சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்



திருமணமான புதுமணத் தம்பதிகளிடம் 'எங்கேப்பா ஹனிமூன்?-என்றபடி தோழர்களும், தோழியர்களும் கிண்டலாக கேட்பது வழக்கம். 'ஹனிமுன்' என்றால் தேனிலவு என்பது ஊரறிந்த ரகசியம். "ஹனிமூன்" போவது என்றால் நிலவுக்கு சென்று வருவது என்று அர்த்தம் அல்ல. ஆனால்.. 'நீங்கள்உண்மையிலேயே தேனிலவு கொண்டாட நிலவுக்கு சென்றுவர விருப்பமா? நாங்கள் அழைத்துச் செல்கிறோம் , வாருங்கள்" என்றபடி இருகரம் கூப்பி வரவேற்கிறது, நாசா. 
நிலவுக்கு இதுவரை அப்பல்லோ, லூனா போன்ற விண்கலங்கள்தான் சென்று வந்து இருக்கின்றன. ஆனால் நிலாவில் எவரும் தங்கியதில்லை. நிலவுக்கு சென்று தங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் நாசா இப்போது ஈடுபட ஆரம்பித்து விட்டது.

சந்திரனின் ஏதாவது ஒரு துருவத்தில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மாதிரி புதிதாக சகல வசதிகளுடன் கூடிய ஆராய்ச்சி நிலையமொன்றை நிறுவி சாதனை படைக்க நாசா எண்ணியுள்ளது.

'சந்திரனில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தை எப்பொழுதும் நிரந்தரமாக ஒரு ஆராய்ச்சிக் குழு வலம் வந்து கொண்டேயிருக்கும்' என்கிறார் நாசாவின் விஞ்ஞானியும், நிர்வாகிகளில் ஒருவருமான ஸ்காட் ஹோரோவிட்ச். "சந்திரனில் நிரந்தரமாக ஒரு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் . அங்கிருந்து கொண்டு மக்கள் சந்திரனில், எங்குவேண்டுமானாலும் பயணிக்கலாம். சந்திரனில் இருந்து செவ்வாய்க்கும் செல்ல வழி செய்யப்படும்'' என்று அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கடந்த 2004-லேயே அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்க அம்சம். 

'சந்திரனின் வட துருவத்தின் ஒன்றிரண்டு பகுதிகளில் எப்பொழுதும் சூரிய ஒளி கிடைக்கவாய்ப்பு இருக்கிறது. இது அங்கு வருங்காலத்தில் மனிதன் வசிப்பிடம் அமைப்பதற்கு நிச்சயமாக வழிவகுக்கும். 

சந்திரனில் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான திட்டப்பணிகளை நாசா மற்றும் 13 பிற விண்வெளி ஆராய்ச்சி கழகங்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சந்திரனில் ஆராய்ச்சி மையத்தை நிறுவ என்னென்ன உத்திகளை கையாளுவது, புதிய ஆராய்ச்சி நிலையத்தின் பணிகள் என்னென்ன என்பது பற்றிய கருத்துருக்களையும், நோக்கங்களையும் தயாரித்து வருகின்றன.நாங்கள் ஒன்றும் இதில் தனியாக ஈடுபடப் போவதில்லை. பல்வேறு வர்த்தக மற்றும் சர்வதேச நாடுகளின் பங்களிப்பும் இதில் இருக்கும்'', என்கிறார். நாசாவின் மூத்த விஞ்ஞானியும் துணை நிர்வாகியுமான ஷானா டேல். 

சந்திரனில் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான தகவல், தொழில்நுட்பம் மற்றும் இன்னபிற வசதிகள் அனைத்தையும் நாசா வழங்குமென்று தெரிவித்த டேல், "சந்திரன்-பூமி போக்குவரத்திற்கான விண்கல வசதிகளை நாசா ஏற்கனவே தொடங்கி விட்டது'' என்கிறார். சந்திரனில் வசிப்பதற்கான அடிப்படை வசதிகளான மின்சாரம், தகவல், ரோபோட் போன்ற மாதிரி தொழில்நுட்ப அம்சங்களைப் பெறுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்திரனில் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவ, ரோபோட்டின் பங்கு மிகவும் அவசியம் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம். சந்திரனில் ஆராய்ச்சி நிலையத்தின் முழு அளவிலான சோதனை 2009-ல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ராக்கெட் மற்றும் விண்கலங்கள் தயாராகி வருகின்றன. 

இரண்டாம் கட்ட சோதனை ஒத்திகை, வருகிற 2012-ல் நடத்தப்பட உள்ளது. 2008ல் முதன் முதலாக ரோபோட், சந்திரனின் ஆய்வுப்பணியில் ஈடுபடுத்தப்படும். இதற்காக ரோபோட் அடங்கிய விண்கலம்,2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் அனுப்பி வைக்கப்படும். சந்திரனில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளில் இந்த ரோபோட் ஈடுபடும். 

"சந்திரனின் துருவங்களை பூமியிலிருந்து ஆராய்வது சற்று கடினம் என்பதால் தான், ரோபோட் அடங்கிய விண்கலம் அங்கு அனுப்பபடுகிறது. அதன்பிறகு வருகிற 2010ல், ஆய்வு நிலையம் அமைப்பதற்கான தகுந்த இடத்தில் இந்த விண்கலம் இறங்கும். இதன் மூலம் நமக்கு நிறைய முக்கியத் தகவல்கள் கிடைக்கும்'' என்கிறார் ஹோரோவிட்ச். 

சந்திரனின் துருவங்களில் பனிக்கட்டி மாதிரி காணப்படும் இடங்களில் ஆக்ஸிஜன், எரிபொருள் மற்றும் தண்ணீர் கிடைக்கலாம் என்று இத்திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்தின் டொனால்டு கேம்பல் என்பவர் இராட்சத தொலைநோக்கி ஒன்றின் மூலம் சந்திரனை ஆய்வு செய்த போது, சந்திரனில் துருவங்களில் மேகமூட்டம் போன்ற காட்சிகள் தெரிந்தது. இது பனிக்கட்டி மலைகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இம்மாதிரியான பனிக்கட்டிகள், பயன்படத்தக்க ஒரு மூலப்பொருள்' என்று சந்தோஷத்துடன் குறிப்பிடும் விஞ்ஞானிகள் தரப்பு, "சந்திரனில் அமையவிருக்கும் நிரந்தர விண்வெளி நிலையத்திற்கு மட்டுமல்ல.. எதிர்கால சந்ததியினர்ஹதேனிலவு' செல்வதற்கும் இது ஒரு சாத்தியக்கூறு'' என்கிறார்கள். 

சுற்றுலாப் பயணிகள் ஊட்டி, கொடைக்கானல், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா என்று இனிமேல் 'டூர்' செல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு இனி உண்மையிலேயே, நிஜமான 'ஹனிமூன்' அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்படும். சுற்றுலாத்துறைக்கும் அதுவொரு பொற்காலமாக அமையும்.



0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes