ஊனமுற்றவர்களுக்கு உதவும் 'செயற்கை கை"


விதியை மதியால் வெல்லலாம் என்பது பழமொழி. ஆனால் இது சாத்தியமாகுமா? என்ற கேள்விக்கு ஆம், முடியும். 'விஞ்ஞானத்தின் மூலம் இது சாத்தியமே" என்று ஆச்சரியப்பட வைத்திருக்கின்றார்கள் விஞ்ஞானிகள். ஊனம் என்ற வார்த்தையே அகராதியிலிருந்து நீக்கிவிடும் அளவிற்கு அவர்கள் ஒரு சாதனையை செய்திருக்கிறார்கள்.

விபத்தில் கை, கால்களை இழந்தவர்கள் எல்லாம் 'நம் வாழ்க்கையே இருண்டு விட்டது. இனி நம்முடைய எதிர்காலம் கேள்விக்குறிதான்," என்று கவலைபடுவது உண்டு. அப்படிப்பட்டவர்களை எல்லாம் நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டது அறிவியலின் நவீன வளர்ச்சி.

முன்பெல்லாம் கை, கால்களை விபத்தில் இழந்துவிட்டால் சக்கர நாற்காலியோ அல்லது ஊனமுற்றோர் வாகனமோதான் அவர்களுக்கு உதவும். இல்லையென்றால் யாராவது ஒருவரின் உதவியைத்தான் எதிர்பார்த்திருக்க வேண்டியிருக்கும். 'நீ இல்லாமல் கை முறிந்தாற்போல் இருந்தது" என்று சொல்லுவோம். அந்தளவிற்கு கை மற்ற உறுப்புகளில் இருந்து முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. 

கை முறிந்தால் ஒன்றுமே செய்ய முடியாதுதான். ஆனால் அதற்கெல்லாம் முடிவுகட்டிவிட்டார்கள் அசாத்திய திறமைக் கொண்ட நமது விஞ்ஞானிகள். ஆம்! செயற்கை எலக்ட்ரானிக் உறுப்புகளைப் பொருத்த ஆரம்பித்துவிட்டனர். விபத்தில் கைகள் பாதிக்கப்பட்டால் மீண்டும் செயற்கை கை பொருத்திவிடலாம். இயற்கையாக எப்படி பணி செய்கிறதோ அதைப் போலவே தத்ரூபமாக இயங்கும் விதத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, 'ஹெடெக் எலக்ட்ரானிக் செயற்கை கை". இந்த கையால் கிடைக்கும் பயன்களைப் பற்றி இந்த வாரம் ஆராய்வோம்.

ஷார்ஜாவைச் சேர்ந்த 27 வயதான அப்துல் அல் காமிரி என்பவர் கார் விபத்தில் ஒரு கையை இழந்துவிட்டார். இவருக்கு இப்பொழுது நவீன தொழில்நுட்பத்துடன் இயற்கை கையை போலவே இயங்கக்கூடிய 'எலக்ரானிக் கை" பொருத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இப்போதுதான் முதன்முதலாக செயற்கை கை பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எலக்ட்ரானிக் கை மூலம் இயற்கை கையால் எப்படி வேலை செய்ய முடியுமோ? அதே போல் பணி செய்ய முடியும். கூடுதல் எடை கொண்ட பொருட்களை தூக்க முடியும். அதாவது விற்பனை மையங்களிலிருந்து வாங்கிய அதிக எடையுள்ள பொருட்களைக் கூட எடுத்து வர முடியும் என்கின்றனர் செயற்கை கை பொருத்துவதற்கு உறுதுணையாக இருந்த டாக்டர்கள். 'இம்மாதிரியான அதிநுட்பம் வாய்ந்த நவீன சிகிச்சை முறையில் உறுப்புகள் பொருத்தப்படுவது விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் கிடைத்த வரப்பிரசாதம். ஆனால் இந்த தொழில்நுட்பங்களை பற்றி மக்கள் இன்னும் அறிந்திருக்கவில்லை.", என்றார் மருத்துவர் ஒருவர். 

