யாரைப்பார்த்தாலும் விற்றமின் மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். மருத்துவர்களிடம் போனாலும்"நல்ல விற்றமின் மாத்திரைகள் எழுதித் தாருங்கோ' என்றே கேட்கிறார்கள். சாதாரணமாக மூன்று ரூபா முதல் முப்பது ரூபா வரை என இவை பலவகைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. தாராளமாக வாங்கிப் போடுகிறார்கள். தாராளமாக செலவு செய்கிறார்கள் ஆனால் செலவழிக்கும் பணத்திற்கு பலன் கிடைக்கிறதா?
இன்னொரு முறையில் சிந்தித்துப் பார்த்தால் இது ஒருவகை நாகரிக மோஸ்தர் போலாகிவிட்டதோ எனவும் தோன்றுகிறது.
ஏனைய பலரையும் விட, மாதவிடாய் நின்ற பின் பெண்கள் விற்றமின்களை நாடுவது அதிகம். மாதவிடாய் நின்ற பின் மாரடைப்பு புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பு அதிகமென கருதப்படுகிறது. அதைத் தடுக்க மாத்திரைகளை நாடுகிறார்கள்.
இதனால் அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறதா மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறதா, புற்றுநோய் வராமல் காப்பாற்றுகிறதா?
இல்லை என்கிறது Archives of Internal Medicine என்ற மருத்துவ இதழ். ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமான பெண்களை உள்ளடக்கிய ஆய்வின் முடிவு என 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் திகதி இதழ் கூறுகிறது.
ஆனால் இவற்றை உட்கொள்வதால் வேறு நோய்கள் வருகிறதா என்று கேட்டால் அதற்கும் ஆதாரம் இல்லை. அதாவது அத்தகைய மல்ரி விற்றமின் மாத்திரைகளால் நன்மை ஏற்படுவதாகவும் தெரியவில்லை. தீமைகள் ஏற்படுவதாகவும் தெரியவில்லை. எனவே கொடுக்கும் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என அவற்றின் பாவனையாளர்கள் தாங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஆனால் மருந்துகளை விட சாதாரணமாகக் கடைப்பிடிக்கக் கூடிய பல ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் இத்தகைய நோய்கள் வராமல் தடுக்கின்றன என்பதை மறக்கக் கூடாது.
உதாரணமாக புற்றுநோய்களையும் அழுத்தங்களையும் தடுக்க கூடிய ஒட்சிசன் (Antioxidents) எதிரிகள் காய்கறிகளிலும் பழங்களிலும் தாராளமாகக் கிடைக்கின்றன. இவை இயற்கையானவை என்பதால் உடலுக்கு தீங்கற்றவை என கருதலாம். இவற்றைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொண்டால் மல்ரி விற்றமின் மாத்திரைகளை நாட வேண்டியதில்லை.
அடுத்ததாக இந் நோய்களைத் தடுக்க ஒருவர் செய்ய வேண்டியது உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியாகும். உடலுக்கு வேலை கொடுக்காது சோம்பேறியாக இருந்தால் என்ன நடக்கும் ?
எடை கூடும், நீரிழிவு, பிரஸர், கொலஸ்டரோல் போன்ற நோய்கள் தேடி வரும்.
காலத்திற்கு முன்பே நோயுற்று "இறைவனடி' சேர நேரிடும். உடலுளைப்பற்ற வாழ்க்கை முறையானது தசைகளைப் பலவீனப்படுத்தும் எலும்புகளை தேய்வடையச் செய்யும் என்பதையும் மறக்கக் கூடாது.
பெரும்பாலான மல்ரி விற்றமின் மாத்திரைகள், மருந்துகளாக அன்றி மேலதிக உணவு (Supplimentary Food) என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இதனால் மருந்துகள் மீது இருப்பது போல அரசின் இறுக்கமான கட்டுப்பாடுகளோ, கண்காணிப்போ குறைவு. அத்துடன் விலைகளும் அதிகமாக இருக்கின்றன. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளிலும் விளம்பரப்படுத்தக் கூடியன. எனவே கவர்ச்சியான விளம்பரங்களாலும் ஏமாந்து வீணாகச் செலவு செய்யும் நிலைமை நிலவுகிறது.
எனவே அடுத்த தடவை நீங்கள் விற்றமின் மல்ரி விற்றமின் போன்ற மருந்துகளை வாங்க முன் இரண்டு தடவை சிந்தியுங்கள். உங்கள் பணத்திற்கான பலன் கிடைக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள். மாத்திரைகளுக்குப் பதிலாக உணவின் மூலம் அவற்றை எடுக்க முடியுமா என மீள் பரீசிலனை செய்யுங்கள்.
மாதவிடாய் நின்ற பெண்கள் ஓஸ்டியோபொரோசிஸ் நோயைத் தடுப்பதற்காக மேலதிக கல்சியம் எடுப்பது வேறு விடயம் அதை நிறுத்த வேண்டாம்.
0 comments :
Post a Comment