உலக அளவில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் அதிகமாக பேசப்படும் விஷயம் 'செயற்கை அறிவு'. ஆங்கிலத்தில் ஆர்டிபீசியல் இன்டலிஜென்ஸ் சுருக்கமாக ஏ.ஐ. (A.I.) என்று அழைக்கிறார்கள். மனிதனைப் போல சிந்திக்கும் திறன், கற்றுக்கொள்ளும் திறனை கம்ப்யூட்டர் மற்றும் எந்திரங்களுக்கு அளிப்பதுதான் 'செயற்கை அறிவு' திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் முதல்படிதான் 'ரோபட்டு'கள். ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் வகையில் 'ரோபட்டு'களின் இயக்கங்கள் உள்ளது. இந்த ஆராய்ச்சியில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.
அறிவியல் அதிசயம் பகுதியில் இடம்பெற்று வரும் 'ரோபட்டு'கள் பற்றிய தகவல்களில் இந்த வாரம் 'செயற்கை அறிவு' பற்றிய விவரங்கள் இடம்பெறுகிறது.
செயற்கை அறிவு
நவீன கம்ப்யூட்டர் மற்றும் 'ரோபட்' துறையில் உணர்ச்சி மிகுந்த ஆவலை தூண்டும் பகுதியாக செயற்கை அறிவு விளங்குகிறது. அதே சமயம் இந்த துறை பற்றிய சர்ச்சைகளும் ஏராளம் உண்டு.
இறைவனின் படைப்பில் பல அதிசயங்களும் ஆச்சரியங்களும் உள்ளன. அதில் ஒன்று மனிதன். ஆதி மனிதன் முதல் இன்றைய நவீன கால மனிதன் வரை மனித இனம் வியக்கத்தகுந்த மாற்றங்களை சந்தித்துள்ளது. தேவைகளை நிறைவேற்ற மனிதன் எடுத்த முயற்சிகள், இதற்காக அவன் நடத்திய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் போன்றவை மனித இனத்தை நாகரீகம் மிகுந்ததாக வளர்ச்சி அடையச் செய்தது.
தான் கற்றுக்கொண்ட விஷயங்களை எந்திரத்துக்கு, ஒரு கம்ப்யூட்டருக்கு கற்றுக் கொடுத்து தன்னைப் போல புத்திசாலித்தனம் நிறைந்ததாக அதை மாற்ற மனிதன் முயற்சி செய்கிறான். இது தான் 'செயற்கை அறிவு' திட்டத்தின் விளக்கம்.
புத்திசாலித்தனம் மிக்க எந்திரம் மற்றும் கம்ப்யூட்டர்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் விஞ்ஞானிகள் மனதில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இரண்டாம் உலகப் போர் முடிந்த உடன் இதற்கான ஆய்வுகள் தீவிரம் அடைந்தது.
இந்த ஆராய்ச்சிகளில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கணிதமேதை ஆலன் டூரிங் அதிக ஈடுபாடு காட்டினார்.
1947-ம் ஆண்டு இது தொடர்பாக அவர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். கம்ப்யூட்டர் புரோகிராம்கள் மூலம் செயற்கை அறிவு கொண்ட எந்திரங்களை உருவாக்க முடியும் என்று ஆலன் டூரிங் நம்பினார். அவரது கருத்துக்களை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
அதற்கு ஏற்ப கம்ப்யூட்டர் புரோகிராம்களை உருவாக்கி அதன் மூலம் எந்திரங்களை, ரோபட்டுகளை இயக்கி வருகிறார்கள். இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட தொழிற்சாலை ரோபட்டுகளின் பணிகள், வேலைத்திறமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மனிதனைப் போல புத்திசாலித்தனம் நிறைந்த கம்ப்யூட்டர் புரோகிராம் மற்றும் ரோபட்டுகளை உருவாக்குவது சவால் நிறைந்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள். காரணம், மனிதனின் புத்திசாலித்தனத்துக்கு அடிப்படையாக விளங்கும் மூளை மற்றும் நரம்பு அமைப்புகள் மிக நுட்பமானவை. அதுபோன்ற ஒரு அமைப்பை (அதாவது, செயற்கை அறிவு) உருவாக்குவது கடினம்.
மனிதனின் எண்ணச் செயல்களில் பிரதிபிம்பம் மற்றும் மனிதனால் படைக்கப்பட்ட (மனித அறிவு கொண்ட) எந்திரம்தான் 'செயற்கை அறிவு.' எதை வேண்டுமானாலும் கற்றறியும் திறன் காரணங்களை அறியும் திறன்.
மொழிகளை கையாளும் திறன், மற்றும் தன் எண்ணங்களை தானே ஒழுங்குபடுத்தும் திறன் போன்ற திறமைகளை கொண்டதுதான் 'செயற்கை அறிவு'.
இத்தகைய 'செயற்கை அறிவு' மிக்க மனித எந்திரங்கள் (ரோபட்டுகள்) உருவாக்குவதில் விஞ்ஞானிகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். இருப்பினும் அவர்களால் ஒரு எல்லையைத் தாண்டி முன்னேற முடியவில்லை.
இன்றைய 'செயற்கை அறிவு' கொண்ட எந்திரங்கள் மனித கெட்டிக்காரத்தனத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளை பிரதிபலிக்கும் திறன் கொண்டவை.
சில நவீன ரோபட்டுகளில் கற்றறியும் திறன் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்கின்றன. பயிற்சி ரோபட்டுகள் தன் வழிப்பாதையில் உள்ள தடைகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு தன் நகரும் பாதையை மாற்றிக்கொள்கிறது. இந்த நிகழ்வுகளை உள்வாங்கிக் கொண்டு நினைவில் வைத்துக்கொள்ளும் இந்த ரோபட்டுகள் இதே மாதிரி சந்தர்ப்பங்கள் மீண்டும் வரும்பொழுது திறம் பட கையாண்டு தடைகளை முறியடிக்கின்றன. ஏற்கனவே கூறியது போல் நவீன கணினிகள் மனிதனைப் போல் சுயமாக சிந்திக்கும் திறன் கொண்டிருப்பது கிடையாது. சில ரோபட்டுகள் மனிதனைப் பார்த்து அறிந்து அவன் அசைவுகளை அப்படியே செய்து காண்பிக்கிறது. ஜப்பானில் ரோபட் வடிவமைப்பாளர்கள் ரோபட்டுகளுக்கு நடனமாடுவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கின்றார்கள்.
சில ரோபட்டுகள் சகஜமாக பழகும் தன்மையைக்கூட கொண்டிருக்கின்றது. எம்.ஐ.டி. நிறுவனத்தில் செயற்கையாக சிந்திக்கும் திறன் பரிசோதனைக் கூடத்தில் உள்ள கிஸ் மெட் ரோபட் மனித உடல் அசைவுகளுக்கு ஏற்றவாறும் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றவாறும் தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்கின்றது. கிஸ்மெட்டின் வடிவமைப்பாளர்கள் மனிதர்கள் குழந்தையிடம் அவ்வாறு உரையாடுகிறார்கள் (குரலில் ஏற்ற இறக்கம் மற்றும் உடல் அசைவுகள் போன்ற) என்ற ஆரம்பக்கட்ட உரையாடலில் ஆர்வம் காட்டினார்கள். இந்த ஆரம்ப உரையாடல்தான் ரோபட்டுகளின் மனிதனைப்பற்றி கற்றறிவதற்கு உண்டான முக்கிய அடித்தளமாக அமைந்தன.
எம்.ஐ.டி.யின் 'செயற்கை அறிவு' தொடர்பான பரிசோதனைக் கூடத்தில் உள்ள 'கிஸ்மெட்' மற்றும் சில ரோபட்டுகள் பிரத்தியேக கட்டுப்பாட்டு கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. அதாவது இதன் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு மத்தியக் கணினியை சார்ந்திருப்பதில்லை. இதற்குப்பதிலாக இந்த 'ஆரம்ப கட்ட உரையாடும் முறைகளை' கையாள்வதற்கு ஏற்ற கணினியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. 'இந்த முறைதான் மனித அறிவுத்திறனின் துல்லியமான மாதிரி முறை' என்கிறார் இத்திட்ட இயக்குனர் ரோட்னி புரூக்ஸ்.
மேலும் கூறுகையில் இந்த ரோபட்டுகளின் பெரும்பாலான இயக்கங்கள் தன்னிச்சையாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாகும், சுயமாக சிந்திக்கும் திறனில் அதி உன்னத நிலையை எட்டும் முயற்சியில் ஈடுபடவில்லை என்கிறார். செயற்கை அறிவு திட்டத்தின் மற்றொரு மிகப் பெரிய சவாலாக இருப்பது இயற்கையாகவே (மனிதனைப்போல்) சிந்திக்கும் திறன் எவ்வாறு வேலை செய்கிறது என்பதே. செயற்கை அறிவை மேம்படுத்துவது என்பது ஒரு செயற்கை இருதயத்தை வடிவமைப்பது போன்ற எளிதான காரியமில்லை. விஞ்ஞானிகளிடம் ஒரு எளிமையான மற்றும் முன்மாதிரி வரைமுறைகள் இல்லை மனித மூளை பல நூற்றுக்கோடிக்கணக்கான நியூரான்களைக் கொண்டிருப்பதை நாமறிவோம். இவற்றிற்கிடையே ஏற்படும் மின் பரிமாற்றங்களின் மூலமாகவே நாம் சிந்திக்கவும் கற்றறியவும் முடிகிறது என்பதையும் அறிவோம். இருந்தாலும் இவற்றிற்கிடையே உள்ள இணைப்புகளின் இந்த வேலையைத்தான் செய்கின்றன என்பதை நாம் சரியாக உறுதியிட்டுக் கூற முடியாது. அந்தளவுக்கு திறன்பட்ட மற்றும் சிக்கலான சுற்று இணைப்புகளைக் கொண்டது மனித மூளை. மேற்கூறிய காரணங்களால் செயற்கை அறிவு பற்றிய பெரும்பாலான ஆராய்ச்சிகள் எழுத்து வடிவங்களிலேயே உள்ளன. ஏன்? எதற்கு? எப்படி? நாம் சிந்திக்கிறோம். நாம் கற்றுக் கொள்கிறோம்? என் ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு ரோபட்டுகளை வடிவமைக்கும் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். மனிதனை ஒத்த ரோபட்டுகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் புரூக்ஸும் அவரது குழுவும், 'மனித அறிவாற்றலுக்கு ஏற்றுவாறு வடிவமைப்பதற்கு மனித சமுதாயத்தின் அனுபவங்கள் தேவைப்படுகின்றன' எனவும், 'இது மேலும் மனிதர்களுடன் பழகுவதற்குண்டான முறையையும்' எளிதாக்குவதோடு மனிதனிடமிருந்து கற்றுக் கொள்வதற்கும் ரோபட்டிற்கு வாய்ப்பு உள்ளது' என்கிறார்.
செயற்கை பற்றிய ஆராய்ச்சி இயற்கையாக (மனிதன்) சிந்திக்கும் திறன் பற்றி அறிந்து கொள்வதற்கும் பயன்பட்டு வருகிறது. சிலர் செயற்கை அறிவைக் கொண்டு ரோபட் வடிவமைப்பதை தீவிர எண்ணமாக கொண்டுள்ளனர். இன்னும் சிலர் எந்திரத் தொழிலாளர், உடல் சுகாதாரம் மற்றும் தகவல் தொடர்பு ரோபட்டுகளை வடிவமைத்து வருகின்றனர். பெரும்பாலான கைதேர்ந்த ரோபட் வடிவமைப்பாளர்கள் ரோபட் உலகில் நடக்கும் புரட்சி 'ஊலடிழசபள' என்ற உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் (மனிதன் மற்றும் எந்திரங்களின் ஒருங்கிணைப்பு) என கணித்துள்ளனர்.
இந்த புரட்சிகள் மூலம் எதிர்காலத்தில் மனிதர்கள் தன் மூளையின் செயல்பாடுகளை அதிக திறமை படைத்த ரோபட்டுகளில் உட்செலுத்தி மனிதன் பல நூற்றாண்டு காலம் வாழ வழி வகுக்கும் எனவும் நம்புகின்றன. எது எப்படி இருந்தாலும் வருங்காலத்தில் ரோபட்டுகள் நமது அன்றாட வாழ்க்கைக்கு ஒரு முக்கிய நபராக அங்கம் வகிக்கப் போகிறது. 1980_ம் ஆண்டு கணினிகள் எவ்வாறு நம் வீட்டிற்குள் நுழைந்தனவோ அதே போல் ரோபட்டுகள் வரும் பத்தாண்டுகளில் தொழிற்சாலை, ஆராய்ச்சி பணிகள் போன்ற எல்லைகளை கடந்து நம் வீட்டின் ஒரு அங்கமாக விளங்கப்போகிறது.
1 comments :
அருமையான கட்டுரை. நல்ல பல விடயங்கள். பயனுள்ள தகவல். ரோபோக்களின் வளர்ச்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நன்றி.
Post a Comment