'நான் அடிப்படையில் ஒரு விளையாட்டு வீரர். விபத்தில் எனக்கு கை பாதிக்கப்பட்டது. இதனால் எனது எதிர்காலம் இருண்டுவிட்டது என்று நினைத்தேன். அப்போது மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தேன். அப்போது புதுமையான, செயற்கை கை தொழில் நுட்பத்தைப் பற்றி என்னிடம் கூறினார்கள். அவர்களின் உதவியுடன் செயற்கை கையை பொருத்திக் கொண்டேன். இதன் மூலம் முன்பு போல் என்னுடைய பணிகளை செய்ய முடிகிறது. இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் இந்த செயற்கை எலக்ட்ரானிக் கையைக் கொண்டு இன்னும் நான் நிறைய சாதிக்க முடியும். அந்த சாதனைக்கு இந்தக் கை பேருதவியாக இருக்கும", என்றார் அப்துல் அல் காமிரி. 


செயற்கை கை செயல்படும் விதத்தை டாக்டர் ஒருவர் பின்வருமாறு விளக்கினார். 'இந்த செயற்கை எலக்ட்ரானிக் கை உலகில் எங்கும் கிடைக்கக்கூடிய மிகவும் நவீன அறிவியல் நுட்பம் வாய்ந்தது. இயற்கையாக அசல் கையைப் போலவே இருக்கும். 

இதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட செயற்கை கையை விட வித்தியாசமான தொழில்நுட்பத்தைக் கொண்டது. ஏனென்றால் இது மனிதனின் மூளையின் கட்டளைக்கேற்ப இயக்கப்படுகிறது. இதற்குமுன் எத்தனையோ செயற்கை கைகள், கால்கள் மற்றும் உடல் உறுப்புகளைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் அவைகளெல்லாம் பெரும்பாலும் ஊனத்தை மறைக்கவே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இது மனிதன் எவ்வாறு இயற்கையான கைகளைகொண்டு பணிகளை செய்கிறானோ அதைப் போலவே இயங்கும்.

இது மனிதனுடைய நரம்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இயங்குகிறது. மூளையின் கட்டளையிக்கு ஏற்ப வரும் ஆணைகள் இந்த எலக்ட்ரானிக் ஹைடெக் கையில் செயல்களாக மாற்றப்பட்டு மோட்டாருக்கு செல்கிறது. இதன் மூலம் இது இயக்கம் பெறுகிறது. 

இவ்வாறு இயக்கப்படும் ஹைடெக் கை மூலம் இயற்கையான அசல் கையைப் போலவே அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும். 


கூடிய விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒரு சிறுமி உள்பட இன்னும் மூன்று பேருக்கு இந்த செயற்கை கை பொருத்தப்பட இருக்கிறது.

வெளிநாட்டு நிபுணர்கள் இங்கு வருகை தந்தபோது எங்களுடைய இந்த நவீன அறிவியல் நுட்பத்தினை பாராட்டி வியந்தனர். இந்த செயற்கை உறுப்பு பொருத்துவதற்கான மேற்படிப்பு ஜெர்மனி நாட்டில் சிறப்புற்று விளங்குகிறது. அங்கு சென்று படித்ததன் மூலம் இந்த சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடிகிறது", என்றார்
மனிதனுக்கு ஊனம் என்பதே இனி இருக்காது என்று சொல்லலாம். அந்தளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. செயற்கை கை பொருத்திக் கொண்டவர்கள் இனி கைப்பந்து, கால்பந்து மற்றும் பிற விளையாட்டுக்களிலும் ஈடுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இனி வருத்தப்பட வேண்டிய அவசியமும் இருக்காது. தன்கையே தனக்கு உதவி என்று தைரியமாக சொல்லலாம். இப்போது இது அதிகமான செலவாக இருந்தாலும் வருங்காலங்களில் இதனை பொருத்தும் செலவு குறையும் வாய்ப்பு இருக்கும் என்று நம்பலாம். முன்பெல்லாம் காது கேளாதவர்கள் காது மிஷின் வாங்குவது என்பது பணக்காரர்களால் மட்டுமே முடிந்தது. ஆனால் இப்பொழுது சாதாரண மக்களும் வாங்க முடிகிறது. அதே போல் செயற்கை கையையும் வாங்கலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes