அழகுக்காகவும், இளமைக்காகவும் குழந்தைகளுக்குப் பாலூட்ட மறுக்கும் இன்றைய இளம் அன்னையர்களுக்கு எச்சரிக்கை ஊட்டுகிறது பிட்ஸ்பர்க் பல்கலைக் கழக ஆய்வு முடிவு ஒன்று. பாலூட்டுவதால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது, குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாசப் பிணைப்பு உருவாகிறது எனும் தகவல்களுடன், பாலூட்டுவதால் தாய்க்கு பிற்காலத்தில் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. ஒரு வருட காலம் தொடர்ந்து குழந்தைக்கு பாலூட்டி வரும் தாய்மார்களுக்கு இந்த பயன்கள் அதிக அளவில் இருக்கும் என்பதும் இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. சுமார் ஒன்றரை இலட்சம் தாய்மார்களை வைத்து மிகவும் விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் கிடைத்திருக்கும் தகவல்கள் இளம் அன்னையரை பாலூட்ட உற்சாகப் படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். யூகே வில் சுமார் 35 விழுக்காடு அன்னையர் குழந்தைகளுக்கு ஒரு முறைகூட பாலூட்டியதில்லை என்கிறது திகைக்க வைக்கும் புள்ளி விவரம் ஒன்று. பாலூட்டும் அன்னையருக்கு உயர் குருதி அழுத்தம் வரும் வாய்ப்பும், அதிக கொழுப்பு சேரும் வாய்ப்பும் பெருமளவு குறைகிறது என்பதும் கவனிக்கத் தக்கது. அன்னையர் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கான தேவைகளையும், அவசியத்தையும் உலக அளவில் வலியுறுத்துவது அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வளர்வதற்கும், அன்னையர் வாழ்வின் அடுத்த கட்டம் நலமானதாய் அமைவதற்கும் வழிவகை செய்கிறது. அதை இத்தகைய ஆராய்ச்சி முடிவுகள் ஆரம்பித்து வைக்கின்றன என்பதில் மிகையில்லை.
பாலூட்டுதல் நல்லது : அன்னைக்கா ? குழந்தைக்கா ?
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment