ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் தன் மாணவர்களிடம் ஒரு வித்தியாசமான கேள்வியைக் கேட்டார். “இறைவன் என்று ஒன்று உண்டா?” என்பதுதான் அந்தக்கேள்வி. அனைவரும் அமைதிகாக்க, ஒரு மாணவன் மட்டும் எழுந்து “ஆம் ஐயா… இதிலென்ன சந்தேகம்?” என்றான். அந்த மாணவன்தான் அல்பர்ட் ஐன்ஸ்டீன் என்று ஒருசாரார் சொல்கிறார்கள். சொன்னது ஐன்ஸ்டீனோ இல்லையோ ஆனால், சொன்ன கருத்து கடவுளே இல்லை எனும் மனிதர்க்கு ஒரு மறுபரிசீலனை விண்ணப்பம்.
அவர் தொடர்ந்து “உலகைப் படைத்தவர் அவர்தானா?” என்றார். மாணவர் பதிலுக்கு “ஆம்” என்றான். அவர் “கடவுள் நல்லவரா?… கெட்டவரா?…” என்று தொடர்ந்து கேட்க, “நல்லவர்… மிகவும் நல்லவர்” என்று அந்த மாணவனும் பதிலளித்தான். “கெட்டவைகள் உலகில் உண்டா?” என்றார் பேராசிரியர். மாணவனும் தொடர்ந்து “ஆம் அவைகளும் உண்டு” என்றான்.
“கடவுள்தான் கெட்டவைகளையும் சாத்தானையும் படைத்தாரா…?” என்று கேள்வி வந்தது பேராசிரியரிடமிருந்து. “ஆம்” என்பதுதான் இதற்கும் அந்த மாணவனின் பதில். “கடவுள் கெட்டவைகளைப் படைத்தார்… கெட்டவைகள் இந்த உலகத்தில் உள்ளன! கடவுளால் படைக்கப்பட்டதால் அவரின் ஏற்பாட்டின்படிதான் அவைகள் செயல்படுகின்றன; எனவே கடவுளும் கெட்டவர்தானே…?” என்றார். இதற்கு அந்த மாணவன் தலைகுனிந்தபடி நின்றிருந்தான்.
பேராசிரியர் தொடர்ந்தார்,”கெட்டவரை எந்த நம்பிக்கையில் கடவுளை வணங்குகிறீர்கள், உங்களுக்கு அந்த நம்பிக்கை எப்படி வந்தது… எல்லாம் ஒரு மாயைதான் என்று நீ ஒப்புக்கொள்ள வேண்டுமல்லவா?”.
பேராசிரியர் முடிப்பதற்கு முன்னால் எழுந்த இன்னொரு மாணவர், “ஆசான் அவர்களே… நான் ஒரு கேள்வி உங்களைக் கேட்கலாமா?” என்றான். “கண்டிப்பாக…” என்று மாணவனை மடக்கிய இறுமாப்புடன் பேராசிரியர் கூற, தொடர்ந்தான் மாணவன், “குளிர் என்று ஒன்று உண்டா இந்த உலகத்தில்?”. “என்ன கேள்வி இது? உறுதியாகச் சொல்வேன்… உண்டென்று; உனக்குக் குளிர் அடிப்பதில்லையா?” பதில் வந்தது பேராசிரியரிடமிருந்து. அந்த மாணவனின் கேள்விக்கு அனைவரும் சிரித்தனர். “இல்லையென்று நான் சொல்வேன். இயற்பியல் விதிகளின் படி வெப்பமின்மையைத் தான் நாம் குளிர் என்கிறோம். ஒவ்வொரு ஊடகமும் வெப்பத்தைத்தான் கடத்தும்.
குறைந்த வெப்பநிலையைத் தான் குளிர்ச்சி எனச்சொல்கிறோம். ஆதாவது, 0 டிகிரி செல்சியஸ் எனப்படுவது முழுக்க வெப்பமின்மை”. அனைவரும் அமைதியானார்கள். மாணவன் மட்டும் தொடர்ந்தான், ” ஆசானே… இருட்டு என்று ஒன்று உண்டா?”. பேராசிரியர் இப்பொதும் “கண்டிப்பாக உண்டு” என்றார்.
“மறுபடியும் தவறான பதிலைச் சொல்கிறீர் ஆசானே… இருட்டு என்று ஒன்று கிடையாது, ஒளியின் இல்லாமையைத்தான் நாம் இருட்டு என்கிறோம். ஒளி என்ற ஒரு சக்தியைப் படிக்க முடியும்; ஆனால் இருட்டை… முடியவே முடியாது. ஒளியில்லாமல் போனால் இருட்டு இருக்கும், வெப்பமில்லாமல் போனால் குளிரெடுக்கும்” மாணவன் ஒரிரிரு வினாடி பேசுவதை நிறுத்தினான்.
அறையெங்கும் ஒரே அமைதி. மாணவன் தொடர்ந்தான் “அதுபோலவே, கெட்டவைகள் என்று உலகில் ஒன்று கிடையாது. கடவுளின் தன்மை எங்கெல்லாம் இல்லாமல் போகிறதோ அங்கெல்லாம் கெட்டவைகள் தோன்றும். சாத்தான்கள் என்பவை இருட்டு மற்றும் குளிர் போல; தான் எங்கே இல்லாமல் போனாலும் என்னாகும் என்பதை மனிதனுக்கு விளக்கக் கடவுளால் படைக்கப்பட்டவை. கடவுளின் தன்மைகளான அன்பும் கருணையும் மனதில் இருத்தாமல் இருந்தால் அவனின் வாழ்வில் எவ்வளவு மோசமான விளைவுகள் வரும் என்பதைக்காட்டவே கடவுள் இருட்டை, குளிரை, கெட்டவைகளை மற்றும் சாத்தானைப் படைத்தார்; இவைகள் அனைத்தும் கடவுளின் படைப்புக்கள் மற்றும் அவதாரங்களே!”. மாணவன் சொல்லி முடித்ததும் ஆசிரியர் முகம் தொங்கிப்போய் உக்கார்ந்தார்.
கடவுள் இருக்கிறாரா?
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment