் செய்திடவும்.

குறிப்பிட்ட வீடியோ, பிரவுசரின் புதிய விண்டோ ஒன்றில் இயங்கத் தொடங்கும். இதனை நீங்கள் காணலாம்; உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளலாம். டவுண்லோட் செய்து கொண்டால், அதனை இணைய இணைப்பின்றியே பார்க்கலாம்.

கூகுள் டாக்ஸ் தளத்தில் உள்ள வீடியோ பிளேயர், யு-ட்யூப் வீடியோ பிளேயர் போலவே காட்சி அளிக்கும். இங்கு ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அப்லோட் செய்யப்பட்ட வீடியோ பைல்களை, உங்கள் கூகுள் டாக்ஸ் அக்கவுண்ட் மூலமாகத்தான் பார்க்க முடியும்.

யு-ட்யூப் மூலம் பார்க்க முடியாது. உங்கள் நண்பர்களுடன் இந்த வீடியோ பைலைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணினால், Sharing settings என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் இடத்தில், உங்கள் நண்பர் மற்றும் உறவினரின் இமெயில் முகவரியினை அமைக்கவும். ஆனால் வீடியோ பைல் பிரைவேட்டாக உங்களுக்கு மட்டுமே வேண்டும் எனில், Private என்ற பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

நீங்கள் இந்த வீடியோ பைல்களைப் பகிர்ந்து கொள்ள, யாருடைய இமெயில் முகவரிகளை அமைத்துள்ளீர்களோ, அவர் களுக்கு ஜிமெயில் தளத்திலிருந்து ஒரு அறிவிப்பு மெயிலாக அனுப்பப்படும். அதில் குறிப்பிட்ட வீடியோ பைலுக்கான லிங்க் அனுப்பப்படும்.

அவர்கள் தங்களுடைய கூகுள் அக்கவுண்ட் மூலம் சென்று, அந்த லிங்க்கில் உள்ள வீடியோ பைலைப் பார்வையிடலாம். தங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளலாம். கூகுள் டாக்ஸ் MP4, FLV, MPEG, AVI, WMV, 3GP போன்ற பெரும்பாலான வீடியோ பார்மட்களை இயக்குகிறது. எனவே உங்கள் மொபைல் போனில் நீங்கள் எடுத்த வீடியோ பைல்களையும் உடனுடக்குடன், கூகுள் அக்கவுண்ட்ஸ் சென்று அனுப்பலாம். வீடியோ கன்வர்டர் எல்லாம் தேவை இருக்காது.

கூகுள் டாக்ஸ் வீடியோ பைல்கள் அதிக பட்சம் 1920 X 1080 என்ற ரெசல்யூசன் திறனுடன் இருக்கலாம். வீடியோ பைலின் அதிக பட்ச அளவு ஒரு ஜிபி வரை அனுமதிக்கப்படுகிறது. இந்த வகையில், நம் வீடீயோ பைல்களைப் பதிந்து வைத்துப் பாதுகாக்க, கூகுள் டாக்ஸ் சிறந்த சாதனமாக உள்ளது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஸ்பெல் செக்கர்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இல்லாத இரண்டு வசதிகளை, இதன் பதிப்பு 10ல் அறிமுகப் படுத்துகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், ஸ்பெல் செக்கர் மற்றும் ஆட்டோ கரெக்ட் வசதி களை இணைத்துள்ளது.

இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இணைய தள வலைமனையில், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்திலும், இன்டநெட் எக்ஸ்புளோரர் 10 உட்பட, இந்த இரண்டு வசதிகளையும் தந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் ஸ்பெல் செக்கர் வசதி இல்லை. பல மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்கள், இதனாலேயே இந்த பிரவுசரைப் பயன் படுத்துவதில்லை என்று தெரிவித் திருந்தனர்.

எனவே தான், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனைத் தன் புதிய புரோகிராம்களில் தந்துள்ளது.

ஸ்பெல் செக்கருடன், ஆட்டோ கரெக்ட் வசதியும் தரப்படுகிறது. இதன் மூலம் வேர்ட் தொகுப்பில் நாம் எந்த சொற்களில் உள்ள பிழைகள் எல்லாம் தானாக திருத்தப்படுகின்றனவோ, அவை எல்லாம், இன்டர்நெட் எக்ஸ்புலோரர் பதிப்பு 10ல் தானாகவே திருத்தி அமைக்கப் படும்.

இந்த புதிய வசதிகளுடன் கூடிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எப்போது வெளியிடப்படும் என மைக்ரோசாப்ட் இன்னும் அறிவிக்கவில்லை. வெளி யானவுடன், இந்த இரண்டு வசதிகளும் எத்தனை வாடிக்கையாளர்களை இழுக்கும் என நாம் காணலாம்.


இன்டர்நெட்டில் வேவு பார்த்தல்

நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில், நமக்குத் தெரியாமல், பல நிறுவனங்கள், தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன.

நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல் களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன.

சில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன் படுத்துகின்றன.

நம் கம்ப்யூட்டரில் நமக்குத் தெரியாமல் நம் செயல்பாடுகள் கண்காணிப்பதற்கு புரோகிராம்களா எனக் கவலைப்படுகிறீர்களா? இவை அவ்வளவு ஒன்றும் நீங்கள் எண்ணும் அளவிற்கு மோசமானவை அல்ல. இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் குறித்து பல மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் உலவி வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து இங்கு காணலாம்.


1. ஒரு சில நிறுவனங்களே இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் கம்ப்யூட்டர்களில் அவர்கள் தேடலைப் பற்றி அறிய குக்கீஸ் களை அனுப்புகின்றன. இது உண்மைக்கு மாறான தகவல். 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலையில் ஈடுபடுகின்றன. Adfonic, Clicksor, or VigLink என்ற பெயர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை.

ஆனால் அவை உங்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். இவை எல்லாம் இணையச் செயல் பாட்டினைக் கண்காணிக்கும் வகையில் (Web tracking) செயல்படுபவை.


2. இந்த கண்காணிக்கும் நிறுவனங்கள் உங்களைப் பற்றிய அனைத்து தகவல் களையும் அறிந்து வைத்துள்ளன. இது பொய். இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் உங்களைப் பின் தொடர்ந்து வருவது இல்லை. உங்கள் பிரவுசர்கள் இயங்கு வதைத்தான் கண்காணிக்கின்றன.

அந்த பிரவுசரை மற்றவர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பயன் படுத்துகையில் உங்களைப் பற்றி அறிய வாய்ப்பில்லையே. மேலும், நீங்கள் மற்றொரு பிரவுசரைப் பயன்படுத்து கையில் உங்கள் தேடல்கள் என்ன வென்று அறியவும் சந்தர்ப்பம் இல்லை.

பொதுவாக இவை ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பத் தேடல்களை அறிவதில்லை. ஒவ்வொரு கம்ப்யூட்ட ருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பதிவு செய்து, அந்த எண்ணின் அடிப்படையில் தான் தகவல்களைச் சேகரிக்கின்றன.


3. இணையக் கண்காணிப்பு புரோகிராம் கள் உங்கள் தனிநபர் விருப்பங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. ஏனென்றால் அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்கு நீங்கள் யார் என்பது தெரியாது. இதில் பாதி உண்மை; பாதி உண்மை அற்றது.

நீங்கள் இணையத்தில் கிளிக் செய்திடும் தளங்களுக்கான லிங்க்ஸ் பற்றி தகவல்கள் சேர்க்கப் படுகையில், உங்களின் தனி நபர் விருப்பங்கள் பட்டியலிடப்பட்டு தொகுக்கப்படுகின்றன. உங்களை அடையாளம் காட்டும் மின்னஞ்சல் முகவரிகள் போன்றவையும் அவற்றின் வசம் கிடைக்கின்றன. எனவே ஓரளவிற்கு உங்கள் விருப்பங்களும் இந்த குக்கீஸ் மூலம், அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்குச் செல்கின்றன.

ஆனால் இந்த நிறுவனங்கள் தனிநபர் விருப்பங்களைப் பயன்படுத்துவதில்லை. எத்தகைய தகவல்கள் மற்றும் விளம்பரங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதை மட்டும் கணித்து அவற்றை வேண்டுவோருக்கு அளிக்கின்றன.


4. இவற்றைத் தடை செய்திட சட்டத்தில் இடம் உள்ளது. இது உண்மை அல்ல. இணையத்தில் இத்தகைய செயல்பாடு களைத் தடை செய்திடும் சட்டம் இல்லை. அப்படியே வேறு சட்டப் பிரிவுகளுக்குள் இந்த செயல்பாட்டினைக் கொண்டு வந்தாலும், இதனை நிரூபிப்பது கடினம்.


5. மொபைல் போனில் இருப்பது போல, எனக்கு விளம்பரங்கள் வேண்டாம் எனத் தடை செய்திட முடியுமா? அந்த வசதி இல்லை. இணையக் கண்காணிப்பில் இருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளும் வசதி இல்லை.

ஆனால், இத்தகைய குக்கீஸ்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றை உங்கள் அனுமதி யுடன் நீக்கும் புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து அவ்வப் போது இயக்கினால், நாம் இதிலிருந்து மீளலாம்.


6. இந்த கண்காணிக்கும் புரோகிராம்களைத் தடை செய்தால், இணையத்தில் விளம்பரங்கள் மறையும். வருமானம் குறைவதால், ஒவ்வொரு இணைய தளத்தினையும் பணம் செலுத்தித்தான் பார்க்க வேண்டும். இதுவும் தவறான ஒரு கருத்தாகும். இது விளம்பரங்களை அனுப்பிப் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் இட்டுக் கட்டிய கதை.

விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் நிறுவனங்களுக்கும் இன்டர்நெட் தொடர்ந்து இயங்குவதற்கும் அப்படிப்பட்ட ஓர் அடிப்படையான அமைப்பு இல்லை.


பேக்கப் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான பைல்கள்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள டேட்டாவினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அல்லது தினந்தோறும் பேக்கப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கம்ப்யூட்டர் என்ன நின்றா போய்விடும்? என்ற தவறான எண்ணப் போக்குதான்.

இந்த தவற்றைப் பலர் செய்கின்றனர். முக்கியமான பைல் களைப் பேக்கப் எடுப்பதில்லை. ஒரு சிலருக்கோ முக்கிய மான பைல்கள் எவை என்று தெரிவதில்லை.

எந்தெந்த பைல்களை எல்லாம் பேக்கப் எடுக்க வேண்டும்? நீங்கள் உருவாக்கிய எல்லா பைல்களையும் (வேர்ட், எக்செல், அக்சஸ், பவர்பாயிண்ட் பைல்கள்) பேக்கப் எடுக்க வேண்டும்.

எழுத்து வகைகள், ஐகான்கள், கர்சர்கள், வால்பேப்பர்கள், தீம்கள், ஸ்கிரீன்சேவர்கள், எம்பி3 பைல்கள், வீடியோ பைல்கள் என இண்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்த எல்லா பைல்களையும் பேக்கப் எடுக்க வேண்டும்.

இமெயில்கள், இமெயில்களின் விதிகள், பேவரிட் தளங்கள், முகவரி புத்தகங்கள், நண்பர்கள் பட்டியல்கள் என இண்டர்நெட் சேவைகள் தொடர்பானவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். இவற்றை பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.


உங்களது பைல்கள்:

எம்எஸ் வேர்ட், எம்எஸ் எக்செல் போன்ற பெரும்பாலான அப்ளிகேஷன்கள் வழியாக நீங்கள் உருவாக்குகிற பைல்களை My Documents என்ற போல்டரில்தான் கம்ப்யூட்டர் சேமிக்கும். எனவே இந்த போல்டரைப் பேக்கப் எடுக்க வேண்டும்.

விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர்களில் படங்களை My Pictures போல்டரிலும், ஆடியோ பைல்களை My Music போல்டரிலும், வீடியோ பைல்களை My Video போல்டரிலும் போட்டு வைக்கும். இந்த போல்டர்கள் எல்லாமே My Documents போல்டரின் கீழ்தான் வருகின்றன. எனவே My Documents போல்டரை பேக்கப் எடுத்தால் இவையும் தாமாகவே பேக்கப் ஆகிவிடும்.


மைக்ரோசாப்ட் ஆபீஸ் செட்டிங்:

மைக்ரோசாப்ட் ஆபீஸ் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறவர்கள் பல செட்டிங்களை அங்கு கொடுத்திருக்கலாம். மெனு, டூல்பார், டெம்ப்ளேட் போன்ற செட்டிங்கள், இமெயில் விதிகள் எனப் பலவற்றை பேக்கப் எடுக்க Save My Settings Wizard என்ற ஒன்றை ஆபீஸ் எக்ஸ்பி தந்துள்ளது. ஆபீஸ் எக்ஸ்பி சிடி டிஸ்க்கில் உள்ள இதை நிறுவினால் மைக்ரோசா ப்ட் ஆபீஸ் தொடர்பான எல்லா செட்டிங்குகளையும் பேக்கப் எடுக்கலாம்.


எழுத்து வகைகள்:

பல அப்ளிகேஷன்களை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவும் பொழுது அவை தங்களுக்கு வேண்டிய எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி இருக்கும். இண்டர்நெட்டில் இருந்து பல எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுன்லோடு செய்திருப்பீர்கள்.

C:/windows போல்டரின் கீழ் Fonts என்ற பெயரில் உள்ள போல்டரில்தான் எல்லா எழுத்து வகைகளும் காணப்படும். இதை பேக்கப் எடுங்கள்.


இன்டர்நெட் விவரங்கள்:

இன்டர்நெட் வெப் தளங்களில் நீங்கள் நுழைந்தவுடன் இந்த தளங்களுக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆவல் பிறக்கலாம். அப்படிப்பட்ட தளங்களை நினைவில் வைத்துக் கொள்ளும்படி பிரவுசருக்கு தெரிவிக்க முடியும். இதற்காகவே Bookmarks அல்லது Favorites என்ற மெனு பிரவுசரில் காணப்படும்.

பிரவுசருக்கு அடையாளம் காட்டப்பட்ட வெப் தளங்களின் பட்டியல் Bookmarks அல்லது Favoritesல் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த பட்டியலை பேக்கப் எடுக்க வேண்டும். எப்படி பேக்கப் எடுப்பது என்பது பிரவுசரை பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் File=>Import and Export கட்டளை மூலம் அந்த பேவரிட் பட்டியலை ஒரு பைலில் சேமித்து பின்பு அந்த பைலை பேக்கப் எடுக்க வேண்டும்.

உங்களுக்கு வந்துள்ள இமெயில்களை நீங்கள் பேக்கப் எடுக்க வேண்டும். மேலும் உங்கள் இமெயில் அக்கவுண்ட் பற்றிய விவரங்கள், முகவரி புத்தகம், இமெயில் வடிகட்டல் விதி, சிக்னேச்சர் போன்றவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் இமெயில் புரோகிராமில் எப்படி பேக்கப் எடுப்பது என்பதை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்.

விண்டோஸின் Find அல்லது Search கட்டளை மூலம் BMP, JPG, JPEG, GIF, SCR, WAV, MDI, MP3, MPG, DAT போன்ற பைல்கள் கம்ப்யூட்டரில் எங்குள்ளன என்று தேடி அவற்றை பேக்கப் எடுப்பது நல்லது.


இலவச ஆன்லைன் வீடிய‌ோ ச‌ேவை - Yahoo அறிமுகம்

சர்வதேச அளவில் முனன்ணி இணையதள நிறுவனமான யாகூ நிறுவனத்தின் இந்திய அங்கமான யாகூ இந்தியா நிறுவனம், டிவி சேனல்கள் மற்றும் பட தயாரி்ப்பு நிறுவனங்களுடன் இணைந்து இலவச ஆன்லைன் வீடியோ சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த யாகூ இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் அருண் ததாங்கி கூறியதாவது, இந்தியாவில், சமீபகாலமாக ஆன்லைன் வீடியோ பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இந்த தருணமே, தாங்கள் இப்பிரிவில் களமிறங்குவதற்கு சிறந்த தருணமாக கருதி, இந்த சேவையை துவக்கி உள்ள‌ோம்.

இந்தியாவில், 30 மில்லியன் பேர் ஆன்லைன் வீடியோ சேவையை உபயோகித்து வருவதாகவும், இதன்மூலம், ஒருவர், மாதம் ஒன்றிற்கு குறைந்தது 58 வீடியோக்களை கண்டுகளிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

யாகூ இந்தியா நிறுவனம், என்டிடிவி, ஸ்டார் டிவி , ஷெமாரோ, ஹெட்லைன்ஸ் டுடே, பிவிஆர் பிக்சர்ஸ், அல்ட்ரா உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செய்தி, பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல் மற்றும் திரைப்படங்கள் தொடர்பான வீடியோக்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்பட உள்ளது.

இதுமட்டுமல்லாது, யாகூ மூவிப்ளெக்ஸின் மூலம், முழு நீளத்திரைப்படங்களையும் இலவசமாக வழங்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த வார டவுண்லோட் ஜார்ட் (Jarte) ன Word Processor

லிடுர்ட்பேட் மற்றும் நோட்பேட் பற்றி அறிந்திருப்பீர்கள். பலரும் பயன் படுத்தி வருவீர்கள். இவற்றிற்கு மாற்றாக நமக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வேர்ட் ப்ராசசர் ஜார்ட். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.

ஆனால், இதில் கூடுதலாகப் பல வசதிகள் கிடைக்கின்றன. பைல்களை PDF மற்றும் HTML பார்மட்டில் அனுப்பலாம். இவற்றை DOC, RTF மற்றும் TXT என்ற பார்மட்களில் சேவ் செய்திடலாம்.

இதன் இன்னொரு சிறப்பு, இதில் மெனு தேர்ந்தெடுக்க கிளிக் செய்திடத் தேவை யில்லை. அதாவது, கர்சரை மெனு அருகே கொண்டு சென்றாலே, மெனு விரிந்து கொடுக்கிறது. ஐகான்கள் மற்றும் பிற மெனுக்கள் கிடைக்கின்றன.

இதிலிருந்து தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், வழக்கம்போல கிளிக் அடிப்படையிலான இயக்கத்திற்கு மாறிக் கொள்ளலாம்.

இதன் இன்டர்பேஸ் மூன்று வகைகளில் கிடைக்கிறது. அவை Minimal (NotePad போல), Compact, மற்றும் Classic ஆகும்.

இதன் சில அம்சங்களைக் காணலாம். word, page, line மற்றும் character ஆகியவற்றை எண்ணி அறியலாம். தேதி, நேரம், படங்கள், ஹைப்பர்லிங்க், டேபிள், ஸ்பெஷல் கேரக்டர்கள், ஈக்குவேஷன்கள், ஆப்ஜெக்ட்டுகள் ஆகியவற்றை விரும்பும் இடத்தில் இணைக்கலாம்.

டிக்ஷனரி, தெசாரஸ் ஆகியவற்றுடன் ஸ்பெல் செக் வசதி தரப்பட்டுள்ளது. பல பைல்களை இயக்கினால், அவற்றை அடையாளம் கண்டு கொண்டு இயக்க டேப் வசதி தரப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் ஓப்பன் ஆபீஸ் ரைட்டர் பயன்படுத்தி சலிப்பு கொண்டவர்களுக்கு இந்த ஜார்ட் டெக்ஸ்ட் எடிட்டர் வித்தியாசமாகவும், வசதிகள் பல கொண்டதாகவும் இருக்கும்.

இதன் இன்னொரு முக்கிய அம்சம் இதன் வேகம். மிக வேகமாகத் திறக்கப்பட்டு, இயக்கத்திற்குக் கிடைக்கிறது. இது மற்ற எந்த வேர்ட் ப்ராசசரிலும் கிடைக்காத ஒரு வசதி. மைக்ரோசாப்ட் வேர்ட் புரோகிராம் இயங்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பதனை நாம் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளோம். அந்த பிரச்னை இங்கு இல்லை. நான்கு விநாடிகளில் இந்த ஜார்ட் புரோகிராம் இயங்கத் தொடங்குகிறது.

இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்வதும் இன்ஸ்டால் செய்வதும் மிக மிக எளிது. இதனை ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் பதிந்தும் இயக்கலாம்.

http://download.cnet.com/Jarte/30002079_410212778.html என்ற இணைய தள முகவரியிலிருந்து இதனை இலவசமாக டவுண்லோட் செய்து இயக்கலாம்.


நோக்கியாவின் ஆஷா மொபைல்கள்

நோக்கியா நிறுவனம் ஆஷா என்ற வரிசையில் மூன்று போன் களை அடுத்தடுத்து இந்தியாவில் வெளி யிடத் திட்டமிட்டுள்ளது. பிளாக்பெரி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களை, விலையின் காரணமாக வாங்க முடியாதவர் கள் இவற்றை வாங்குவது குறித்து யோசிக்கலாம்.

இவை ஆஷா 200, ஆஷா 201 மற்றும் ஆஷா 300 என்ற பெயரில் வருகின்றன. இவற்றில் முதல் இரண்டும் இன்னும் ஒரு மாதத்தில் இங்கு கிடைக்கலாம்.

வழக்கமான மொபைல் போனுக்குரிய அனைத்து வசதிகளும் இவற்றில் உள்ளன. ஆஷா 200 மற்றும் 201 ஆகிய இரண்டும் மெசேஜ் அனுப்பும் வசதியைச் சிறப்பாகத் தருகின்றன.

இவற்றில் ஆஷா 200 இரண்டு சிம் வசதி கொண்டது. இவற்றை Series 40 என நோக்கியா அழைக்கிறது. எனவே ஸ்மார்ட் போன் வரிசையில் இவை வராது.

இவற்றில் பிரவுசர், எம்பி3 மற்றும் சில பார்மட்டுகளைக் கையாளும் திறனுடன் கூடிய மியூசிக் பிளேயர், இமெயில் அனுப்பிப் பெறும் புரோகிராம், சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக்கான இணைப்பு, நோக்கியா லைப் டூல்ஸ் சப்போர்ட் ஆகியவை கிடைக்கின்றன.

திரை 320 x 240 என்ற பிக்ஸெல் ரெசல்யூசனுடன் 2.5 அகல வண்ணத் திரையாக உள்ளது. குவேர்ட்டி கீ போர்ட், 2 மெகா பிக்ஸெல் கேமரா, வீடியோ ரெகார்டிங், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக்கெட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், புளுடூத் ஆகியவை சிறப்பான ஹார்ட்வேர் அம்சங்களாகும்.

இதில் தரப்பட்டுள்ள பிரவுசர் வேகமாக இயங்க நல்ல இடைமுகத்தினைக் கொண்டுள்ளது. இரண்டு சிம் போனில் சிம்களை மாற்றி அமைப்பது மிக எளிதாக உள்ளது.

இந்த இரண்டு போன்களின் அடுத்த சிறப்பு இதில் தரப்படும் பேட்டரிகளாகும். 1430 ட்அட திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், ஒரு மாதம் மின்சக்தி தங்கும். தொடர்ந்து 7 மணி நேரம் பேச முடிகிறது.

இந்த இரண்டின் பரிமாணங்கள் 115 x 61 x 14மிமீ. எடை 105 கிராம். இரண்டு போன்களுமே பல வண்ணங்களில் எதிர்பார்க்கப்படுகின்றன. மேல் நாடுகளில் இரண்டும் ஒரே விலையில் கிடைக்கின்றன.

இந்தியாவில் இதன் விலை இங்கு அறிமுகமானவுடன் தெரிய வரும். இவற்றின் விலை ரூ.4,100 முதல் ரூ.8,000 வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிளாக்பெரி பயன்படுத்துவோரின் ஜிமெயில் சேவையை நிறுத்த கூகுள் முடிவு

மொபைல் போன்களுக்கான ஆன்டிராய்ட் தயாரிக்கும் கூகுள், தற்போது பிளாக்பெரி ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோருக்கு தனது ஜிமெயில் சேவையை நிறுத்த முடிவு செய்யதுள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி முதல் இந்த தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைலில் ஜிமெயில் சேவையை கொண்டு வருவதில் கடந்த சில ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருவதாகவும், இதில் மேலும் பல முதலீடுகள் செய்ய உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 22ம் தேதி முதல் பிளாக்பெரி பயன்படுத்துபவர்களுக்கு ஜிமெயில் சேவை நிறுத்தப்படும் எனவும், ஏற்கனவே ஜிமெயில் பிரவுசரை டவுன்லோட் செய்து வைத்திருப்பவர்கள் ஜிமெயில் சேவையை தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இனி யூடியூப்பிலும் (YouTube) பணம் பண்ணலாம்

சர்வதேச அளவில், வீடியோ பிரியர்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் யூடியூப், தற்போது பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

2005ம் ஆண்டில், பே பால் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களால் துவங்கப்பட்ட இந்த சே‌வையின் மூலம், தமக்குப் பிடித்தமான வீடியோக்களை அப்லோட் செய்து பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதனை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினை யூடியூப் வழங்கி வருகிறது.

இதன்மூலம், வீடியோ பிரியர்களின் ஏகோபித்த ஆதரவினை, யூடியூப் பெற்றுள்ளது என்று கூறினால், அது மிகையல்ல.

இந்நிலையில், மேலும் ஒரு வரப்பிரசாதமாக, யூடியூப், பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினையும்
வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசை நிறுவனங்கள், தங்களது வீடியோ படைப்புகளை யூடியூப் இணையதளத்தில் போஸ்ட் செய்து அதன்மூலம் வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியன் பெர்பாஃர்மிங் ரைட் சொசைட்டி நிறுவனம் (ஐபிஆர்எஸ்), யூடியூப்புடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

முன்னணி பாடலாசிரியர்களான ஜாவேத் அக்தர், பங்கஜ் உத்தாஸ் உள்ளிட்டோரும், முன்னணி இசை நிறுவனங்களான ஈரோஸ் மியூசிக் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், எம்கே புரொடெக்சன்ஸ் உள்ளிட்ட 2,233 உறப்பினர்கள் இந்த இந்தியன் பெர்பாஃர்மிங் ரைட் சொசைட்டியில் உறுப்பினர்களாக உள்ளனர்.

தற்போதைய அளவில், யூடியூப் இணையதளத்தில் உள்ள விளம்பரங்களின் மூலம், அந்நிறுவனத்திற்கு வருமானம் கிடைத்து வருகிறது.

ஐபிஆர்எஸ் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசை நிறுவனங்கள் தங்களது வீடியோ ப‌டைப்புகளை யூடியூப் இணையதளத்தில் போஸ்ட் செய்வதன் மூலம், அவர்களுக்கும் கணிசமான தொகை வழங்க யூடியூப் நிறுவனம் இசைவு தெரிவித்துள்ளது.


ரிலையன்ஸ் தரும் குறைந்த விலை டேப்ளட் பிசி

விரைவில் பரவலாக்கப்பட இருக்கும் 4ஜி தொழில் நுட்பத்தின் இயக்கத்தையும் இணைத்து, டேப்ளட் பிசி ஒன்றை வடிவமைத்து, பட்ஜெட் விலையில் வழங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இந்த திட்டத்தில் தங்களுடன் ஒத்துழைக்க கனடா நாட்டின் டேட்டாவிண்ட் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் தான், உலகிலேயே மிக மலிவான விலையில் ஆகாஷ் என்னும் டேப்ளட் பிசியினை அண்மையில் வெளியிட்டது.

மேல் நாடுகளில், பல நிறுவனங்கள் 4ஜி தொழில் நுட்பத்துடன் டேப்ளட் பிசியினை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றன.

ஆனால் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரையிலான விலையில் இதனைத் தர ரிலையன்ஸ் முன்வந்துள்ளது சிறப்பான முயற்சி ஆகும். ஏனென்றால், இந்த விலை மேல்நாட்டு விலையில் நான்கில் ஒரு பங்காகும்.

வரும் டிசம்பர் மாதம் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பத்துடன் இயங்கும் டேப்ளட் பிசி ஒன்றை டேட்டாவிண்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது.

இதன் விலை ரூ. 2,999 என்ற அளவில் இருக்கும்.

முன்பு மொபைல் போன் பயன்பாடு அறிமுகமான போது மிகவும் மலிவான விலையில் நாடு முழுவதும் சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தில் இயங்கும் மொபைல் போன் மற்றும் சேவையினை வழங்கி ரிலையன்ஸ் முன்னணி இடத்தைப் பிடித்தது.

இதே வழியில், டேப்ளட் பிசி விற்பனையிலும் தன் தடத்தைப் பதிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிடுகிறது.


விண்ஸிப் புதிய பதிப்பு 16

பைல்களைச் சுருக்கி, பதிந்து காப்பதில் வெகு காலமாகப் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர் களால் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் விண்ஸிப். இதன் பதிப்பு 16 அண்மையில் வெளியாகியுள்ளது.

இதனை டவுண்லோட் செய்திட http://www.winzip.com/downwz.htm என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இதன் புதிய சிறப்புகளை இங்கு காணலாம்.

இந்த பதிப்பில் 64 பிட் இஞ்சின் பயன்படுத்தப்படுவதால், சுருக்கி விரிக்கும் பணி தற்போது அதிக வேகமாகவும், எளிதாகவும் மேற்கொள்ளப்படுகிறது.

பழைய சிறப்பு வசதிகள் தொடர்ந்து கிடைக்கின்றன. இமேஜ்கள் 25% சுருக்கப் படுகின்றன. பாதுகாப்பு தரும் வகையில் AES encryption மற்றும் பாஸ்வேர்ட் பயன் படுத்தும் வசதி கிடைக்கிறது.

சுருக்கப்பட்ட பைல் பெரியதாக இருந்தால், இமெயிலில் அனுப்புவது இயலாது. இதற்கு புதியதாக Zip Send என்ற வசதி தரப்பட்டுள்ளது. You Send It இணைய தளத்தின் கூட்டுடன் 50 எம்.பி. சுருக்கப்பட்ட பைல் அனுப்பப்படுகிறது. நீங்கள் ஏற்கனவே Zip Send Pro பயனாளர் என்றால், இந்த அளவு 2 ஜிபி வரை அனுமதிக்கப்படுகிறது.

அடுத்த புதிய வசதி Zip Share. இதன் மூலம் ஸிப் செய்யப்பட்ட பைலை கிளவ்ட் கம்ப்யூட்டிங் வசதிக்கு அனுப்பி விட்டு, அதற்கான லிங்க் ஒன்றை பேஸ் புக் தளத்தில் நம் நண்பர்கள் டவுண்லோட் செய்திட வசதியாக அனுப்பலாம்.

எதிர்காலத்தில் பயன்படுத்தக் கூடிய வகையில் “Zip to Bluray” என்ற ஒரு வசதி கிடைக்கிறது. காத்து வைத்திட சுருக்கப்பட்ட டேட்டாவினை 50 ஜிபி அளவில் ஒரு புளுரே டிஸ்க்கில் இதன் மூலம் பதிய முடியும். புளுரே டிஸ்க் பயன்பாடு பரவலாகக் கிடைக்கையில் இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மொத்தத்தில், ஏற்கனவே பல வசதிகளைக் கொண்டுள்ள விண்ஸிப் புரோகிராமில் கூடுதல் பயன்பாடு பல சேர்க்கப்பட்டுள்ளது.


ஜிமெயிலின் புதிய தோற்றம்

கூகுள் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது புதிய வசதி ஒன்றைத் தொடர்ந்து தருவது அதன் வழக்கமாகும். அண்மையில் தன் ஜிமெயில் தளத் தோற்றத்திற்கு புதுப் பொலிவு கொடுத்துப் பல புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

தேவையானதை முன்னிறுத்தி, தேவையற்றதைப் பின்னுக்குக் கொண்டு சென்று, எளிமை யான, மனம் விரும்பும் வகையிலான அனுபவத்தைத் தர நாங்கள் முனைந்துள்ளோம் என்று கூகுள் அறிவித்துள்ளது.

இப்போது ஜிமெயில் தளம் சென்றீர்களானால், அதன் கீழாக “Switch to the New Look,” என ஒரு கட்டம் தெரியும். இதில் கிளிக் செய்தால், உடனே புதிய தோற்றத்திற்கு உங்கள் தளம் மாறிக் கொள்ளும். (ஆனால், மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிக் கொள்ள வாய்ப்பு தரவில்லை.)

ஆனாலும், புதிய தோற்றத்திற்கு மாறிக் கொள்வது கூடுதல் வசதியைத் தருகிறது; தோற்றமும் அழகாக உள்ளது.

மாற்றங்களை சில வகைகளாகப் பிரித்துக் காணலாம். பொதுவாகப் பார்க்கையில் நிறம் மற்றும் லே அவுட் மாற்றப் பட்டுள்ளது. சில இடங்களில் பார்டர்கள் எடுக்கப்பட்டு பிரிவுகள் பளிச் எனக் காட்டப்படுகின்றன.

ஜிமெயில் லோகோ கீழாக, இடது புறம் மெயில் (Mail) என்பதில் கிளிக் செய்தால், Contacts and Tasks கிடைக்கும். முன்பு திறந்தவுடன் தொடர்ந்து காட்டப்பட்டு வந்த Archive, Spam,Delete and Labels ஆகிய ஆப்ஷன்கள், தற்போது மெசேஜ் தேர்ந்தெடுத்த பின்னரே காட்டப்படுகின்றன.

பல டூல் பார் ஆப்ஷன் சிறிய கிராபிக் ஆகவோ அல்லது சிறிய டெக்ஸ்ட் அளவிலோ காட்டப்படுகின்றன. ஏற்கனவே உள்ள வரிசை மாற்றப்படவில்லை. இவை என்ன செயல்பாட்டினைத் தருகின்றன என்று அறிய, அவற்றின் மீது கர்சரைக் கொண்டு சென்றால் போதும்.

+/ஆகிய பட்டன்கள் நீக்கப்பட்டு விட்டன. இதற்குப் பதிலாக, மெசேஜ் அனுப்பியவரின் பெயர் அருகே கிளிக் செய்து தேவைப்படும் குறியீட்டினை அமைக்கலாம்.

செட்டிங்ஸ் பிரிவு செல்ல புதிய கியர் ஐகான் தரப்படுகிறது. செட்டிங்ஸ் அமைப்பு சென்றால் “Display Density” எனப் புதிய ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இதனை அணுகி, இதன் மூலம் என்ன என்ன வசதிகள் கிடைக்கின்றன என்று பார்க்கவும்.

மேலும் labels, chat, and gadget ஆகியவற்றிலும் தேவையானதைக் காட்டும் வசதியும், நாம் தேடிப் பயன்படுத்துவதனை அடுத்த முறை மெயில் அக்கவுண்ட் திறக்கையில் காட்டுவதும் புதுமையானதாக உள்ளது.

வந்த மின்னஞ்சல் செய்திகளைப் படிப்பதில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கியமானவற்றை இங்கு காணலாம்.

அஞ்சல்களின் மீது கீ போர்டில் உள்ள ஆரோ கீ மூலம் செல்லலாம். இடது பக்கம் நீல வண்ணத்தில் ஒரு நெட்டுக் கோடு, எந்த அஞ்சல் தற்போது எடுக்கத்தயாராய் உள்ளது எனக் காட்டுகிறது. முன்பு பக்கவாட்டிலான அம்புக் குறி ஐகான் ஒன்று இருந்தது.

ஒவ்வொரு அஞ்சல் அருகிலும் அனுப்பியவரின் படம் காட்டப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட அஞ்சல் யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்று அனுப்பியவரின் பெயர் அருகே காட்டப்படுகிறது. அஞ்சல் வரிசையின் இறுதியில் உள்ள அம்புக் குறியினைக் கிளிக் செய்து, அஞ்சல் பெறுபவர்கள், அனுப்பப்பட்ட நாள் போன்ற தகவல்கள் அனைத்தையும் காணலாம். ஒவ்வொரு செய்தி தொகுப்பிலும், அனுப்பியவர், பெறுபவரின் போட்டோக்கள், ஒவ்வொன்றிலும் காட்டப்படுகின்றன.

வலது பக்கம் இருந்த “Reply” பட்டன் இப்போது மேல் எழும்பும் மீன் போன்ற ஒரு அம்புக்குறி ஐகானாக உள்ளது.

இப்போது, உங்கள் அஞ்சல் செய்திகளை Comfortable, Cozy and Compact என மூன்று வகையாகக் காணலாம். எத்தனை அஞ்சல்கள் காட்டப்படுகின்றன என்ற அடிப்படையில் இவை அமைக்கப்படும்.
டூல்பார் பட்டன்கள் அனைத்தும், நாம் அஞ்சல் ஒன்றைத் திறந்தாலே காட்டப்படுகின்றன.

இன்னும் பல நகாசு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றையும் பயன்படுத்துகையில் "நல்ல மாற்றம் தான்' என ரசிக்க முடிகிறது.


நோக்கியாவின் விண்டோஸ் போன் லூமியா 800

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தன் மொபைல் போன்களில் அமைத்துத் தன் எதிர்கால வர்த்தகத்தினை மீண்டும் முன்னுக்குக் கொண்டு செல்ல நோக்கியா முயற்சி செய்கிறது.

அந்த வகையில், அக்டோபர் இறுதியில் தன் விண்டோஸ் மொபைல் போனாக லூமியா 800 என்ற மாடலை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் நோக்கியா என்9 போல இது வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால் சில மாற்றங்களும் இதில் உள்ளன.


என்9, ஆண்ட்ராய்ட் கேலக்ஸி நெக்ஸஸ், ஐ போன் 4எஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், லூமியா 800 சற்று கூடுதல் வேகம் கொண்ட ப்ராசசரைக் கொண்டுள்ளது. ஆனால், மற்றவற்றில் சிறிது பின்தங்கியே உள்ளது.


ஐபோன் 4எஸ் -3.5 அங்குலம், என்9-3.7 அங்குலம் என்றபடி அமைக்கப்பட்டிருக்கையில், இதன் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே திரை 3.7 அங்குலம் அகலத்தில் உள்ளது.கேலக்ஸி நெக்ஸஸ் திரை 4.65 அங்குலம் என்பது குறிப்பிடத்தக்கது. திரையின் ரெசல்யூசன் 800 x 480 என்ற படி மற்றவற்றிடமிருந்து குறைவானதாகவே உள்ளது.


இதன் தடிமனும் மற்றவற்றைக் காட்டிலும் கூடுதலாக 12.1 மிமீ அளவில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரிமாணம் 117 x 61 x 12 மிமீ. இதன் எடை 142 கிராம்.


லூமியாவின் ப்ராசசர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கக் கூடியது. இதன் ராம் நினைவகம் 512 எம்பி. உள் நினைவகம் விரிவுபடுத்த முடியாத 16ஜிபி அளவிலானது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் இதில் இல்லை.


இதன் கேமரா 8 எம்பி திறனுடன், கார்ல் ஸெய்ஸ் லென்ஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறமாக இதில் கேமரா இல்லை.


ஆண்ட்ராய்ட் இயக்கம் இல்லாத, ஐ- போன் அல்லாத, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் தேடுபவர்களுக்கு, நோக்கியாவின் லூமியா 800 ஒரு நல்ல போனாக இருக்கும். இதன் விண்டோஸ் மாங்கோ, இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு, அனைத்து வழிகளிலும் புதிய அனுபவத்தினைத் தரும் என்பது உறுதி.

பதியப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9, ஸ்கை ட்ரைவில் 25 ஜிபி டேட்டா பதிய அனுமதி, எக்ஸ் பாக்ஸ் லைவ் இணைவு, மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர், 1450 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இன்னும் சில சிறப்புகளாகும். கருப்பு, சியான் மற்றும் மெஜந்தா வண்ணங்களில் இந்த மாடல் கிடைக்கும்.


மேலே குறிக்கப்பட்டுள்ள அனைத்து திறன்களிலும் சற்று குறைவாகத்திறன் கொண்டதாக லூமியா 710 என்ற மாடலும் அறிமுகமாகியுள்ளது. விரைவில் இந்தியாவிலும் இவை அறிமுகமாகும். இவற்றின் விலை அப்போது தெரியவரும்.


குறைகிறது பெட்ரோல் விலை

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், அடுத்த வாரம் பெட்ரோல் விலையைக் குறைக்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அனேகமாக, லிட்டருக்கு 80 பைசா குறைக்கப்படலாம்.

பெட்ரோல் மீதான விலை நிர்வாகக் கட்டுப்பாட்டு முறையை, மத்திய அரசு வாபஸ் பெற்றதை அடுத்து, சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலையைப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

இதனடிப்படையில், கடந்த வாரம் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 1.80 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டில், இது நான்காவது விலை உயர்வாகும்.

தற்போது, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 80 பைசா குறைக்க, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அடுத்த வாரம், இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும். அப்படி குறைக்கப்பட்டால், 2009ம் ஆண்டு ஜனவரிக்கு பின் நிகழும், முதல் விலை குறைப்பாக இருக்கும்.

வரிகளைத் தவிர்த்துப் பார்த்தால், இந்த விலை குறைப்பு, 60 பைசாவாக இருக்கும் என, மத்திய அரசு அதிகாரிகள் கூறினர்.


பைல்களின் வகைகள்

.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.


.rtf: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.


***.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.


***.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட் ஷிட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும்.


.ppt: விண்டோஸின் பிரிமியர் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.


.pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர்.

பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம் கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபர் ரீடர் உட்பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது


*******htm / html: ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்க இருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத் திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.


.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப் பட்டு பைலாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.

சுருக்கப்பட்ட பைல்கள்: கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும் பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

இவ்வாறு பைல்களைச் சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். பைல்களின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.


.zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அது சுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்ட இணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.


******.rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். Win Rar என்ற புரோகிராம் இந்த பணியை மிக அழகாகச் செய்து முடித்திடும்.


.cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர் தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவே இதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.


இந்தியாவில் பிளாக்பெர்ரி சேவை பாதிப்பு

இந்தியாவில் பிளாக்பெர்ரி சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என பிளாக்பெர்ரி ‌போன் தயாரிப்பு நிறுவனமான ரிசர்ச் இன் மோஷன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டெனிலி கென்ன‌டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில், சேவை குறைபாடு குறித்த புகார்கள் அதிகளவில் வந்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னால், சர்வதேச அளவில் பிளாக்பெர்ரி சேவை பாதிக்கப்பட்டது. தற்போது அதேநிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, விசாரணை மேற்‌கொண்டுள்ளோம்.

கூகுள் நிறுவனம், பிளாக்பெர்ரி போனில், ஜிமெயில் அப்ளிகேசனை இம்மாத இறுதியில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, கூகுள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவ‌தாக அவர் தெரிவித்தார்


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes